Friday, January 16, 2009

காமிக்ஸ் புத்தகங்கள்

ஒன்றாவது வகுப்பு ஆண்டிறுதி விடுமுறையின்போதுதான் நான் படிக்கக் கற்றுக்கொண்டேன். எதிர் வீட்டில் ஒரு பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தனர். இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்டிரேக், வேதாளம் என்று ஆரம்பித்து நீளும் பெரும் வரிசை.

முதலில் ஒரு புத்தகம். அடுத்து இன்னொன்று. அடுத்து இன்னொன்று. புரிகிறதோ, இல்லையோ, ஒன்றுவிடாமல் எழுத்துக்கூட்டி, படித்து முடித்தேன். சுமார் 70-80 புத்தகங்கள் இருக்கும். அனைத்தையும் அந்த விடுமுறையிலேயே படித்துவிட்டேன். அவை தீர்ந்ததும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தேன்.

அன்று தொடங்கியது படிக்கும் பழக்கம். பிறகு அங்கிருந்து 16, 32 பக்க சற்றே பெரிய எழுத்து மந்திரவாதிக் கதைகள், விகடன், குமுதம், மாலைமதி, ராணி முத்து, கிரைம் நாவல்கள், ஆங்கில பல்ப் நாவல்கள் என்று தொடர்ந்தது படிப்பு.

பிறகு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணிலிருந்து காணாமல் போனது. டின் டின், ஆஸ்டெரிக்ஸ் ஐஐடி வந்தபிறகுதான் படிக்க ஆரம்பித்தேன்.

முந்தாநாள் சென்னை புத்தகக் காட்சியில், லக்கிலுக் கொடுத்த தகவலை வைத்து, நிறைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அருண் என்பவர் இன்ஃபோமேப் (P 35) என்ற கடையில் இந்தப் புத்தகங்களை வைத்து விற்கிறார். இதற்காகவே லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசாமிகளிடம் சிவகாசியிலிருந்து புத்தகங்களை வாங்கி வைத்துள்ளார். எல்லாமே மோசமான தாளில் அச்சடிக்கப்பட்டவை. ஆனாலும் நமக்கு இன்று வேறு வழியில்லை.

காமிக்ஸ் புத்தகங்களில் பெரும் வெற்றிடம் உள்ளது. அமெரிக்கக் கதைகளை வாங்கி, உல்டா செய்த வசனங்களை நிரப்பி உருவாக்கும் கதைகள் ஒரு ரகம். ஆனால், சொந்தமாக உருவாக்கப்படும் உள்ளூர் கதைகள் தமிழில் சுத்தமாகக் காணோம். சின்னக் குழந்தைகள் காமிக்ஸ்மூலம் மட்டுமே புத்தகம் படிக்க ஆரம்பிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அங்கிருந்து பெரிய எழுத்து கதைப் புத்தகங்கள், பிறகு இன்னபிற நான்-ஃபிக்ஷன் என்று படிப்பு விரிவடையும்.

ஆனால் நல்ல காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்க நன்கு படம் வரைபவர்களும் ஜாலியாகக் கதை சொல்பவர்களும் தேவை. வெறும் கறுப்பு-வெள்ளை கோட்டோவியங்கள் போதும். அப்படிப்பட்ட ஜோடிகள் எங்கிருந்தாவது வரவேண்டும். அடுத்த கட்டமாக டின் டின், ஆஸ்டெரிக்ஸோடு ஒப்பிடக்கூடிய வண்ணப் படக் கதைகளுக்குப் போகலாம்.

ஆள் கிடைப்பார்களா?

8 comments:

  1. பெரிய மனது செய்து, காமிக்ஸ் வாங்கி அதைப் பற்றி ஒரு பதிவும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. காமிக்ஸ் என்பது பொதுவாக குழந்தைகளுக்கானது என்றொரு பாமர பிம்பம் எல்லோரிடமும் நிலவுகிறது. உங்கள் பதிவும் அதையே எதிரொலிக்கிறது. இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது. "நான் குழந்தையாக இருக்கும்போது படித்தேன்" என்பது காமிக்ஸைப் பற்றி எல்லோரும் சொல்லும் ஒரு வழக்கமான வாசகம். அதாவது இப்போது பெரியவர்களாகிவிட்டதால் படிப்பதில்லையாம்.
    "பிறகு தமிழ் காமிக்ஸ் கண்ணிலிருந்து காணமல் போய்விட்டது" என்கிறீர்கள். உண்மையில் நீங்கள்தான் கவனிக்கவில்லை. காமிக்ஸ் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது. இருக்கிறது.
    அப்புறம் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசாமிகள் (நீங்கள் கிழக்கு பதிப்பக ஆசாமி என்பதுபோல)போடுவது அமெரிக்க காமிக்ஸ்களை அல்ல. அவை ஐரோப்பிய காமிக்ஸ்கள். வசனங்கள் உல்டா செய்யப்படவில்லை. அவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பு என்பதற்காக மட்டமானது என்று அர்த்தமில்லை. ஆஸ்ட்ரிக்ஸ் ஆங்கிலத்திற்கு பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுதான் வருகிறது. இந்திய மொழிகளிலேயே லக்கி லூக் தமிழில் மட்டும்தான் படிக்கக் கிடைக்கிறது.

