Sunday, July 04, 2010

கருடன்

சில நாள்களுக்கு முன் என் நண்பர் அஷோக் திருக்குறுங்குடி கோயில் சுவரில் இருந்த ஒரு சிற்பத்தின் படத்தைக் காண்பித்தார்.


ஒரு கழுகு - கருடனாகத்தான் இருக்கவேண்டும். ஒரு கையால் யானையின் தும்பிக்கையைப் பிடித்துள்ளது. மற்றொரு கையில் ஆமையின் கழுத்து. அலகில் ஒரு மரக்கிளை. அந்தக் கிளையிலிருந்து நீளும் சிறு சிறு கிளைகளில் சில முனிவர்கள்தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி புராணத்தில் எங்கு வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

கருடனின் கதையைச் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன்.

கத்ரு, வினதை என்ற தட்சனின் இரண்டு பெண்களையும் கஷ்யப முனிவர் மணந்துகொள்கிறார். கத்ரு, தனக்கு சக்தி மிக்க ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாகப் பிறக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். வினதையோ, அந்த ஆயிரம் பாம்புகளையும் விடச் சக்தி அதிகம் கொண்ட இரு குழந்தைகள் வேண்டும் என்று கேட்கிறாள். இருவரும் கேட்ட வரத்தைப் பெறுகின்றனர்.

கத்ரு ஆயிரம் முட்டைகளை இடுகிறாள்; வினதை இரண்டு முட்டைகளை. ஐநூறு ஆண்டுகள் கழித்து கத்ருவின் முட்டைகள் பொரிந்து ஆயிரம் பாம்புக் குட்டிகள் வெளியே வருகின்றன. வினதையின் முட்டைகளோ அப்படியே இருக்கின்றன. பதற்றத்தில் ஒரு முட்டையை உடைத்துப் பார்க்கிறாள் வினதை. அதில் பாதி வளர்ந்த குழந்தை ஒன்று உள்ளது. கோபம் கொண்ட அந்தக் குழந்தை வினதை அடிமை ஆவாள் என்று சபித்துவிடுகிறது. மற்றொரு முட்டையையாவது ஒழுங்காகப் பாதுகாத்தால் அதிலிருந்து பிறக்கும் தம்பி, தாயை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுப்பான் என்று சொன்ன அருணன் என்ற பெயருடைய அந்தக் குழந்தை, சூரியனின் தேரோட்டியாகச் சென்றுவிடுகிறது.

ஒரு நாள், இந்திரனின் வெள்ளைக் குதிரை உச்சைசிரவஸ் வானில் செல்லும்போது கத்ருவும் வினதையும் அதனைப் பார்க்கிறார்கள். அந்தக் குதிரையின் வாலின் நிறம் என்ன என்று இருவருக்குள்ளும் வாக்குவாதம். போட்டியில் தோற்பவர் ஜெயிப்பவரின் அடிமையாகவேண்டும் என்று முடிவாகிறது. வாலின் நிறம் வெள்ளை என்கிறாள் வினதை; கருப்பு என்கிறாள் கத்ரு.

கத்ரு தன் பாம்பு மகன்களை ஏவி, குதிரையின் வாலுடன் பிணைந்து கரிய நிறமாக ஆக்குமாறு செய்கிறாள். போட்டியில் தோற்ற வினதை, கத்ருவின் அடிமை ஆகிறாள்.

மேலும் ஐநூறு ஆண்டுகள் கழித்துப் பிறக்கும் வினதையின் இரண்டாம் மகன் கருடன், அதிபயங்கர சக்தி கொண்டவனாக இருக்கிறான். தன் தாயின் அடிமை நிலையை எண்ணி வருந்தும் அவன், என்ன செய்தால் அடிமைத்தளையிலிருந்து விடுபடலாம் என்று பாம்புகளிடம் கேட்கிறான். தேவர்களிடம் இருக்கும் சாவை நெருங்கவிடாத அமிர்த கலசத்தை எடுத்துவந்து தங்களிடம் கொடுத்தால், அடிமை நிலையிலிருந்து விடுதலை தருவதாக பாம்புகள் சொல்கின்றன.

