Sunday, November 09, 2008

Good Will Hunting

இரண்டு நாள்கள் முன்னால், அகஸ்மாத்தாக சானல்களைத் திருப்பும்போது, கண்ணில் பட்டது இந்தப் படம். கேள்விப்பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. முதல் சில நிமிடங்கள் தவிர்த்து முழுதாகப் பார்த்தேன்.

திரைக்கதைக்கும் துணை நடிகருக்குமான ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம். பத்து மில்லியன் டாலர் செலவு செய்து, 225 மில்லியன் டாலர் வசூல் செய்த படம்.

மிக நல்ல ஞாபக சக்தியும் கணிதச் சிக்கல்களைத் தீர்க்கும் சக்தியும் பெற்ற (ஆனால் அதிகம் படிக்காத) ஓர் இளைஞன் (வில் ஹண்டிங்க்), பாஸ்டன் எம்.ஐ.டி-யில் குப்பை கூட்டும் வேலை செய்கிறான். அங்கே ஃபீல்ட்ஸ் மெடல் பெற்ற ஒரு கணிதப் பேராசிரியர் (ஜெரால்ட் லாம்போ) பார்வையில் படுகிறான். பேராசிரியர், அவனை எப்படியாவது வழி செலுத்தி, பெரிய கணித மேதை ஆக்குவது என்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்.

வில் ஹண்டிங்கின் பின்னணி சோகமானது. சிறுவயதில் அவனது ‘மாற்றுத் தந்தை’ அடித்து, உதைத்து துன்புறுத்தியிருக்கிறார். இப்போது அநாதையாக வளருகிறான். கட்டுமானத் தொழிலில் கூலி வேலை செய்கிறான். எம்.ஐ.டியில் குப்பை கூட்டும் வேலையும் செய்கிறான். பாஸ்டனின் ஏழைக் குடியிருப்பில் வசிக்கிறான்.

ஹண்டிங்க், ஓர் அடிதடியில் ஈடுபட்டிருக்கும்போது, காவலர் ஒருவரையும் அடித்துவிட, சிறை செல்ல நேருகிறது. சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க, ஜெரால்ட் லாம்போ, அவனைத் தன் இருப்பில் வைத்து, உளவியல் நிபுணரிடம் சிகிச்சை எடுக்க வைப்பதாக நீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறார். அனுமதி கிடைக்கிறது.

ஹண்டிங்க் வாழ்க்கையில் காதல் வருகிறது. காதலியை அடைகிறானா? உளச் சிக்கல் சரியாகிறதா? பேரா. லாம்போ காட்டிய வழியில் பெரும் பதவிகளைப் பெறுகிறானா? இந்தக் கேள்விகளுக்கான விடை படத்தில்.

***

படத்தில் என்னைக் கவர்ந்தது சர்வசாதாரணமாக அறிவியல், கணிதப் பெயர்களை வசனங்களில் சேர்த்திருப்பது. ஃபீல்ட்ஸ் மெடல் என்றால் என்ன என்று பொதுவாக சராசரி இந்தியர்கள் யாருக்கும் தெரியாதோ, அதைப்போன்றே சராசரி அமெரிக்கர்களுக்கும் தெரியாது. ஆனால், திரைக்கதை/வசனம் எழுதுபவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அந்த இடத்தில் இந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என்றால் அதைச் சேர்க்கவேண்டும், மக்கள் சற்றே யோசித்து, ஒருவழியாகப் புரிந்துகொள்வார்கள் என்பது அவர்கள் கருத்து. தமிழ்ப் படத்தில் இதைக் காணவே முடியாது.

ஸ்ரீனிவாச ராமானுஜன், எவரிஸ்ட் கலுவா ஆகியோரின் பெயர்கள் சர்வசாதாரணமாக வருகின்றன. (ராமானுஜன் பற்றிச் சொல்லும்போது அவர் ஒரு குடிசையில் வாழ்ந்தார் என்கிறார் பேரா. லாம்போ. ஆனால் ராமானுஜன் வாழ்ந்தது காரைக் கட்டடங்களிலும் ஓட்டு வீடுகளிலும்தான். விட்டுவிடுவோம்!) ‘தியடோர் கசின்ஸ்கி’ பெயர் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. ஆனால் உனாபாம்பரின் பெயர் அமெரிக்கர்களுக்கு சற்றே அதிகம் ஞாபகத்தில் இருக்கும்.

பொதுவாகவே மிக ஷார்ப்பான வசனங்கள். ஓரிடத்தில் National Security Agency-யிலிருந்து வில் ஹண்டிங்கை வேலைக்கு எடுக்க வருகிறார்கள். அப்போது நடக்கும் உரையாடல்:

என்.எஸ்.ஏ: நீ ஏன் எங்களிடம் வேலைக்குச் சேரக்கூடாது?

