Saturday, April 16, 2011

சத்தீஸ்கர், மாவோயிஸம், பினாயக் சென்: ஓர் அரசு அதிகாரியின் பார்வையில்

சில மாதங்களுக்கு முன் சத்தீஸ்கர் சென்றிருந்தேன். பினாயக் சென் கைது செய்யப்பட்டு அவர்மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பெயில் மறுக்கப்பட்டிருந்த நேரம் அது. மிகக் குறைவான நேரங்களே அந்த மாநிலத்தில் செலவிட்டேன். தலைநகர் ராய்பூரில் கொஞ்ச நேரம், அருகில் இருந்த ஒரு மாவட்டத்தில் கொஞ்ச நேரம். அப்போது அங்கு இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம், அவர் பார்வையில் சத்தீஸ்கர் நக்ஸலைட்டுகள் பற்றி விளக்கச் சொன்னேன். அப்போதே இதனை வெளியிடலாம் என்றுதான் எழுதினேன். ஆனால் பொறுத்திருந்தேன். நேற்று உச்ச நீதிமன்றம் பினாயக் சென்னுக்கு பிணை கொடுத்தவுடன், இப்போதாவது வெளியிடவேண்டும் என்று பிரசுரிக்கிறேன். இது ஒருபக்கப் பார்வைதான் என்றாலும் சத்தீஸ்கர் பிரச்னையைப் புரிந்துகொள்ள உபயோகமாக இருக்கலாம். அந்த ஐ.ஏ.எஸ் அலுவலர் தன் வாய்மொழியாகச் சொல்லுவதாகக் கீழே உள்ளதை எழுதியிருக்கிறேன்.

***

இந்திய சுதந்தரத்துக்குமுன்னர் இன்றைய சத்தீஸ்கரில் நான்கு ராஜ சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றை ஆண்டவர்கள் பழங்குடிச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. அந்தப் பகுதிகளில் பெரும்பான்மையானவர்கள் காடுகளில் வசிக்கும் பல்வேறு பழங்குடியினத்தவர்களே. இந்த அரசர்கள் பழங்குடி வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை.

பழங்குடியினர் வாழ்க்கைமுறை அருந்ததி ராய் போன்ற சில எழுத்தாளர்களால் ரொமாண்டிக்காகப் பார்க்கப்பட்டு, அப்படியே எழுத்தில் வெளியாகிறது: அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள்; யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காதவர்கள்; நாட்டில் வசிப்போர்தான் மாட்டின் மடியை ஒட்டக் கறந்துவிட்டு கன்றுக்குட்டிக்குச் சிறிதுகூடப் போகாமல் செய்வார்கள், ஆனால் பழங்குடிகள் கன்றுக்குட்டி குடித்து மீதி இருந்தால் மட்டுமே அதைக் கறப்பார்கள்; இத்யாதி, இத்யாதி...

ஆனால் உண்மை நிலை வேறு. பழங்குடிகள் காட்டைப் பெருமளவு அழிக்கிறார்கள். அவர்களது மக்கள்தொகையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் அவர்களால் காடுகளை மட்டுமே நம்பி வாழமுடியாது. அவர்களது விவசாயம் என்பது வெட்டி-எரி வகை விவசாயம். குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் விளைந்துள்ள காட்டுத் தாவரங்களை வெட்டி அவை காய்ந்ததும் நெருப்பிட்டு எரிப்பார்கள். ஒரு மழைக்குப் பிறகு, அந்த மண்ணில் தானிய விதைகளைத் தூவுவார்கள். அது வளர்ந்து, பறவைகளும் விலங்குகளும் அழித்ததுபோக என்ன மிஞ்சியிருக்கிறதோ, அவற்றை எடுத்துச் சாப்பிடுவார்கள். முயற்சி என்று எதுவுமே கிடையாது. சோம்பேறிகள்.

நெல்லிக்காய் மரம் காட்டில் எத்தனையோ ஆண்டுகளாக வளர்ந்திருக்கும். அதன்மீது ஏறி பழங்களைப் பறிப்பதற்குபதில் மரத்தையே வெட்டித் தள்ளிவிடுவார்கள். விழுந்த மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக்கொள்வார்கள். மேலும் கனி வேண்டும் என்றால் அடுத்து எங்கே மரம் உள்ளது என்று தேடிப்போவார்கள்.

முயல் வேட்டை ஆடுவார்கள். கையில் அம்பையும் வில்லையும் எடுத்துக்கொண்டு முயலைத் துரத்திச் செல்வார்கள் என்று நினைக்காதீர்கள். காட்டின் ஒரு பகுதியை எரிப்பார்கள். அதில் சிக்கிச் சாகும் முயல்களை அப்படியே தின்றுவிடுவார்கள்.

