Thursday, April 16, 2009

வாழ்க்கையை மாற்றும் தருணங்கள்

டார்வின்பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும்போது, எது அல்லது யார் ஒருவரது வாழ்க்கையை மிக ஆழமாகப் பாதிக்கிறார்கள், வாழ்க்கையின் திசையையே மாற்றுகிறார்கள் என்பதை, நான் எப்போதும் கவனமாகப் பார்ப்பேன்.

டார்வினின் வாழ்க்கை வரலாறைப் படிக்கும்போது முக்கியமாகத் தெரிவது இரண்டு விஷயங்கள்: ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ என்ற பேராசிரியர். பீகிள் கப்பல் பயணம். ஆழ்ந்து பார்த்தால் பீகிள் கப்பல் பயணத்துக்கும் காரணம் ஹென்ஸ்லோதான்.

எனவே டார்வினின் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருந்தது அவர் ஹென்ஸ்லோவைச் சந்தித்தது; ஹென்ஸ்லோவின் வகுப்பில் படித்தது. ஹென்ஸ்லோவுடனான நட்பு. ஹென்ஸ்லோ இருந்திருக்காவிட்டால் டார்வின் தனது வாழ்க்கையின் உச்சிக்குப் போயிருக்கவே முடியாது. எங்கோ ஓர் ஆங்லிகன் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வாழ்க்கையை வீணாக்கியிருப்பார்.

ராமானுஜனுக்கு எப்படி ஒரு ஹார்டி கிடைத்தாரோ, அதேபோல. ஆனால் பெரும் வித்தியாசங்கள். ஹார்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரேயே ராமானுஜன் தட்டித் தடவி தானாகவே பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுவிட்டார். ஹார்டி, ராமானுஜனுக்கு ஃபார்மல் கணிதத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். ராமானுஜன் pure mathematics என்றால் என்ன என்பதே தெரியாமல் வளர்ந்தவர்; தேற்றம், நிரூபணம் போன்றவற்றை கண்டு பின்வாங்கிப் பயந்தவர். அவற்றையெல்லாம் ராமானுஜனுக்குக் கற்றுக்கொடுத்த ஹார்டி, ஒரு கட்டத்தில் அவையே ராமானுஜனின் தறிகெட்டு ஓடும் கற்பனையை பாதித்துவிட்டதோ என்றுகூட நினைக்கலானார்.

டார்வின் பிறவியிலேயே ஜொலித்த ஆசாமியல்ல. ராமானுஜன் போல சோத்துக்கு வழியில்லாத குடும்பத்தில் பிறந்தவருமல்ல. டார்வினின் தந்தை நல்ல வசதி படைத்தவர். இங்கிலாந்து கிராமத்தில் நல்ல பெரிய வீடு, மருத்துவராக நல்ல வசதியான வருமானம். அந்த வருமானத்தை சமர்த்தாக முதலீடு செய்து ஒன்றை நான்காக்கும் திறன் எல்லாம் இருந்தது. டார்வினுக்குத்தான் படிப்பில் அவளவு நாட்டம் இல்லை. பள்ளியிலும் சரி, பின்னாள்களில் மருத்துவம் கல்லூரி அல்லது கேம்பிரிட்ஜ் படிப்பிலும் சரி, பாஸாகவே கஷ்டப்படும் நிலையில் இருந்தவர்தான்.

ஹென்ஸ்லோஇயற்கையிலேயே தாவரங்கள், விலங்குகள்மீது இருந்த ஆர்வமும், ஹென்ஸ்லோ என்ற மிகத் திறமையான ஆசிரியர் பாடம் நடத்திய முறையும் மட்டுமே டார்வினைக் காப்பாற்றின. ஹென்ஸ்லோ ‘இயற்கை வரலாறு’ (Natural History) என்ற பாடத்தை நடத்தினர். அந்தக் காலத்தில் அதுதான் உயிரியல் பாடத்தின் பெயர். ஆனால் ஹென்ஸ்லோ அத்தோடு நிற்கவில்லை.

தன் வீட்டில் வார இறுதிகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீ விருந்து தருவார். அங்கு இண்டெலெக்சுவல் பேச்சுகள், விவாதங்கள் இருக்கும். இன்னதான் என்றில்லாமல் அரசியலிலிருந்து அறிவியல்வரை அனைத்தைப் பற்றியும் பேசுவார்கள். தனக்கு ஆர்வம் ஏற்படுத்துமாறு பாடம் நடத்திய ஆசிரியர் மீதுள்ள அபார மரியாதையால் டார்வினும் அங்கே செல்வார். பல நேரங்களில் டார்வினைத் தனியே அழைத்துக்கொண்டு ஹென்ஸ்லோ ‘வாக்கிங்’ போவார். ஆக, வகுப்பு, தனிப்பயணம், பொது விவாதம் என்ற பல வழிகளிலும் தன் துறையின் ரகசியங்களை ஹென்ஸ்லோ டார்வினுக்குப் போதித்தார்.

அதைத் தவிர, ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல்லும் அனைத்துப் புத்தகங்களையும் டார்வின் வாங்கிப் படித்துவிடுவார். அல்லது குறைந்தபட்சம், புரிகிறதோ இல்லையோ, காசு கொடுத்து வாங்கி வைத்துவிடுவார்.

