Sunday, April 05, 2009

மன்மோகன், அத்வானி, மாயாவதி

இந்த மூன்று பேரில் ஒருவர்தான் அடுத்த பிரதமர்.

இம்முறை காங்கிரஸ், பாஜக இரண்டுமே கூட்டணியை நிர்வகிப்பதில் தடுமாறியுள்ளன.

காங்கிரஸ் கட்சி, உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் கடந்த 19 வருடங்களில் கடுமையான வீழ்ச்சியை அடைந்துள்ளது. தனது வீழ்ச்சியைக் கருத்தில்கொண்டு, முலாயம் சிங் யாதவுடனும் லாலு பிரசாத் யாதவுடனும் சரியான கூட்டணி உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். இந்த இருவருடனும் சோனியா காந்தி நேரடியாகவே பேசி வேண்டிய இடங்களைப் பெற்றிருக்கலாம் என்பதே என் கருத்து. பல நேரங்களில் கட்சி மேனேஜர்கள் உபயோகமாக இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களே ஆபத்தாக இருந்துவிட நேரிடும்.

லாலுவுக்கும் முலாயத்துக்கும் சில ‘வெயிட்’டான அமைச்சரகங்களைத் தருவதாக வாக்களித்திருந்தால் போதும். மேலும் சில சீட்டுகளை விட்டுக்கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

மற்றொரு பக்கம், பாஜக எந்த விதத்திலும் காங்கிரஸால் பயன் அடைந்ததாகத் தெரியவில்லை. பல மாநிலக் கட்சிகளும் பாஜகவை விட்டு விலகிப்போகிறார்கள். தமிழகத்தில் அஇஅதிமுகவுடன் பாஜக கூட்டணியை ஏற்படுத்தமுடியாமல் போனது அதன் பெரும் பலவீனங்களில் ஒன்று. ஒரிஸ்ஸா கூட்டணி கைவிட்டுப்போனது, ஆந்திரத்தில் தெலுகு தேசத்துடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள முடியாதது போன்றவை பாஜகவை பாதிக்கும். மஹாராஷ்டிராவில் சிவ சேனையுடன் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை.

காங்கிரஸும் பாஜகவும் நேரடிப் போட்டியில் ஈடுபடுவது வெகு சில மாநிலங்களில் மட்டுமே. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டிஸ்கார், உத்தராகண்ட், கோவா - அவ்வளவுதான். இவற்றில் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில இடைத்தேர்தல்களை வைத்துப் பார்த்தால், பாஜகவுக்கு அதிக சாதகங்கள் உண்டு. ஆனால் மேலே உள்ள மாநிலங்களின் தொகுதிகளில் அதிகபட்சம் 60% இடங்கள் மட்டுமே பாஜகவுக்குக் கிடைக்கும். மீதம் காங்கிரஸுக்கு.

தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் பாஜக கிடையவே கிடையாது. கர்நாடகத்தில் நடைபெறப்போகும் மும்முனைப் போட்டியில் பாஜகவுக்கு சாதகமே. பஞ்சாப், ஹரியானா, பீகார் மாநிலங்களில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே அதிக இடங்கள் அவர்களுக்குத்தான் கிடைக்கும். மஹாராஷ்டிரம், அசாமில் பாஜக கூட்டணி இரண்டாம் நிலையில் வரும்; காங்கிரஸ் தரப்பு சொதப்பினால் மட்டுமே பாஜக அதிக இடங்களைப் பெற வாய்ப்பு உள்ளது.

மறுபக்கம், காங்கிரஸ் கூட்டணி இம்முறை தென்னிந்தியாவில் படு தோல்வியைச் சந்திக்கும். ஓரிஸ்ஸாவின் மும்முனைப் போட்டி காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கும். மேற்கு வங்கத்தில் திரினாமுல் ஆதரவில் முன் கிடைத்ததைவிட அதிக இடங்கள் கிடைக்கும். உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் காங்கிரஸ் கடைசி இடத்தில் இருக்கும்.

காங்கிரஸ், பாஜக அணிகள் இரண்டுமே சென்றமுறையைவிடக் குறைவான இடங்களையே பெறுவார்கள். விளைவாக மூன்றாம் அணி என்ற குழுவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

இந்த எண்களை வைத்துப் பார்த்தால்தான் மாயாவதிக்கு பிரதமர் வாய்ப்பு உண்டா இல்லையா என்று சொல்லமுடியும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், அஇஅதிமுக மட்டும் அதற்கு ஒத்துழைக்காது. அந்நிலையில், அஇஅதிமுக மூன்றாம் அணியிலிருந்து விலக (இப்போது இருக்கிறதா என்றே சொல்லமுடியாது!), திமுக அந்தக் கூட்டணியில் சேரும். காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும்.

மாயாவதி பிரதமரானால், அதனால் இந்தியாவுக்கு நன்மை ஏதும் இருக்காது. இது மாயாவதி என்ற தனி நபர் மீதான விமரிசனம் கிடையாது. மூன்றாவது அணி என்ற உதிரக்கூடிய கூட்டணியின் துர்ப்பாக்கியம் இது. இது நிகழ 20% வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட ஆட்சி குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது பதவியில் இருக்கும். பிறகு ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல்தான்.

ஆனால் இந்த இரண்டு வருடங்களில் ஆட்சியில் நிலைத்தன்மை இல்லாததால் நிதி, தொழில்துறை, ஏற்றுமதி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்தியா திண்டாடும்.

6 comments:

  1. இது எதிர்பார்க்கப்பட்ட ஓன்று. வி.பி.சிங் ஆரம்பிச்சு வச்ச ஜனநாயக வழிமுறை!!

    ReplyDelete
  2. Hi Badri,
    I hope Advani becomes PM with minority support to keep balance. Congress should utilize this break to get rid of Sonia and the fake Gandhi mafia to bring other regional leaders in main floor.
    -Sriram

    ReplyDelete
  3. நேற்று நான் முகப்பேர் (சென்னை ) எல் ஐ சி கிளைக்கு சென்று ஒரு விஷயத்தை பார்த்தேன் அங்கு ஒரு அம்பேத்கார் படம் இருந்தது!!காந்தி படம் இல்லை தேசப் பிதாவினை ஓரங்கட்டும் வேலையில் சில சக்திகள் ஈடு பட்டு அதில் ஓரளவு வெற்றியும் அடைகின்றன !!இன்னும் சில நாட்களின் அவரை தேசத் துரோகி என்றும் கூறுவர் !!அது போல் இன்று சட்ட விரோதம் நாளை சட்ட பூர்வமாக சரி என்பதே இயற்கையின் நியதி!!காங்கரஸ், பா.ஜ.க தவறுகள் வேறு வழியில்லாமல் மாயாவதியை முன் நிலை படுத்துகின்றன!!!

    ReplyDelete
  4. As Vidya Subramaniam of The Hindu pointed out in her article few days ago, if only Congress had devoted its time to build its moribund party in UP, things would have been different. Looks like it has lot of goodwill in the state but not enough to convert it into sizeable number of seats !

    ReplyDelete
  5. ஜெயலலிதா கருப்பு(!) குதிரை என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. ஆக மொத்தம் இடதுசாரி தரித்திரங்கள் சேர்ந்து அமைக்கும் 3ம் அணி ஆட்சிக்கு வந்து இந்தியா விழங்காமல் போகப்போகிறது என்கின்றீர்கள்.

    பொருத்திருந்து பார்ப்போம்.

    இந்திய வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை இதுவரை எந்த செஃபாலஜிஸ்டும் சரியாக கணித்ததாக சரித்திரமே இல்லை.

    ReplyDelete