இப்படியாக இவர்களால் காடு பெருமளவு அழிக்கவும் படுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாகக் காட்டில் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே; அப்போது அழிபடாத காடு இப்போது மட்டும் திடீரெனெ அழிவது ஏன் என்றால், நாட்டிலிருந்தும் காட்டின் ஓரங்களைக் கைப்பற்ற மக்கள் முயற்சி செய்வது ஒருபக்கம் (இதில் கணிமச் சுரங்கங்கள் அமைக்க விரும்பும் நிறுவனங்களும் அடக்கம்; பழங்குடி அல்லாதோர் காட்டு நிலங்களை விவசாய நிலங்களாக ஆக்குவதும் அடக்கம்); மற்றொரு பக்கம் பழங்குடியினர் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பது.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்தபோது காடுகளைப் பராமரிக்க என்று கொண்டுவந்ததுதான் Indian Forest Act. 19-ம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகிறது. ஆனால் சத்தீஸ்கர் பகுதியின் முன்னாள் சமஸ்தானங்களுக்கு 1950-களிலிருந்துதான் நடைமுறைக்கு வந்தது. 1950-கள், 1960-களில் அப்போது மத்தியப் பிரதேசமாக இருந்த இந்தப் பகுதிகளில் வன அலுவலர்கள் யாரும் சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் 1970-களில் இந்திரா காந்தி காலத்தில் வனச் சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு பழங்குடி இனத்தவர் அந்தக் காலங்களில் அரசுடன் கொள்ளும் தொடர்பு, மூன்று பேரைச் சார்ந்திருந்தது. பட்வாரி எனப்படும் கிராமத் தலைவர், வன அலுவலர், காவலர். இந்த மூவரும் பல இடங்களிலும் பழங்குடியினர்களைச் சுரண்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். கூடவே பழங்குடியினரும் நாட்டைச் சேர்ந்த மக்களும் சந்திக்கும் இடத்தில் எப்போதுமே சுரண்டல் இருக்கும். காரணம், பழங்குடியினர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது, பணம் என்ற கருத்துபற்றித் தெரியாது. சத்தீஸ்கர் பகுதிப் பழங்குடியினர், மஹுவா (இலுப்பைப்பூ), டெண்டு இலை (பீடி சுற்றும் இலை) போன்ற சில காட்டு விளைபொருள்களைச் சேகரித்துக்கொண்டு நகரச் சந்தைக்கு வந்து விற்பார்கள். ஆனால் பதிலாகப் பணம் பெறமாட்டார்கள். பண்டமாற்று முறையில் உப்பு, அரிசி ஆகியவற்றை வாங்கிக்கொண்டு போவார்கள்.

இந்தப் பண்டமாற்று முறையில் பழங்குடியினர் எப்போதுமே ஏமாற்றப்படுவார்கள். ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள அரிசியைக் கொடுத்துவிட்டு, அதற்கு இணையாக 10-15 ரூபாய் பெறுமானமுள்ள இலுப்பைப் பூவையோ, டெண்டு இலையையோ வாங்கிக்கொள்வார்கள். பணம், மதிப்பு ஆகியவை பற்றிய நுணுக்கங்கள் பழங்குடியினருக்குத் தெரியாது.

கூடவே பணம் கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரர்கள், சாராயம் விற்பவர்கள் ஆகியோரும் உள்ளே நுழையும்போது நிலைமை மோசமாகிறது.

நாம் ஏற்கெனவே சொன்னபடி, பட்வாரி, வன அலுவலர், காவலர் ஆகியோரும் பழங்குடிப் பகுதிகளில் நுழைந்து அவர்கள் சேகரித்துவைத்திருக்கும் காட்டுப் பொருள்களைத் தங்கள் உபயோகத்துக்காக எடுத்துச் செல்வதும் உண்டு. பெண்கள்மீதான பாலியல் சுரண்டல்களும் சில இடங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் சத்தீஸ்கர் பகுதியில், தெலுங்கானாவில் உள்ளது போன்ற நில உடைமைச் சுரண்டல்கள் அல்லது ஜார்க்கண்ட், பிகார், உத்தரப் பிரதேச மாதிரியிலான மேல்சாதி சார்ந்த சுரண்டல்கள் என்றெல்லாம் இல்லை. இன்றும் சத்தீஸ்கரில் நிறையவே நிலங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசக் கொள்ளைக்காரர்கள், கிரிமினல்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுத்தபோது அவர்களில் சிலர் சத்தீஸ்கர் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் தங்கள் சாதீய அணுகுமுறை, சுரண்டல்கள் ஆகியவற்றைக் கூடவே கொண்டுவந்தனர். என்றாலும் நக்ஸலைட்டுகள் இருக்கும் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சத்தீஸ்கரில் நக்ஸல் இயக்கம் தோன்றக் காரணமே இல்லை.

அப்படியானால் நக்ஸல் இயக்கம் இங்கு எப்படி ஆரம்பமானது?