பீகிள் கப்பலின் பயண வாய்ப்புகூட, ஹென்ஸ்லோ மூலமாகவே டார்வினுக்குக் கிடைத்தது. ஹென்ஸ்லோவே அந்தப் பயணத்தில் செல்வதாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு மணமாகி இருந்தது. அவரது மனைவி மீண்டும் கருவுற்றிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடலில் சுற்றவேண்டும் என்ற நிலையில் அவரது மனைவி எரிக்கும் பார்வை பார்த்ததில், அவர் சத்தமே இன்றி தன் மாணவன் டார்வினுக்கு அந்த வாய்ப்பு போகட்டும் என்று சிபாரிசு செய்தார்.

பீகிள் பயணத்தின்போதும், ஹென்ஸ்லோ, டார்வினுக்கு புத்தகங்கள் பற்றி தகவல் சொல்வார். டார்வின் தன் அண்ணனைக் கொண்டு புத்தகத்தை வாங்கச் செய்து கப்பலுக்குத் தருவித்துவிடுவார். டார்வின் தன் கண்டுபிடிப்புகள் பற்றி ஹென்ஸ்லோவுக்கு எழுதுவார், ஹென்ஸ்லோ அதற்கான பதிலை உடனே தருவார்.

கேம்பிரிட்ஜ் வகுப்பறை ஒன்றில் டார்வின் ஹென்ஸ்லோவைச் சந்தித்திருக்காவிட்டால் இந்த ஆண்டு, டார்வின் பிறந்து 200 வருடங்கள் ஆனதை நாம் கொண்டாடி இருக்கவே மாட்டோம்.

***

என் வாழ்க்கையில் இவ்வளவு ஆழமான மாற்றத்தை எந்த ஆசிரியராவது ஏற்படுத்தியிருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தேன். நான் டார்வினோ ராமானுஜனோ கிடையாதுதான்:-) மேலும் நான் அகடமிக் ஆராய்ச்சித் துறையில் இல்லை. எனவே ஆசிரியர்களிடத்தில் தேடுவது நியாயமில்லாமல் இருக்கலாம்.

ஆனால், வேறு வகையில் ஒரு சிறு பொறிபோல என் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது சீனிவாசன் என்பவர். நான் பத்தாவது படித்துமுடித்து, விடுமுறையில் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது என் வீட்டுக்கு வந்த இவர் என் தந்தையிடம் வெகு சாதாரணமாகச் சொன்ன சில வார்த்தைகள்தான் என் வாழ்க்கையை மாற்றின.

அது வேறு பெரிய கதை. பின்னர் ஒரு நாள்.

***

படங்கள்: விக்கிபீடியா

9 comments:

  1. Thanks Badri,
    Thanks for writing and sharing.
    A chance momentous meeting causes monumental CHANGE in every human being.
    I am eager to read the next piece on this topic.
    Please write.
    Thanks and Good wishes,
    Srinivasan.

    ReplyDelete
  2. டார்வின் எனது சிந்திக்கும் முறையைப் பெரிதளவு மாற்றியவர் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பதிவைப் படித்தேன்.எனக்குப் புதிய விவரங்கள்.Very interesting and appealing.Thank you sir.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    கடைசியில ஒரு தொடரும் போட்ட யுக்தி அதை விட அற்புதம்!

    ReplyDelete
  4. ஜோ: இந்தத் தொடரை ஒரு மினி ‘வாழ்க்கை வரலாறு’ ஆக எழுத நினைத்தேன். ஆனால் அப்படி எழுதினால் அது போரடிக்கும் என்பதால் தொடர் பதிவுகளாக, ஆனால் எல்லாமே தனித்தனியாக நிற்கும் பதிவுகளாக எழுத முயற்சி செய்வேன்.

    ReplyDelete
  5. ஆர்வத்தைத் தூண்டறீங்க

    ReplyDelete
  6. நல்ல பதிவு!

    //என் வாழ்க்கையில் இவ்வளவு ஆழமான //மாற்றத்தை எந்த ஆசிரியராவது //ஏற்படுத்தியிருக்கிறாரா என்று யோசித்துப் //பார்த்தேன்

    நம் ஆசிரியர்களை ,மோரியைப் (Tuesdays with Morrie) போல,தேடிப்பிடிக்க வேண்டும் போல இருக்கிறது.புதிய பதிவு எழுதத் தூண்டும் வரிகள்!!

    நன்றி
    ரா.கிரிதரன்

    ReplyDelete
  7. அருமையான பதிவு பத்ரி.

    வாழ்த்துகள்.

    (யூத் விகடனில் வந்துள்ளது)

    ReplyDelete
  8. //
    ஹென்ஸ்லோ இருந்திருக்காவிட்டால் டார்வின் தனது வாழ்க்கையின் உச்சிக்குப் போயிருக்கவே முடியாது. எங்கோ ஓர் ஆங்லிகன் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வாழ்க்கையை

    வீணாக்கியிருப்பார்.
    //

    எங்கோ ஓர் அங்லிகன் சர்ச்சில் பாதிரியாராக இருந்திருப்பார். என்று சொல்லியிருக்கலாம்..

    //பாதிரியாராக இருந்து வாழ்க்கையை வீணாக்கியிருப்பார் // என்கிற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ?

    ReplyDelete
  9. Trackback செய்ய இயலாததால் - என் வாழ்க்கையை மாற்றிய என் வாத்தியார் பற்றிய என் பதிவு - http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/life_teacher.html

    நன்றி.

    ReplyDelete