Saturday, May 09, 2009

தேர்தல் விளம்பரங்கள்

திமுகவின் தொலைக்காட்சி விளம்பரம் ‘கலைஞர் ஆட்சியில்’ எல்லாமே ‘ஜோரு ஜோருதான்’ என்கிறது. கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாயக் கடன்கள் ரத்து என்று தங்களது சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு ‘நலத்திட்டங்கள் பல தந்த’ கலைஞரின் ‘நல்லாட்சி தொடர’, உதயசூரியனுக்கு வாக்களிக்கச் சொல்கிறது.

காங்கிரஸின் விளம்பரங்களும் கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்கின்றன. இன்னொரு காங்கிரஸ் சீரிஸ் விளம்பரங்களில் முஸ்லிம், இளைஞர், பெண்கள் என்று தனித்தனி வகைமாதிரிகள் தாங்கள் எல்லாம் காங்கிரஸுக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர்.

திமுக தொலைக்காட்சி விளம்பரங்கள் சன் குழும, கலைஞர் குழும தொலைக்கட்சிகளில் வருகின்றன. காங்கிரஸ் விளம்பரங்களை ஆங்கில செய்தி சானல்களிலும் சன் குழும சானல்களிலும் பார்த்தேன்.

திமுகவின் நலத்திட்டங்கள் விளம்பரத்தை தினமணியில் பார்க்கிறேன். காங்கிரஸ் விளம்பரங்களையும் அச்சுப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

தயாநிதி மாறன், 32 பக்க (ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் சைஸ்) பலவண்ணப் புத்தகமாக அச்சிட்டு, ‘உலகத் தலைவர்களுடன் நான்’ என்று போட்டோக்களாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார். செய்தித்தாள்களுக்கு இடையில் வைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார். பராக் ஒபாமா, கார்டன் பிரவுன், விளாதிமீர் புடின் ஆகியோருடன் தயாநிதி மாறன் இருக்கும் படங்கள் மட்டும்தான் ஆப்செண்ட்.

விஜயகாந்தின் படு அபத்தமான ‘முரசு முரசு முரசு’ விளம்பரம் சன் டிவியில் பார்த்தேன். முரசு முரசு என்று கத்தினாலே எல்லோரும் அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்!

சரி, அஇஅதிமுக விளம்பரம் எப்படி உள்ளது என்று பார்க்க ஜெயா போனால், அங்கு உடனடியாகக் கண்ணில் ஏதும் படவில்லை. அதற்குபதில், ஜெயலலிதாவின் ஒரு முழு தேர்தல் பிரசார உரையையே ஒளிபரப்பிவிட்டனர். ஜெயலலிதா வரிசையாக திமுக அமைச்சர்கள் பேரில் உள்ள ஊழல்களைப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து, இப்படிச் சொன்னார்: “என் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா? நான் நடக்கத்தான் விடுவேனா? ஊழல் செய்யும் அமைச்சர்களை, ரவுடித்தனம் செய்யும் அமைச்சர்களை உடனடியாகத் துரத்திவிடுவேன்.”

குபுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததே இல்லை. உண்மைதான்!

ஆனால் ஸ்டாலின் போன்றோர் ஜெயலலிதாவின் பேச்சுத் திறமைக்கு அருகிலும் வரமுடியாது. பொழிந்து கட்டுகிறார். பொய்யாக இருந்தாலும். அண்ணல் அழகிரிக்கு தேர்தல் பிரசாரத்துக்கும் கட்டப் பஞ்சாயத்து மிரட்டலுக்கும் வித்தியாசம் தெரிவதே இல்லை. “அரிசி கொடுத்தோமுல்ல? வீடு கொடுத்தோமுல்ல? அப்புறம் என்ன மயித்துக்கு வேற எவனுக்காவது வோட்டுப் போடுவ? வொக்காளி, கொன்னுடுவேன்ல, ஆமா!” என்ற தொனியில்தான் அவரது வாக்குச் சேகரிப்பு அமைகிறது.

விளம்பரங்கள் பொய் என்று தெரிந்தாலும் மக்கள் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டது. இதனால் வாக்குகள் விழுமா என்றுதான் தெரியவில்லை.

10 comments:

  1. அழகிரி விளம்பரம் தான் கலக்கல்

    ReplyDelete
  2. 2001 சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட திமுகவின் ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ தேர்தல் விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  3. ஜெயா டிவியில் சொன்னதும் செய்யாததும்னு ஒரு பொது நல விளம்பரம் வருதே பார்த்தீங்களா அது சூப்பர் காமெடியா இருக்கும்..

    ReplyDelete
  4. athellam irukkattum. ungakitta vote kettu varaavangakitta. neenga ketka vendiyathu ithu than
    1. 1 vote potta evlo amount kudupeenga
    2. jeyacha pinna pandra oooolalalla evlo commission kudupeenga. kelunga kettu pinna yosichu vote podunga.

    ReplyDelete
  5. நேரடியாக சென்று ஓட்டு கேட்பதைவிட விளம்பரங்கள் வாயிலாக மக்களை சென்றடைவது அரசியல் கட்சிகளுக்கு எளிதாக இருக்கிறது. மக்களுக்குள் காட்சி ஊடகங்கள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் ஏராளம். ஒரு விஷயத்தை ஆதரிப்பதையும், அதற்கெதிரான மனோபாவத்தை கொண்டு வருவதிலும் காட்சி ஊடகங்களின் பங்கு மிக அதிகம். அரசியல் கட்சிகள் இதைக் கையாளுவதில் வியப்பேதுமில்லை.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு..