1980-களில் தெலுங்கானா பகுதியில் தீவிரமாக இருந்த மக்கள் போர்க் குழுவின் சில தள உறுப்பினர்கள், சத்தீஸ்கர் பகுதியை ஒரு முகாமாக ஆக்க எண்ணி இங்கே நுழைந்தனர். அவர்களது முதல் நோக்கம், சத்தீஸ்கரில் நக்ஸல் புரட்சியை ஏற்படுத்துவதே அல்ல. அதற்காக மக்களைத் தீவிரப்படுத்த முனைந்தால் அது நடந்திருக்காது. ஏனெனில் அதற்கான அடிப்படைகள் இங்கு இல்லை.

அடர்ந்த சத்தீஸ்கர் காடுகளிலிருந்து எளிதாக ஆந்திரத்துக்குள் நுழையலாம். தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் சத்தீஸ்கருக்கு வந்துவிடலாம். இரு மாநிலங்கள் என்பதால் காவலர்களுக்கு இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும். தப்பிப்பது சுலபம். (இங்கு சந்தனக் கடத்தல் வீரப்பனை நினைத்துப்பாருங்கள். மூன்று மாநிலங்கள் சேரும் இடம் என்பதால் சர்வ சாதாரணமாக ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்றதால் வெகு காலத்துக்குத் தப்பிக்க முடிந்தது.)

ஆனாலும் பழங்குடியினரின் மதிப்பைப் பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நக்ஸலைட்டுகளை உள்ளே விடமாட்டார்கள். அது எளிதாக இருந்தது. வன அலுவலர், காவலர் என்று சுரண்டும் ஆசாமிகளிடம் பழங்குடியினர்கள் பயத்துடனேயேதான் இருந்தார்கள். அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு அதுவரை இருந்ததில்லை. ஆனால் இதை நன்கு கவனித்த நக்ஸலைட்டுகள் செய்த முதல் காரியம் சுரண்ட வந்த அலுவலர்களைக் கட்டிவைத்து பழங்குடி மக்கள் பார்க்கும்போதே அவர்களை அடித்து உதைத்தது. அந்த ஆசாமிகளை அந்தப் பகுதிக்கே வரக்கூடாது என்று துரத்தியது.

இதனால் பழங்குடி மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி. நக்ஸலைட்டுகள்மீது மரியாதை கூடியது. அவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது.

அரசு நிர்வாகத்திடமிருந்து எதிர்வினை என்று எதுவுமே இல்லை. மத்தியப் பிரதேசம் மிகப் பெரிய மாநிலம். குறைந்த காவலர்கள். மோசமான நிர்வாகம். வலுவற்ற கட்சித் தலைமை. உட்கட்சிப் பூசல்கள். இதனால் யாரும் காடுகளைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. காடுகளுக்குச் செல்வதையே அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.

எனவே நக்ஸலைட்டுகள் எளிதாக ஆந்திரத்திலிருந்து சத்தீஸ்கர் வந்து அமர்ந்துகொண்டார்கள். பழங்குடியினரில் ஒரே ஒரு குழுவினர்தான் வீரதீரச் செயல்களில் இறங்கக்கூடிய மார்ஷியல் பின்னணி கொண்டவர்கள். மூரியாக்கள் எனப்படும் இவர்களைத் தங்கள் வசம் இழுத்துக்கொள்வதில் மாவோயிஸ்டுகள் வெற்றிபெற்றனர். இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். ஆரம்பகாலத்தில் மாவோயிஸ்டுகளிடம் அதிகமாகத் துப்பாக்கிகள் இருக்கவில்லை. அந்தக் கட்டத்தில் மூரியாக்களின் பாரம்பரிய ஆயுதங்களே உதவின.
பழங்குடியினரிடம் சாதிப் பிரச்னைகள் அதிகமாக இல்லை. ஆனாலும் சில நேரங்களில், உதாரணமாக சாவு போன்ற நிகழ்வுகளின்போது, பிற பகுதிகளுக்குச் சென்று அந்தத் தகவல்களைச் சொல்ல என்று தனியான பழங்குடிப் பிரிவு இருந்தது. இந்தப் பிரிவைச் சேர்ந்த பழங்குடிகள் பிற பழங்குடிகளால் ஒருவிதத்தில் சுரண்டப்பட்டனர். மாவோயிஸ்டுகள் அந்தப் பழக்கத்தை நிறுத்தினார்கள். இதனால் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நக்ஸலைட்டுகளுடன் சேர்ந்துகொண்டனர்.

அரசு ஆங்காங்கே நிறுவியிருந்த சில பள்ளிக்கூடங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் தடுத்துவிட்டனர். மாறாக அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று சத்தீஸ்கர் நக்ஸலைட் தலைவர்களாக இருப்போர் பலரும் படிப்பறிவு இல்லாதவர்களே.
1990-களின் இறுதியில் சத்தீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதற்கான சட்டபூர்வமான வேலைகள் செய்யப்பட்டு, 2000-ல் தனி மாநிலம் உருவானது.

