Wednesday, April 27, 2011

சத்ய சாயி பாபா

ஆங்கிலப் பத்திரிகைகள் ‘சத்ய சாயி பாபா மறைந்தார்’ என்று எழுத, தமிழ்ப் பத்திரிகைகள், ‘முக்தி அடைந்தார், சித்தி பெற்றார்’ என்றன. ஆந்திர மாநில அமைச்சர்கள் கண்ணில் நீருடன் பேசினர். மன்மோகன் சிங்(கே) நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

40,000 கோடி ரூபாய் என்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு பற்றித் தகவல்கள் வெளிவந்துள்ளன. சொத்தைப் பராமரிக்கப்போவது யார் என்ற கேள்வி ஒருபக்கம். ஆனால் அடுத்த ஆன்மிக வாரிசு யார் என்று இதுவரை கேள்விகளும் இல்லை; எனவே பதில்களும் இல்லை. எங்கோ கர்நாடக கிராமத்தில் அடுத்த சாயி பாபா பிறந்து வருவார் என்பதுடன் இப்போதைக்கு முற்றுப்புள்ளி.

சத்ய சாயி பாபா பெரும்பாலும் பொய், பித்தலாட்டம் போன்றவைமூலம் தன் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினார். அற்புதங்கள் - அதாவது விபூதி, குங்குமத்தைக் காற்றிலிருந்து வரவழைப்பது, வயிற்றிலிருந்து லிங்கம், மோதிரம் போன்ற சிறு சிறு பொருள்களை வரவழைப்பது, தங்கத்தால் ஆன சங்கிலி போன்றவற்றைப் பக்தர்களுக்குத் தருவது - இவைதான் எளிய மக்களை அவரிடம் ஈர்த்தன. எளிய மக்கள் என்றால் அதில் காவஸ்கர், தெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள்முதல் பல சினிமா, அரசியல் பிரபலங்களும் அடக்கம்!

அரசியல்வாதிகளுக்கு சத்ய சாயி பாபாவிடம் வேறு பல ஆதாயங்களும் இருந்திருக்கலாம்.

கடந்த பல பத்தாண்டுகளில் இந்து மதப் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் உருவாக்கிய வெகு சிலரில் சத்ய சாயி பாபாவும் ஒருவர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உருவாக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா, ‘செக்ஸ் சாமியார்’ என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாத ரஜனீஷ், Transcendental Meditation என்பதைப் பிரபலமாக்கிய மகேஷ் யோகி ஆகியோர் வட்டத்தில் வருபவர் சத்ய சாயி பாபா. முதல் மூவர் வேதாந்தம்/கிருஷ்ண பக்தி, தத்துவம்/தாந்திரிகம், வேதம்/தியானம் ஆகியவற்றை முன்வைக்க, சத்ய சாயி பாபா அற்புதங்கள்/கூட்டு வழிபாடு ஆகியவற்றை முன்வைத்தார். இந்த நால்வருமே உருவாக்கிய அகில உலகத் தொண்டர் குழாம் இவர்களது காலத்துக்குப்பின் குலைந்துள்ளது, குலையப்போவது புரிந்துகொள்ளக்கூடியதே. இவர்கள் யாருமே வலுவான அடுத்த நிலைத் தலைவர்களை உருவாக்கவில்லை. சொத்துகளை மட்டும் எக்கச்சக்கமாகச் சேர்த்தார்கள்.

சத்ய சாயி பாபா அறக்கட்டளைமூலம் பல நல்ல காரியங்கள் (கல்வி நிலையங்கள், சென்னைக்குக் குடிநீர், சூப்பர் ஸ்பெசியாலிடி மருத்துவமனையில் நடக்கும் இலவச சிகிச்சைகள்) நிகழ்ந்தேறியுள்ளன என்றாலும் அடிப்படையில் தனியான ‘சாமியார்’ ஒருவர் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேகரிக்கும் நிலை நாட்டுக்கு நல்லதல்ல, பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. இந்தியாவில் பொதுவாக சாமியார்கள் புனிதப் பசுக்களாகவே கருதப்படுகிறார்கள். அதிலும் அரசியல் லாகவம் தெரிந்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்த நிலை மாறவேண்டுமானால் ஆன்மிக/மத அறக்கட்டளைகள் அனைத்தும் வலுவான கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்குக்கீழ் கொண்டுவரப்படவேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் வரி வசூலிக்கப்படவேண்டும். கருப்புப் பணம் புரளாமல் இருக்க வகை செய்யப்படவேண்டும்., அந்நிய நாடுகளில் இந்த ஆசாமிகள் சொத்துகளைச் சேர்ப்பது கண்காணிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்வது, மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக ஆகாது. பணம் கொட்டும் வழியை ஓர் அரசு கவனமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டால் அதனால் நாட்டுக்குப் பெரும் கேடுதான் நிகழும்.

உதாரணத்துக்கு, பொதுமக்கள் கொடுத்துள்ள பல கோடி ரூபாய் பணம் இப்போது சத்ய சாயி அறக்கட்டளையை நிர்வகிக்கப்போகும் யாரோ சிலர் கையில். அந்தப் பணம் என்ன ஆகுமோ... மக்களுக்குப் பயன்படப்போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்குமுன்பாவது சத்ய சாயி பாபா என்ற மனிதரால் தமக்கு ஏதோவிதத்தில் நிம்மதி என்று எண்ணிக்கொண்டு மக்கள் இந்தப் பணத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்கினர். இப்போது அதுவும் கிடையாது.

எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் இதனைக் கொண்டுவரக்கூடிய மனவலு இந்திய அரசியல்வாதிகளிடம் இப்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளிலாவது இது உறுதியாக ஏற்பட்டால் நல்லது.

57 comments:

  1. தெரஸாவைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? அவர் இறந்தபோது எதாவது எழுதியிருப்பீர்கள் எனத் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை என்பதால் கேட்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. பிரசன்னா,

    அவர் தான் பதிவு எழுதவில்லை. நானும் தேடிப்பார்த்தேன். நீங்கள் இந்த தளத்தில் தெரசாவைப் பற்றி ஒரு கமெண்டும் போடவில்லையே! ஏன் சாய்பாபாவுக்கு மட்டும் இப்படி ஒரு கமெண்ட்?

    ReplyDelete
  3. தெரஸா ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீ. அவர் அற்புதங்கள் ஏதும் செய்யவில்லை என்றாலும் அப்படியெல்லாம் சொன்னால்தான் அவரை ‘செயிண்ட் தெரஸா’ என்று ஆக்குவார்கள் என்பதால் கத்தோலிக்கர்கள் புருடா விடுகின்றனர். அவரும் ஃபாஸ்ட் டிராக் வகையில் வாடிகனால் புனிதர் ஆக்கப்பட்டுவிடுவார்.

