Wednesday, September 29, 2010

தஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 1



திடீரெனத் தோன்றிய வேகத்தில், ஒரே நாளில் தஞ்சாவூருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் சென்றுவரலாமே என்று தோன்றியது. உடனே கிளம்பிவிட்டோம். காலை சென்னையில் காரில் கிளம்பினால், ஐந்து மணி நேரத்துக்குள் நேராக திருச்சி. ஸ்ரீரங்கத்தில் பெற்றோர்கள் வீட்டுக்குச் சென்று காலை உணவை முடித்துவிட்டு, அப்படியே நேராக தஞ்சாவூர். முடித்துவிட்டு கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம். அங்கிருந்து நேராக மீண்டும் ஸ்ரீரங்கம். மறுநாள் காலை இலவச இணைப்பாக, ஸ்ரீரங்கம் கோயிலில் ஹோய்சாள அரசர்கள் கட்டிய வேணுகோபால சுவாமி கோயிலைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினால் மதிய உணவுக்கு சென்னை வந்துவிட முடிந்தது! சாலைகள் அவ்வளவு நன்றாக உள்ளன.

*

ராஜராஜன் தஞ்சையில் பெருவுடையார் (பிரகதீஸ்வரம்) கோயிலைக் கட்டியதன் 1,000-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாங்கள் கோயிலுக்குள் நுழையும்போது, அமைச்சர் பெருமக்கள் - ஸ்டாலின், அன்பழகன், அவர்கள்பின்னே அத்தனை அமைச்சர்களும் வெளியே வந்துகொண்டிருந்தனர். ராஜராஜனின் பிள்ளை ராஜேந்திரனுக்கு ஏதோ அப்பன்மீது கோபம்போல. தஞ்சாவூரைப் புறக்கணித்தது மட்டுமின்றி, தந்தைக்குப் போட்டியாக தானும் ஒரு பெரிய கோயிலைக் கட்டவேண்டும் என்று முடிவெடுத்தான். அதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இன்று அந்த ஊர் யாரும் வசிக்காத ஓர் இடம். அந்த ஊரில் ராஜேந்திரன் கட்டிய கோயிலின் மாதிரி கிட்டத்தட்ட தஞ்சைக் கோயிலை ஒட்டியது. கருவறை, அதன்மீதுள்ள விமானம், உள்ளே இருக்கும் லிங்கம், கோஷ்டத்தைச் சுற்றிய சுவர்களில் இருக்கும் சிற்பங்கள் எனப் பலவும் தந்தையின் கோயிலின் மாதிரியில். கோயிலின் பெயரும் தந்தையுடைய கோயிலின் அதேப் பெயர்தான் - பெருவுடையார் (பிரகதீஸ்வரம்) கோயில். தஞ்சாவூர்க் கோயிலுக்குத் தந்தை அளித்த பல நேர்த்திகளை எல்லாம் மகன் தன் கோயிலுக்குத் திருப்பிவிட்டான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இரண்டு கோயில்களுமே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரண்டுமே அற்புதமான கோயில்கள். வேறு அனைத்தையும் விட்டுவிட்டு, பிரதான கோஷ்டத்தைச் சுற்றியுள்ள சிற்பங்களை மட்டும் பார்க்கும்போது மகனுடைய கோயில்தான் ஜெயிக்கிறது என்பது என் தனிப்பட்ட, பாமரத்தனமான கருத்து.

உதாரணமாக ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் பார்ப்போம். கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் சண்டேச அனுக்ரஹ மூர்த்தி. இது தஞ்சையில் கிடையாது. சொல்லப்போனால், இதற்கு இணையான ஒன்று தஞ்சையில் இல்லவே இல்லை.


காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார். அருகில் பார்வதி.

மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் அழகான சில சிலைகள் உண்டு; சிவனும் தாண்டுவும், சண்டேச அணுக்ரஹ சிவன் (பார்வதி இல்லாமல்), விஷ்ணுவும் கருடனும், சிவனும் நந்தியும். இவற்றில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அவர்களது வாகனங்கள்மீதோ, மாணவன்மீதோ, தொண்டன்மீதோ அளவுக்கு அதிகமான பரிவுணச்சி இருக்கும். அது அந்தக் கல் முகத்தில் செதுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அந்தப் பரிவை இங்கே முகத்திலும் பரிவட்டம் கட்டும் செயலிலும் காணலாம்.