2003-ல், ஆந்திராவில் நக்ஸலைட்டுகள் ஒரு பெரிய தவறைச் செய்தனர். சந்திரபாபு நாயுடு சென்ற வண்டியைத் தகர்க்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்தக் கட்டம் முதற்கொண்டு ஆந்திரக் காவல்துறை ஆவேசத்துடன் நக்ஸலைட்டுகளைத் தாக்க ஆரம்பித்தது. அடுத்த சில வருடங்களில் ஆந்திர நக்ஸலைட்டுகள் அனைவரும் ஒட்டியுள்ள சத்தீஸ்கருக்குள் நுழைந்துவிட்டனர். இன்று சத்தீஸ்கர் நக்ஸலைட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே ஆந்திராக்காரர்களே.

நக்ஸலைட்டுகளால் பழங்குடியினர் அனைவருக்கும் ஆதாயம் என்றில்லை. முக்கியமான சில பழங்குடித் தலைவர்கள் வாய்ப்பை இழக்க ஆரம்பித்தனர். உதாரணமாக, பழங்குடிப் பூசாரிகள். நக்ஸலைட்டுகள் நாத்திகத்தைப் புகுத்தினர். பூசாரிகள் கேட்கும் கோழியைக் கொடுக்காதே என்றனர். சில பூசாரிகளின் குடுமியை அறுத்தனர். இதனால் நக்ஸலைட்டுகள்மீது ஒருசில பழங்குடியினருக்காவது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் நக்ஸலைட்டுகள் சில பழங்குடியினரைத் தண்டிக்க ஆரம்பித்தனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நிச்சயமாக தங்கள் கைகளில் வலுவாக அதிகாரம் இருப்பதும் நக்ஸலைட்டுகளின் இந்தச் செயலுக்குக் காரணம். இந்தப் பழங்குடிகள் அனைவரும் சாலைகளில் வந்து அமர்ந்துகொண்டனர். இதனால் நிர்வாகம் தலையிடவேண்டியிருந்தது.

சில பழங்குடியினரிடையே இருந்த மாவோயிஸ்டுகள்மீதான எதிர்ப்பை அரசு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து, சல்வா ஜுதும் என்று பெயரிடப்பட்ட அமைப்பைத் தோற்றுவிக்க உதவியது. இவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டு, இவர்கள் சிறப்புக் காவலர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது 2005-ல் ஆரம்பித்தது.

தொடர்ந்து நக்ஸலைட்டுகளுக்கும் சல்வா ஜுதும் குழுவினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் நக்ஸலைட்டுகள் 40-50 பேர் கொண்ட சல்வா ஜுதும் குழுவை வெட்டிக் கொன்றனர். இந்த அளவுக்கு வன்முறை சத்தீஸ்கரில் அதற்குமுன் நடந்ததில்லை.

இப்போது இந்த இரு குழுக்களுக்கு இடையேயான வன்முறை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சில இடைப்பட்டவர்களால் ஒருவித சமாதானம் ஏற்பட்டுள்ளது. சல்வா ஜுதுமில் பங்கெடுத்த பழங்குடிகள் காட்டுக்குத் திரும்பி வந்தால், அவர்களைத் தாக்கமாட்டோம் என்று நக்ஸலைட்டுகள் உறுதி அளித்துள்ளனர்.

இப்போதைக்கு நக்ஸலைட்டுகள் குறி காவல்துறைமீதும் பாரா-மிலிட்டரி அமைப்புகள்மீதும்தான். சத்தீஸ்கர் காவல்துறை வலுவானதல்ல. கடுமையாகச் சண்டைபோடும் குணம், பயிற்சி என்று எதுவும் அவர்களிடம் இல்லை. பாரா-மிலிட்டரி அமைப்புகளும் அப்படித்தான் உள்ளன. இதனால் நக்ஸலைட்டுகள் எளிதில் தப்பிவிடுவதோடு, கடுமையான சேதத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

பழங்குடிகள் இன்றும் சுரண்டப்படுகிறார்கள். ஆனால் யாரால் என்று நினைக்கிறீர்கள்? நக்ஸலைட்டுகளால்! உதாரணத்துக்கு டெண்டு இலை வியாபாரத்தை எடுத்துக்கொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் டெண்டு இலைகளை விற்க ஒரு சந்தை கூடும். இப்போது அந்தச் சந்தையை மாவோயிஸ்டுகள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். டெண்டு இலைக்கான விலையை உயர்த்தித்தருகிறோம் என்று வியாபாரிகளின் இடைத்தரகர்களுடன் ஆந்திராவில் பேரம் நடக்கிறது. இதன் பலன் சத்தீஸ்கர் பழங்குடியினருக்கு முழுமையாகச் செல்வதில்லை. சுளையாக 300 கோடி ரூபாய் ஆண்டுக்கு மாவோயிஸ்டுகளுக்குக் கப்பமாகப் போய்விடுகிறது.

