Friday, February 27, 2009

கிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி

சென்ற வார இறுதியில் மைலாப்பூரில் நடத்தியது போல, வரும் வார இறுதியில், (நாளை சனிக்கிழமை முதற்கொண்டு), நங்கநல்லூரில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.

இடம்: த்ரிசக்தி சமூக நலக்கூடம் (ஸ்பென்ஸர் மாடியில்)
முகவரி: ரமணாஸ் என்க்லேவ், எண் 28, 4வது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை - 61
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 மணி வரை
நாள்கள்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை (நான்கு நாள்கள்)

தினமும் 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.

சிறப்புத் தள்ளுபடி உண்டு.

===

இனி வரும் வார இறுதிகளில் சென்னையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற புத்தக விற்பனை நடைபெறும்.

வரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும்?

மூன்று நாள்களுக்குமுன் மும்பை சென்றிருந்தேன். எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிதி நிறுவனம், தாங்கள் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து ஒரு பிரசண்டேஷனைச் செய்யச் சொல்லியிருந்தார்கள். பெரும் முதலீட்டாளர்கள் சிலர் அங்கு இருந்தனர். உலகப் பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் நிலை போன்ற பலவற்றைப் பற்றியும் பேசினார்கள்.

பேசிய பலரில் இரு இந்தியர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் BP சிங் என்ற அனலிஸ்ட். மற்றொருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்ற இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்.

இருவரும் முற்றிலும் வேறான பின்னணியைக் கொண்டவர்கள் என்றாலும் இருவரது பகுப்பாய்வும் ஒரேமாதிரியாக இருந்தது. சிங், அனலிஸ்ட் என்பதால் எண்களை வைத்து விளையாடுபவர்; அதிலிருந்து சில புரிதல்களை முன்வைப்பவர். ஜுன்ஜுன்வாலா நிச்சயமாக பல அனலிஸ்ட்களை வேலைக்கு வைத்திருப்பாராக இருக்கும்; ஆனால் எண்களை மட்டுமே நம்பியிராமல் தனது இதயத்தையும் பின்பற்றி முதலீடு செய்பவர்.

இருவரும் அடித்துச் சொன்னது - வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்கும் என்பது. காங்கிரஸ் கூட்டணி இப்போது இருக்கும் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்களைப் பெறுவார்கள் என்றும் பாஜகவும் கம்யூனிஸ்டுகளும் இப்போது இருப்பதைவிடக் குறைவான இடங்களைப் பெறுவார்கள் என்பதும் இவர்களது கணிப்பு.

இருவரும், சுவாரசியமாக, விவசாயத்துக்குத் தரப்பட்டுள்ள மான்யத்தை வரவேற்றனர். அதன் காரணமாகவும், மேலும் பல கிராம நலத்திட்டங்களாலும் இப்போதுள்ள அரசின்மீது கிராமப்புற மக்களுக்கு அதிருப்தி இல்லை என்றும், எனவே ஆச்சரியம் தரத்தக்க வகையில் இப்போதுள்ள மோசமான உலகப் பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும்தான் ஒரு incumbent, ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புள்ளது என்றும் இருவரும் கருதினர்.

இது கருத்துக் கணிப்பு என்ற வகைக்குள் அடங்காது. Informed opinion என்று சொல்லலாம். ஆனால் இவர்களது சிந்தனையை என்னால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளமுடிகிறது.

தமிழகத்தில் மட்டும் நிலைமை வேறு மாதிரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

Monday, February 23, 2009

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்?

இன்று எனக்கு பெயரில்லாக் கடிதம் ஒன்று வந்தது. பிற பதிப்பகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் இந்தக் கடிதத்தின் நகல் போயிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், நூலகத் துறை தமிழ்ப் பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்று தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு அளிக்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்தது. சுமார் 12,500 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பல அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அதன் நோக்கம்.

இந்த வசதிகளில் விளையாட்டு மைதானம் அமைப்பது, சுடுகாடு கட்டித்தருவது ஆகியவற்றுடன் நூலகம் கட்டித் தந்து, சில புத்தகங்களை வாங்கி அங்கே வைப்பதும் அடங்கும்.

இது தொடர்பாக, பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை விண்ணப்பிக்கலாம் என்ற ஆணை பல மாதங்களுக்கு முன் வந்திருந்தது. அதைப்பற்றி என் வலைப்பதிவிலே எழுதியிருந்தேன்.

இதன்படி, தமிழ்ப் பதிப்பாளர்கள் அனைவரும் புத்தகங்களை விண்ணப்பித்திருந்தனர். புத்தக மாதிரிகள் கோரப்பட்டன. கொடுக்கப்பட்டன. மேலும் சில விவரங்களைக் கேட்டார்கள். கொடுத்தோம். பிறகு ஒரு நாள், திடீரென, உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் (அவர்கள்தான் இதற்கான வேலையைச் செய்பவர்கள்) வந்து பேச அழைக்கப்பட்ட சில பதிப்பாளர்களில் ஒருவர் எங்கள் அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து, “உங்களைக் கூப்பிடவில்லையா” என்று கேட்டார். இல்லை என்றோம்.

சில நாள்கள் கழித்து, நீதிமன்றத்தில் ஒரு பதிப்பாளர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகத் தகவலைப் படித்தேன். சென்னை உயர்நீதிமன்றமும் புத்தகக் கொள்முதலைத் தொடரக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு முன்னமேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் இது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் பதிப்பாள நண்பர் ஒருவர் என்னை அழைத்து, இந்த வழக்குகளின் பின் இருந்து பண உதவி செய்வது நான்தான் (அதாவது கிழக்கு பதிப்பகம்) என்பதாகச் செய்திகள் உலவுகின்றனவே, அது உண்மையா என்று என்னிடம் கேட்டார். எனக்கே இந்தச் செய்தி புதிது என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தேன்.

பொதுவாக, பொதுமக்களுக்கு நேரடியாகப் புத்தகங்களை விற்பதே எங்கள் நோக்கம். இடையில் நூலகங்களுக்கு விண்ணப்பிக்கத் தவறமாட்டோம். கிடைத்தால் புத்தகங்களைத் தருவோம். கிடைக்காவிட்டால் குறை சொல்லமாட்டோம். லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படித்தான் நாங்கள் இதுவரை நடந்துவந்துள்ளோம். மறைமுகமாகப் பிறரை வழக்கு தொடுக்க வைத்துப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. செய்வதாக இருந்தால் நேரடியாகவே வழக்கு தொடுத்திருப்போம்.

இடையில் பத்திரிகையாளர் ஞாநி இது குறித்தான சில விவரங்களை என்னிடம் கேட்டார். எனக்குத் தெரிந்த விவரங்களைக் கொடுத்தேன். இன்று வந்த மொட்டைக் கடுதாசியில் இருக்கும் பல விவரங்கள் நான் அறியாதவை. அந்தக் கடிதம், இந்தப் புத்தகங்களைப் பெறுவதில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

மொத்தம் 818 பதிப்பாளர்கள் விண்ணப்பித்திருக்க, வெறும் 41 பேர்களுக்கு மட்டுமே ஆணைகள் வழங்கப்பட்டுள்ளனவாம். அதிலும் ஒரு சிலருக்கு கோடிக்கணக்கிலும், பலருக்கு பெரும் லட்சக்கணக்கிலும். குறைந்தபட்சமாக 15 லட்ச ரூபாயாவது. அதிகபட்சமாக 1.7 கோடி ரூபாய். இந்த 41 பேர் போக, மீதி அனைவருக்கும் பூஜ்யம். மேலும் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நூல் வழங்கல் ஆணை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்தக் கடிதம் சொல்கிறது. பல பதிப்பாளர்கள் நிறைய லஞ்சம் கொடுத்துதான் ஆணைகளை வாங்கியுள்ளனர் என்று இந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது.

