Thursday, May 06, 2010

டி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா?

(புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது. முழுமையான கட்டுரை இங்கே. சில பகுதிகள் மட்டுமே இதழில் வெளியானது. இம்முறை இந்தியா கோப்பையை ஜெயிக்கும் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன்!)

இதுவரையில் இரண்டு டி-20 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. 2007-ல் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக. அதில் இந்தியாதான் சாம்பியன். அடுத்து 2009-ல் இங்கிலாந்தில். அதில் பாகிஸ்தான்தான் சாம்பியன். இப்போது ஏப்ரல் 30 2010 முதல் மேற்கிந்தியத் தீவுகளில், மூன்றாவது டி-20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது.

2007 தொடங்கி இன்றைக்குள்தான் எத்தனை மாற்றம்! முதல்முறையாக டி-20 உலகக்கோப்பை நடந்தபோது இந்திய ரசிகர்கள் பலருக்கும் அந்த ஆட்டம் புரியவே இல்லை. ஏன், இந்திய அணி வீரர்களுக்கும்கூடத்தான் புரியவில்லை. சச்சின் டெண்டுல்கர் உடல்நலம் நன்றாக இருந்தும்கூட இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றால் எந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்தப் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இன்றோ, பாரம்பரியமாக கிரிக்கெட் பார்க்கும் இந்திய ஆண்கள் தவிர்த்து, பெண்கள், குழந்தைகள், பாட்டிகள், தாத்தாக்கள் என்று அனைவருக்கும் டி-20 ஆட்டம் அத்துப்படி. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு யாருக்கும் டி-20 ஆட்டம் தெரிந்திருக்காது என்று அடித்துச் சொல்லலாம்.

இத்தனைக்கும் காரணம் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக். இன்று ஊழல், கறுப்புப் பணம், அழகிகளுடன் உல்லாசம் என்று இந்திய நாடாளுமன்றத்தில் சந்தி சிரிக்கும் அதே ஐ.பி.எல். ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகல், மேலும் இரு அமைச்சர்கள்மீது சந்தேகப் பார்வை, ஐ.பி.எல்லை நிர்வகித்து வரும் லலித் மோடிமீது எக்கச்சக்கக் குற்றச்சாட்டுகள், இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும் என்ற நிலை என அனைத்தையும் தாண்டி ஐ.பி.எல்தான் டி-20 கிரிக்கெட்டை இந்திய ரசிகர்களிடம் கொண்டுசென்றது. இதே ஐ.பி.எல் காரணமாகவே இந்தியா டி-20 உலகக்கோப்பையை இம்முறை எளிதில் வெல்லவும் கூடும்.

ஐ.பி.எல் கிடக்கட்டும். உலகக்கோப்பையை நோட்டம் விடுவோம். ஒரு நாள் (50 அல்லது 60 ஓவர்) உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா எந்தக் காலத்திலுமே தன்னம்பிக்கையுடன் விளையாடியதில்லை. 1983-ல் இந்தியா வென்றபோதும்கூட உலகத்தின் அவநம்பிக்கைகளைத் தாண்டி, ஒருவித அதிர்ஷ்டம் காரணமாகவே இந்தியா வென்றது என்று சொல்லலாம்.

உலகக்கோப்பையை வெல்ல ஒரு தனி மனநிலை வேண்டும். எக்கச்சக்க திறமை வேண்டும். பிரமாதமான செயல்திட்டம் வேண்டும். பயமறியா கேப்டன் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை வேண்டும். ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை ஆட்டங்களில் இந்தியாவிடம் இன்றுவரை - 1983 சேர்த்து - இந்த மனநிலை இருந்ததில்லை.

ஆனால் இப்போதைய டி-20 நிலையே வேறு. 2008, 2009, 2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 8 உள்ளூர் அணிகள் கலந்துகொண்ட ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரர்கள் கடுமையாக மெருகேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60 ஆட்டங்கள். இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஆட்டக்காரர்கள், ரிட்டயர் ஆன ஆட்டக்காரர்கள் என்று அனைவரும் விளையாடியிருக்கிறார்கள். அதுவும் தமக்குள்ளாக மட்டுமல்ல, உலகின் சிறந்த ஆட்டக்காரர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

எனவே 20 ஓவர்களில் எப்படிப் பந்துவீசவேண்டும், எப்படி முதல் சில ஓவர்களில் பேட்டிங் செய்யவேண்டும், எப்படி ரன்களை சேஸ் செய்யவேண்டும், எப்படி எதிரணி அடித்து நொறுக்கும்போது ரன்களை மட்டுப்படுத்துவது, எது பாதுகாப்பான ஸ்கோர் போன்ற பல வியூகங்களும் இந்திய வீரர்களுக்கு அத்துப்படி.

இதே நேரத்தில் பிற நாடுகளிலும் - முக்கியமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து - டி-20 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் இந்தியா அளவுக்கு பணபலத்துடன், உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டுவந்து நடப்பதில்லை. காமாசோமாவென்றுதான் நடக்கின்றன. பாகிஸ்தானிலும் கடந்த பல ஆண்டுகளாக டி-20 ஆட்டங்கள் உண்டு. ஆனால் இன்று பாகிஸ்தானில் யார் கிரிக்கெட் ஆடுகிறார்கள், யார் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதே புரியவில்லை.

முதல் டி-20 உலகக்கோப்பையின்போது இந்தியா ஜெயித்தது குருட்டு அதிர்ஷ்டம்தான் என்பேன். யாருக்குமே புரியாத ஒரு ஆட்டத்தில், கிடைத்த இடைவெளியில் ‘ஜஸ்ட் பாஸ்’ என்றுதான் இந்தியா ஜெயித்தது. முதல் சுற்றைக் கடந்து சூப்பர் 8 என்ற நிலையை அடைய அப்போது இந்தியா கஷ்டப்படவில்லை. ஆனால் சூப்பர் 8-ல் முக்கி முக்கித்தான் இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது. அதன்பின் இரு ஆட்டங்கள், இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு, மிகவும் திகிலான கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிகொண்டது.