சத்தீஸ்கரின் சுமார் 2 கோடி மக்கள்தொகையில் 1.25 கோடி பேர் பழங்குடியினர். 1990-கள் வரை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு என்று பெரிதாக எதுவும் அரசிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் 2000-க்குப் பிறகு, மத்திய அரசிடமிருந்து அதிகமான அளவு நிதி வருவது ஆரம்பித்தது. இதன் விளைவுகள் மக்களை நேரடியாகப் போய்ச் சேருகின்றன. நக்ஸலைட்டுகள்தான் இன்று மிகப் பெரிய பிரச்னையே. பல இடங்களில் நக்ஸலைட்டுகள் பள்ளிக் கட்டடங்களை இடிக்கிறார்கள். கேட்டால், அங்குதான் காவலர்கள் முகாம் அமைப்பார்கள் என்று சொல்லி பழங்குடி மக்களைக் குழப்பிவைத்துள்ளார்கள். பழங்குடிப் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில்தான் தங்கள் வாய்ப்புகள் அடங்கியுள்ளன என்று நக்ஸலைட்டுகள் நினைக்கிறார்கள். தங்கள் ஆட்சி வரும்வரை மக்கள் பொறுத்திருக்கவேண்டும் என்பதே நக்ஸலைட்டுகள் நோக்கம்.

பினாயக் சென் போன்றோர் நல்ல பிள்ளைகளாக உலவிவருகின்றனர். உண்மையில் வளர்ச்சிக்கு எதிராக இருப்பது இவர்கள்தான். அரசின் நலத்திட்டங்கள் பலவும் மக்களுக்குப் போய்ச் சேரவிடாமல் தடுப்பது இவர்கள்தான். பினாயக் சென் கட்டாயமாக நக்ஸலைட்டுகளுடன் உறவு வைத்துள்ளார். அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். அவர்களுக்கு ஆலோசனைகள் தருகிறார். அதற்குமேலும் பலவற்றைச் செய்யக்கூடும். ஆனால் அவருக்கு எதிராக எதையும் செய்யமுடியாத அளவுக்கு நாடு முழுவதிலும் அவருக்கு அறிவுஜீவிகளின் ஆதரவு இருக்கிறது.

ராணுவம் ஒன்றுதான் நக்ஸலைட்டுகளை ஒடுக்க ஒரே வழி. ஆனால் ராணுவத்தை இந்தப் பகுதிக்கு அனுப்பவிடாமல் நாட்டின் இடதுசாரி ‘அறிவுஜீவிகள்’ தங்களது பிரசாரத்தை முடுக்கிவிடுகின்றனர். நக்ஸலைட்டுகளை முற்றிலுமாக அழித்து, அவர்களுக்கு ஆதரவு தரும் அறிவுஜீவிகளை அடக்கினால் ஒழிய, சத்தீஸ்கர் பழங்குடிகளின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வாய்ப்பே இல்லை.

21 comments:

  1. பத்ரி,

    பதிவே ஒரு தரப்பு என்று ஒத்துக் கொண்டுவிட்டதால் அந்த அதிகாரி பார்வையில் கீழ்கண்டவையும் சாத்தியமே:

    1) இராணுவம் காட்டில் பழங்குடியினரை சொந்த சகோதர/சகோதரிகளாகத்தான் நினைக்கிறது. கற்பழிப்பு, மற்றும் ஆள் காணாமல் போவதெல்லாம் அருந்ததி ராயின் ரொமாண்டிஸ கதைகள்.

    2) வீரப்பன் விவகாரத்தில் நிச்சயமாக வீரப்பன் மட்டும்தான் அடிவாங்கினான், மற்றவையெல்லாம் இடது சாரி ‘அறிவுஜீவிகள்’ கதை.

    கொஞ்சம் இந்தியாவைவிட்டு வெளியே வந்தால்...
    1) இலங்கையில் இராணுவம் ஒன்றும் தெரியாத பாப்பா.
    2) வியட்நாம், இராக்கில் அமெரிக்க இராணுவம் ஜனநாயகத்தை காந்தீய வழியில் பேணியது (இப்படி சொல்பவர்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன் :)).

    நன்றி.

    ReplyDelete
  2. பத்ரி,

    நல்ல கட்டுரை. ஆனால், அறிவீனஜீவிகளை மறுத்து நீங்கள் எழுதி இருப்பதால் தனிமனிதத் தாக்குதல்கள்தான் உங்களுக்குப் பதிலாக இருக்கும்.

    ஒரு சந்தேகம்: இந்திய வனப்பகுதிகளில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கத்தில் உள்ள வனப்பகுதிகள்தான் குறைவாக அழிந்துள்ளது என்று தி ஹிந்துவிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செய்தித்தாளிலோ படித்த ஞாபகம்.

    நீங்கள் சொல்வது வேறுமாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  3. பழங்குடி மக்களின் மீதான வாழ்வு முறை பற்றிய அந்த ஆட்சித்துறை அலுவலரின் கூற்று முழுக்கு முட்டாள்தனமாக இருக்கிறது.