மொத்தம் 41 நிறுவனங்களுக்கு 19 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் தரச் சொல்லி ஆணை வந்துள்ளது (ரூ. 19,70,47,443)

1. எஸ்.சாந்த் & கோ ரூ. 1,73,16,160
2. அல்லயன்ஸ் கம்பெனி ரூ. 1,49,55,098
3. மணிமேகலை பிரசுரம் ரூ. 1,18,33,390
4. கலைஞன் பதிப்பகம் ரூ. 1,00,41,535
5. சட்டக் கதிர் ரூ. 69,42,800
6. சிக்ஸ்த் சென்ஸ் ரூ. 69,86,645
7. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ரூ. 68,81,540
8. ஹிக்கின்பாதம்ஸ் ரூ. 68,25,385
9. திருமகள் நிலையம் ரூ. 66,69,682
10. பாரதி பதிப்பகம் ரூ. 63,82,219
11. சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் ரூ. 58,96,275
12. ஸ்ரீ செண்பகா பதிப்பகம் ரூ. 55,03,190
13. பூம்புகார் பதிப்பகம் ரூ. 52,68,360
14. சுரா பதிப்பகம் ரூ. 52,37,360
15. விகடன் மீடியா சர்வீசஸ் ரூ. 51,66,260
16. அருணோதயம் ரூ. 48,15,903
17. வானதி பதிப்பகம் ரூ. 46,25,130
18. தமிழ்ப் புத்தகாலயம் ரூ. 46,09,815
19. புத்தகப் பூங்கா ரூ. 45,12,820
20. பூங்கொடி பதிப்பகம் ரூ. 44,97,505
21. கவிதா பப்ளிகேஷன்ஸ் ரூ. 42,11,625
22. இலக்குமி நிலையம் ரூ. 39,00,526
23. நர்மதா பதிப்பகம் ரூ. 37,93,627
24. தமிழ்மண் பதிப்பகம் ரூ. 35,32,660
25. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் ரூ. 30,01,740
26. விஜயா பதிப்பகம் ரூ. 28,71,052
27. அலைகள் வெளியீட்டகம் ரூ. 27,19,688
28. காவ்யா பதிப்பகம் ரூ. 26,90,335
29. புதுமைப்பித்தன் பப்ளி. ரூ. 25,11,660
30. காலச்சுவடு பதிப்பகம் ரூ. 23,40,642
31. மயூரா புக்ஸ் ரூ. 21,79,835
32. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ரூ. 21,79,835
33. அம்சா பதிப்பகம் ரூ. 21,69,625
34. பழனியப்பா பிரதர்ஸ் ரூ. 21,49,205
35. கண்ணதாசன் பதிப்பகம் ரூ. 20,24,132
36. மீனாட்சி புத்தக நிலையம் ரூ. 19,40,053
37. வித்யா பப்ளிகேஷன்ஸ் ரூ. 18,07,170
38. வள்ளல் சீதக்காதி பதிப்பகம் ரூ. 15,72,340
39. பிரேமா பிரசுரம் ரூ. 15,51,920
40. குழந்தைகள் உலகம் ரூ. 15,26,395
41. ஐந்திணைப் பதிப்பகம் ரூ. 15,05,975

மொத்தம் ரூ. 19,70,47,433

======

Disclaimers: அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இந்த எண்கள் சரியானவையா என்று எனக்குத் தெரியாது. அந்தக் கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்று எனக்குத் தெரியாது. தகவலை இப்போதைக்குப் பொதுவில் பகிர்ந்துகொள்வது மட்டுமே நோக்கம். புத்தகம் பெறுதலில் ஊழல் நடந்துள்ளதா, லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா போன்றவை யாரோ பெயர் தெரியாத ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே. எனது இந்தப் பதிவின் காரணமாக நான் யார் பேரிலும் குற்றம் சாட்டவில்லை.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற புதுமையான திட்டங்களைக் கொண்டுவரும்போது, transparent ஆக, எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காதவண்ணம், பொதுமக்கள் பயன்பெற ஏற்றதாகச் செய்வது அவசியம்.

Saturday, February 21, 2009

கற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப்பதிவில் அவர் எழுதியுள்ள கட்டுரை: கற்கத் தவறிய பாடம்

மிக முக்கியமான பதிவு இது. பள்ளிகள் தொடங்கப்பட்டது முதற்கொண்டே, தவறாகக் கற்பிப்பது, மாணவர்கள் வாழ்க்கையை அழிப்பது ஆகியவையும் நடந்துகொண்டே வருகின்றன. பெற்றோர்களுக்கு, பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளின் படிப்பை எதிர்கொள்ளத் தெரியவில்லை.

நேற்றுடன், கடந்த 4 மாதங்களில் சுமார் 1,000 மாணவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன். இதில் பலர் 10, 12-ம் வகுப்பில் இருக்கும், மார்ச் மாதம் பரீட்சை எழுதப்போகும் மாணவர்கள். வேறு சிலரோ தொடக்கப் பள்ளி நிலையில் இருப்பவர்கள். இடையில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் சிலவற்றிலும் கலந்துகொண்டேன்.

ஒட்டுமொத்தமாகக் கல்வி முறை என்பதே ‘ஊத்தல்’ என்பதுதான் என் கருத்து. வயது அதிகமாக அதிகமாக, இயல்பாகக் கேள்வி கேட்கும் திறனை மாணவர்கள் இழக்குமாறு செய்துவிடுகிறார்கள் நம் ஆசிரியர்கள். சிறு குழந்தைகள் தைரியமாகப் பேசுகின்றனர். நாள் கடக்கக் கடக்க, அவர்கள் ஒவ்வொரு வகுப்பையும் தாண்டத் தாண்ட, ஊமைத்தனம் அதிகமாகிறது. பேச நா எழும்புவதே இல்லை. எதையாவது பேசினால், ‘சீ, வாயை மூடு, அதிகப் பிரசங்கி!’ என்று வாத்தியார் திட்டுவாரோ என்ற பயத்தில் மாணவர்கள் மௌனமாகிவிடுகிறார்கள்.

நான் பேசும் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எப்படியாவது உங்கள் மாணவர்களைக் கேள்வி கேட்பவர்களாக மாற்றுங்கள். எப்படியாவது அவர்களுக்குத் தைரியமாகப் பேசக் கற்றுக்கொடுங்கள். எழுதக் கற்றுக்கொடுத்தால் மேலும் நலம். மீதமெல்லாம் தானாக வந்துவிடும்.

மாணவர்களிடம் உரையாடும்போது, முடிந்தவரை ஆசிரியர்கள் அந்த அறையில் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அப்போது உரையாடல் தன்மை நிச்சயம் மேம்படுகிறது. ஆசிரியர்கள் திடீரென உள்ளே நுழைந்தால், போச்சு! அவ்வளவுதான். மாணவர்கள் மீண்டும் கைகட்டி, வாய் புதைத்து, அமைதியாகிவிடுகிறார்கள்.

***

வீட்டில் என் மகளிடம் மாற்றுவிதமாகப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் எனக்குப் பல பிரச்னைகள் எழுகின்றன. அவளது கவனம் பிசகுகிறது. பல நேரங்களில் நான் பள்ளிப் பாடத்திலிருந்து தொடங்கி எங்கோ கதை சொல்ல, அவள் பொறுமை இழக்கிறாள். ஆனால், பாடம் அல்ல என்று சொல்லி, கதையாக அதே விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தால் சந்தோஷமாகக் கேட்கிறாள்.

ஆக, பள்ளிப்பாடம் என்றாலே அதை ஒரு குறிப்பிட்ட விதமாகத்தான் படிக்கவேண்டும் என்ற அபத்த நிலை நம் குழந்தைகளிடம், வெற்றிகரமாகப் புகுத்தப்படுகிறது.

பாடப் புத்தகங்களின் போதாமை, ஆசிரியர்களின் தவறான கற்பித்தல் முறை, மாணவர்களிடம் காணப்படும் பதற்றம், தேர்வு தொடர்பான அச்சம், மதிப்பெண்கள் அதிகமாக வராவிட்டால் வீடுகளிலும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களிலும் நடக்கும் கூத்து... இத்தனையையும் மீறி ஒரு குழந்தை ஏன் பள்ளிக்குப் போகவேண்டும்?

தேர்வுகள் இல்லாத நேரத்தில் பிற மாணவர்களுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசுதல், விளையாடுதல், கலை விழாக்களில் பங்கெடுத்தல் போன்றவை மட்டும்தான் காரணமாக இருக்கமுடியும்.

தேர்வு பயம் இல்லாத, அறிவு வேட்கையை உருவாக்கக்கூடிய, குழந்தைகளிடம் ஆதரவாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் மிக மிக அவசியம். அதை நாம்தான் சோதனை முறையில் உருவாக்கவேண்டும்.

அதற்குள்ளாக மேலும் பல தலைமுறை மாணாக்கர்களை நாசமாக்கப்போகிறோம் நாம்.

கிழக்கு 5 வருடக் கொண்டாட்டம்

நியூ ஹொரைசன் மீடியா (கிழக்கு பதிப்பகம்) தொடங்கி ஐந்தாண்டுகள் முடிவடைந்துள்ளன.