ஹண்டிங்: ஏன் கூடாது என்று சொல்லட்டுமா? ஒரு நாள் என் மேசையில் உடைக்கமுடியாத ஒரு கிரிப்டாலஜி துப்பைக் கொடுப்பீர்கள். நானும் ஐந்து நிமிடத்தில் அதை உடைத்துவிடுவேன். அது எங்கோ ஓர் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள எதிரிகளின் இடத்தைப் பற்றிய தகவலாக இருக்கும். உடனே அந்தத் தகவல் நமது படைகளுக்கு அனுப்பப்படும். ராணுவத்தில், தெற்கு பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த என் நண்பன் ஒருவன்தான் வீரனாக இருப்பான். வீரர்கள் அந்த கிராமத்தில் போய் சரமாரியாகக் குண்டுகளை வீசி அழிப்பார்கள். எதிரிகளோடு சேர்ந்து அப்பாவி கிராம மக்களும் கொல்லப்படுவார்கள். ஏன், கவனமாக பொதுமக்களைத் தவிர்த்து, எதிரிகளை மட்டும் கொல்லக்கூடாதா என்று கேட்பீர்கள். ஆனால் அப்படிச் செய்வதால் தங்களது உயிருக்கு அபாயம் வரும் என்பதால் பயந்து, தாறுமாறாகச் சுடுவார்கள் வீரர்கள். போர் முடிந்து வீட்டுக்கு வரும்போது, இங்கிருக்கும் தொழிற்சாலைகள், அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு அதே கிராமத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கும் என்பதை என் நண்பன் கண்டுபிடிப்பான். அவனுக்கு வேலை போயிருக்கும். இதற்கிடையில் சண்டையை முன்வைத்து பெட்ரோல் விலை ஏறியிருக்கும். ஆக, என் நண்பனுக்கு வேலையும் கிடையாது, விலை அதிகமுள்ள பெட்ரோல் வாங்கக் காசும் கிடையாது. ...

இப்படிச் செல்லும் அந்த வசனம் (குத்துமதிப்பாக).

மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம் என்றாலும், அமெரிக்க அரசுமீதான இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக வேறு ஏதாவது விமரிசனத்தை யாராவது வைக்கமுடியுமா?

7 comments:

  1. "அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு அதே கிராமத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கும் என்பதை என் நண்பன் கண்டுபிடிப்பான். அவனுக்கு வேலை போயிருக்கும். இதற்கிடையில் சண்டையை முன்வைத்து பெட்ரோல் விலை ஏறியிருக்கும். ஆக, என் நண்பனுக்கு வேலையும் கிடையாது, விலை அதிகமுள்ள பெட்ரோல் வாங்கக் காசும் கிடையாது"

    சோசலிச முகமூடியணிந்த இடதுசாரி பயங்கரவாதிகளின் வழக்கமான பொய்ப்பிரசாரமே இந்த உரையாடலில் வெளிப்படுகிறது. பெட்ரோல் விலை நிர்ணயத்தில் அரபு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பங்களிப்பை மூடிமறைத்து அமெரிக்காவின் மீது மட்டும் பழிபோடும் போக்கை என்றுதான் நிறுத்தப்போகிறார்களோ?

    ReplyDelete
  2. kalakkitaanga vasanathula,,,,
    namma oorla innum padathin paera kooda politicians thaan mudiva pandraanga, enna kodumai sir ithu?

    ReplyDelete
  3. அருமையான படம். பல முறைகள் பார்க்க தூண்டியது. உள நல தெரபி் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனதைப பிசையும் வசனங்களும். ராபின் வில்லியம்ஸ் நடிப்பு என்னைக் கவர்ந்தது.

    ReplyDelete
  4. //இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக.. // குறிப்பா இந்த வசனம் யாரோ. கதை எழுதினது படக் கதாநாயகன் மேட் டேமனும் அவர் ரியல் லைஃப் நண்பர் அஃப்ளக்கும் (பனம்பழம், காக்கை?). இளரத்தம்.

    //அமெரிக்காவின் மீது மட்டும் பழிபோடும் போக்கை.. // வசனம் நீளமாகியிருந்திருக்கும், தேவையான எல்லாரையும் வைதிருந்தால்:-)

    Matt Damon's uncanny ascent to hollywood. Must see movie.

    ReplyDelete
  5. வசனம் நீளமாகியிருந்திருக்கும், தேவையான எல்லாரையும் வைதிருந்தால்:-)

    அதனால் என்ன? பராசக்தியின் முழுநீள வசனங்களுக்காகப் புல்லரித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்களே?

    ReplyDelete
  6. //மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம் என்றாலும், அமெரிக்க அரசுமீதான இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக வேறு ஏதாவது விமரிசனத்தை யாராவது வைக்கமுடியுமா? //

    பத்ரி, இந்த வசனத்திற்காகவே அந்த படத்தைப் பாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  7. என்னுடைய முதல் திரைப்பட விமர்சனம். படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை கூறினால் உபயோகமாக இருக்கும் :-).

    http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

    நன்றி.

    ReplyDelete