Wednesday, February 24, 2010

Zoho அலுவலகத்தில் ஒரு நாள்

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள Zoho அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே எங்கள் புத்தகங்களை வைத்து விற்பது முதன்மை நோக்கம். அவர்களது Zoho University ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசுவது இரண்டாவது. அங்கே உள்ள புக் கிளப் உறுப்பினர்களுடன் கலந்து பேசுவது மூன்றாவது.

மென்பொருள் வேலையில் ஈடுபடுவோருக்கு பெரும்பாலும் நேரம் கிடைப்பது அரிது. அலுவலகம் விட்டால் வீடு. வீடு விட்டால் அலுவலகம். போக வரவே நிறைய நேரம் எடுக்கும். வார இறுதிகளிலும் சிலர் வேலையில் ஈடுபட்டிருப்பர். இந்த நிலையில் வீட்டிலிருந்து புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்குவது அரிது. படிக்கும் ஆர்வம் இருந்தாலும் புத்தகங்கள் வாங்குதல் குறைவு.

இதற்குமுன் ஒரு முறை சென்னையில் இருக்கும் இன்ஃபோசிஸ் கேம்பஸ் ஒன்றில் புத்தகங்கள் விற்கும் முயற்சியை எடுத்திருந்தோம். அது இரண்டு வருடங்களுக்கு முன்பாக. அதன்பின் ஏதோ காரணங்களால் (விற்பனை குறைவு + அனுமதிகள் பெறுவதில் நிறைய தாமதங்கள்) அதனை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள்!


Zoho அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சுமார் 1,000 பேர். சனி மதிய உணவு நேரத்துக்குச் சற்று முன்னதாக கிழக்கு பதிப்பகமும் இந்தியா டுடே புக் கிளப் ஆசாமிகளும் தனித்தனியாக கடை பரப்பிக் காத்திருந்தோம். உணவுக்காக மக்கள் கூட்டம் வர ஆரம்பித்ததுமே அனைவரும் கூட்டம் கூட்டமாக புத்தகங்களை நோக்கிப் படையெடுத்தனர்.

Zoho மற்றுமொரு வசதியும் செய்துகொடுத்திருந்தது. புத்தகம் வாங்கும் ஊழியர்கள், ஒரு தாளில் தொகையை எழுதி கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றால் போதும். சம்பளத்திலிருந்து அந்தத் தொகையைப் பிடித்தம் செய்து அலுவலகம் நேராக எங்களுக்கு அனுப்பிவிடும். சுமார் 95% பேர் அந்த முறையிலேயே புத்தகம் வாங்கினர். கிரெடிட் கார்ட், பணம் என்று எதுவும் தேவையில்லை.

நாங்கள் மொத்தம் பதிப்பித்திருந்த 1500 புத்தகங்களில் வெறும் 300-ஐ மட்டுமே எடுத்துச் சென்றிருந்தோம். இல்லாத புத்தகங்களுக்கும் ஏக டிமாண்ட். எனவே அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் புத்தக விற்பனையை நீட்டித்தோம்.

இப்போது மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் வாருங்கள் என்று கேட்டுள்ளனர். நிச்சயம் செய்வோம்.


Zoho-வில் வேலை செய்யும் சிலருக்கு என் வலைப்பதிவு பழக்கம். கிழக்கு புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள். சிலர் காரமாக விமரிசனமும் செய்துள்ளவர்கள். ஆனாலும் பெரும்பாலானோர் (70%?) கிழக்கு அல்லது தமிழ்ப் புத்தகங்களை அதிகம் அறியாதவர்கள் என்றே தோன்றியது. முதல்முறையாக இந்தப் புத்தகங்களைப் பார்க்கிறார்கள். பார்த்து, தேடி, விருப்பத்துடன் வாங்கிக்கொண்டார்கள். பல புதிய வாசகர்கள் கிடைப்பது சந்தோஷமாக இருந்தது.

இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்பதால், இணையம் வழியாகவே - அதுவும் Zoho suite of services துணைகொண்டு புது புத்தகம் வந்தால் அந்த அலுவலகத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தரும் வகையிலும், Intranet வழியாகவே புத்தகங்கள் வாங்கும் வகையிலும் சில காரியங்களைச் செய்யலாம். Zoho-வில் வேலை செய்யும் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாமே? :-)

***

இந்தத் திட்டத்தால் எங்களுக்கும் பயன். தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க விரும்பும் Zoho ஊழியர்களுக்கும் பயன். இதேபோல சென்னையில் உள்ள பிற மென்பொருள் (அல்லது பிற) நிறுவனங்கள் - குறைந்தது 1,000 பேர் வேலை செய்யும் இடங்கள் என்று வைத்துக்கொள்வோமே - எங்களுக்கு அனுமதி கொடுத்தால், சந்தோஷமாக அங்கே வந்து கடைபரப்புவோம். டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னசண்ட், எச்.சி.எல் இன்னபிற மென்பொருள் கம்பெனிகளைச் சேர்ந்த, சென்னையில் உள்ள, இந்த வலைப்பதிவைப் படிக்கும் புத்தக விரும்பிகள் என்னை உடனடியாகத் தொடர்புகொள்ளவும்!

5 comments:

  1. பொதுவாக இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்களில் ஆடைகள் விற்பவர்கள்,செல்போன் சேவை தருவ்பவர்கள் போன்றவர்கள் தான் பொதுவாக கடை விரிப்பார்கள்.

    ஒரு பதிப்பகம் கடை விரிப்பது இதுதான் முதன்முறை

    பெங்களுருக்கு வரும் எண்ணமுண்டா.?

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  2. Good effort. I am sure you will reap rich dividends.

    ReplyDelete
  3. Interesting. Need to check with you some stats and use it for a mkt research i am currently working on. Good Initiative though.

    ReplyDelete
  4. Good one. You can also visit the IT parks like Tidel, Ascendas etc., There are people who would be buying books surely.

    ReplyDelete