இரண்டாம் உலகக்கோப்பையின்போது இந்தியாவின் விளையாட்டு படுமோசமாக இருந்தது. சூப்பர் 8 போட்டிகள் மூன்றில் ஒன்றில்கூட இந்தியா ஜெயிக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று அனைத்திடமும் தோல்விதான். மாறாக பாகிஸ்தானோ சூப்பர் 8-ல் ஒரு தோல்வியுடன் அரை இறுதி சென்று அங்கே தென் ஆப்பிரிக்காவை ஜெயித்து, இறுதிப்போட்டியில் இலங்கையை வெற்றிகொண்டது.

ஃபார்ம் என்று பார்த்தால், அடுத்தடுத்து இரு உலகக்கோப்பைகளிலும் இறுதிப் போட்டியை அடைந்து, ஒன்றில் தோற்று அடுத்ததில் வென்ற பாகிஸ்தானைத்தான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு மூன்று பின்னடைவுகள். ஒன்று: இந்தியா-பாகிஸ்தான் ராஜீய உறவு சுமுகமாக இல்லாததால் அவர்கள் ஐ.பி.எல்லில் சேர்த்துக்கொள்ளப்படாதது. இரண்டு: பாகிஸ்தானில், இலங்கை அணி மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகே அந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்காமல் இருத்தல். மூன்று: சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றுவந்த பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள்மீது அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் ஒழுங்கீனம், மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற குற்றங்களைக் காட்டி சிலரை கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்துள்ளது.

மாறாக இந்திய அணியிலோ நல்ல தொடர்ச்சி. 2009 உலகக்கோப்பை அணியில் இருந்த 15 பேரில் 11 பேர் மீண்டும் 2010 அணியில் உள்ளனர். மாற்றப்பட்டுள்ள நால்வரும் சரியான மாற்றங்களே. இந்தப் பதினைந்து பேர்தான் இந்தியாவின் சிறந்த வீரர்கள் என்று சொல்லலாம். 2010 ஐ.பி.எல்லில் மிக அற்புதமாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் டி-20 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளாத ஒரு நிலைதான் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தரும். ஆனால் அவர் இல்லாமலேகூட இந்தியாவால் இந்த உலகக்கோப்பையை ஜெயிக்க முடியும்.

பிற நாடுகளின் நிலை என்ன? ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியான ஆஸ்திரேலியாவுக்கு இன்றுவரை டி-20 பற்றிய தெளிவான புரிதல் இல்லை. முதல் உலகக்கோப்பையின்போது அரை இறுதிவரை வந்த ஆஸ்திரேலியா, இரண்டாம் உலகக்கோப்பையில் அந்த நிலையை அடையவில்லை. இங்கிலாந்தோ, இலங்கையோ, நியூசிலாந்தோ இந்த வடிவத்தில் தங்கள் வலிமையை உலக அளவில் பறைசாற்றவில்லை.

எனவே இந்த முறை இந்தியாவும் கட்டாயமாக அரை இறுதி வரும். பாகிஸ்தான் கொஞ்சம் தட்டுத் தடுமாறி அரை இறுதி வரலாம். அதன்பின் யார் வேண்டுமானாலும் உலகக்கோப்பையை வெல்லலாம். இந்தியா இறுதிப் போட்டியை வெல்லாவிட்டால்தான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும்.

5 comments:

  1. ச.ந. கண்ணன்Thu May 06, 11:45:00 AM GMT+5:30

    /இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு, மிகவும் திகிலான கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிகொண்டது./

    கடைசிப் பந்தில் அல்ல. பாகிஸ்தான் 19.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது.

    ReplyDelete
  2. எனக்கும் இதே விருப்பம்தான். ஆனால், இறுதிப்போட்டி நடைபெறவிருப்பது என்னவோ Barbados'ல். நேற்றைய ஆஸ்திரேலியா ஆட்டத்தை பார்த்தவுடன் அந்த ஸ்ட்ரிப்பின் வேகம் தெரிந்தது. ஆகையால் நாளை நடைபெறும் போட்டியை பார்த்துவிட்டுதான் எதுவும் சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது. இன்னமும் நம்முடைய மிடில் ஆர்டர் நிலைமை சரியில்லை.

    ஆரம்பத்தில் இரண்டு விக்கெட் எடுத்தால் காலி என்ற நிலை தொடருமோ?

    ReplyDelete
  3. என்ன சொன்னாலும், இருபது ஓவர் போட்டிகள் , திறமை சார்ந்த போட்டிகளாக இல்லாமல், அதிர்ஷ்டம் சார்ந்த போட்டிகளாக இருப்பதே உண்மை..

    பெரிய பர பரப்பு எதுவும் மக்களிடையே இல்லை... வானொலி பெட்டியில், அரைகுறையாக புரியும் ஆங்கில , ஹிந்தி வர்ணனைகளை கேட்டு ரசித்த ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்போ, ஐந்து நாள் போட்டிகளின் திகிலோ இதில் இல்லவே இல்லை

    ReplyDelete
  4. 1983 வெற்றி
    அதிர்ஷ்டத்தால்
    கிடைத்தது அல்ல.
    கபிலால் கிடைத்தது.

    ReplyDelete
  5. Dhoni's poor captaincy( R.jadeja's inclusion) and Sehwag's exclusion costing T20 Worldcup 2009 in England...
    This is repeated in WI also.

    ReplyDelete