Saturday, February 21, 2009

ஜெயலலிதா பிறந்தநாள்

நான்கைந்து நாள்களுக்கு முன் சில அஇஅதிமுக கட்சித் தொண்டர்கள் எங்கள் அலுவலகத்து வந்தனர்.

“அய்யா, என் பேரு தேனாம்பேட்ட ___________. உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?” என்று ஆரம்பித்தார் தலைவர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்.

“இல்லைங்க, நான் கேள்விப்பட்டதில்ல” என்றேன் நான்.

“ஒண்ணும் இல்லீங்க. அம்மாவோட பொறந்த நாள் வருது. அதுக்கு உங்க சார்பில...”

அரசியல் விழாக்களுக்கு நன்கொடைகள் ஏதும் தருவதில்லை என்பது எங்கள் கொள்கை. அதை நான் சொல்வதற்குள் அவர் முந்திக்கொண்டார்.

“பணம் ஏதும் வேண்டாங்க. ஏழைப் பசங்களுக்கு புத்தகம் தரணுங்க...”

இது வித்தியாசமாக இருந்தது. என்ன புத்தகம் என்று கேட்டேன்.

“ஏதோ, கேக் புத்தகம் போட்டிருக்கீங்களாமே, பசங்கதான் வந்து சொன்னாங்க. 13 புத்தகம் ஒரு செட்டா இருக்குதுங்களாமே. அதுல ___ செட் மொத்தமா கொடுத்திடுங்க...”

“அதுல 12 புத்தகம்தாங்க போட்டிருக்கோம். அதுவும் நீங்க கேக்கற அவ்வளவு செட்டெல்லாம் கொடுக்க முடியாதுங்க. விலை ரொம்ப ஆவும். வேணும்னா நல்ல டிஸ்கவுண்ட்ல கொடுக்கறேன்...”

“நீங்களா பாத்து கொடுக்க சார், பசங்களுக்குத்தான் சார் போவுது” என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மற்றொருவர்.

கடைசியாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை புத்தகங்களை மட்டும்தான் இலவசமாகத் தரமுடியும் என்று சொன்னேன்.

சென்ற மாதம்தான் இந்தப் புத்தகங்களை அறிமுகம் செய்திருந்தோம். இவற்றில் பெரிய புதுமை ஒன்றும் கிடையாது. இவை 2-4 வயதுக் குழந்தைகளுக்கான புத்தகங்கள். பறவைகள், விலங்குகள், பழங்கள்... இப்படிப் பலவற்றையும் வண்ணப்படங்களாக, அவற்றுக்குப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவற்றின் பெயர்களை எழுதி, கெட்டி அட்டையில், வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டவை. 16 பக்கங்கள். விலை ரூ. 25.






இதுபோன்ற புத்தகங்கள் நிறையக் கிடைக்கின்றன. குழந்தைகளால் எளிதில் பிய்த்துவிட முடியாது என்பதுதான் இவற்றின் வசீகரம். தண்ணீர் பட்டாலும் உடனடியாக வீணாகிவிடாது.

“யாருக்கெல்லாம் இந்தப் புத்தகங்களைக் கொடுப்பீர்கள்?” என்று கேட்டேன்.

“நீங்களே வாங்க, வந்து பசங்ககிட்ட பேசுங்க” என்றார்கள். வருகிறேன் என்று சொன்னேன்.

“எங்களிடம் வேற சில புத்தகங்கள் இருக்கு. கலர் கலரா படம் போட்டு, பக்கத்துல் எழுத்து இருக்கும். அதையும் தரேன்” என்றேன். அதைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

“அதெல்லாம் வேண்டாங்க. பசங்க இதத்தான் கேட்டாங்க. அதனால இது போதும். இதுல வேணும்னா அதிகமா தாங்க” என்றனர்.

“எங்களால குறிப்பிட்ட அளவுதான் இலவசமாத் தரமுடியும். வேணும்னா சில நண்பர்கள்கிட்ட கேட்டுப் பாக்கறேன்” என்றேன்.

ஜெயலலிதா பிறந்த நாள் தவிர, அண்ணா, பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் பிறந்த நாள்களிலும் இதேபோன்று குறிப்பிட்ட சில ஏழைக் குடியிருப்புகளுக்குப் புத்தகம் தரமுடியுமா என்று அவர்கள் கேட்டனர்.

எங்களால் முடிந்த அளவு தருவதாகவும், அதற்குமேல், இணைய நண்பர்கள் உதவினால் அதையும் சேர்த்துத் தருவதாகவும் சொல்லி, அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டேன்.

***

ஆகவே, நண்பர்களே, இந்தப் பதிவைப் படிக்கும் சிலர், விருப்பப்பட்டால், உங்களது உதவிகளை அளிக்கலாம். ஜெயலலிதா பிறந்தநாள் என்று இல்லை, கருணாநிதி, கனிமொழி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், வீரமணி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், அமர் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரமணியம் சுவாமி, தேவ கவுடா, லாலு பிரசாத் யாதவ்... என்று யாருடைய பிறந்த நாளாக இருந்தாலும், ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் செல்லுமாறு செய்யலாம்.

இது தொடர்பாக, என்னுடனோ (badri@nhm.in) அல்லது ஹரன்பிரசன்னாவுடனோ (haranprasanna@nhm.in) தொடர்பு கொள்ளலாம்.

6 comments:

  1. இதே போல, பெண் நண்பிகளுக்கு அன்பளிக்கக்கூடிய விதத்தில் ஒரு புத்தக வரிசையை அறிமுகப்படுத்துவீர்கள் என நம்புகிறேன். அவற்றை அனுப்புபவர் பெயர் குறிப்பிடாமல் 'பெயரிலி'யாக அனுப்பவும் வழி செய்வீர்களேயானால் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  2. மகாத்மா,நேரு, ராஜாஜி, பட்டேல், மதர் தெரசா இவங்க பிறந்த நாளுக்கெல்லாம் இது மாதிரி யாரும் கேட்பதில்லையா..???

    அது சரி, அவற்றையெல்லாம் நினைவிருப்பதே அதிசயம் தான்...

    ReplyDelete
  3. Are you sure they are going to give it to Poor children?? Because, I generally don't believe in politicians words.

    ReplyDelete
  4. Badri,

    Is it English Alphabet's'?

    -Lakshmi

    ReplyDelete
  5. இது போன்ற கெட்டித் தாள் நூல்கள் தமிழில் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். வெளியிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. why is it that those people were very particular about those hard board finished books.....!!

    I have my own doubts sir...pl do check

    otherwise I am glad about your contribution for the kids..!

    ReplyDelete