அதை ஏற்று, தேவர்களுடன் போரிட்டு, அமிர்த கலசத்தைக் கொண்டுவந்து தர்ப்பைப் புல் மீது வைத்துவிட்டு, தன் தாயின் விடுதலையைப் பெற்றுத்தருகிறான் கருடன். பாம்புகள் அமிர்தத்தைப் புசிக்க வருமுன், இந்திரன் அங்கு வந்து அமிர்த கலசத்தை எடுத்துச் சென்றுவிடுகிறான். தர்ப்பைப் புல் பட்டு பாம்புகளின் நாக்குகள் பிளந்துவிடுகின்றன; எனவேதான் அவற்றுக்கு இரட்டை நாக்கு.

*

அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் கிழக்கு பதிப்பகம் இணைந்து சிறுவர்களுக்கான பல கதைப் புத்தகங்களைத் தமிழில் கொண்டுவருகிறது. அதில் ‘கருடன்’ கதையின் தமிழாக்கத்தை நேற்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அதில் ஆமை, யானை, கருடன் கதையைப் படித்தேன். பிறகு தேடிப் பார்த்ததில், மகாபாரதத்தில் இந்தப் பகுதி தெளிவாக வருவதைக் கண்டுபிடித்தேன்.

அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்திக்கிறான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்கிறான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காண்பிக்கிறார்.

யார் இந்த ஆமையும் யானையும்? விபாவசு, சுப்ரீதிகா என்று இருவர் இருந்தனர். இளையவன் சுப்ரீதிகா தமையன் விபாவசுவிடம் சொத்துகளைப் பிரித்துத் தருமாறு சண்டை போட்டுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சொத்துப் பிரிவினை நடந்தாலும், அதன் பிறகும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். (அம்பானி சகோதரர்கள் போல!) விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபிக்கிறான். சுப்ரீதிகா, தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபிக்கிறான்.

யானையாகவும் ஆமையாகவும் ஆனபின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொல்கிறார் கஷ்யபர்.

கருடன் பாய்ந்துசென்று ஒரு கையால் யானையின் தும்பிக்கையையும் மற்றொரு கையான் ஆமையின் கழுத்தையும் பிடிக்கிறான். பிறகு சாவகாசமாக இரண்டையும் தின்ன ஓர் இடத்தைத் தேடுகிறான். இப்படியே பரந்து பறந்து சென்று கடைசியில் ஒரு ஆலமரத்தில் ஏறி அமர்கிறான் கருடன்.

ஆனால் கருடனின் கனம் தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழப்போனது. அந்த மரக்கிளைகளில் வால்கில்ய ரிஷிகள் தலைகீழாகத் தொங்கி தவம் செய்துவந்தனர். வால்கில்யர்கள் பிக்மி வகை ரிஷிகள். மிகச் சிறிய பரிமாணம் உடையவர்கள். சொல்லப்போனால் கருடன் பிறப்புகே வால்கில்யர்கள்தான் காரணம். அந்த ரிஷிகள் கீழே விழுந்துவிடக்கூடாதே என்று கருடன் பாய்ந்து அந்தக் கிளையை தன் அலகால் கவ்விக்கொள்கிறான்.

அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.


பிறகு என்ன ஆகிறது? அலகில் கிளையுடனும், கைகளில் யானை, ஆமையுடனும் பறந்த கருடன் கந்தமாதன மலை உச்சியில் இறங்குகிறான். அங்கே ரிஷிகள் கீழே இறங்கிக்கொள்ள, மரக்கிளையை எறிந்துவிட்டு, யானையையும் ஆமையையும் உண்கிறான் கருடன்.

பிறகு தேவலோகம் சென்று தேவர்களையும் இந்திரனையும் தோற்கடித்துவிட்டு அமிர்தகலசத்தைக் கைப்பற்றி எடுத்துவருகிறான்.

அந்தக் கட்டத்தில்தான் விஷ்ணு, கருடனைப் பார்த்து வியந்து அவனைத் தன் வாகனமாக ஆக்கிக்கொள்கிறார்.

[படங்கள்: (c) அஷோக் கிருஷ்ணசாமி]

19 comments:

  1. அருமை ..இத்தனை அழகிய காட்சியும் அதை புடைப்புச்சிற்பமாக செதுக்கியதும் ....இதை எடுத்து சொல்ல யாரும் இல்லையென்றால் இதன் முக்கியத்துவம் மறைந்து போய்விடும்.