    அவரது கூற்று-முயல் இறைச்சிக்காக காட்டின் ஒரு பகுதியை எரிப்பது,நெல்லிக்காய்களுக்கு மரத்தை வெட்டுவது போன்ற செயல்கள்-உண்மையாக இருந்தால் இப்போது மத்தியப் பிரதேசத்தில் காடே இருந்திருக்கக் கூடாது.

    சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளோடு முன்னர் ஆங்கிலேயர் ஆண்ட 300 ஆண்டுகளிலும் அவர்கள் இம்முறையில்தான் வாழ்ந்திருப்பார்கள்.

    எப்படி அந்தக் கருத்து ஒரு பாசிபிலிட்டி அளவுக்காவது ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை !

    ReplyDelete
  4. முட்டைக்காக வாத்தை அறுக்கும் முட்டாள்கள் பழங்குடி மக்கள் என்கிற அரசுஅதிகாரியின் கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளதோ அவ்வளவு உண்மை தான் அருந்ததி நாய் போன்ற அறிவுசீவிகளின் ரொமாண்டிசிச பழங்குடி வாழ்விலும் இருக்கிறது.

    ஐ.ஏ.எஸ் படிப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் இரண்டு ஆண்குறி இருப்பதில்லை. ஆனால் அவர்கள் அப்படி தான் நடந்துகொள்கிறார்கள்.

    பினாயக் சென் போன்ற நக்சல் கு.நக்கிகள் விஷப்பாம்புகள். அவன் தலையை லாரி டயரில் நசுக்கி அதை வீடியோ எடுத்து யூடியூபில் போட்டாலும் தகும்.

    ReplyDelete
  5. அன்புள்ள பத்ரி, மிகத் தெளிவாக இவை உங்கள் கருத்துகள் இல்லை என்றும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தெரிவித்தது என்று நீங்கள் எழுதியிருந்தாலும் இதெல்லாம் நீங்கள் சொன்னதாக நினைத்து ஒரு பின்னூட்டம் - படித்து சிரிப்புத்தான் வந்தது.

    பினாயக் சென்னை எதிர்ப்பவர்களுக்கு ஒரே குறிக்கோள் - அவரை மாவோ-வாதி என்று முத்திரை குத்தி தூக்கில் போட வேண்டும்.

    இதை reverse engineer செய்து பழங்குடியினர் விலங்குகள் போன்றவர்கள் என்று ஆரம்பிக்கிறார்கள்.

    உச்சநீதி மன்றமாவது நியாயத்தின் பக்கம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது

    ReplyDelete
  6. ஜெயசேகர்Sun Apr 17, 12:38:00 PM GMT+5:30

    அன்புள்ள இரா.முருகன்,
    உங்களின் விசுவாசம் புல்லரிக்கை வைக்கிறது.
    இப்படி ஒரு திறமைசாலியான அடிமைகள் பத்ரிக்கு துணையாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது

    ReplyDelete
  7. அன்பார்ந்த இரா.முருகன்,

    உச்ச நீதிமன்றம் நியாயத்தின் பக்கம் நிற்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், மீடியாவின் பக்கம் நிற்கிறது என்பது மட்டும் உண்மை!

    ReplyDelete
  8. //
    பினாயக் சென்னை எதிர்ப்பவர்களுக்கு ஒரே குறிக்கோள் - அவரை மாவோ-வாதி என்று முத்திரை குத்தி தூக்கில் போட வேண்டும்.
    //

    அவரே தன்னை மாவோயிஸ்டு அடிவருடி என்று ஒப்புக்கொள்ளும் போது வேலை மெனக்கெட்டு அதுக்கு ஒரு முத்திரை தயார் செய்து என்னத்துக்கு அதை அவர் மேல் குத்த வேண்டும். குத்தி அவரை தூக்கில் போடவேண்டும்.

    நம்மாட்கள் நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாத அடிவருடியைக் கூட இன்னும் தூக்கில் போட வக்கில்லை. இந்தாளை அதற்குளெல்லாம் போட மாட்டார்கள்.

    ReplyDelete
  9. ஒன்று மட்டும் தெரிகிறது. மெனக்கெட்டு ஒருவர் தண்ணியை குடிச்சு பதிவு எழுதுறார். தண்ணிய போட்டவர்கள் எல்லாம் போற போக்குல “இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”னு ஜாலியா சொல்றாங்கோ! சூப்பர்மா!!