    மொத்தத்தில் சாயி பாபா அற்புதங்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ உயிர்த்தெழுதல் கூட்டம் பிளஸ் பிற அற்புதங்களானாலும் சரி, இஸ்லாமிய அற்புதங்களானாலும் சரி, எல்லாமே புனைசுருட்டு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

    தெரஸா, தெருத்தெருவாகப் போய் நான் சிலுவை வரவழைக்கிறேன் என்று மோடி மஸ்தான் வித்தை காட்டவில்லை. தொழுநோயாளிகளுக்கும் பிற ஏழைகளுக்கும் உதவி செய்தார். அவர்களை மதம் மாற்றத்தான் அந்த உதவிகளை அவர் செய்தார். அதனாலேயே அந்த உதவிகள் ஒரு படி கீழானவைதான் - என் கருத்தில். ஆனாலும் உதவிகளைச் செய்தார் என்பதை மறுக்கமுடியாது. அவரும் நிறையப் பணம் சேர்த்தார். அதில் எத்தனை வாடிகனுக்குப் போனது என்பதெல்லாம் தெரியாது. அவர் உயிர்க்கொலைகள் புரிந்த சர்வாதிகாரி ஒருவருக்கு ஆதரவு தெரிவித்தார்; தொண்டு புரிகிறேன் என்ற போர்வையில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அதுபற்றி முழுமையான தகவல்கள் கிடையாது.

    மொத்தத்தில் நான் ஆன்மிக ஏமாற்றுவாதிகள் அனைவரையுமே எதிர்க்கிறேன்.

    ReplyDelete
  4. நாகராஜன், தெரஸாவைப் பற்றி எழுதாதபோது என்ன கமெண்ட் போட? எழுதியிருந்தால் அதை வரவேற்று கமெண்ட் போட்டிருப்பேன். :)) ஹிந்து சாமியார் செத்துத்தொலைக்கும்போதுதான் ஆழமான சிந்தனைகள், அகலமான கட்டுரைகள், தீர்க்கமான பார்வைகள் முன்னெடுக்கின்றன, எப்படி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்ற பேச்சு எழும்போது ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையுமே தவறு என்ற கட்டுரைகள் எழுகின்றனவோ அப்படி! சாய்பாபா செத்தா என்ன இப்போ என்று இருந்த எனக்கு, ஏன் இந்த சாய்பா செத்துத் தொலைந்தார் என்றாகிவிட்டது!

    ReplyDelete
  5. பத்ரி, தனிமனித ஏமாற்று Vs ஸ்பான்சர் ஏமாற்று என்று யோசித்தால், நிச்சயம் இரண்டுமே மோசடிதான் என்றாலும், சாய்பாபா தோற்றுப் போகிறார் என்பதும் உண்மையே!

    ReplyDelete
  6. யூசுவல் இந்துத்துவர்களின் பிரச்னை... ஒன்றைப் பற்றி எழுதினால் நீ அதைப்பற்றி ஏன் எழுதவில்லை, இதைப்பற்றி ஏன் எழுதவில்லை என்பது. என்ன இப்போ, உங்களுக்கு வேண்டிய பட்டியலைக் கொடுங்கள், எல்லாவற்றையும் எழுதிவிட்டால் போகிறது!

    ReplyDelete
  7. இன்னொன்று... ஒருபக்கம் ஆன்மிக ஏமாற்றுகளின்மீதான என் கருத்தை முன்வைப்பதோடு, என் முதன்மை நோக்கம் ஆன்மிக டிரஸ்டுகளின் கையில் சேரும் பணத்தைக் கட்டுப்படுத்துவதுதான். சாமியார்கள் ஏமாற்றக்கூடாது என்று நான் சொல்லவே இல்லை. பல சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் சொல்கிறேன். ஏமாற்றுவது அவரவர் உரிமை. ஏமாந்துபோவது பெரும்பாலான மக்களின் கடமை.

    என் முதன்மை நோக்கம், இந்த டிரஸ்டுகளுக்கு வரும் பணத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அப்படிப் பார்க்கும்போது பெருமளவு கட்டுப்படுத்தவேண்டியது சர்ச் பணத்தையும், எவாஞ்செலிகல் பணத்தையும், முஸ்லிம் அமைப்புகளின் பணத்தையும். மொத்தத்தில் பணக் கட்டுப்பாடு என்று வரும்போது செகுலரிசம் மிக மிக அவசியம்!

    ReplyDelete
  8. i take this opportunity to pray to RIP for saibaba as well as 6 inmates who were killed in his bedroom in 1993

    http://twitter.com/#!/ksnagarajan/status/62108707592478720

    ReplyDelete
  9. Since you asked for a list, how's the cricket boards money spent? It seems to be a cooperative, not a private thing, not a public govt. thing, but we call it Indian Team..

    ReplyDelete
  10. நன்றி! முக்கியமாக ஹரன் பிரசன்னாவுக்கும்!
    பணம் பெரிய அளவில் எங்கு புழங்கினாலுமே அங்கு அரசின் சரியான கண்காணிப்பும், கட்டுப்பாடும் தேவை. அரசில் உள்ளவர்கள் கொள்ளை அடிக்க இதை பயன் படுத்துமாறு அமைத்து விடக் கூடாது. நன்றி! தமிழ் நாட்டின் ஹிந்து அறநிலையத்துறை பல இடங்களில் அவ்வாறு தான் செயல் படுகிறது. எந்த கோவில்களுக்காக இந்த துறையோ அந்த கோவில்களும் பூஜாரிகளும் கஷ்டத்தில் உள்ளார்கள்.

    ReplyDelete
  11. சத்ய சாயி பாபா பெரும்பாலும் பொய், பித்தலாட்டம் போன்றவைமூலம் தன் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினார் - இது பெரிய ஸ்டேட்மென்டாக படுகிறது.

    சாம்ராஜ்ஜியத்தை கட்டிய எல்லோர் மீதும் ஏதோ ஒரு வகையில் இந்த அவதூறை சொல்லிவிடலாம்.

    சட்டங்கள் மட்டும் கொண்டே நல்லது செய்து முடியும், என்கிற பொதுப்புத்தியிலிருந்து வருகிற மேற்குல வாசகம் இது.

    சின்ன ஆன்மிக வாசனையும், அறிவும் கொண்ட எவர் ஒருவராலும் இது பொய் பித்தலாட்டம் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    ஆச்சரியமாயிருக்கிறது பத்ரி.. உங்களின் கமெண்ட் பார்த்து..

    மற்றபடி பணம் ஒழுங்கு படுத்துதலை நான் ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன். மணி, மும்பை

    ReplyDelete
  12. Badri-TotallyWell Said-I agree withyou


    Suppamani

    ReplyDelete
  13. சாய்பாபாலாம் ஓல்ட் நியூஸ் பத்ரி ... விடுங்க .... அடுத்த கனிமொழி ஜால்ரா கட்டுரை எப்போ???

    ReplyDelete
  14. I agree with Badri's comment on being secular in controlling the money flow by these "trusts" by the government; how the government would be handling it is a completely different issue !!.

    As always Badri has taken a controversial topic and given a "governance" view which I liked much.

    ReplyDelete
  15. //ஹிந்து சாமியார் செத்துத்தொலைக்கும்போதுதான் ஆழமான சிந்தனைகள், அகலமான கட்டுரைகள், தீர்க்கமான பார்வைகள் முன்னெடுக்கின்றன, // உண்மை! அதே நேரத்தில் எனக்கு அடிக்கடி தோன்றும் விஷயம் என்னவென்றால் இந்த நாட்டில் முற்றும் துறந்த துறவிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் ஆயிரம் கோட்களுக்கு சொத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஆனால் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டு கஷ்டப்படும் குடும்பஸ்தர்களுக்கு ஒரு ரூபாய்க்குக் கூட உதவமாட்டேன் என்கிறார்கள். இந்த மர்மம் என்ன என்று யாராவது விளக்குங்களேன்!