    நம்ம எல்லோருக்குமே தெரியும்.. யார் யார் எப்படீன்னு!!

    ReplyDelete
  7. அதிமுக தொலைக்காட்சி விளம்பரங்களைத் தாண்டி இன்று இளைஞர்களிடம் பிரபலமாக இருக்கும் கைத்தொலைபேசி, பண்பலை வானொலி ஆகிய ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து வேறெந்த தமிழக் கட்சியும் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
    தொலைக்காட்சியைப் பொருத்தவரை கட்சிச் சின்னம் தாங்கிய விளம்பரங்கள், நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் விளம்பரங்கள் அதிகப் பலனைத் தருவதில்லை என்பதைக் கடந்த காலத் தேர்தல்கள் காட்டியிருக்கின்றன.அவை சின்னத்தைப் பிரபலப்படுத்துகின்றனவேயன்றி கருத்துக்களைப் பிரபலப்படுத்துவதில்லை. இரட்டை இலையை எம்.ஜி.ஆர் நன்றாகவே பிரபலப்படுத்தியிருக்கிறார்.

    அதிமுக வேறு ஒரு உத்தியைக் கையாள்கிறது.அது ஆட்சியின் குறைபாடுகளை சில விளம்பரங்கள் மூலம் நினைவுபடுத்துகிறது.அதிலும் கூட கட்சிச் சின்னத்தை வைப்பதில்லை. மாறாக வாக்களிக்க மறவாதீர் என்று ஜனநாயகக் கடமையைத்தான் நினைவூட்டுகிறது.

    வித்தியாசமான அணுகுமுறை.

    ReplyDelete
  8. பண்பலை வானொலியைப் பயன்படுத்தாத கட்சிகளே இல்லை எனலாம். அதிமுக (ஜெயலலிதா பேசுவது), காங்கிரஸ் (என் குரலைக் கேட்டு என் ஜாதி, மதம் தெரியுதா விளம்பரம், 18 வயசுல வோட்டு போடற உரிமையை ராஜிவ் தந்தார் விளம்பரம்), மனித நேய மக்கள் கட்சி விளம்பரம் (பகுத்தறிவு, இளைஞர்களின் கட்சி விளம்பரம்), சரத்பாபு விளம்பரம் (சிலேட்டு சின்னம்!), தாமஸ் விளம்பரம் (கிரிக்கெட் பேட் சின்னமாம்), முரசு சின்னம் (மலரட்டும் மக்கள் ஆட்சி!) - இப்படி எல்லாக் கட்சிகளும் பண்பலையைப் போட்டுத் தாக்குகின்றன.

    டிஷ் மூலம் விளம்பரத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது பாஜக. உதயா டிவியில் பாஜகவின் விளம்பரம் வருகிறது!

    ReplyDelete
  9. //அதிமுக வேறு ஒரு உத்தியைக் கையாள்கிறது.அது ஆட்சியின் குறைபாடுகளை சில விளம்பரங்கள் மூலம் நினைவுபடுத்துகிறது.அதிலும் கூட கட்சிச் சின்னத்தை வைப்பதில்லை.//

    ஜெயலலிதா எல்லா சின்னங்களையும் வரிசையாகச் சொல்லி வாக்கு கேட்கிறார். ரேடியோ மிர்ச்சி கேளுங்கள். பத்து நிமிடத்துக்கு ஒருமுறை இந்த விளம்பரம் வருகிறது.

    ஏகே மூர்த்தி மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு கேட்கிறார். அதுவும் பண்பலையில் வருகிறது!

    ReplyDelete
  10. //அதிமுக தொலைக்காட்சி விளம்பரங்களைத் தாண்டி இன்று இளைஞர்களிடம் பிரபலமாக இருக்கும் கைத்தொலைபேசி, பண்பலை வானொலி ஆகிய ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து வேறெந்த தமிழக் கட்சியும் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
    தொலைக்காட்சியைப் பொருத்தவரை கட்சிச் சின்னம் தாங்கிய விளம்பரங்கள், நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் விளம்பரங்கள் அதிகப் பலனைத் தருவதில்லை என்பதைக் கடந்த காலத் தேர்தல்கள் காட்டியிருக்கின்றன.அவை சின்னத்தைப் பிரபலப்படுத்துகின்றனவேயன்றி கருத்துக்களைப் பிரபலப்படுத்துவதில்லை. இரட்டை இலையை எம்.ஜி.ஆர் நன்றாகவே பிரபலப்படுத்தியிருக்கிறார்.

    அதிமுக வேறு ஒரு உத்தியைக் கையாள்கிறது.அது ஆட்சியின் குறைபாடுகளை சில விளம்பரங்கள் மூலம் நினைவுபடுத்துகிறது.அதிலும் கூட கட்சிச் சின்னத்தை வைப்பதில்லை. மாறாக வாக்களிக்க மறவாதீர் என்று ஜனநாயகக் கடமையைத்தான் நினைவூட்டுகிறது.//

    மாலன் சார்!

    அதிமுகவின் ஊடகப்பிரிவுத் தலைவர் பேசுவது மாதிரி பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள் :-)

    அதிமுக மொபைல் போனில் மெசேஜ் தான் தருகிறது. திமுக மொபைல் போனே வாங்கித் தருகிறது!!!

    ReplyDelete