    ReplyDelete
  10. Where is the need for such an article which is a bunch of white lies and falsehoods.Salwa Judam was promoted and supported by Govt. of Chattisgarh.It could not answer the questions raised by the SC on this. State is a bigger problem in Chattisgarh than naxalites. Sen exposed the truth behind Salwa Judam and also the real status of adivasis in that state.
    'சில பழங்குடியினரிடையே இருந்த மாவோயிஸ்டுகள்மீதான எதிர்ப்பை அரசு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து, சல்வா ஜுதும் என்று பெயரிடப்பட்ட அமைப்பைத் தோற்றுவிக்க உதவியது. இவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டு, இவர்கள் சிறப்புக் காவலர்கள் என்று அழைக்கப்பட்டனர். இது 2005-ல் ஆரம்பித்தது.'
    The adivasis were also the victims of this Salwa Judum.In fact the state supported militas harassed them, killed them and indulged in violence.In the name of fighting against Naxals
    state unleashed terrorism against its own citizens.Such a state is now trying to cover up its misdeeds by submitting 'beautifully vague' affidavits before SC.
    The writer is trying to bluff beyond limits.
    Salwa Judum is against the constitution of India and state sponsored killings cannot be
    justified in its name. The harsh fact is state is not saviour of people there.So naxalites step in and use the oppression by state and non-state actors for promoting their cause.
    The writers ignorance is obvious. Slash-burn agriculture has its benefits too. The myths about adivasis are reproduced in the article
    to cover up the failure of the state.

    ReplyDelete
  11. Badri,

    you may already know about this.

    http://www.thedominoproject.com

    The Domino Project is a new way to think about publishing.

    ReplyDelete
  12. Dear badsi,
    i feel really pity on you. this is really called Fascism's. you should have looked in to ground reality. the maternal mortality rate and infant mortality rate has beed reduced after binayak sen's dedicated involvement. the naxals are fighting for a noble cause, and not like our corrupted politicians .think they are also our country people. regarding veerapan, he is god father for tribals.speak with evidence.

    ReplyDelete
  13. உங்களது வாதம் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.... 2 அல்லது 3 ஆண்டுகள் கடுமையாக படித்துவிட்டு, அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் ஐஏஎஸ் அதிகாரியால் மட்டுமே இப்படி பேச முடியும். மக்களது நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்களது கஷ்டம் புரியும்... பழைய பழமொழிதான்... இருந்தாலும் கூற வேண்டும் என தோன்றுகிறது.... தீவிரவாதிகள் தானே உருவாகவில்லை. உருவாக்கப்படுகின்றனர்.... ஏன் தமிழகத்தில் மாவோயிட்டுகள் உருவாகவில்லை என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இங்கே மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறிப்பாக உணவு கிடைக்கிறது... அதன் விலை அதிகமானாலும்... பெரும்பாலான மக்கள் வறுமையில் சிக்கித் தவிக்கவில்லை. எங்கு மக்கள் வறுமையை நோக்கி தள்ளப்படுகின்றனரோ அங்கே தீவிரவாதம் தலை தூக்குவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..... வாழும் உரிமை மறுக்கப்படும் இடத்தில் ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில்லை....

    ReplyDelete
  14. Just because naxals are fighting for a "noble cause", should it get support from educated professionals ?

    ReplyDelete
  15. Sir,
    Please post a summary of Arundhati's view point also

    ReplyDelete
  16. "பழங்குடிகள் காட்டைப் பெருமளவு அழிக்கிறார்கள். அவர்களது மக்கள்தொகையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பறவைகளும் விலங்குகளும் அழித்ததுபோக என்ன மிஞ்சியிருக்கிறதோ, அவற்றை எடுத்துச் சாப்பிடுவார்கள். முயற்சி என்று எதுவுமே கிடையாது. சோம்பேறிகள்."

    Badri You are exposed buddy in your own words.

    Let them be lazy
    Let them do whatever they do with their forests.

    Who the hell are you or blood thirsty MNCs who wants to evacuate the aborigines from their own land. We all know how much Indian govt employees or politicians who care about the welfare of indian citizens

    ReplyDelete
  17. மற்றவர்களை போல் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து அரசியல் பேசுபவன் அல்ல. இந்த பகுதிகளில் வேலை செய்தவன் என்ற முறையில் எனக்கு, இந்த பிரச்னையில் நேரடி அனுபவம் உள்ளது...

    அரசு அதிகாரி சொன்னதில் 75% உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாது...

    (1) பழங்குடியினர்கள் சோம்பேறிகள், காட்டை அழிப்பதில் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
    (2) பத்திரிக்கையாளர்கள் just ஒரு நாள் அல்லது இரண்டு நாள் காட்டில் தங்கி விட்டு வந்து... பழங்குடியனருக்கு ஆதரவாக எழுதுவது என்பது... வெறும் ஏட்டு சுரைக்காய்...
    (3) நக்சல்கள் உண்மையிலேயே பழங்குடியினருக்கு உதவ வேண்டும் என்றால் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு இணங்குவார்கள்.. ஆனால் நக்சல்கள் நோக்கம் வேறு... எனவே இவர்களால் பழங்குடியினருக்கு ஆபத்துதான்..
    (4) பழங்குடியினர்க்கு எதிர்ப்பாகவோ அல்லது நக்சல்களை எதிர்த்து யாராவது பேசினால்... அவர்களை நம் சமூகம் அறிவுஜீவிகளாக ஏற்றுகொள்ளும். இது நிதர்சனம்...