    ReplyDelete
  16. ஹரன் பிரசன்னாவின் “ஹிந்து சாமியார் செத்துத்தொலைக்கும்போதுதான் ஆழமான சிந்தனைகள், அகலமான கட்டுரைகள், தீர்க்கமான பார்வைகள் முன்னெடுக்கின்றன, எப்படி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்ற பேச்சு எழும்போது ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையுமே தவறு என்ற கட்டுரைகள் எழுகின்றனவோ அப்படி!” கமெண்ட் அற்புதம்!

    ஆனாலும், பத்ரி, இந்த ஆன்மீக டிரஸ்டையெல்லாம் நம் ஊழல் அரசாங்கம் கண்ட்ரோல் பண்ண ஆரம்பித்தால் அது இன்னமும் பயங்கர விளைவுகளையே ஏற்படுத்தும்!

    மற்றபடி உங்கள் உள்நாட்டு நாகராஜக் குழப்படிகள், குழாயடிகள் பற்றி ’நோ கமெண்ட்ஸ்’!

    ReplyDelete
  17. //என் முதன்மை நோக்கம், இந்த டிரஸ்டுகளுக்கு வரும் பணத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அப்படிப் பார்க்கும்போது பெருமளவு கட்டுப்படுத்தவேண்டியது சர்ச் பணத்தையும், எவாஞ்செலிகல் பணத்தையும், முஸ்லிம் அமைப்புகளின் பணத்தையும். மொத்தத்தில் பணக் கட்டுப்பாடு என்று வரும்போது செகுலரிசம் மிக மிக அவசியம்!//

    இதை கட்டுரை ஆக்கி பாபாவையும் தொட்டு சென்று இருந்தால் ஹரன்ப்ரசன்னா வின் ஷார்ப்பான கம்மன்ட்டுக்கு தேவை இருக்காது..

    எப்போ பார்த்தாலும் இந்து மதம் னா செக்குலரிசம் வந்து கொட்டுது ! சலிப்பா இருக்கு ! !

    சஹ்ரிதயன்

    ReplyDelete
  18. //தெரஸா ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீ. அவர் அற்புதங்கள் ஏதும் செய்யவில்லை என்றாலும் அப்படியெல்லாம் சொன்னால்தான் அவரை ‘செயிண்ட் தெரஸா’ என்று ஆக்குவார்கள் என்பதால் கத்தோலிக்கர்கள் புருடா விடுகின்றனர். அவரும் ஃபாஸ்ட் டிராக் வகையில் வாடிகனால் புனிதர் ஆக்கப்பட்டுவிடுவார்.// Its TRUE.. I am also catholic, but not belive this things..

    ReplyDelete
  19. Dear Badri and others, watch the below video completely....then ask your heart and share whether she is deceitful. BTW, Jayanthi is living in US for a long time.

    http://vimeo.com/6237477

    ReplyDelete
  20. //எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.//

    VERY WELL SAID BADRI!

    The entire amount of Sai trust must be shifted to a new more HONEST/RESPONSIBLE trust having M/s Manmohan singh has Chairman and M/s Sonia,SaratPawar,Karunanithi,
    K.G.Balakrishnan and Hasan Ali has members with Mr.Suresh Kalmadi as the secretary.

    Also Govt should ban money collections by any individual or trust EXCEPT BY MLA s MPs Ministers,CMs and PMs and Governors!

    உங்களை மாதிரி நாலு பேர்....ஊஹூம் வேண்டாம்.. நீங்க ஒருத்தரே போதும் பத்ரி,இந்தியா சுபிட்சமாயிடும்!!

    ReplyDelete
  21. What Sai baba has earned is not his personal money, but in the name of a trust.

    Can you please clarify why you support the fact that it is ok for business to amass money, but not private trusts.

    ReplyDelete
  22. Sriram: I am assuming that your question is directed at me. I have not written anything about businesses here. So what is the connection?

    If you are asking this question based on your assumption about my stand on the socio-economic model for our country, I will answer it this way. I am not at all worried about religious organizations 'amassing' money, just as I have no problems with businesses making money.

    Businesses are already regulated. One may need even better regulation. Businesses are properly owned. We know who owns what, how they get their monies, how they make their profits and how they pay taxes. If there are lacunae in these steps, they should be tightened.

    However, in case of religious organizations, there is no control. Registrar of Societies/Trusts doesn't have the same teeth as Registrar of Companies (combined with Income Tax dept and Enforcement Directorate). I would like the religious organizations to be overseen in the same manner that businesses are overseen.

    ReplyDelete
  23. மணி: என் கருத்துகளை நான் மறைப்பதில்லை. சாயி பாபா மட்டுமல்ல, அற்புதம் என்று யார் எதைச் சொன்னாலும் நான் அவற்றைக் கட்டுக் கதை, பொய், பித்தலாட்டம் என்றுதான் அழைப்பேன். அது பிறருக்குக் கோபத்தை வரவழைக்கலாம்; ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் அறிவேன். ஆனால் நான் என் கருத்தை சொல்லித்தான் ஆகவேண்டும்.

    அற்புதம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்றை ஏற்படுத்துவதாகச் சொல்பவர் பொய் சொல்கிறார்.

    ReplyDelete
  24. /* வ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் இதனைக் கொண்டுவரக்கூடிய மனவலு இந்திய அரசியல்வாதிகளிடம் இப்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். */

    கண்டிப்பாக நமது அரசாங்கம் கொண்டு வராது. அப்படியே கொண்டு வந்தாலும் இந்து மத நிறுவனங்களுக்கு மட்டும்தான் கொண்டுவரும்!

    ReplyDelete
  25. அற்புதமான பதிவு! :-)

    ReplyDelete
  26. Badri, very good thought and I like the way you justify your post:)

    ReplyDelete
  27. சுரேஷ் கண்ணனின் பதிவில் இட்ட பின்னூட்டத்தை அப்படியே இங்கும் இடுகிறேன். பொருத்தமில்லாதவற்றை விட்டுவிடுக :P


    /* நாளடைவில் கீழே வளர்ந்திருப்பவர் பிரம்மாண்டமாக வளர்ந்து அவரே 'அம்மா'வாகி விட்டார். என்ன கொடுமை சரவணன் இது. */

    நல்ல நகைச்சுவை.

    எனினும் உங்கள் கட்டுரை பொதுவான நோக்கிலும் சாய்பாபா குறித்த ஆழ்ந்த அவதானிப்பிலும் எழுதப்பட்டதில்லை. மேஜிக் போன்ற சித்து விளையாட்டுக்களில் எனக்கும் நம்பிக்கையில்லை. அதே நேரம் அவை எளிய மக்களைக் கவர்வதற்காக வேறுவழியில்லாத சமயங்களில் தவறில்லை என்றொரு எண்ணமும் எழுகிறது...

    அப்படிக்கவர்ந்த பின் அவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்தார் என்பதும் மேலோட்டமான தகவலே... அவர் தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை... ஆடம்பர செலவுகள் செய்தார் என்றும் சொல்லமுடியாதல்லவா? நன்கொடைகளைப்பெற்று மக்களுக்கு உதவி செய்தார் என்பதைத்தவிர அவரது நிதி குறித்து ஏதேனும் தகவல்கள்/பிரச்சனைகள் எப்போதுமே எழவில்லை!