(தொடரும். அடுத்த பதிவில் இரு இடங்களிலும் இருக்கும் சிற்பங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.)

14 comments:

  1. nice start..its defn a puzzle, more so the reason why Rajendra switched major grants from the big temple to his, within 30 years of the big temple completion. The other side is, if he wanted to overshadow his dad, why did he build his vimanam slightly shorter ?

    vj
    www.poetryinstone.in

    ReplyDelete
  2. அடடே!!! எங்க ஊருக்கு (க.கொ.சோ.புரத்திலிருந்து 2 மைல் தூரம்) போயிருக்கீங்க!!! நாங்கள் சிறு வயதில் சுதந்திரமாக மேல் தளம் வரையில் சென்று விளையாடுவோம். தென் சுவற்றில் உள்ள பிள்ளையார் வயிற்றை சிறு கல்லினால் தட்டினால் வரும் வெண்கல ஓசை ஆச்சரியமளிக்கும். அது இப்போது கம்பியினால் மறைத்து வைத்திருப்பார்கள் (உங்கள் நன்றிக்கு வந்தனம் :)). சரி..சரி...உங்கள் கருத்துகளுக்கு காத்திருக்கிறேன்.

    -கண்ணன்

    ReplyDelete
  3. பத்ரி. ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும் பார்க்க மிகவும் ஆவலாக இருந்து தவறிப்போன ஸ்தலங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம். ஜூனில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மறுபடியும் சென்றிருந்தேன். கோவிலில் இருக்கும்போது கங்கைகொண்ட சோழபுரத்தின் நினைவாகவே இருந்தது. ஏனோ இன்னும் பார்க்கக் கைகூடவில்லை. அந்தப் பெயரே என்னவோ செய்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  4. இராஜேந்திரன் இப்படி ஒரு கோயில் கட்ட காரணம் தன் நாட்டுடைய பாதுகாப்பாகவும் இருக்கலாம். சோழ நாட்டுக்கு வடக்கேயிருந்து படையெடுத்து வருபவர்கள், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலைப் பார்த்து, பெருவுடையார் கோயில் எனத் தவறாக எண்ணி அவ்வூரையேத் தஞ்சை எனவும் எண்ண வைப்பதற்கு இது ஒரு தந்திரமாக இருந்திருக்கலாம். இதன்மூலம் அவர்களின் திட்டங்களை முறியடிப்பது அவனின் நோக்கமாக இருக்கலாம்.

    கங்கையில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் கொண்ட சோழநாடு அது என்பதால், அதன் பெயர் கங்கைகொண்டசோழபுரம் என ஆகியிருக்கும்.

    மற்றபடி, இந்தக் கற்பனையை நானே நம்பவில்லை. மற்றவர்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல! :-)

    ReplyDelete
  5. As this seemed relevant to book publishing industry, maybe a good read for you.

    http://chronicle.com/article/What-Are-Books-Good-For-/124563

    ReplyDelete
  6. நல்ல முயற்சி ! தஞ்சை பெரியகோவிலை விட கங்கை கொண்ட சோழபுரம் அழகான கோயில் என்பதை ஒப்புகொள்கிறேன் . அந்த கோயிலை சுற்றி இன்னும் பல ஊர்கள் காரண பெயருடன் விளங்குகின்றன . (மீன் சுருட்டி- பாண்டியர்களை அவர்களின் மீன் கொடி யை சுரிட்டிகொண்டு ஓட ஓட விரட்டி சண்டை இட்ட இடம் இன்னும் உள்ளது . படைக்கலம் என்ற ஊரும் அருகே உண்டு . தஞ்சவுருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தருவதில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று . உங்களின் தொடர் பதிவை அவளுடன் எதிர்பார்கிறோம் .

    இலங்கை சென்றது குறித்தும் படத்துடன் எழுதுங்கள் !

    நன்றி
    www.doctorrajmohan.blogspot.com

    ReplyDelete
  7. //சாலைகள் அவ்வளவு நன்றாக உள்ளன.//

    நன்றி டி.ஆர்.பாலு மற்றும் தமிழக அரசு !!!