    ReplyDelete
  18. காட்டுப் பகுதிகளை பழங்குடிகள் அழிக்கிறார்கள் என்றால். அவர்களை வெளியேற்றிவிட்டு இந்திய அரசாங்கம் மட்டும் என்ன காட்டைப் பாதுகாக்கவா போகிறது.காட்டுப் பகுதிகளில் உள்ள அளவில்லாத கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பேனிகளிடம்தான் கொடுக்கப்போகிறது.அவர்கள் மட்டும் காட்டைப் பாதுக்காக்கவா போகிறார்கள். ஏற்கனவே போஸ்கோ, ஸ்டெர்லைட் போன்ற எத்தனையோ கருமம் புடிச்ச கம்பேனிகளின் லெட்சனம் பார்த்து மக்களே கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதுல வக்காலத்து வாங்கிகிட்டு நீங்க வேறே ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னார் , அடுப்பாங்கரையில் உள்ளவர் சொன்னார் என்று.கார்பரேட் கம்பேனிகளுக்கு நீங்கள் வேற ஒத்து ஊதுகிறீர்கள்.

    ReplyDelete
  19. அன்புள்ள பத்ரி,

    அந்த ஐ ஏ எஸ் அதிகாரி சொல்வதில் நிறைய இடங்கள் இடிக்கின்றன. பல நூறு வருஷங்களாக சத்தீஸ்கர் பழங்குடிகள் காட்டை எரித்து அழித்தும் காடுகள் நிற்கின்றன; ஆனால் இப்போது காடுகள் அழிகின்றன என்றால் புதிதாக என்ன மாற்றம் என்றுதானே பார்க்க வேண்டும்? பழங்குடிகளின் மக்கள் தொகை கடந்த ஐம்பது வருஷமாகத்தான் அதிகரிக்கிறது என்றால் அதற்கு முன் ஒரே சீராக இருந்தது என்கிறாரா? எப்படி சார்? நீங்கள் இந்த மாதிரி கேள்விகளை அவரிடம் கேட்கவில்லையா?

    பினாயக் சென்னைப் பற்றி எனக்கு ஒரே ஒரு கேள்விதான். அவருக்கு எதிரான தடயம் என்பது எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிகை, சில புத்தகங்கள், ஜெயில் அதிகாரிகள் அனுமதித்த சில கடிதங்கள், நியூஸ்பேப்பர் க்ளிப்பிங்க்ஸ், என்று தெரிகிறது. பினாயக் சென் தேசத்துரோகி என்பதற்கு இவை போதுமான ஆதாரம்தானா? சென் என்ன அவ்வளவு கில்லாடியா, அவர் இத்தனை சதி செய்தும் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் இருப்பதற்கு? இதைப் பற்றி அந்த அதிகாரி ஏதாவது சொன்னாரா?

    சென்னுக்கு Chhattisgarh Special Public Security Act மற்றும் Unlawful Activities (Prevention) Act இரண்டு சட்டங்களின் கீழ் தண்டனை கிடைத்திருக்கிறது. இவை இரண்டுமே வன்முறை இல்லாத பட்சத்திலும் கூட்டம் கூட்டுவது, பேசுவது, எழுதுவது ஆகியவற்றை கட்டுப்படுத்தும் draconian சட்டங்கள். முந்தைய சட்டத்தில் உங்கள் நடவடிக்கை அதிகாரிகளுக்கு பாதகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் அதுவே குற்றம் என்கிறது. எனக்கு சட்டம் தெரியாது, ஆனால் நீங்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கூச்சல் போட்டால் கூட அது குற்றமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இப்படிப்பட்ட சட்டங்கள்தான் நக்சலைட்டுகளின் கையை மேலும் வலுப்படுத்துகிறது!

    RV
    siliconshelf.wordpress.com

    ReplyDelete
  20. ஒரு அரசு அதிகாரியின் கருத்து எப்படியிருக்கும் என்ற புரிதலுக்கு பதிவு உதவுகிறது; இதற்கு மாற்றுத்தரப்பின் பார்வையை அறிய ஏதாவது முயன்றீர்களா?

    ReplyDelete
  21. மாற்றுத் தரப்பின் பார்வையை அறிவது அவ்வளவு கடினம் அல்ல. மத்தியப் பிரதெசத்தின் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் கிஸான் - ஆதிவாசி சங்கடன் என்ற அமைப்பு பழங்குடி மக்களின் பிரச்சினைகளைக் கையிலெடுத்துப் போராடுகிறது. இவர்களுக்கு பழங்குடி மக்களின் வாழ்முறை மற்றும் பிரச்சினைகள் பற்றிய எல்லா விவரங்களும் தெரியும். இது போன்ற அமைப்புகள் சத்தீஸ்கரிலும் நிச்சயம் இருக்கும். மாற்றுத் தரப்பு மாவோயிஸ்ட்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் எதுவும் கிடையாது.

    ReplyDelete