Tuesday, February 17, 2009

கிறுக்கன்

சனி, ஞாயிறு இரண்டு நாள்கள், ஒரு குழுவாக நாங்கள் 15 பேர், மகேந்திரவர்மன் செதுக்கியுள்ள சில குகைக் கோயில்களைப் பார்வையிடக் கிளம்பினோம்.

மகேந்திரவர்மன் (கிபி 580-630), பல்லவ சாம்ராஜ்ஜிய அரசன் என்பதை வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். சமண மதத்தைப் பின்பற்றி, பின் சைவனாக மாறினான் என்று படித்திருப்போம். குடைவரைக் கோயில்களைக் கட்டுவித்தவன், இசையில் வல்லவன், மத்தவிலாசப் பிரஹசனம் என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதியவன் என்றும் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

இவனுக்கு திடீரென கிரானைட் கருங்கல் குன்றுகள் மீது ஆர்வம் வரக் காரணமென்ன? அவற்றைக் குடைந்து கோயில்களாகக் கட்டவேண்டும் என்று ஏன் தோன்றியது? அதுவும் வேலை செய்வதற்கு மிகவும் கடினமானது கருங்கல். உளி கொண்டு அடித்துச் செதுக்கினால்தான் துண்டுகளை வெட்டமுடியும். ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்து அதைச் சிலையாக வடிப்பது என்றாலே கடினம். அதை விடுத்து, கல் இருக்கும் குன்றையே சிலைகளாக, கோயில்களாக ஆக்குவது என்பது எவ்வளவு கடினம்?

இதைச் செய்வதற்கான கல் வினைஞர்கள், 6-ம், 7-ம் நூற்றாண்டில் வட தமிழகத்தில் இருந்தனரா? அல்லது அம்மி, குழவி கொத்துபவர்கள், மன்னனின் உத்தரவால் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டு, சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, உலகத்தரத்தில் இந்தக் கோயில்களை உருவாக்கினரா?

மகேந்திரனுக்கு ஆயிரத்து ஐநூறு எழுநூறு வருடங்களுக்கு முன்னதாகவே அசோகன் கருங்கல்லில் கோயில்களை உருவாக்கிவிட்டான். அதாவது மலையைக் குடைந்து. ஆனால், அதன்பின், மகேந்திரன் காலம் வரை யாரும் இதைச் செய்யவில்லை. தென் தமிழகத்தில் பாண்டியர்கள் மகேந்திரன் காலத்துக்குச் சற்று முன்னர் இதனைச் செய்திருக்கலாம்.

சாளுக்கியர்கள் பாதாமியில் உருவாக்கியதெல்லாம் மிருதுவான கற்களில் (Sandstone). கிரானைட்டில் அல்ல.

***

மகேந்திரன் தன்னை விசித்திரசித்தன் - கிறுக்குப் பயல் - என்று கூறிக்கொண்டுள்ளான். கிறுக்கு பிடித்தவனாகத்தான் இருக்கவேண்டும். அவனது கிறுக்குத்தனங்கள் என்னென்ன என்பதைப் பின்பற்றிப் பார்ப்பதுதான் நோக்கம்.


இந்தத் திட்டத்தின் பின் இருந்தவர் பேராசிரியர் சுவாமிநாதன். தில்லி ஐஐடியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தியக் கட்டடக் கலை, சிற்பம், பாரம்பரியக் கலைகள், இசை போன்ற பலவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவர் வழிகாட்டியாக இருந்து, அவருடன் எங்கள் அலுவலகத்தில் சிலர் மாமல்லபுரம் சென்றுள்ளோம். அதைப்பற்றியே எழுத நிறைய உள்ளது. மீண்டும் நான்கைந்து முறை அவருடன் மாமல்லபுரம் சென்றால்தான் ஒழுங்காக எழுதமுடியும்.

இம்முறை அவர் போட்ட திட்டத்தில் பல இடங்கள் இருந்தன. ஆனால் அனைத்து இடங்களுக்கும் போக முடியவில்லை. பார்த்த இடங்கள் இவை மட்டுமே: திருக்கழுக்குன்றம், வல்லம், தளவானூர், மண்டகப்பட்டு, மாமண்டூர், குரங்கனில்முட்டம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், சீயமங்கலம்.

அடுத்த சில பதிவுகளில் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) இந்த வரலாற்று யாத்திரை பற்றி எழுதுகிறேன். நிறையப் படங்கள், ஆடியோ என இருப்பதால் எழுதி முடிப்பதில் நேரம் ஆகலாம்.

5 comments:

  1. Hi,

    With due respects, inorder to truly appreciate the greatness of pallava works of stone, takes more than just a casual visit

    I quote Sri Aurobindo

    A great oriental work of art does not easily reveal its secret to one who comes to it solely in a mood of aesthetic curiosity or with a considering critical objective mind still less as the cultivated and interested tourist
    passing among strange and foreign things; but it has to be seen in loneliness; in the solitude of one's self in moments when one is capable of long and deep meditation and as little weighted as possible with the conventions of material life.

    I am sure after your many trips and interaction with Sri Swaminathan, your view on Mahendra and his artists would change.

    rgds
    vj

    ReplyDelete
  2. //சமண மதத்தைப் பின்பற்றி, பின் சைவனாக மாறினான் என்று படித்திருப்போம்//

    //மகேந்திரன் தன்னை விசித்திரசித்தன் - கிறுக்குப் பயல் - என்று கூறிக்கொண்டுள்ளான். கிறுக்கு பிடித்தவனாகத்தான் இருக்கவேண்டும்.//

    விசித்திரன் என்பதனை Strange/Odd/Peculiar/ Weird person என்று சொல்லலாமே தவிர, கிறுக்கு அதாவது crackpot மொழிபெயர்க்க முடியாது.

    ஒருவேளை, அவன் சமணனாக இருந்து சைவத்தைத் தழுவினான் என்பதனால் அவன் கிறுக்கனாகத்தான் இருக்கவேண்டும் என்ற இடதுசாரி-பெரியாரிய'Political Correctness' காரணமாகவே இப்படி எழுதியுள்ளீர்கள் என்று ஐயப்பட இடமுள்ளது.

    ReplyDelete
  3. 'Vichitra' in sanskrit actually means creative/unusual/different, not crazy/'kirukku'. I have no idea of translators and their political alignments but basic idea of sanskrit itself says this improper translation. Waiting to hear more.

    ReplyDelete
  4. //மகேந்திரனுக்கு ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னதாகவே அசோகன் கருங்கல்லில் கோயில்களை உருவாக்கிவிட்டான்.//

    900 வருடங்கள் ??

    ReplyDelete
  5. பக்கத்தில் இருக்கும் புராதன அதிசயம். இதைப் பற்றி நிறைய எழுதுங்களேன்.

    ReplyDelete