ஒரு சிறு கொண்டாட்டமாக, மைலாப்பூர் வடக்கு மாடவீதி, வேலூர் லட்சுமியம்மாள் கல்யாண மண்டபத்தில் பிப்ரவரி 21-23 (இன்று தொடங்கி) மூன்று நாள்கள் சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறுகிறது. (கபாலீசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில், ஹோட்டல் சரவணபவனுக்கு அருகில்.) இன்று மாலை, உமாஷங்கர் ஐ.ஏ.எஸ், மாலன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

வரும் நாள்களில் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் இதுபோன்று புத்தகக் காட்சிகள் நடத்த உள்ளோம்.

ஜெயலலிதா பிறந்தநாள்

நான்கைந்து நாள்களுக்கு முன் சில அஇஅதிமுக கட்சித் தொண்டர்கள் எங்கள் அலுவலகத்து வந்தனர்.

“அய்யா, என் பேரு தேனாம்பேட்ட ___________. உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?” என்று ஆரம்பித்தார் தலைவர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்.

“இல்லைங்க, நான் கேள்விப்பட்டதில்ல” என்றேன் நான்.

“ஒண்ணும் இல்லீங்க. அம்மாவோட பொறந்த நாள் வருது. அதுக்கு உங்க சார்பில...”

அரசியல் விழாக்களுக்கு நன்கொடைகள் ஏதும் தருவதில்லை என்பது எங்கள் கொள்கை. அதை நான் சொல்வதற்குள் அவர் முந்திக்கொண்டார்.

“பணம் ஏதும் வேண்டாங்க. ஏழைப் பசங்களுக்கு புத்தகம் தரணுங்க...”

இது வித்தியாசமாக இருந்தது. என்ன புத்தகம் என்று கேட்டேன்.

“ஏதோ, கேக் புத்தகம் போட்டிருக்கீங்களாமே, பசங்கதான் வந்து சொன்னாங்க. 13 புத்தகம் ஒரு செட்டா இருக்குதுங்களாமே. அதுல ___ செட் மொத்தமா கொடுத்திடுங்க...”

“அதுல 12 புத்தகம்தாங்க போட்டிருக்கோம். அதுவும் நீங்க கேக்கற அவ்வளவு செட்டெல்லாம் கொடுக்க முடியாதுங்க. விலை ரொம்ப ஆவும். வேணும்னா நல்ல டிஸ்கவுண்ட்ல கொடுக்கறேன்...”

“நீங்களா பாத்து கொடுக்க சார், பசங்களுக்குத்தான் சார் போவுது” என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மற்றொருவர்.

கடைசியாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை புத்தகங்களை மட்டும்தான் இலவசமாகத் தரமுடியும் என்று சொன்னேன்.

சென்ற மாதம்தான் இந்தப் புத்தகங்களை அறிமுகம் செய்திருந்தோம். இவற்றில் பெரிய புதுமை ஒன்றும் கிடையாது. இவை 2-4 வயதுக் குழந்தைகளுக்கான புத்தகங்கள். பறவைகள், விலங்குகள், பழங்கள்... இப்படிப் பலவற்றையும் வண்ணப்படங்களாக, அவற்றுக்குப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவற்றின் பெயர்களை எழுதி, கெட்டி அட்டையில், வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டவை. 16 பக்கங்கள். விலை ரூ. 25.






இதுபோன்ற புத்தகங்கள் நிறையக் கிடைக்கின்றன. குழந்தைகளால் எளிதில் பிய்த்துவிட முடியாது என்பதுதான் இவற்றின் வசீகரம். தண்ணீர் பட்டாலும் உடனடியாக வீணாகிவிடாது.

“யாருக்கெல்லாம் இந்தப் புத்தகங்களைக் கொடுப்பீர்கள்?” என்று கேட்டேன்.

“நீங்களே வாங்க, வந்து பசங்ககிட்ட பேசுங்க” என்றார்கள். வருகிறேன் என்று சொன்னேன்.

“எங்களிடம் வேற சில புத்தகங்கள் இருக்கு. கலர் கலரா படம் போட்டு, பக்கத்துல் எழுத்து இருக்கும். அதையும் தரேன்” என்றேன். அதைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

“அதெல்லாம் வேண்டாங்க. பசங்க இதத்தான் கேட்டாங்க. அதனால இது போதும். இதுல வேணும்னா அதிகமா தாங்க” என்றனர்.

“எங்களால குறிப்பிட்ட அளவுதான் இலவசமாத் தரமுடியும். வேணும்னா சில நண்பர்கள்கிட்ட கேட்டுப் பாக்கறேன்” என்றேன்.

ஜெயலலிதா பிறந்த நாள் தவிர, அண்ணா, பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் பிறந்த நாள்களிலும் இதேபோன்று குறிப்பிட்ட சில ஏழைக் குடியிருப்புகளுக்குப் புத்தகம் தரமுடியுமா என்று அவர்கள் கேட்டனர்.

எங்களால் முடிந்த அளவு தருவதாகவும், அதற்குமேல், இணைய நண்பர்கள் உதவினால் அதையும் சேர்த்துத் தருவதாகவும் சொல்லி, அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டேன்.

***

ஆகவே, நண்பர்களே, இந்தப் பதிவைப் படிக்கும் சிலர், விருப்பப்பட்டால், உங்களது உதவிகளை அளிக்கலாம். ஜெயலலிதா பிறந்தநாள் என்று இல்லை, கருணாநிதி, கனிமொழி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், வீரமணி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், அமர் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரமணியம் சுவாமி, தேவ கவுடா, லாலு பிரசாத் யாதவ்... என்று யாருடைய பிறந்த நாளாக இருந்தாலும், ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் செல்லுமாறு செய்யலாம்.

இது தொடர்பாக, என்னுடனோ (badri@nhm.in) அல்லது ஹரன்பிரசன்னாவுடனோ (haranprasanna@nhm.in) தொடர்பு கொள்ளலாம்.

Friday, February 20, 2009

கல்லூரி தமிழ்ப் பாடத்திட்டம்

இரண்டு நாள்களுக்குமுன், ஒரு தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை பாடத்திட்டக் குழுவில் உட்காரச் சொல்லி என்னைக் கேட்டுக்கொண்டனர். என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளின் தமிழ்ப் பேராசிரியர்கள். என்னை எப்படிப் பிடித்தனர், அது அவர்களின் கெட்டகாலமா என்று தெரியவில்லை.

மொத்தம் நான்கு தாள்கள் பற்றி விவாதம். அதில் இரண்டு, 12-ம் வகுப்பு வரை தமிழே படிக்காமல், கல்லூரி சேர்ந்ததும் தமிழ் படிப்பதற்கானது. அதாவது அ - அம்மா, ஆ - ஆடு, இ - இலை விஷயம். அதில் அதிகம் கருத்து சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. 1-6 வகுப்புகளுக்கான தமிழ்நாடு பாடநூல் நிறுவனப் புத்தகங்களை அடியொட்டி பாடங்களைத் தயாரிக்கலாம் என்று பேராசிரியர்கள் அனைவரும் முடிவெடுத்தனர். நான் என் பங்குக்குத் தலையை ஆட்டி வைத்தேன்.

அடுத்த இரண்டு தாள்கள், 12-ம் வகுப்பு வரை தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படித்து, பின் கல்லூரியில் தொடர்ந்து தமிழைப் படிக்கப் போகிறவர்களுக்கானது. இந்த மாணவர்கள் தமிழ்த்துறை மாணவர்கள் அல்லர். அறிவியல், வணிகவியல் போன்ற துறைகளில் (B.Sc, B.Com, B.A...) பட்டம் படிக்கச் சேர்ந்தவர்கள்.

இதில் ஒரு தாள், இலக்கிய நயம், இலக்கியம் என்றால் என்ன, இலக்கியக் கோட்பாடுகள், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து சில மாதிரிகள் என்று இருந்தது. மற்றொரு தாள், நாடகம்: தோற்றமும் வளர்ச்சியும், ஒப்பனைக் கலை, அண்ணாவின் இரு நாடகங்கள் (வேலைக்காரி, ஓர் இரவு), இந்த நாடகங்களால் சமூகத்தில் என்ன தாக்கம்... இப்படி இருந்தது.