    அவர்பின்னால் சென்றவர்களுக்கு என்னகிடைத்தது?
    1) எல்லா ஆன்மீகத்தேடல்களுக்கும் அடிப்படையான அமைதி. அவரது வழிபாடுகளிலும் பஜன்(சாய் பஜன்) போன்ற பாரம்பரிய முறைகளிலும் அது கிடைத்திருக்ககூடும்.
    2) ஒழுக்கம். இதை மிக முக்கியமாக போதித்தார். அவரது பக்தர்களில் வன்முறையாளர்களையோ மிகப்பெரிய ஏமாற்றுக்காரகளையோ காணமுடியாது. நடிகர்கள் பின்னாலும் அரசியல்வாதிகள் பின்னாலும் செல்லும் கூட்டம் நடந்துகொள்ளும் விதம் நமக்குத் தெரியும் (இந்த இருபிரிவினர்தான் ஆன்மீகவாதிகளைத் தவிர கூட்டத்தினரைக் கவரக்கூடியவர்கள் என்ற அனுமானத்தில்)
    3. பிறருக்கு உதவும் மனப்பான்மை. சாய் சமிதியில் குழைந்தப் பருவத்திலிருந்தே இது பழக்கப்படுகிறது. இரத்ததியானம், மருத்துவ முகாம்கள், இலவசக்கண் அறுவைசிகிச்சைக்காண முகாம்கள் போன்றவற்றில் பாபாவின் பக்தர்கள் நேரடியாக ஈடுபட்டனர்
    4. எம்மதமும் சம்மதம் என்பது அவரது மற்றுமொரு வழிகாட்டுதல். மதங்களை மறுக்கவில்லை.ஆனால் இயைந்து இணைந்துவாழ வழியுறுத்தினார்/வழிகாட்டினார்.
    5.வேதங்கள்/பகவத்கீதை/யோகா போன்ற பண்டைய இந்தியாவின் ஆன்மீக வழிகளையே தன் பக்தர்களுக்கு கொண்டுசேர்த்தார்.

    இன்னும் பலவற்றைச் சொல்லமுடியலாம். நானும் மூளையின் நுணியிலிருந்துதான் எழுதுகிறேன்.

    இவற்றை எல்லாம் தாண்டியதுதான் அவர் பொதுமக்களுக்கு செய்த,
    1) இலவச மருத்துவம்.இருதய/சிறு நீரக மாற்றுச் சிகிச்சைகள் உட்பட
    2) பள்ளிகள்/கல்லூரிகள்
    3) குடி நீர் வசதிகள்
    போன்றவை.

    சுருக்கமாகச் சொன்னால் அவர் மேஜிக் செய்திருக்கலாம். ஆனால் அவரால் யாரும் எதையும் இழக்கவில்லை. அடைந்திருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம். ஆன்மீகத்தின் மூலம் சில லட்சம் நல்ல குடிமகன்களை உருவாக்கினார்!

    தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்மீது பிடிப்பு இல்லை. எனக்கு பக்தியைத் தாண்டிய யோகா/தியான குருதான் தேவை. சரியாகப்படிக்காத பையனுக்கும் பள்ளிக்கூடம் தேவை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பக்தியிலேயே நின்று விடும் எளியமக்களின் ஆன்மீகத்தேவை!

    ReplyDelete
  28. ----------------------------------
    மேற்படி ஒரு பின்னுட்டத்தை நான் buzz-இல் போட்டவுடன் சில தர்கங்களற்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ‘காந்தி அஹிம்சையை அறிவுறுத்திய பின்னரும் உலகில் ஏன் போர்கள் நடக்கின்றன’ என்கிற ரீதியில் அவை இருந்தன. அவர்களுக்கு பதில் சொல்லி மாளாது. கொஞ்சம் அடுத்த நிலை சிந்தனையாளர்களுக்கு சில விளக்கங்களைத் தரலாம் என நினைக்கிறேன்.

    சாய் பாபா கடவுள் அல்லர்; மகானும் அல்லர்; ஞானியும் அல்லர்; அற்புதங்கள் என்கிற பெயரில் மேஜிக் செய்தவர். நிற்க.

    இத்தகைய சாமியார்களின் பின்னால் செல்லும் மந்தை மக்களுக்குப் பின்னால் ஓர் உளவியல் உள்ளது போலவே அவர்களை விமர்சித்துப் பேசுவதிலும் சில உளவியல்கள் உள்ளன. பொதுப்புத்தியில் உறைந்துள்ள அந்த உளவியல் சாய்பாபா போன்றோரின் மறு பக்கத்தை பார்க்கவிடாமல் செய்கிறது.

    மேலோட்டமாக ‘அவர் போலிச்சாமியார், காசு சேர்க்கிறார்’ எனும் போது அதில் ஒலிக்கும் தொனி என்னவென்றால், ‘நான் ரொம்ப விவரமானவன், இவங்ககிட்ட எல்லாம் ஏமாற மாட்டேன்’ என்பதே!. அதனாலேயே பொது இடத்தில் இருவர் விவாதித்து கொண்டிருந்தால், ‘ஆமா ஆமாங்க எல்லாம் பிராடுதான்’ என்று எந்த விதமான தகவல் திரட்டுதலோ அலசல்கள்களோ இல்லாமல் ஒருவர் இணைந்துகொள்வார். ஏனெனில் அதுதான் அவருக்கு வேண்டிய இமேஜைக் கொடுக்கும். ‘ நானும் விவரமானவன், புத்திசாலி, ஏமாளி இல்லை’ என்ற இமேஜ், மற்றவர் முன்னும் தனக்குள்ளுமாக.

    உதாரணத்திற்கு /* சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான் */
    அவருக்கு எவ்வளவு கோடி வந்தது எவ்வளவு லட்சங்களை விட்டெறிந்தார் எவ்வளவை பதுக்கினார் என்று சு.க.வுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. ஆனால் அதைப் பற்றிய பிரக்ஜை இன்றி இவ்வாறு எழுதினால்தான் புத்திசாலி பட்டம் கிடைக்கும். அப்படி சொல்வதற்கான அடிப்படை என்ன என்று கூட சொல்லவேண்டாம்.

    ஒருவன் நல்லவன் என்றால் நமக்கு அதில் சுவாரசியம் இல்லை. ‘அப்படி ஏமாற்றினான் இப்படி ஏமாற்றினான்’ என்றால் உடனே ஒரு பேச்சு சுவாரசியம் வந்து விடுகிறது. இப்படி வெறும் சுவாரசியத்துக்காகவே பது பலராலும் பேசப்பட்டு பரப்பப்பட்டு பொதுப் புத்தியில் நிலைகொள்கிறது.

    என்னுடைய கேள்விகள் எளிமையானவை. சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்ற இளைஞர்களிடம் இன்று சர்வசாதாரணமாக இருக்ககூடிய மது-புகைத்தல் பழக்கங்கள் அற்றவர்களாக பெரிதும் இருக்கின்றனர் எனக்கொள்வோம். (இருக்கின்றனர் என்று நான் சொல்லிவிட்டால் ஆதாரம் கொடுக்கவேண்டும். நான் என்ன சர்வேயா எடுக்க முடியும். ஒரு சிலரிடம் பழகியதில் இருந்து extrapolate செய்துதான் சொல்ல முடியும்). அப்படி அந்த இளைஞர்கள் இருந்தால் அது சமுதாயத்துக்கு ஆகச்சிறந்த பங்களிப்பில்லையா?

    ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை வெறும் சொற்களாக இல்லாமல் 20-30 ஆண்டுகள் தொடர்ந்து பிறருக்கு சேவை செய்யும் ஜனத்திரளை உருவாக்கியிருப்பது முக்கிய பங்களிப்பில்லையா?

    சாய்பாபாவின் மீது விமர்சனங்கள் செய்யும் போது இவற்றையும் கருத்தில் கொள்கிறோமா என்பதுதான் என்கேள்வி.

    ReplyDelete
  29. எப்படிப் பார்க்கினும் கீழே இருப்பவை தவறானவையே.

    1. மற்றவர்கள் அவரைக் கடவுள் என வழிபடுவதை தடுக்காதது. தனிமனித துதியில் எனக்கும் உடன்பாடில்லை.
    2 பாபா தான் சொன்னதற்கு முன்னதாகவே மறைந்ததும் ஜீவ சமாதி அடையாததும் பின்னடைவே.

    3.மற்றுமல்லாமல், தாங்கள் கடவுளாக வணங்கிய ஒருவர் உடல் நிலை தேற வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்ததும் அவர் இறப்பிற்கு அழுததும் அந்த மக்கள் எந்தவிதமான ஆன்மீக முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதையே காட்டுகிறது.

    இவற்றை நான் மறுக்கவில்லை. என்னுடைய கருத்தும் இதுவே.

    ReplyDelete
  30. இந்தியாவில் ஒரு மனிதன் சொத்து சேர்ப்பது தண்டனைக்குறிய குற்றம் இல்லையே. அரசியல்வாதி சொத்து சேர்த்தால் ஊழல், சாமியார் சொத்து சேர்த்தா ஏமாத்துறான், தொழிலதிபர் சொத்து சேர்த்தா வரிஏய்ப்பு பண்றான் என்கிறீர்கள். சொத்து சேற்கமுடியாத உங்களின் வயித்தெரிச்சல் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது என்பேன் நான்.

    சாமி இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளால் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுள்ளது ? எத்தனை இலவச பள்ளி கல்லூரிகள் நாத்திகர்களால் நடத்தப்படுகின்றன ? எத்தனை இலவச மருத்துவமனைகள் நாத்திகர்களால் நடத்தப்படுகின்றன?

    ஒன்றுமே இல்லை. மக்களுக்கு ஒரு சேவையைக் கூட ஒழுங்காகச் செய்ய லாயக்கில்லாத கூட்டத்திடம் வெட்டி வாய் ஜவடால் பேச்சு மட்டும் குறைச்சல் இல்லை.

    ReplyDelete
  31. Yes i did make my comment based on your view on the socio economic model of the country.

    My comment is based on the following view of yours in your blog above

    "அடிப்படையில் தனியான ‘சாமியார்’ ஒருவர் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேகரிக்கும் நிலை நாட்டுக்கு நல்லதல்ல, பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல"

    Thats why i said the property belongs to a trust and not an individual and we should appreciate his efforts in pursuing certain development activities in the name of trust. Much like how some politicians are appreciated even though they have limitations.

    My view is that, rather than saying private trusts amassing wealth is not good for the country, better they be regulated. I dont differ in that point of view of yours.

    ReplyDelete
  32. பத்ரி,
    பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் ஆண்டுக்கணக்கை வெளியிட வேண்டும் என்பதுபோல் டிரஸ்டுகளும் தங்கள் கணக்குகளை , வரசு செலவுகளை வெளியிட வேண்டும் என்று சட்டமியற்றினால் போதுமானதாக இருக்குமா? ஆக்கப்பூர்வமாகத்தான் கேட்கிறேன்,புரிதலுக்காக.

    ReplyDelete
  33. //அற்புதம் என்று யார் எதைச் சொன்னாலும் நான் அவற்றைக் கட்டுக் கதை, பொய், பித்தலாட்டம் என்றுதான் அழைப்பேன்.//

    பத்ரி:
    பல மாதங்களுக்கு முன் தி.நகரில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற புத்தக வெளியிட்டார் கடைக்கு சென்றிருந்தேன். அங்கு 'தியாகராஜர் அநுபவங்கள்' என்ற நூல் (அவர்களால் 1989 ஆண்டு வெளியிடப்பட்டது)ஒரே ஒரு பிரதி இருந்தது.அதுவும் மிகவும் அழுக்கடைந்தும்,ஓரங்கள் கிழிந்தும் இருந்தது.அதன் விலை ரூ.15 எனப் பார்த்து, எதாவது தள்ளுபடி உண்டா என்று கேட்டேன்.அவர்கள் மறுத்து விட்டார்கள்.எனவே குறிப்பிட்ட விலை கொடுத்து அவர்கள் அலமாரியில் ஒரு காலியிடம் ஏற்படுத்தினேன்.

    சென்ற மாதம் இன்னொரு, வளரும், புத்தக வெளியீட்டாளர்கள் தி.நகரில்,நடத்திய சந்தைக்கு போயிருந்தேன்.சற்றே கசங்கி,மிக சிறிதாக அழுக்கடைந்து, வெளியிட்டு இரண்டு வருடங்கள் கூட ஆகாத, பல நல்ல புத்தகங்களை, அவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்றனர்.சுமார் ரூ 1500 மதிப்புள்ள புத்தகங்களை நான் ரூ 400+ க்கு வாங்கினேன்
    இது எனக்கும் மற்றும் என் போன்ற புத்தக காதலர்களுக்கும் ஒரு 'அற்புத'மாக தோன்றியது.ஒருவேளை,இது உங்கள் பார்வையில்
    கட்டுக் கதை, பொய், பித்தலாட்டம் தானோ என்னவோ!

    ReplyDelete
  34. பத்ரி: பொதுவா மத அமைப்புகளில் குவியும் பணம் பின்னால் அதில் சேரும் உறுப்பினர்களால் அது தவறாக கையாளப்படுவது மற்றும் ஒரு மத அமைப்பை கட்டமைக்க முன் வைக்கப்படும் சில அற்புதங்கள் அதன் தொடர்ச்சியாக எழும் நம்பிக்கைகள் , அதன் அடிப்படையில் கூடும் பக்தர் கூட்டம் என்று பொதுவாக அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதில் பாபாவையும் தொட்டுச் சென்று இருந்தால் இந்தக் கட்டுரையை பாராட்டி இருக்கலாம். பின்னூட்டத்தில் வரும் கருத்துக்களின் எதிர்வினையாக எனக்கு எல்லாம் ஓன்று தான் என்று சொல்லுவது ஒரு வித சப்பைக் கட்டு மாதிரி இருக்கிறது.

