Monday, February 01, 2010

திரு சிராப்பள்ளி - 2

மகேந்திரனின் இந்தக் கோயிலை நீங்கள் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மகேந்திரன் மகன் நரசிம்மனால் கட்டப்பட்ட ஒரு கோயிலை நீங்கள் பார்ப்பது எளிதல்ல. உச்சிப் பிள்ளையார் கட்டுமானம் அமைந்துள்ள இடத்துக்கு நேர் கீழாக உள்ள இடத்தில் இந்த மகா அற்புதமான கோயில் உள்ளது. தொல்லியல் துறையினரால் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. நான் சென்றபோது ஒரு ஈ, காக்காய் இல்லை.

படிகள் ஏறி வரும்போது திடீரென ஒரு சாலை வரும் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? கீழிருந்து மேலே வரும்போது அந்தச் சாலையில் இடது பக்கம் திரும்புங்கள். சுவரில் “பல்லவர் கால குகைக்கோயில்” என்று ஒரு கை காண்பிக்கும். அதை நம்பி அது காட்டும் திசையில் பயணம் செய்யுங்கள். ஒரு சில அடிகள் சென்றதும் மற்றுமொரு கை வலப்பக்கம் திரும்பும். அங்கே வரிசையாகக் குடிசை வீடுகள். இருவர் நடந்து செல்லும் அளவுக்குத்தான் பாதை இருக்கும். குடிசை மக்கள் அந்தப் பாதையையும் பயன்படுத்துவார்கள். நான் செல்லும்போது ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர் முகர்ந்து கொட்டும் நீர் என்மேல் படாதவாறு கவனமாகத் தாண்டிச் சென்றேன். மேலும் குடிசை வீடுகள். திடீரென குன்றின் அடிப்பாகம் தெரிந்தது. வலது பக்கம் திரும்பவா, இடது பக்கம் திரும்பவா என்று வலது பக்கம் திரும்பி, பின் இடதுபக்கம் திரும்ப, ஆஹா, என்ன ஆச்சரியம்!


தொல்லியல் துறையின் பலகை இது நரசிம்மன் கட்டியிருக்கலாம் என்ற ஹேஷ்யத்தை முன்வைத்து, அந்த இடத்தை யாரும் அசுத்தம் செய்யக்கூடாது என்று எச்சரித்தது. மாபெரும் பாறை முகப்பில் நான்கு தூண்கள் (Pillars), இரண்டு அரைத் தூண்கள் (Pilasters). தூரத்தில் இருந்து பார்க்கும்போதே அவை மகேந்திரன் காலத்துக்கு அடுத்த காலம் என்று காட்டுபவை. கீழே சதுரம், மேலே எட்டு பட்டிகள், ஆனாலும் அதிலும் சில வடிவ மாற்றங்கள், மேல் நோக்கிச் செல்லும்போது தாமரை மலர்வதுபோல் தலைகீழான மொழுக் டிசைன்.

மண்டபத்துக்கு மேல் பாறை சுமார் 60 மீட்டர் உயரம் எழும்பிச் செல்கிறது. அதற்கு மேலாகத்தான் உச்சிப்பிள்ளையார் கோயிலின் கட்டுமானம். கீழே உள்ள படத்தில் அதனைப் பார்க்கலாம்.


உள்ளே நுழைந்ததும் மேலும் பல ஆச்சரியம். இதுவும் டிபிகல் பல்லவர் கால மண்டபங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டது. முன்னர் பார்த்த மகேந்திரன் மண்டபத்தில் உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் கருவறை. இங்கே வலப்பக்கம் ஒரு கருவறை, இடப்பக்கம் ஒரு கருவறை. இரண்டு கருவறைகளும் சற்றே உயர்ந்த மண்டபங்களாகக் காணப்படுகின்றன.


இரு கருவறை மண்டபங்களிலும் முன் இரு தூண்கள், பின் இரு அரைத்தூண்கள். உயர்ந்த மண்டபத்தின்மீது ஏற மூன்று படிகள்.


கருவறை முகப்பில் இரு துவார பாலர்கள். அதைத் தவிர கருவறைக்கு இரு பக்கமும் இருவர்.

ஒரு சந்நிதி (மேற்கு) சிவனுக்கு என்பது துவார பாலர்கள் கையில் உள்ள தடிக்கழியிலிருந்து தெரிகிறது. ஆனால், மகேந்திரன் கோயிலில் உள்ள துவாரபாலர்கள் கையில் இருக்கும் கழிகளைவிட இந்தக் கழிகள் மிகவும் அழகாகச் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். அந்த துவாரபாலர்கள் ஜடா மகுடம் தரித்துள்ளனர் - அதாவது மகுடத்துக்கு வெளியே ஜடை முடி தெரியும். இதுவும் சிவ துவாரபாலர்களின் ஓர் அடையாளம்.


மாறாக எதிர்ப்பக்கம் உள்ள சந்நிதியைக் காக்கும் துவாரபாலர்கள் கையில் கழி ஏதும் இல்லை. அவர்கள் முழுமையான மகுடம் மட்டும் தரித்துள்ளனர். முடி வெளியே கிடையாது. இது விஷ்ணுவுக்கான கருவறை என்பது எளிதில் புரியும். இங்கே ஒரு வாயிற்காப்போன் ஓர் அரக்கன்மீது காலை வைத்து அழுத்துவதைப் பார்க்கலாம். மகேந்திரன் கோயிலில் வாயிற்காப்பாளர்கள்போல் அல்லாமல் இங்கே உள்ள நான்கு வாயிற்காப்பாளர்களும் பல்வேறு விதமாகத் திரும்பியுள்ளனர் என்பதை நீங்கள் பார்க்கலாம். எந்த இருவரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள்.



(தொடரும்)

1 comment:

  1. //படிகள் ஏறி வரும்போது திடீரென ஒரு சாலை வரும் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? //

    தெற்கு ஆண்டாள் தெரு. மறைந்த மருத்துவர்.மாத்ருபூதம் பிறந்தது இந்த வீதியில்தான்.

    ReplyDelete