பேராசிரியர்கள் தீவிரமாகப் பேசும்போது, நான் வாய் புதைத்து மௌனியாக இருந்தேன். சொல்வதற்கு என்னிடம் சரக்கு ஏதும் இருக்கவில்லை. கடைசியில், நான் சில மாற்றுக் கருத்துகளைச் சொல்லலாமா என்று அவர்களது அனுமதி பெற்றேன். கீழ்க்கண்டதை அவர்களிடம் சொன்னேன்:

இலக்கியம் என்றால் என்ன, இலக்கிய நயம் என்றெல்லாம் மாணவர்களை போரடிக்காதீர்கள். அதுவும் இவர்கள் தமிழ்த்துறை மாணவர்கள்கூடக் கிடையாது. அதற்குபதில், இன்றைய தேவையான புதுவகைத் தமிழை - முக்கியமாக உரைநடைத் தமிழை மாணவர்களுக்குக் கொண்டுவாருங்கள். உதாரணத்துக்கு பத்திரிகைகளில் பத்தி எழுதுவது எப்படி, பத்திரிகை, இதழியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி, தலையங்கம் எழுதுவது எப்படி, தலைப்பு வைப்பது எப்படி, அறிவியல்-வணிக-தொழில் விஷயங்களை தமிழில் எழுதுவது எப்படி (இந்த மாணவர்கள் எல்லோருமே அறிவியல், வணிகம், கணக்கு படிப்பவர்கள்), விளம்பரத் தமிழ் (விளம்பர ஏஜென்சி காபிரைட்டிங்), திறமையாக பொருளை விற்பனை செய்யத் தோதாகக் கடிதங்கள் எழுதுவது - ஆகியவற்றைப் பாடமாக வைக்கலாமே?

அதேபோல, நாடகம் நல்ல விஷயம்தான். ஆனால் இன்று திரைக்கதை எழுதுவது என்பது மேலும் சுவாரசியமான ஒரு விஷயம் ஆயிற்றே? தொலைக்காட்சி நெடுந்தொடர் முதற்கொண்டு சினிமாவரை, கதையை திரைக்கதை, வசனம் என்று மாற்றி அழகாகக் கொண்டுசெல்கிறார்களே, அதை ஏன் சொல்லித்தரக்கூடாது? ஒரு சில புகழ்பெற்ற இயக்குனர்கள், சினிமா, தொலைக்காட்சி எழுத்தாளர்களை அழைத்துவரச் சொல்லி, அவர்களிடம் நேரடியாகப் பாடம் கற்கலாமே? அசைன்மெண்ட் என்றால் இரண்டு சினிமா பார்த்து, அதன் திரைக்கதை அமைப்பைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்லலாமே? நான் கடவுள் vs Slumdog Millionaire - திரைக்கதை அமைப்பை அலசுக...

இன்னும் மு.வரதராசனார் காலத்திலேயே நாம் இருக்கவேண்டுமா? நாவல் என்றால் கரித்துண்டு. நாடகம் என்றால் அண்ணாத்துரை. நம் மாணவர்களுக்கு வேறு போக்கிடமே இல்லையா?

ஒரு கட்டத்தில் பேராசிரியர்கள் எனது கருத்திலும் ஓரளவுக்கு நியாயம் உள்ளது என்று ஏற்றுக்கொண்டனர். பாடத்திட்டத்தை எனது பரிந்துரைகளின்படி மாற்றுவது பற்றிப் பரிசீலிக்கலாம் என்று எழுதிக்கொண்டனர். மாறுமா, மாறாதா என்று இனி வரும் மாதங்களில் தெரிய வரும்.

இதனைப் படிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள், என்மீது முட்டை உடைத்து ஆம்லெட் போடாதிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

(பி.கு: இந்தக் கூட்டத்துக்குப் பிறகு என்னை அடித்துத் துரத்திவிடுவார்கள் என்று நினைத்தேன். மேலும் ஒரு கல்லூரியில் தமிழ் வகுப்பு மாணவர்களிடம் பேச அழைத்துள்ளார்கள். அவர்கள் நிலையை நினைத்தால்...)

வக்கீல்கள் எனும் அநாகரிகர்கள்

நேற்று நடந்துள்ள உச்சகட்ட வன்முறைக் கட்டவிழ்ப்பு முழுமைக்கும் தமிழக வக்கீல்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். அடிதடி, கல்லெறிதல், தீவைத்தல் என அனைத்துக்கும் காரணம், காவல்துறையின் தாக்குதல்தான் என்று வக்கீல்கள் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

அடிப்படையில் வழக்கறிஞர்கள் தங்களது நிலையை மறந்து, வன்முறையில் இறங்கியுள்ளனர் என்பது கடந்த சில தினங்களாக நடந்துவரும் செயல்களிலிருந்து தெரியவரும்.

இலங்கைப் பிரச்னையில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையில் இருந்து தமிழக வழக்கறிஞர்கள் போராடியது நியாயமானது. தொடர்ச்சியாக நீதிமன்ற அலுவல்களை நடக்கவிடாமல் செய்ததைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி மீது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையிலேயே முட்டை வீசி, அடித்து, தாக்குதல் நடத்தியுள்ளனர் சில வழக்கறிஞர்கள். இந்த நிலையில்தான் நியாயமான போராட்டம் என்பது அராஜக நிலையை அடைகிறது.

ஆனால் அத்துடன் நிறுத்தாமல், தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்யவந்த காவலர்களைத் தாக்கி, சுப்ரமணியம் சுவாமியையும் கைது செய்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லி, அங்கிருந்து தொடர்ச்சியாக, காவல் நிலையத்துக்குத் தீ வைத்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மூன்று பேருந்துகளுக்குத் தீ வைத்து, அராஜகத்தில் தெரு ரவுடிகளைவிட மேம்பட்டவர்கள் தாங்கள் என்று நிரூபித்துள்ளனர், கறுப்பு கோட் சட்ட வல்லுனர்கள்.

நிலைமையைச் சமாளிக்க வந்த ஒரு ஜட்ஜுக்கும் தலையில் அடி. நேற்று நான் பார்த்த செய்தித் துணுக்குகளில், வக்கீல்கள் கல்லெறிந்தபிறகே, காவல்துறையினர் தடியடி நடத்தி, ரவுடி வக்கீல்களை விரட்டியுள்ளனர். இங்கு, காவல்துறையின் அராஜகம் என்றெல்லாம் கூப்பாடு போடுவதில் பிரயோசனமில்லை.

சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

***

வழக்கறிஞர்கள் கூட்டமைப்புக்கான தலைமையை இதில் வெகுவாகக் குற்றம் சொல்லவேண்டும். யாரோ நாலு பேர், இள ரத்தம், கல்லெறியலாம் என்று இறங்கும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி, போராட்டத்தை சரியான வழியில் செலுத்தத் தெரியாத அந்தத் தலைமையின் காரணமாக, இன்று தமிழக வழக்கறிஞர்கள்மீது அனைவருக்கும் மரியாதை குறைந்துள்ளது. இதை ரிப்பேர் செய்ய வழக்கறிஞர்களுக்கு பல மாதங்கள் எடுக்கும்.

சட்டக்கல்லூரி வன்முறை ஆரம்பித்து இன்றுவரையில் வழக்கறிஞர்கள் என்றால் கத்திக்குத்து, வன்முறை, பஸ் எரித்தல் என்று இருந்தால், நாளை இந்தியாவின் நிலைமை என்னாவது?

வழக்கறிஞர்கள் இன்று தங்கள் நிலையை மட்டுமே எடுத்துச் சொல்லி, மீண்டும் நீதிமன்றங்கள் முன் போராட்டம் செய்யப்போகிறார்களாம். இவர்கள் செய்த தவறுக்கு யார் மன்னிப்பு கேட்கப்போகிறார்கள்?

Thursday, February 19, 2009

கருத்துக் கணிப்பு தடை

இந்தியா முதிர்ச்சி அடையாத ஒரு நாடு என்பதை நன்கு நிரூபிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் ஓர் அபத்தமான ஆணையை முன்வைத்துள்ளது. இதன்படி, தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடியும்வரை, கருத்துக் கணிப்பு, எக்ஸிட் கணிப்பு ஆகியவற்றை அச்சு ஊடகங்களிலோ, மின்னணு ஊடகங்களிலோ பதிப்பிக்கக்கூடாது.

இது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நான் கலந்துகொண்டதைப் பற்றி எழுதியுள்ளேன். இந்த ஆணையை நான் எதிர்க்கிறேன். இந்த ஆணை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உரிமைகளுக்கு எதிரானது என்று கருதுகிறேன்.

இந்த ஆணையை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று நான் கருதுகிறேன். (ஆனால் உச்ச நீதிமன்றத்தின் கருத்து வேறு விதமாக உள்ளது!) இந்த ஆணையை எதிர்த்து ஊடகங்கள் நீதிமன்றத்துக்குப் போகும் என்று நம்புகிறேன்.

அப்படி நீதிமன்றங்கள் விரைவில் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறும்வண்ணம் இணைய வலைப்பதிவுகளில் கருத்துக் கணிப்புகளை நடத்தி, முடிவுகளை வெளியிட்டு, நமது உரிமைகளை நாம் நிலை நாட்டவேண்டும்.

சுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்

கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது இந்தச் செயல். நீதிமன்றத்தில் புகுந்து வக்கீல்களே அடாவடியாக இதுபோன்ற ரகளைகளில் ஈடுபட்டுள்ளது குடியாட்சி முறை மீது நம்பிக்கையுள்ள அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல். இந்த ரவுடிச் செயலுக்கும் மங்களூரில் மதுவகங்களில் பெண்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

ஆனால், இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர் கைகொட்டி இதனைக் கொண்டாடுவது அவர்களது முதிர்ச்சியின்மையையும் அவர்கள் பின்பற்றிவரும் பாதையின் அரைவேக்காட்டுத் தன்மையையும் மட்டுமே காட்டுகிறது.

ஒருவருடைய கருத்துகள் ஏற்கமுடியாதவையாக இருந்தாலும், அதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு என்பதையும், வன்முறையைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அடுத்தவருக்குத் தீர்ப்பு வழங்க நமக்கு எந்தக் கட்டத்திலும் அதிகாரம் இல்லை என்பதையும் ஏற்காத கருத்துத் தீவிரவாதிகள், இடதாக இருந்தாலும் சரி, வலதாக இருந்தாலும் சரி, நம் நாட்டுக்கு மிகவும் கேடு செய்யக்கூடியவர்கள். இந்த ஒரு விஷயத்தில் ஸ்ரீராம சேனையும் வினவும் மதிமாறனும் ஒன்றுசேர்ந்து ஓரணியில் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

Wednesday, February 18, 2009

நாட்டுடைமை குழப்பம்

2000-வது ஆண்டுக்கு முன், சுமார் 20 பேருடைய நூல்கள் மட்டுமே தமிழக அரசால் காப்புரிமைத் தொகை வழங்கப்பட்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டிருந்தது. 2000-2005 காலகட்டத்தில் மேலும் 7-8 பேருடைய நூல்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். தெளிவான தகவல்கள் என்னிடம் இல்லை.

2006-ல் கருணாநிதி தலைமையிலான அரசு 22 பேருடைய நூல்களை நாட்டுடைமையாக்கியது. 2007-ல் 14 பேர். 2008-ல் 27 பேர். இப்போது 2009-ல் 28 பேருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டோ - இப்போது நினைவில் இல்லை - கிருபானந்த வாரியாரது நூல்களை நாட்டுடைமையாக்கப் போவதாக அரசு சொன்னது. குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் என்ற பெயரில் வாரியாரின் வாரிசு ஒருவர் வாரியாரின் அனைத்து நூல்களையும் பதிப்பித்து வருகிறார். அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் அரசு அந்த முயற்சியைக் கைவிட்டது. குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் பதிப்பிக்கும் நூல்கள் அனைத்துமே வாரியாருடையவை. அந்த நூல்களை நாட்டுடைமையாக்கினால் அந்தப் பதிப்பகத்தின் தொழில் அம்பேலாகிவிடும்.

பொதுவாகவே, நாட்டுடைமையாக்குவதாகச் சொல்லப்படும் பட்டியலில் இடம் பெறுபவர்கள் கீழ்க்கண்ட வகையில் இருப்பார்கள்:

1. அறிஞர்கள். நிஜமாகவே நல்ல, உருப்படியான விஷயங்களை எழுதியவர்கள். இவர்களது நூல்கள் பெரும்பாலும் விற்கா. அதற்கான சந்தை இல்லாமல் இருக்கும். அதனால் யாருமே பதிப்பிக்க மாட்டார்கள். சரி, இந்த நூல்களை நாட்டுடைமையாக்கினால், நான்கு பேர் பதிப்பிக்க வாய்ப்பு உண்டு என்று கருதி அரசு இந்தக் காரியத்தைச் செய்யலாம்.

2. கட்சித் தொண்டர்கள். சும்மா நம்ம கட்சிக்காரன் குடும்பத்துக்கு நாலு பணம் போய்ச் சேரட்டுமே என்று ஆட்சியாளர்கள் கொடுக்கும் பரிவுத் தொகை. இதைப்பற்றி அதிகம் சொல்லிப் பிரயோசனமில்லை.

3. ஏற்கெனவே அச்சில் இருக்கும், ஓரளவுக்கு சந்தை மதிப்புள்ள நூல்கள் - இவை வணிக நூல்களாலவும் இருக்கலாம், இலக்கியமாக இருக்கலாம், திறனாய்வாக இருக்கலாம், சமூகம் பற்றி இருக்கலாம். ஆனால் இந்த விற்பனைக்கான ராயல்டியை அந்த எழுத்தாளரின் வாரிசுகள் பார்த்திருக்கமாட்டார்கள். சரி, நாட்டுடைமையாக்கினால் ஏதோ ‘லம்ப்சம்’ பணம் கையில் கிடைக்கும், அதை வைத்துப் பிழைக்கலாம் என்ற அவர்கள் கருதக்கூடும்.

இந்த ஆண்டுக்கு முன்னதாக நாட்டுடைமையாக்கியதில் மிகவும் ஆச்சரியமான பெயர் கல்கி. அவரது புத்தகங்கள் வணிக வெற்றிக்கு உரியவை. ‘பொன்னியின் செல்வன்’ இன்றும் கூறு கட்டி விற்பனை செய்யப்படுகிறது. வானதி பதிப்பகம்தான் வெளியிட்டு வந்தது. ஏனோ, கல்கி வாரிசுகள், புத்தகங்களை நாட்டுடைமையாக்கச் சம்மதித்தார்கள். ஒரேயடியாக அவர்களுக்கு ரூ. 25 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கல்கி வாரிசுகளுக்கு இதனால் பணம் இழப்புதான்.

இந்த ஆண்டுக்கான பட்டியலைப் பார்த்ததுமே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கண்ணதாசன், சுந்தர ராமசாமி என்ற இரண்டு பெயர்களுடன் சாண்டில்யன் பெயரும் அங்கே இருந்தது.

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் அளவுக்கு விற்பனையில் சாதனை படைப்பவர் கிடையாதுதான். கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ ஒன்றே போதும். இன்றும் ஆண்டுக்கு 20,000 - 40,000 பிரதிகள் வரை (முழு செட்) விற்கும் என்று உத்தேசமாகக் கணிக்கிறேன். அதைத்தவிர கண்ணதாசனின் பிற புத்தகங்கள். எந்தக் காரணம் கொண்டும் கண்ணதாசன் வாரிசுகள் இந்தப் புத்தகங்களை நாட்டுடைமையாக்க விரும்பமாட்டார்கள்.

மேலும் கண்ணதாசனின் மகனான காந்தி கண்ணதாசனே ‘கண்ணதாசன் பதிப்பகம்’ என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை நடத்திவருகிறார். கண்ணதாசன் புத்தகங்கள்தான் அவரது பதிப்பகத்தின் காலிங் கார்ட். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டால், கண்ணதாசன் பதிப்பகத்தின் ன்ய்ண்வ்ன்ங்ய்ங்ள்ள் பாதிக்கப்படும்.

அதேபோலத்தான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களும். காலச்சுவடு என்ற பதிப்பகத்தின் முத்திரையே சுந்தர ராமசாமியின் புத்தகங்கள்.

அதேபோல, சாண்டில்யனின் புத்தகங்களும் நன்றாக விற்பனை ஆகக்கூடியவை. எனவே நிச்சயம் சாண்டில்யனின் குடும்பத்தினர் இதற்கான ராயல்டியை ஆண்டாண்டுக்கு அதிகமாகவே வாங்கி வந்திருப்பார்கள். அரசு கொடுக்கும் அதிகபட்சப் பரிவுத்தொகையே ரூ. 25 லட்சத்தைத் தாண்டாது. எனவே ஆண்டுக்கு ஐந்தாறு லட்ச ரூபாய்க்கு மேல் ராயல்டி பெறுபவர்கள், நிச்சயம் அரசின் நாட்டுடைமை முயற்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

***

அரசு சில கேள்விகளை முதலில் கேட்கவேண்டும்.

1. யாருடைய நூல் இன்று அதிகம் பரவலாக வேண்டும்? ஏன்?

2. அப்படிப் பரவலாகாமல் தடுப்பது எது? ஏன் இப்போது அச்சாவதில்லையா? அச்சானாலும், விநியோகம் சரியில்லையா? விலை அதிகமாக உள்ளதா? காப்புரிமையை சிலர் தக்கவைத்துக்கொண்டு, நூல் வெளியிடாமல் நசுக்கப் பார்க்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா?