    கடவுளை நோக்கி செல்ல தூதர்களை நியமித்துக் கொள்ளும் பல மக்களும் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தன பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வுக்காக அலைபாயும் மக்கள். அதில் பாரின் பிரச்சனைகள் மிகவும் கடுமையானதாக் நமக்கு அதிர்ச்சி ஒட்டுவதாக ஜீரணிக்க முடியாததாக இருக்கும். பலரும் வெறும் சுயநல எதிர்பார்ப்புகளோடு ஒரு குறுகிய காலத்தில் பேரு முயற்சிகள் எதுவும் இல்லாமல் மந்திர மாயத்தில் தன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் எதிர்பார்ப்புகளோடு வருபவர்கள். இப்படிப் பட்டவர்கள் தான் பல சமயத்திலும் அதிகமாக பணத்தை வாரி இறைப்பார்கள். இப்படி வரும் பணத்தை அடிப்படை தேவைகளுக்காக வருபவருக்குக் கொடுக்கும் இம் மாதிரி அமைப்புகள். இது நேர்வழியா என்றால் இல்லை தான். அனால் அரசின் கட்டுப்பாட்டில் இது சிறப்பாக அமையுமா என்றால் ஒரு வேலை டாஸ்மாக் எந்த உபயோகம் அரசுக்குத் தருதோ அதே உபயோகத்தை இதுவும் தரலாம்.

    அதனால் நம்பிக்கைகளை ஒரு நோக்கில் இருந்து மட்டும் பார்த்து ஆன்மீகவாதிகளின் செய்கைகளை விமர்சித்து விட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

    ReplyDelete
  35. //...இந்த நிலை மாறவேண்டுமானால் ஆன்மிக/மத அறக்கட்டளைகள் அனைத்தும் வலுவான கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்குக்கீழ் கொண்டுவரப்படவேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் வரி வசூலிக்கப்படவேண்டும்....//

    இதெல்லாம் சாயிபாபாவின் அறக்கட்டளைகளுக்கு நடக்கவில்லை என்று ஏதேனும் உறுதியான ஆதாரங்கள் உங்களுக்குக் கிடைத்ததா?

    நீங்கள் சொல்லி உள்ள குறைகள் எல்லாமே உங்களது தனிப்பட்ட மனத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சார பிம்பங்களாகவும் இருக்கலாம். அல்லது நல்ல தெளிவான ஆதாரங்களைச் சேர்ந்தது என்று நம்பக்கூடிய தகவல்கள் இவற்றின் அடிப்படையிலும் இருக்கலாம்.

    இந்த இரண்டில் உங்களது இந்தக் கட்டுரை எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  36. தெரேசாவிற்கும், சாயிபாபாவிற்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசம், தெரேசா உலக அரசாங்கங்களின், பலம் மிகுந்த மத அமைப்புகளின் சேவகியாக இருந்தார். சாயிபாபாவோ சாதாரண மனிதர்களின் தெய்வமாக இருந்தார்.

    அதனால்தான், தெரெசா செத்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் அவர்கள் அமைப்பு மற்றும், அந்த ஊர் கத்தோலிக்கர்களில் ஒரு சிலர் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை.

    சாயிபாபாவின் மரணத்திற்குப் பின்னால் அவரைக் காண லட்சக்கணக்கானவர்கள் வந்தனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் சாதாரணர்.

    அதனால்தான் தெரெசா செத்தபோது மத்திய அரசு அதை தேசிய துக்க நாளாக அறிவித்தது. பாபாவின் மரணத்துக்குத் தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமே மலர்வளையம் செய்ய வந்தனர். அரசு வரவில்லை.

    ReplyDelete
  37. //...பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் ஆண்டுக்கணக்கை வெளியிட வேண்டும் என்பதுபோல் டிரஸ்டுகளும் தங்கள் கணக்குகளை , வரசு செலவுகளை வெளியிட வேண்டும் என்று சட்டமியற்றினால் போதுமானதாக இருக்குமா? ...//

    பத்ரியின் பதிவைப் படித்தால் அப்படி எந்தச் சட்டமும் இல்லாததுபோலத்தான் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. சட்டங்கள் இருக்கின்றன.

    அந்தச் சட்டப்படி இந்து அமைப்புக்கள் எல்லாம் ஒவ்வொரு வருடமும் அரசிற்குத் தனது கணக்குகளை அனுப்புகின்றன. அரசு சார்ந்த தணிக்கையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து தணிக்கை செய்கிறார்கள்.

    ஆனால், கிறுத்துவ முஸ்லீம் அமைப்புகளைப் பொறுத்தவரை அரசு சார்ந்த தணிக்கைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணப் பட்டுவாடா பற்றி எந்தத் தகவலும் அரசிடம் கிடையாது.

    இந்து அமைப்புக்கள் அப்படி அல்ல. இருந்தாலும், அப்படி இருப்பதாகக் காட்டிக்கொள்வது, அந்த ஆதாரமற்ற அவநம்பிக்கையின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதுவது எல்லாம் இந்திய-செக்யூலர்வாதிகளின் கடமையாம்.

    ReplyDelete
  38. In one movie this dialog comes

    I will believe the person who says there is no God.

    I will believe the person who says there is God.

    I will never believe the person who says I am God.

    ReplyDelete
  39. //பாபாவின் மரணத்துக்குத் தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமே மலர்வளையம் செய்ய வந்தனர். அரசு வரவில்லை. //

    PM and Sonia came to pay homage. Baba's funeral was a state funeral (AP govt) with 4 days mourning. thyagarajan

    ReplyDelete
  40. இந்தியாவில் பொது மத அறக்கட்டளைகளுக்கு (Public Religious Trusts) வரிவிலக்கு உள்ளது. இந்த அறக்கட்டளைகள் சேர்க்கும் சொத்துகளைக் கொண்டு பொதுமக்களுக்கு நற்பணிகள் செய்யவேண்டும்; வெறு எந்தத் தனி நபர் வசதிக்காகவும் இந்தச் சொத்தைப் பயன்படுத்தக் கூடாது. இந்தக் காரணத்துக்காக மட்டும்தான் இந்த அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அறக்கட்டளையின் பணம் எப்படியெல்லாமோ சுய லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    ஒவ்வோர் பொது மத அறக்கட்டளையும் ஆண்டாண்டுக்கு கணக்குகளை அளிக்கவேண்டும். அளிக்கிறார்கள் என்றாலும் அவை சரியாக scrutinise செய்யப்படுவதில்லை. அப்படி செய்யப்படுவதாக இருந்திருந்தால், நித்யானந்தா, கல்கி, சாயி பாபா ,பங்காரு அடிகளார், ஜக்கி, வைஷ்ணவ ஜீயர்கள், சங்கராச்சாரியார்கள், இன்னபிற ஆயிரக்கணக்கான இந்து மடங்கள் பிரச்னைக்கு உள்ளாகும். அதேபோலத்தான் பல்வேறு கிறிஸ்தவ மத அறக்கட்டளைகளும்.

    இந்தியாவில் தொழில்துறை எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றனவோ, அதே மாதிரியான கட்டுப்பாடுகள் மத அமைப்புகளுக்கும் வேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன். மேலும் இந்த மத அமைப்புகளுக்குப் பிறர் டொனேஷன் தரும்போது அவற்றுக்கு வரிவிலக்கு உண்டு என்பதையும் திரும்பப் பெற வேண்டும்.