    ReplyDelete
  2. 'உல்டா செய்த' என்ற பிரயோகத்தை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். ஒரு பதிப்பாளருக்கு இது போன்ற கண்ணோட்டம் இருப்பது ஆரோக்கியமானதல்ல என்று நம்புகிறேன். விளக்கவுரை பின்வருமாறு:

    தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருந்த ஒரே இடம் லயன்/முத்து காமிக்ஸ்தான். இன்று இலக்கிய மொழிபெயர்ப்பு செய்யும் பல மொழிபெயர்ப்பாளர்களையும் விட லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கற்பனைத் திறன், தமிழ்ச் சொல்லறிவு, ஆங்கிலப் புலமை, மொழிபெயர்ப்புச் சிக்கல்களை சமாளிக்கும் புத்திசாலித்தனம் ஆகியவை அதிகம் (மொழிபெயர்ப்பாளர்களுக்கே உரிய சில அடிப்படைப் பிரச்சினைகள் சில இருந்தாலும்). ஏதாவது ஒரு லக்கி லூக் கதையை எடுத்து கவனமாகப் படித்துப் பாருங்கள், புரியும்.

    நகைச்சுவையை மொழிபெயர்ப்பது மிகக் கடினமான பணி. நான் பார்த்த வரை காமிக்ஸ்காரர்களைத் தவிர மற்றவர்களின் முயற்சி சொல்லும்படியாக இல்லை. உதாரணமாக, இடாலோ கால்வினோவின் If on a winter's night, a traveller நாவலுக்கு சா. தேவதாஸின் மொழிபெயர்ப்பு. வெளிப்படையாகச் சொன்னால் உங்கள் பதிப்பகத்தின் புதிய மொழிபெயர்ப்பு வெளியீடுகள் சிலவற்றைக் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

    ஆனால் வாசகர்கள் ரெண்டு கழுதை வயதான பின்னும் தமிழ் காமிக்ஸைத் தொடர்ந்து படிக்கக் காரணம், வேறென்ன, காமிக்ஸ் புத்தகங்களின் கதை, படங்கள் மட்டுமின்றி நல்ல மொழிபெயர்ப்பும்தான்.

    தமிழில் ஒரிஜினல் காமிக்ஸைக் கொண்டுவருவது ஓரளவுக்கு மேல் கடினமாக இருக்க முடியாது. அதற்குத் தேவையான கருப்பொருட்களையும் கலைஞர்களையும் கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்க முடியாது. ஆனால் அந்தப் பொற்காலம் வரும் வரை, அது தொடர்பான நம் வேலை நடந்துகொண்டிருக்கும் வரை, இருக்கும் காமிக்ஸுக்குப் புத்துணர்ச்சியளிக்கலாம், குழந்தைகள் மத்தியில் தமிழ் வாசிப்பை அதிகரிக்கலாம். தயாரிப்புத் தரத்தை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால் ஒரிஜினல் தமிழ் காமிக்ஸுக்கு இவைதான் முன்மாதிரி.

    * டிஸ்கி: எனக்கும் லயன் காமிக்ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அச்சுத் தரத்தையும் காகிதத் தரத்தையும் மேம்படுத்தாமல் ஆடிக்கொரு முறை ஒப்பேற்றிவரும் லயன் காமிக்ஸின் போக்கும் கண்டிக்கத்தக்கது. அவர்களது மொழிபெயர்ப்பில் படுசுமாரானவையும் உண்டு.

    ReplyDelete
  3. Dear Badri,

    Some time back, when I heard about Kizakku, I thought of mentioning you to release tamil comics like Lion and Muthu.

    Comics are the starters for the children. Even I started reading comics when I got a very low mark in Tamil and my father bought me my first comics "Irumbu kai Norman". From then on, I got my tamil reading improved, scored good marks as well as become a regular comics reader.
    But still those who have read comics in their childhood, love reading comics now also.
    I love reading comics now too. It relaxes our mind a lot. Another info, I recently went to Japan on an official trip and use the Train to go to my office there everyday. In the train, I found nearly 90 % of the Japanese people reading some japanese comics only. Everyone, old, young, working, schoolgoing, homemakers loves reading comics there. At that time, I miss Loin comics very much there.

    And Lion Comics was doing a very good job in translation. You can check out some comics of Spider, Aarchi, LuckyLuke, Mayavi. Their Translations were very nice, fun filled and make us attached deep with the story.

    I was trying to buy Lions "Cowboy Special Edition" somehow in chennai but couldn't get it. But during this Book Exibition, happens to check "LuckyLuke's blog" and bought it from infomaps on saturday. Hope you too will enjoy comics reading...