3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடைமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.

4. நாட்டுடைமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது.

நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம். இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.

அரசு யோசிக்காமல் செய்த ஒரு விஷயம் இது என்றுதான் சொல்வேன். மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்ணரசியல் ஏதேனும் உள்ளதா என்று நினைக்க எனக்குத் தோன்றவில்லை. What you can attribute to stupidity, you should never attribute to malevolence.

Tuesday, February 17, 2009

அமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்

இன்று பா.ராகவன் தன் பதிவில், தன் புத்தகங்கள் அமேசான் தளத்தில் கிடைப்பது பற்றிப் பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக NHM புத்தகங்கள் பெரும்பாலானவற்றை அமேசான் (USA) தளத்தில் ஏற்றியுள்ளோம். இனி வரும் மாதங்களில், இதுவரையில் சேர்க்காத பிற புத்தகங்களும் சேர்ப்பிக்கப்படும்.

இந்தப் புத்தகங்கள் இந்தியாவில் அச்சாகி, அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கிருந்து விற்கப்படுபவை அல்ல. Print-on-demand (POD) என்ற முறையில் அமேசானின் BookSurge என்ற நிறுவனத்தின் வாயிலாக அச்சாக்கப்பட்டு, வட அமெரிக்காவில் விநியோகிக்கப்படுபவை. அமெரிக்காவில் அச்சாவதால், இவற்றின் விலையும் இந்திய விலையுடன் ஒப்பிடும்போது அதிகம்தான்.

இவை மின்னணுக் கோப்புகளாகவே உள்ளன. உங்களிடமிருந்து ஆர்டர் வந்தபின்னர், தாளில் அச்சாகி, தபாலில் அதன்பின் அனுப்பிவைக்கப்படும்.

இந்தப் புத்தகங்களை இந்தியாவில் http://nhm.in/shop/ என்ற இடத்திலிருந்து வாங்கி அமெரிக்காவுக்கு தபாலில் அனுப்புவதற்கும், அமேசானிலிருந்து அமெரிக்க முகவரி ஒன்றுக்கு அனுப்புவதற்கும் என்ன விலை வித்தியாசம் இருக்கலாம்?

சில உதாரணங்களைப் பார்ப்போம்:

நான் அமேசானில் கீழ்க்கண்ட நான்கு புத்தகங்களை ஆர்டர் செய்தேன்: டெலிவரி அட்ரஸ் அமெரிக்காவில்.

1. நலம் தரும் வைட்டமின்கள்: $8.44
2. கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு: $7.45
3. அம்பானி - ஒரு வெற்றிக்கதை: $7.95
4. நெப்போலியன் - போர்க்களப் புயல்: $7.95
மொத்தம்: $31.79

சூப்பர் சேவர் ஷிப்பிங்கில் ($25-க்கு மேல் கூட்டுத்தொகை இருக்கும் பட்சத்தில்), தபால் செலவு = 0. மொத்தச் செலவு இந்திய ரூபாய் மதிப்பில் (இன்றைய மதிப்பில்): சுமார் 1,500 ரூபாய்.

சுமார் 5-6 நாள்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இன்று ஆர்டர் செய்துள்ளேன். எவ்வெளவு நாள்களில் கிடைக்கும் என்று தெரியப்படுத்துகிறேன். இதே புத்தகங்களை nhm.in கடையில் வாங்குவதாக இருந்தால், புத்தக விலை: ரூ. 295. அமெரிக்காவுக்கு அனுப்ப தபால் செலவு (ஏர்மெயில்) = ரூ. 330. மொத்தம் = ரூ. 625. இது அமெரிக்கா வந்துசேர எவ்வளவு நாள்கள் ஆகும்? 15 நாள்கள் ஆகலாம். அல்லது அதற்குமேலும் ஆகலாம்.

ஆனாலும் ஆகும் செலவு, பாதிக்கும் குறைவே! அப்படியிருக்க, அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் ஏன் அமேசானில் இந்தப் புத்தகங்களை ஆர்டர் செய்வார் என்று நீங்கள் கேட்கலாம்:-)

உடனடியாகப் படிக்கும் ஆர்வம் காரணமாக இருக்கலாம்! அமேசானில் நான்கைந்து ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கும்போது இதனையும் சேர்த்து வாங்குவது காரணமாக இருக்கலாம்.

***

எங்களது புத்தகங்கள் கூடிய விரைவில் கிண்டில் (Kindle) மின்புத்தகங்களாகவும் கிடைக்கும். அது நடந்தபின், அதற்கான அறிவிப்பைப் தருகிறேன். அதேபோல, விரைவில் அமேசான் UK தளத்திலும் POD புத்தகங்களாக இவை கிடைக்கத்தொடங்கும். ஆனால் விலை பவுண்டில் (மேலும் அதிகமாக) இருக்கக்கூடும்.

கிறுக்கன்

சனி, ஞாயிறு இரண்டு நாள்கள், ஒரு குழுவாக நாங்கள் 15 பேர், மகேந்திரவர்மன் செதுக்கியுள்ள சில குகைக் கோயில்களைப் பார்வையிடக் கிளம்பினோம்.

மகேந்திரவர்மன் (கிபி 580-630), பல்லவ சாம்ராஜ்ஜிய அரசன் என்பதை வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். சமண மதத்தைப் பின்பற்றி, பின் சைவனாக மாறினான் என்று படித்திருப்போம். குடைவரைக் கோயில்களைக் கட்டுவித்தவன், இசையில் வல்லவன், மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதியவன் என்றும் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

இவனுக்கு திடீரென கிரானைட் கருங்கல் குன்றுகள் மீது ஆர்வம் வரக் காரணமென்ன? அவற்றைக் குடைந்து கோயில்களாகக் கட்டவேண்டும் என்று ஏன் தோன்றியது? அதுவும் வேலை செய்வதற்கு மிகவும் கடினமானது கருங்கல். உளி கொண்டு அடித்துச் செதுக்கினால்தான் துண்டுகளை வெட்டமுடியும். ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்து அதைச் சிலையாக வடிப்பது என்றாலே கடினம். அதை விடுத்து, கல் இருக்கும் குன்றையே சிலைகளாக, கோயில்களாக ஆக்குவது என்பது எவ்வளவு கடினம்?

இதைச் செய்வதற்கான கல் வினைஞர்கள், 6-ம், 7-ம் நூற்றாண்டில் வட தமிழகத்தில் இருந்தனரா? அல்லது அம்மி, குழவி கொத்துபவர்கள், மன்னனின் உத்தரவால் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டு, சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, உலகத்தரத்தில் இந்தக் கோயில்களை உருவாக்கினரா?

மகேந்திரனுக்கு ஆயிரத்து ஐநூறு எழுநூறு வருடங்களுக்கு முன்னதாகவே அசோகன் கருங்கல்லில் கோயில்களை உருவாக்கிவிட்டான். அதாவது மலையைக் குடைந்து. ஆனால், அதன்பின், மகேந்திரன் காலம் வரை யாரும் இதைச் செய்யவில்லை. தென் தமிழகத்தில் பாண்டியர்கள் மகேந்திரன் காலத்துக்குச் சற்று முன்னர் இதனைச் செய்திருக்கலாம்.

சாளுக்கியர்கள் பாதாமியில் உருவாக்கியதெல்லாம் மிருதுவான கற்களில் (Sandstone). கிரானைட்டில் அல்ல.

***

மகேந்திரன் தன்னை விசித்திரசித்தன் - கிறுக்குப் பயல் - என்று கூறிக்கொண்டுள்ளான். கிறுக்கு பிடித்தவனாகத்தான் இருக்கவேண்டும். அவனது கிறுக்குத்தனங்கள் என்னென்ன என்பதைப் பின்பற்றிப் பார்ப்பதுதான் நோக்கம்.


இந்தத் திட்டத்தின் பின் இருந்தவர் பேராசிரியர் சுவாமிநாதன். தில்லி ஐஐடியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தியக் கட்டடக் கலை, சிற்பம், பாரம்பரியக் கலைகள், இசை போன்ற பலவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவர் வழிகாட்டியாக இருந்து, அவருடன் எங்கள் அலுவலகத்தில் சிலர் மாமல்லபுரம் சென்றுள்ளோம். அதைப்பற்றியே எழுத நிறைய உள்ளது. மீண்டும் நான்கைந்து முறை அவருடன் மாமல்லபுரம் சென்றால்தான் ஒழுங்காக எழுதமுடியும்.