    நல்லதொரு இடுகை

    ReplyDelete
  2. I have read this in amarchitra kathai . . Also came in siruvarmalar . The sculpture is excellent . .bruno

    ReplyDelete
  3. ஒரு கதை. ஒரு சின்ன விளம்பரம். ஒரு செய்தி. ஒரு சின்ன நக்கல் ஒரு பதிவு :)

    ReplyDelete
  4. இந்த கதையை சிறுவதிலேயே படித்த/கேட்ட நினைவு கொஞ்சமா இருக்கு.ஆனா.. திடீரென இக்கருடன் கதை எழுத ஏதும் உள்குத்து இல்லையே சார்? :))

    ReplyDelete
  5. Why don't they take inspirations from these stories and make movies like "clash of titans" in indian cinema ?

    They always have to copy 3rd rate hollywood movies.... and show themselves as உலக சினிமா பார்ப்பவர்கள்!
    உலக சினிமா my a$$.

    ReplyDelete
  6. சுவராசியமான பின்கதை. திருக்குறுங்குடி இரண்டாம் நிலை கோபுரத்தில் இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் தொடர்பற்ற நிலையில் இருக்கின்றன.இருபதடிக்கு மேலிருக்கும் இதுபோன்ற சிற்பங்களை zoom செய்வது கஷ்டமான காரியமாக இருந்தது. அடுத்தமுறை செல்லும்போது ஏணி ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  7. த்கவலுக்கு நன்றி.
    எங்கே இருக்கிறது இந்த
    திருகுறுங்குடி?

    ReplyDelete
  8. one minute an atheist / another minute theist

    AS USUAL - TWO FACED

    ReplyDelete
  9. http://www.poetryinstone.in/lang/en/2009/01/15/garudanin-kathai-thirukurungudi.html

    ReplyDelete
  10. அருமையான பதிவு பத்ரி.

    இறுதியில் சிறு addition..

    "கையில் அம்ருதா கலசம் இருந்தும் அதை சிறிதளவும் பருகாமல் கருமமே கண்ணக இருந்த கருடனை பார்த்து வியந்து அவனைத் தன் வாகனமாக ஆக்கிக்கொள்கிறார்"

    ReplyDelete
  11. //த்கவலுக்கு நன்றி.
    எங்கே இருக்கிறது இந்த
    திருகுறுங்குடி?//
    திருக்குறுங்குடி வேறு பெயர் : பிரான் மலை ( சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி - பொன்னமராவதி பாதையில் அமைந்துள்ளது என நினைக்கிறேன்

    ReplyDelete
  12. sorry for the earlier comment: piraan malai is thirukkodunkunram.

    ReplyDelete
  13. திருக்குறுங்குடி பாடல் பெற்ற வைணவத்தலம், இங்கு நம்பி கோயில் உள்ளது.டி.வி.எஸ் குழுமத்தினை துவக்கிய சுந்தரம் ஐயங்காரின் பெயரில் உள்ள டி திருக்குறுங்குடியை குறிக்கிறது.பழைய கோயில் ஒரு சிறிய மடம், கோயிலில் இருந்த சிவன் சிலையை அகற்றிய சர்ச்சை அது தொடர்பான வழக்கு என்று அவ்வூரைப் பற்றி நிறைய எழுத முடியும் :). பாண்டிய நாட்டு திருத்தலங்களில் ஒன்று இது.அருகில் உள்ள வானமாமலை என்கிற நான்குனேரியிலும் ஒரு கோயில்,பாரம்பரியமிக்க மடம் உள்ளது.

    ReplyDelete
  14. The pillars/columns are also interesting. They look greek with vertical grooves/flutes. I don't remember seeing pillars with grooves in South Indian Hindu temples. Is it common? Is it considered Gandhara style pillar?

    Mani M. Manivannan
    (problem with cookies prevents using gmail id)

    ReplyDelete
  15. ராமதுரை எழுதியது
    அந்த ரிஷியின் பெயர் காஸ்யபர். சம்ஸ்கிருதத்தில் அந்த ரிஷியின் பெயர் அவ்விதமே உள்ளது. ஹிந்தியில் அதை காஷ்யபர் ஆக்கிவிட்டார்கள்.காஸ்யப ரிஷியின் பெயரில் ஒரு கோத்திரமும் உள்ளது.

    ReplyDelete
  16. அழகிய சிற்பம்! அருமையான விளக்கம்!

    ReplyDelete