    - Suresh

    ReplyDelete
  4. சாத்தான்: நீங்கள் மொழிபெயர்ப்பு பற்றி உங்களது வலைப்பதிவில் முன்னர் எழுதியதை நான் படித்துள்ளேன். காமிக்ஸ் காரர்களுக்கு இருக்கும் சௌகரியம் இலக்கியத்தை மொழிபெயர்ப்பவர்களுக்குக் கிடையாது. ‘உல்டா’ என்று நான் சொல்வது இதைத்தான். அந்த இடத்தில் கதையை இஷ்டத்துக்கு மாற்றலாம். கதையின் அடிப்போக்கை மாற்றாமல், கிளைகளை வேண்டிய அளவுக்கு முத்து/லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றுகிறார்கள். இதனை உதாரணம் கொண்டு என்னால் விளக்கமுடியும்.

    ஆஸ்டெரிக்ஸில் அப்படிச் செய்வதில்லை. சில ‘இடியம்’, சில ‘ஜோக்ஸ்’, பல ‘பெயர்கள்’ தவிர மீதி அனைத்தும் அப்படியே.

    காமிக்ஸ் மொழிமாற்றுனர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்று நான் கருதவில்லை. அவர்களது தமிழ் அற்புதமானது என்பதும் சரியல்ல. என்னிடம் உள்ள காமிக்ஸிலிருந்து நான் அடுத்த சில தினங்களில் இதனை விளக்கி எழுதுகிறேன்.

    கிழக்கு பதிப்பகத்தின் மொழிமாற்றல் மேலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. உங்களுடன் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  5. லயன்/முத்து காமிக்ஸை நான் ஆங்கிலத்தில் படித்ததில்லை. எனவே அவர்கள் எந்த அளவிற்கு மாற்றுகிறார்கள், அல்லது காமிக்ஸின் படங்கள் அதற்கு எந்த அளவிற்கு இடம் கொடுக்கின்றன என்பது எனக்குத் தெரியாது.

    ஆஸ்டரிக்ஸ் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்திலிருந்து அல்லது மற்ற ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதற்கும் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். பின்னதில் சிக்கல்கள் குறைவு. மற்றபடி க்ரியேட்டிவ் லைசென்ஸ் எடுத்துக்கொள்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இது சல்மான் ருஷ்டியோ காஃப்காவோ இல்லையே.

    தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்களின் தரத்தைப் பற்றிப் பேச அவர்களை புதுமைப்பித்தனுடனோ சுஜாதாவுடனோ கோணங்கியுடனோ ஒப்பிடத் தேவையில்லை. அது வேறு விதமான கலை. தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பை (நான் பரிந்துரைக்கும் டெக்ஸ் வில்லர், லக்கி லூக் உட்பட) மேலோட்டமாகப் பார்த்தாலே இலக்கணப் பிழைகள், பொருந்தாத சொற்பிரயோகங்கள், நிறுத்தக் குறித் தவறுகள், நடையில் சீரின்மை ஆகியவை அப்பட்டமாகத் தெரியும். ஆனால் அவை காமிக்ஸ் அனுபவத்தைச் சற்றும் குறைக்கவில்லை - இது என் அனுபவம். இன்னும் பலருடைய அனுபவமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.

    சிறு வயதில் மோசமான மொழிபெயர்ப்பில் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்களின் ருஷ்ய நாவல்களையும் சிறுவர் கதைகளையும் நிறைய படித்திருக்கிறேன் (நா. தர்மராஜன் மட்டும் விதிவிலக்கு). அந்த மொழிபெயர்ப்பின் தரம் அந்த வயதில் என் வாசிப்பு அனுபவத்தை பாதிக்கவில்லை. இப்போது அவற்றைப் படிக்க சகிக்கவில்லை, சிரிப்பு வருகிறது. தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பில் (ருஷ்ய-தமிழ் அளவுக்கு மோசமாக இல்லை என்றாலும்) இன்றும் எனக்கு இந்தப் பிரச்சினை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ராதுகா பதிப்பகத்தின் சோவியத் நாட்டுக் கதைகள் இல்லாவிட்டால், நமக்கு மிகச்சிறந்த மற்றும் நம்நாட்டுக் கதைகள் தெரியாமலேயே போயிருக்கும்.. அதுமட்டுமைல்லாது, அவர்களின் மொழிபெயர்ப்பு மோசம் என்றும் 'சும்மா' சொல்லக் கூடாது... அவர்களின் மொழிபெயர்ப்பு சிறுவர்கள் படித்துப் புரிந்தகொள்ளக்கூடிய அளவிலேயே இருக்கும்... அதனை, #புதுமைப்பித்தனுடனோ சுஜாதாவுடனோ கோணங்கியுடனோ ஒப்பிடத் தேவையில்லை. அது வேறு விதமான கலை.#..!

      Delete
  6. //முத்து/லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றுகிறார்கள். இதனை உதாரணம் கொண்டு என்னால் விளக்கமுடியும்//

    still waiting for your exMPLES.

    ReplyDelete
  7. நான் ஒரு ஓவியன், நீங்கள் காமிக்ஸ் ஆரம்பித்தால் வாய்ப்பளிப்பீர்களா?

    ReplyDelete