    ஏனெனில் இன்று மத அமைப்புகள் அனைத்துமே பிசினஸ்கள் போலத்தான் இயங்குகின்றன. பிசினஸ் மாதிரி இயங்கும் மத அமைப்புகளைத் தடை செய்யவேண்டும் என்று நான் கேட்கவில்லை. அவற்றின் நிதி ஆதாரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, அவற்றின் ‘லாபங்க’ மீது வரி வசூல் செய்யப்படவேண்டும். அவ்வளவுதான். பொதுமக்கள் இந்தத் தகவல்களை எல்லாம் மீறி, தன்னிச்சையாக மத அறக்கட்டளைகளுக்குப் பணம் தர விரும்பினால், சந்தோஷமாகத் தரட்டும். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

    ReplyDelete
  41. ||2) ஒழுக்கம். இதை மிக முக்கியமாக போதித்தார். அவரது பக்தர்களில்||

    சாணக்யன்..ஆர் யு க்ரேஸி???

    ஒரே பாலினம்,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்கள் எல்லாம் அவர் மீது சாட்டப்பட்டிருக்கின்றன..

    அமைப்பின் மீதான அவரது பிடி அழுத்தமானதால் எதிலும் பட்டுக் கொள்ளாமல் அவரால் தப்பிக்க முடிந்தது..

    அவரது அறையில் ஒரு கொலை நடந்தும் கூட அமைப்பு அவரை நெருங்க வில்லை..

    என்ன பிதற்றுகிறீர்கள்????

    ReplyDelete
  42. /எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.//


    நல்ல கருத்து...எந்த அமைப்பாக இருந்தாலும் அரசாங்கம் கட்டுபடுத்தியே ஆகவேண்டும்..

    இப்படி சொல்றதை விட்டுபோட்டு பின் கதவு வழியாக போய் ஒவ்வொரு ஆளுங்களை பற்றி தோண்டி துருவினா கடைசி 0 தான் மிஞ்சும்..


    இந்தியாவில் ஒரு மனிதன் சொத்து சேர்ப்பது தண்டனைக்குறிய குற்றம் இல்லையே. அரசியல்வாதி சொத்து சேர்த்தால் ஊழல், சாமியார் சொத்து சேர்த்தா ஏமாத்துறான், தொழிலதிபர் சொத்து சேர்த்தா வரிஏய்ப்பு பண்றான் என்கிறீர்கள். சொத்து சேற்கமுடியாத உங்களின் வயித்தெரிச்சல் தான் உங்களை இப்படி பேச வைக்கிறது என்பேன் நான்.

    சாமி இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளால் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுள்ளது ? எத்தனை இலவச பள்ளி கல்லூரிகள் நாத்திகர்களால் நடத்தப்படுகின்றன ? எத்தனை இலவச மருத்துவமனைகள் நாத்திகர்களால் நடத்தப்படுகின்றன?

    ஒன்றுமே இல்லை. மக்களுக்கு ஒரு சேவையைக் கூட ஒழுங்காகச் செய்ய லாயக்கில்லாத கூட்டத்திடம் வெட்டி வாய் ஜவடால் பேச்சு மட்டும் குறைச்சல் இல்லை.

    ReplyDelete
  43. இந்த சட்ட திட்டமெல்லாம் கொண்டுவந்தால் அது வெறும் இந்து மதத்தை மட்டுமே கட்டுப்படுத்தும். மற்றதையெல்லாம் கட்டுப்படுத்தினால் சிறுபான்மை உரிமைகள் பாதிக்கப்படுவதாக கேஸ்போட்டு ஸ்டே வாங்குவார்கள் செக்குலர் கழிசடைகள். முதலில் செக்குலரிசத்தையும் அதை கடைபிடிக்கும் கழிசடை வெண்ணைவெட்டிகளையும் ஒழித்தால் தான் நீங்கள் சொல்லும் சட்டதிட்டங்கள் கொண்டுவர முடியும்.

    ReplyDelete
  44. எல்லாம் நல்லதே நடக்கும் , என் கவலை என்னவென்றால் அவர் விட்டு சென்ற பணிகள் இனி சரிவர தொடருமா என்பதுதான், நல்லதே நடக்கணும்

    ReplyDelete
  45. I think your argument against the religious trust is based on speculative news reports.

    I know a few friends in journalism, and I asked them about the source of the information on the size of sathya sai central trust. Every one said it was Rs 40,000 crore. But, no one knew. But it has gained some kind of currency because everyone started using it.

    I was skeptical about it, since I once went to the whitefield ashram and saw a board which said the property was hypothecated to a public sector bank (State Bank, if I remember right). I asked for an explanation to someone who seemed to be like an official, and he said, the trust had taken loan against the property for a water project.

    Since I know enough about Indian media, and the way the report, I thought I should wait for some confirmed source.

    My guess was right. Media was simply exaggerating things. http://media.radiosai.org/www/Special_Ann43.html

    Now, of course, you can question this, and say you don't believe in what the trust members say. I am assuming a lot of people might take that stand. After all, in the US, right wingers continue to believe Obama is a Kenyan, despite the government releasing his birth certificate.

    But, having read your posts - all of them so reasonable - I hope you would update your post with the right numbers.

    You might have guessed by now that I might be having different views on Sathya Sai Baba's miracles. But, I won't make any comment on that, for one of Baba's teachings is to respect others beliefs, even it happens to be atheism. So, I respect that.

    But I wish you would correct the factual error in your post.

    ReplyDelete
  46. Some more details from ET
    http://articles.economictimes.indiatimes.com/2011-04-29/news/29487272_1_sathya-sai-trust-assets-property

    References in the media about the value of the Trust's assets — Rs 40,000 crore — was also challenged on Thursday. The Trust said its yearly income has ranged between Rs 100 crore and Rs 130 crore in the last few years.



    The expenditure for the same period was pegged at Rs 100 crore. "The Trusts of Baba have been grossly overvalued by the media. We have never made an appeal for donation and, therefore, it is evident that the size of the trust is modest," a trust member said. The Trust is also yet to assess the value of assets under its control.



    "We have not done any revaluation of any of the assets as this is not a commercial entity. We acquired properties whenever necessary for educational and health services and we know the book value of them," said Srinivasan.

    ReplyDelete
  47. அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும் தங்களுக்கு இடப்பட்ட
    பணியினை / கடைமைகளை சரியாகச் செய்து விட்டால் "போலிச் சாமியார்களுக்கோ"
    "நிஜச் சாமியார்கள்ளுக்கோ" தேவையிருக்காது தானே!

    மருத்துவ வசதிகளும், குடி நீர்த்திட்டங்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும்
    சாமியார்களை நாடுவது ஏன்?

    'அற்புதமமோ (அ) பித்தலாட்டமோ' சில ஆயிரம் பேராவது தங்களது சிந்தனையில் / செய்கையில் சாத்வீகத்தை கொண்டு வந்தவரை நல்லது தான்.

    எனக்கு ஒரு சந்தேகம்! கூட்டம் போட்டு முடவனை நடக்கவைக்கும் போதும், ஊமைகளை பேசவைக்கும் போதும் நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள்?

    வெளி நாட்டிலிருந்து துப்பாக்கிகளும், வெடுகுண்டுகளும் கடத்தப் பட்டு இந்தியாவில் வெடிக்கச் செய்யும்போது நீங்கள் எல்லாம் எங்கே சென்றிருந்தீர்கள்?

    இந்து மத பெரியவர்கள் மறையும் போது மட்டும் நீட்டி முழக்கி கட்டுரை எழுதும் இந்த வினோத 'மத சார்பற்ற' கட்டுரையாளர்கள், பிற மதத்தவர் பற்றிய பேச்சு வந்தால் 'மௌன விரதம்' காக்கிறார்கள்.