    ReplyDelete
  8. உடையார் காவியத்தின் இறுதிபகுதியில் ராஜேந்திரன் ஏன் கங்கை கொண்ட சோழபுரம் சென்றான் என்ற காரணங்களை ஆசிரியர் அருமையாக விளக்கியிருப்பார்

    ஒரு முறை வாசித்து பார்க்கவும்

    ReplyDelete
  9. http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html

    http://viewsofmycamera.blogspot.com/2010/05/blog-post_17.html

    தஞ்சையும் கங்கை கொண்ட சோழபுரமும் என் பார்வையில்

    ReplyDelete
  10. மிக நல்ல பதிவு


    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  11. Good Article!!!

    I am looking for more authenticated information about this temple. Our archaeology department should have some a website to get more information about these temples.

    I don't believe that Rajendra Cholan built this temple because of his difference with his father - great Raja Raja Cholan. If so, he would have built it taller than his father's temple.

    I heard from my parents that British government took lot of stones from this temple to build the 'Anaikkarai (Lower Anaicut)' bridge/dam.

    Cheers
    Muthu Rajagopalan

    ReplyDelete
  12. பத்ரி,

    நீங்கள் தாராசுரம் கோயிலையும் சென்று பார்த்திருக்க வேண்டும். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. ராஜேந்திர சோழனின் மகள் வழிப்பேரன் ராசாதிராச சோழன் கட்டியது என நினைவு. அப்படியே தஞ்சையின் மினியேச்சர் மாதிரி இருக்கும். நுணுக்கமான பல சிற்பங்கள் உண்டு.

    தாராசுரம்,என்னுடைய படங்கள்
    http://picasaweb.google.co.in/saimagesh/Darasuram#

    இந்த வருடம் பிப்ரவரி மாதம் நானும் எனது நண்பன் ஒருவனும் பெங்களூரிலிருந்து கிளம்பி தஞ்சை,தாரசுரம் மற்றும் க.கோ.சோழபுரம் மூன்றையும் கண்டோம். மூன்று இடங்களிலும் Archeology துறையிலிருந்து கைடுகளை அமைத்துக்கொண்டோம். அருமையான அனுபவம்.

    தஞ்சை பெரியகோயிலே முழுமையான அளவில்(entirety) சிறப்புடையதாக இருக்கிறது. தாராசுரம் சிறிய அளவிலான நுட்பமான சிற்பங்களுக்கு சிறப்புடையது. க.கொ.சோ. ஒரு சில சிற்பங்களைத்தவிர அக்கோயிலை மற்ற இரண்டு கோயில்களுடன் ஒப்பிடமுடியாது. ராஜேந்திரனின் கவனம் போர்களில்தான் இருந்தது.

    ராஜேந்திரனும் ராசாதிராசனும் தங்களுக்கும் ஒரு பெயர் சொல்லும் நிலைபெற்றிருக்கக் கூடிய அடையாளம் வேண்டும் என்று நினைத்ததால் இக்கோயில்களை கட்டினர் என்றும் ஆனால் தங்கள் மூதாதையினரின் சிறப்பை குறைத்துவிடக்கூடாதென கோபுரத்தின் உயரத்தை குறைத்ததாகவும் சொல்லுவர். ஆம், தாராசுரம் க.கொ.சோ.வை விட உயரம் குறைவு.

    தஞ்சை மற்றும் க.கோ.சோ.வின் படங்கள்
    http://picasaweb.google.co.in/saimagesh/TanjavurBrahadeeswareTemple#

    http://picasaweb.google.co.in/saimagesh/GangaiKondaChozhapuram#

    ReplyDelete
  13. தாராசுரம் என்ற பெயரே 'ராஜராஜேஸ்வரம்' என்பதன் சிதைவுதால். இரண்டாம் ராஜராஜ சோழரால் கட்டப்பட்டது.

    ReplyDelete
  14. மேலே உள்ள படம் [சண்டேச மூர்த்தியல்ல] சிவன்
    காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுட்டவில்லை.

    *சிவன்
    காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருப்பவர் :மாமன்னன் "இராஜராஜசோழனாவான்".


    *மாமன்னன் இராஜராஜசோழனுக்கு [சிவபாதசேகரன்] என்னும் சிறப்பு பட்டம் உண்டு. அதன் தோற்றம் தான் இந்த சிலை.தன் தந்தையின் நினைவாக கங்கைகொண்டசோழீஸ்வரர் கோயிலில் அமைத்துள்ளார் இராஜேந்திரசோழன்.


    ReplyDelete