இம்முறை அவர் போட்ட திட்டத்தில் பல இடங்கள் இருந்தன. ஆனால் அனைத்து இடங்களுக்கும் போக முடியவில்லை. பார்த்த இடங்கள் இவை மட்டுமே: திருக்கழுக்குன்றம், வல்லம், தளவானூர், மண்டகப்பட்டு, மாமண்டூர், குரங்கனில்முட்டம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், சீயமங்கலம்.

அடுத்த சில பதிவுகளில் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) இந்த வரலாற்று யாத்திரை பற்றி எழுதுகிறேன். நிறையப் படங்கள், ஆடியோ என இருப்பதால் எழுதி முடிப்பதில் நேரம் ஆகலாம்.

திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் “பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு இலக்கியப் போட்டிகள் - 2008” விழாவில் பரிசுக்குரியவையாக கீழ்க்கண்ட கிழக்கு புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

1. பெரியார் - ஆர்.முத்துக்குமார்
2. அண்ணாந்து பார் - சொக்கன்
3. மு.க - ஜெ.ராம்கி
4. எம்.ஆர்.ராதாயணம் - முகில்
5. நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா
6. அடியாள் - ஜோதி நரசிம்மன்
7. இருளர்கள் - குணசேகரன்

Friday, February 13, 2009

NHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாது*

இணையத்தில் புத்தகம் வாங்குவதில் பலருக்கும் உள்ள பெரும் பிரச்னை, புத்தகத்தை அனுப்புவதற்கான தபால் செலவு.

சென்னையிலிருந்து நாங்கள் புத்தகத்தை அனுப்புவதில், சென்னைக்கு ஒரு செலவு, சென்னைக்கு வெளியே தமிழகத்துக்கு ஒரு செலவு, இந்தியாவின் பிற இடங்களுக்கு ஒரு செலவு. மஹாராஷ்டிராவில் அல்லது டில்லியில் அல்லது அசோமில் இருப்பவர்கள் இதனாலேயே அதிகம் புத்தகங்கள் வாங்குவதில்லையோ என்றுகூட நான் நினைப்பதுண்டு.

புத்தகம் ரூ. 60, தபால் செலவு ரூ. 25 என்றால், வாங்கும் யாருமே கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் விபிபி போன்ற முறையிலும் பிரச்னை. குறைந்தது ஒரு புத்தகத்தை அனுப்புவதற்குக்கூட ரூ. 25 அதிகம் செலவாகிறது.

இதற்காக, ஒரு புது முறையைப் புகுத்தியுள்ளோம். இந்தியாவின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் ரூ. 250-க்குப் புத்தகம் வாங்குபவர்களுக்கு, தபால் செலவு முழுவதும் எங்கள் பொறுப்பு. (* ரூ. 250-க்குக்கீழ் வாங்கினால் தபால் செலவு உண்டு என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.)

இந்த முறையை இரண்டு நாள்களுக்குமுன் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

NHM புத்தகங்களை வாங்குவதற்கான முகவரி: http://www.nhm.in/ அல்லது http://www.nhm.in/shop/

இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு இதே வசதியைத் தரமுடியாத நிலையில் உள்ளோம். ஆனால், அவர்களுக்கும் தபால் செலவை வெகுவாகக் குறைத்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள்.

Tuesday, February 10, 2009

முதல் குரல்

Zee தமிழ் சானலில், காலை 8.30 (மறு ஒளிபரப்பு இரவு 10.00) மணிக்கு “முதல் குரல்” என்ற நிகழ்ச்சி வருகிறது. சுதாங்கன், ஜென்ராம் ஆகியோருடன் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு நடத்தப்படும் விவாதம்.

தேர்தலுக்கு முன் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிந்து வெளியே வருவோரிடம் நடத்தப்படும் கணிப்பு ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் தடை செய்யுமா, செய்யலாமா என்பது பற்றிய விவாதம் நேற்று ஒளிபரப்பானது. பத்திரிகையாளர் ஞாநியும் நானும் கலந்துகொண்டிருந்தோம். சென்ற வாரம் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்றுதான் ஒளிபரப்பானது.

கருத்துக் கணிப்பு மக்களின் மன ஓட்டத்தை மாற்றி, அவர்கள் வாக்களிக்க நினைத்திருக்கும் தேர்வில் மாற்றத்தை உண்டாக்குமா? ஜெயிப்பவருக்கே தனது வாக்கு போகவேண்டும் என்றா மக்கள் நினைக்கிறார்கள்?

என் கருத்து: கருத்துக் கணிப்பு என்பது நிச்சயமாக மக்கள் மனத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்தக் காரணத்தாலேயே கருத்துக் கணிப்பைத் தடை செய்யமுடியாது. தேர்தல் பிரசாரமும்தான் மக்கள் மனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. கருத்துக் கணிப்பை மட்டுமே நம்பி அதில் சொல்லப்படும் திசையில் அப்பாவி மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள் என்பதை நான் ஏற்கவில்லை.

இடைத்தேர்தலில் பணம் வாரி இறைக்கப்படும் நேரங்களைத் தவிர்த்து, மக்களுக்கு நேரடியாக லஞ்சம் கொடுக்கப்படும் நேரங்களைத் தவிர்த்து, மக்கள்மீது வன்முறை செலுத்தப்படும் என்ற பயம் இருக்கும் நேரங்களைத் தவிர்த்து, பொதுவாக மக்கள் சில முன்தீர்மானங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை போன்ற மாபெரும் நிகழ்வுகள் தவிர்த்து, வேறு எதுவும் மக்கள் தீர்மானங்களை எளிதாக மாற்றிவிடுவதில்லை.

ஞாநி, ராஜீவ் கொலையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். திமுகதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதாக ஒரு பொய்ப் பிரசாரம் நடந்து, அதன் காரணமாக திமுக தோற்கடிக்கப்பட்டது. இதே கட்டத்தில், ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தி, 80% மக்கள் திமுகதான் இந்தக் கொலையைச் செய்தது என்று நம்புகிறார்கள் என்று சொன்னால் மக்கள் மேலும் அதிகமாக இதனை நம்பும் வாய்ப்புகள் இருந்திருக்கும் என்றார்.

கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்களோ, சில தனிப்பட்ட அமைப்பினரோ தங்களுக்குச் சாதகமாகத் திரிப்பதில் விருப்பம் கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால், நம் மக்கள் முட்டாள்கள், படிப்பறிவில்லாதவர்கள், இந்தக் கணிப்புகளை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதை நம்பி, தங்களது வாக்குகளை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. அதேபோல, யார் ஜெயிக்கப்போகிறார்களோ அவர்களுக்குத்தான் தனது வாக்கு போலவேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்கள் என்றும் நான் நினைக்கவில்லை.

அதே நேரம், இந்தியக் குடியாட்சி முறை மேலும் முதிர்ச்சி அடையவேண்டும். அப்படிப்பட்ட நிலையில் கருத்துக் கணிப்புகளைக் கண்டு - திரிக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும் சரி, நியாயமான கருத்தாக இருந்தாலும் சரி - எந்தப் பிரிவினரும் அஞ்சவேண்டிய தேவையே இல்லை. கருத்துக் கணிப்பை யார் வழங்குகிறார்கள், கருத்துக் கணிப்பு மெதடாலஜி என்ன (எத்தனை பேரிடம் கருத்துகளைக் கேட்டனர்; எந்த மாதிரியான கேள்விகள், சாம்பிள் ஸ்பேஸை எப்படி வரையறுத்தனர், எந்த மாதிரியான அனாலிசிஸ் செய்யப்பட்டது...), கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் பின்னணி எப்படிப்பட்டது, அவர்கள் நம்பத்தகுந்தவர்களா ஆகியவற்றை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

இணையம் வழிப் பிரசாரம், எஸ்.எம்.எஸ் பிரசாரம் ஆகியவை பற்றியும் ஓரிரு கருத்துகள் சொல்லப்பட்டன.

கருத்துக் கணிப்புகள் கூடாது என்பதல்ல தன் கருத்து, ஆனால், ஒரு level playing field இருப்பதற்காக தேர்தல் ஆணையம் சில regulatory mechanisms வைத்திருக்கவேண்டும் என்றார் ஞாநி.

தேர்தலை ஒழுங்காக நடத்தி முடிவுகளை அறிவிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருக்கவேண்டும்; மாறாக கருத்துக் கணிப்பு இருக்கலாமா, கூடாதா, தேர்தல் பிரசாரம் எத்தனை மணி நேரம் இருக்கவேண்டும், எப்படியெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்யலாம், கூடாது, போஸ்டர் ஒட்டலாமா, கூடாதா, இணையத்தளம் நடத்தலாமா, கூடாதா ஆகியவையெல்லாம் தேர்தல் கமிஷனின் வேலையாக இருக்கக்கூடாது என்பது என் கருத்து.

***

சுவாரசியமான நிகழ்ச்சிதான். ஆனால் அரை மணி நேரத்தில் (23 நிமிடம்?) நான்கு பேர் பேசுவதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கடினம். பல விஷயங்கள் சொல்லப்படாமலேயே அல்லது எதிர்க்கப்படாமலேயே நிகழ்ச்சி உடனடியாக முடிந்துவிடுவதுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது. நான்கு பேர் பேசுவதற்கு இந்தக் குறைவான நேரம் போதுமா என்று தெரியவில்லை.

இதுவே அதிகம் என்று பார்வையாளர்கள் ஒருவேளை நினைக்கலாம்:-)

***

நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிந்து வாசலில் சில நிமிடங்கள் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். ஊடகங்கள் - முக்கியமாக தொலைக்காட்சி சானல்கள் - எந்த அளவுக்கு அரசியல் சார்புள்ளவையாக, கட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன என்று பேச்சு எழுந்தது. அப்போது, இணையம் எந்த வகையில் மாற்று ஊடகமாக சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றி விவாதித்தோம். இணையம் அதிகமாகப் பரவவில்லை என்றாலும் விரைவில், செல்பேசிகள் (3G) பரவி, அதன்மூலம் மக்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும் என்று பேசினேன்.

இதில் சிலவற்றை எழுத முயற்சி செய்கிறேன்.

Tuesday, February 03, 2009

பதிப்புத் தொழில் பயிற்சிப் பட்டறை

சென்ற வாரம் தில்லியில் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் நடந்த பயிற்சிப் பட்டறையில் நான் பேசியது, ஸ்லைட் வடிவில்.


.

கள் குடித்த வானர சேனை

சென்ற வாரம் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஸ்ரீ ராம சேனை என்ற பெயரில் தடியர்கள் சிலர் ‘மதுவகம்’ ஒன்றில் நுழைந்து அங்கிருக்கும் பெண்களைத் தனியாகக் குறிவைத்து அடித்துத் தாக்கியுள்ளனர்.

தொலைக்காட்சியில் சில துண்டுகளைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பெண்களைத் துரத்தித் துரத்தி அடித்துக் கீழே வீழ்த்துகின்றனர். சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்கள் பலரும் அமைதியாக உள்ளனர். ஒருவர் மட்டும் எதிர்க்கிறார். அவரும் நையப் புடைக்கப்படுகிறார்.

மது அருந்துவது சரியா, தவறா என்று அறவியல், உடல் நலம், ஒழுக்கவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் “பெண்கள்” குடிக்கக்கூடாது என்று சொல்ல இந்தக் குரங்குகள் யார்? அப்படியே சொல்வதற்கு இவர்களுக்குக் கருத்துரிமை உள்ளது என்றாலும், ஓரிடத்தில் புகுந்து பிறரை - அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கட்டும் - அடிக்க எந்த உரிமையும் கிடையாது.

‘Pub culture’ கூடாது என்றெல்லாம் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இன்று சட்டப்பூர்வமாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மது வழங்குவதற்கென்று உரிமம் பெற்ற மதுக்கடைகளில், நடன அரங்குகளில், மது அருந்தக்கூடாது என்று தடுக்க அல்லது தாக்க முற்படுபவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பவர்கள். தனி மனிதர்களுக்கான சுதந்தரம் என்பதில் தலையிட அடுத்தவர்களுக்கு உரிமையில்லை. வேண்டுமானால், கர்நாடகத்தில், பெண்கள் யாரும் மது அருந்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவர பாஜக முயற்சி செய்யட்டும். அப்போது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

கலாசாரக் கருத்துகள், கருத்துத் தளத்தில் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். அடிதடியில் ஈடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும்.

ஸ்ரீ ராம சேனையின் தாக்குதலில் சிலர் இறந்தே போயிருக்கலாம். அடி படாத இடத்தில் பட்டு, ஓடுபவர்கள் கூர்மையான கம்பி எதிலாவது குத்திக்கொண்டு, அல்லது எதிரே வரும் வண்டியில் மோதி ... என்று இறப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே ஸ்ரீ ராம சேனை தடியர்களை, கொலைக்குற்றம் சாட்டி உள்ளே தள்ளவேண்டும்.

***

எங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அங்ககெல்லாம் இதுபோன்ற கூத்தாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. சட்டத்தை சிறிதும் மதிக்காத அரைகுறை கலாசார காவலர்களை கடுமையாக அடக்கவேண்டியது காவல்துறையின் கடமை. அப்படி காவல்துறை செயல்படாமல் தடுக்கப்பட்டால், அந்த அரசைத் தூக்கி எறிவது மக்கள் கடமை.

பிப்ரவரி 14, வேலண்டன் தினம் வரப்போகிறது. அன்று இந்த கலாசார காவலர்கள் கையில் குண்டாந்தடியுடன் தெருவில் வலம் வந்தால், அதற்கு சட்டக் காவலர்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றால், பாதிக்கப்படும் இளைஞர்கள் (ஆண், பெண்), தாங்களும் கையில் குண்டாந்தடிகளைத் தூக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்றாகிவிடும்!

Sunday, February 01, 2009

தமிழகக் கல்லூரிகள் காலவரையின்றி மூடல்

இன்று காலை செய்தித்தாள்கள் அறிவித்தன. தமிழகத்தில் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படும். இன்று மனைவியை சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்விக்கான நேரடி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். இன்றுதான் இந்த ஆண்டுக்கான பாடங்கள் ஆரம்பிப்பதாக இருந்தன. அதுவும் கிடையாது என்று அறிவித்தனர்.

தமிழக அரசுக்கு பயம். உளவுத் தகவல் வந்திருக்கவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒருவிதக் கொந்தளிப்பு கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்துள்ளது. இது ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் மட்டுமே என்று சொல்வது மதியீனம். அந்த அளவுக்கு, இந்தக் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் வலுவானவை கிடையாது. பல ஊர்களிலும் கல்லூரி மாணவர்கள் பாடங்களைப் புறக்கணித்து, தெருவுக்கு வந்துள்ளனர். பல ஊர்களிலும் வக்கீல்களும் இதேபோல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இவை எதுவும் அரசியல் தலைமையின்கீழ் நேர்த்தியாக நடைமுறைத்தப்பட்ட போராட்டங்கள் கிடையாது; spontaneous-ஆக நடப்பதுதான் என்பது என் கருத்து.

இதில் முத்துக்குமார் தீக்குளிப்பு நிஜமாகவே கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது உண்மை. ஊடகங்களை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. இதுநாள் வரையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றால், “புலி என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள்” என்ற அபத்தமான அச்சம் தமிழக மக்களிடம் இருந்தது. ஆனால், இப்போது மக்கள் அந்தக் கட்டத்தைக் கடந்துவிட்டார்கள்.

போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளுக்கு உடனடி நிவாரணத்தைத் தரலாம். அது நல்லதா, கெட்டதா, இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்றெல்லாம் தமிழர்கள், இந்தியர்கள் யோசிக்கவேண்டிய தருணம் இதுவல்ல. நம் நாட்டுக்கு அருகில் லட்சக்கணக்கான மனிதர்கள் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் குண்டுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டுள்ளனர். இதில் இலங்கை ராணுவத்தையும் விடுதலைப் புலிகளையும் மாறி மாறி, பிறகு குற்றம் சொல்லலாம். முதல் தேவை மக்கள் படுகொலையை நிறுத்துவது.

Collateral damage என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள் போதும். கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்து, மாணவர்கள் கொந்தளிப்பை அடக்கிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதற்குமுன், அம்மாதிரியான சிந்தனையைக் கொண்டிருந்த கட்சிகள், கண்காணாமல் போயுள்ளன.

இந்தியா நினைத்தால், இலங்கை போரை நிறுத்திவிடுமா என்று சிலர் கேட்கிறார்கள். அதை அடுத்து பார்ப்போம். இந்தியா மனதுவைத்து, போரை நிறுத்து என்று கேட்டு, இலங்கை மறுத்தால், அப்போது என்ன செய்வது என்று யோசிக்கலாம். இதுவரையில் இந்தியா அதைச் செய்யவில்லையே? தமிழக அரசும் அதைக் கேட்கவில்லையே? அதுதானே தமிழக மக்கள் பலரின் ஆதங்கத்துக்கும் காரணம்? முத்துக்குமார் தீக்குளிப்புக்கும் காரணம்?