    சாய்பாபா அறக்கட்டளை சொத்துக்கள் சரியாக பேணப்பட வேண்டும் தான். இதே அளவுகோல் 'மிஷனரிகளுக்கும்' பொருந்துமா?

    ReplyDelete
  48. போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்.

    http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html

    ReplyDelete
  49. பத்ரி,

    இந்து மதப் பிரபலங்கள்மீது பொய்யான வழக்குகள் போடத் தயங்காத சூழலில், வரிமோசடி வழக்குப் போடுவது ஒன்றும் சிரமமானதல்ல.

    நிறுவனங்களை வைத்து நடத்தும் முதலாளிகளை நோக்கி கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கும் ஆதாரங்களற்ற, முழுக்க முழுக்க சந்தேகத்தின்பாற்பட்ட குற்றச்சாட்டுக்களையே நீங்கள் இந்து மத நிறுவனங்கள் மீது வைக்கிறீர்கள்.

    கம்யூனிஸ்ட்டுகள் முதலாளிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும், நீங்கள் இந்து மதப் பிரபலங்கள்மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் வித்தியாசங்கள் ஏதும் இல்லையே.

    உங்களுடைய சமீபகாலத்திய சறுக்கல்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  50. //சாயி பாபா மட்டுமல்ல, அற்புதம் என்று யார் எதைச் சொன்னாலும் நான் அவற்றைக் கட்டுக் கதை, பொய், பித்தலாட்டம் என்றுதான் அழைப்பேன். அது பிறருக்குக் கோபத்தை வரவழைக்கலாம்; ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் அறிவேன். ஆனால் நான் என் கருத்தை சொல்லித்தான் ஆகவேண்டும். அற்புதம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்றை ஏற்படுத்துவதாகச் சொல்பவர் பொய் சொல்கிறார்.//

    Well said! பெரும்பாலான நேரங்களில் சாமியார்களின் பக்தர்கள் "ஆஹா எப்படி எங்கள் குரு எப்படி அற்புதம் செய்தார் என்று விய்ந்தோதுவதும், பிறகு அதனை எப்படிச் செய்தார் என்று யாராவது வெளிச்சம் போட்டுக் காட்டியவுடன், "இல்லை... இல்லை.. எங்கள குரு கூட்டம் சேர்க்கத்தான் அப்படிச் செய்தார் என்று அசடு வழிவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. "அற்புதம் என்பது எதுவும் இல்லை" மட்டுமில்லை. "தேவை"யுமில்லை. - சிமுலேஷன்

    ReplyDelete
  51. /* ஜெயதேவ் தாஸ்: அதே மாதிரி சாய்பாபா சொத்துக்களும் எவ்வளவு இருக்கும்னு extrapolate செய்து சொல்லக் கூடாதா? நீங்கள் சொன்னால் அது extrapolation மற்றவர்கள் சொன்னால் ஆதாரமில்லாமல் பேசுபவர்கள்!! ஹா.ஹா..ஹா..
    */

    நல்ல கேள்வி. நான் எதனடிப்படையில் சொன்னேன் என்று சொல்கிறேன். சுரேஷ் கண்ணன் எதன் அடிப்படையில் பாபா கொள்ளையடித்ததாக சொன்னார் என்று அவர் சொல்லட்டும்.

    /*
    கல்வெட்டு: சாயுடனும் பேயுடனும் இருப்பவன் அங்கே இருக்கும் வரை நடிக்கிறான் . அதைவிட்டு வெளியே வந்தவுடன் சராசரி சாக்கடையாகவே இருக்கிறான்.
    */

    கல்வெட்டு, நீங்கள் சொல்லுவது போல சாய்பக்தன் வெளியே மற்றவர்களைப்போலவே நடந்துகொள்கிறான் என்பது சராசரி ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் சாய்பக்தன் யாரிடமும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்வோமானால் நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ள முயல்கிறோம்.

    நான் சந்தித்த சில உதாரணங்கள் சொல்கிறேன்.
    1. என்னுடைய நாத்திக நண்பர் ஒருவர் சொன்னது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவில் விபத்தில் அடிபட்ட நண்பனுக்காக இரத்தம் தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்து எங்கும் கிடைக்காமல் நள்ளிரவில் புறநகரில் சாய்பக்தர் ஒருவர் வீட்டிற்கு சென்று கதவைத்தட்டி எழுப்பி செய்தி சொல்லியிருக்கிறார். எந்த முகச்சுழிப்பும் இன்றி கனிவோடு தங்கள் சேவை நெட்வொர்க் மூலமாக அந்த நேரத்தில் இரத்ததானம் கொடுப்பவரை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். நண்பர் சொன்ன வார்த்தைகள், “சும்மா சொல்லக்கூடாதுடா! நாம என்னதான் விமர்சனம் பண்ணாலும் அந்த நேரத்துல ஹெல்ப் பண்ணினாங்க. அருமையான நெட்வொர்க் வெச்சிருக்காங்க”.

    2. நான் என்னுடைய சிறுவயதில் சாய் சமிதியில் மாணவனாக இருந்தேன். ஒரு பத்துவயதிலேயே ஆர்வம் குறைந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் அப்போது சந்தித்த ஆசிரியர்கள் முதல் மூத்த மாணவர்கள் வரை அனைவரும் மற்ற சராசரி மனிதர்களைவிட சற்றேனும் மேம்பட்டவர்களே.

    3. இரண்டு மாதங்கள் முன்பு, “வார விடுமுறையை எப்படிக் கழித்தாய்” என சாப்ட்வேரில் பணிபுரியும் தோழியைக் கேட்டேன். 25 வயதுடைய அந்த இளைஞி ‘சர்வீஸ்கு போயிருந்தேன்’ என்பதைக்கேட்டபோது எனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இளைஞர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை, கண்டபடி செலவழிக்கிறார்கள், வார இறுதியில் குடியும் கொண்டாட்டமுமாக சீரழிகிறார்கள் என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் ஓய்வெடுப்பதிலும் டிவி/சினிமா பார்பதுமே செய்வதற்குரிய செயல்கள் என இருக்கும் நிலையில் இந்த இளைஞி இப்படி சேவை செய்யப்போய் வருகிறார் எனும் கேள்வியை நான் கேட்டுப்பார்க்கிறேன். எத்தனையோ சேவை அமைப்புகள் இருக்கின்றன. அதில பல இளைஞர்கள் இன்று ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு காரணமாக இருப்பதிலும் சாய்பாபாவின் அமைப்புக்கும் பங்குள்ளது என்படை நம்மால் மறுக்க முடியாது.

    /* சம்பாதிக்கும் லட்சம் கோடியில் சில நூறு கோடிகளை எறிவது, மக்களின் மீதுள்ள அன்பினால் அல்ல, அவர்களின் ஆதரவை கேடயமாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெளிநாட்டிலிருந்து வருகிற நன்கொடைகளை கணக்குக் காட்டுவதற்கும்தான்.
    */
    சுரேஷ், அப்படி நடிப்பவரால் 400 கோடியில் ஒரு இலவச மருத்துவமனை கட்டமுடியும் என்றா உங்கள் பகுத்தறிவு சொல்கிறது? எனக்கென்னவோ கருணாநிதியைப்போல் இறந்த பிறகு எனது வீடு மருத்துவமனையாகும் என்றுதான் சொல்ல முடியும் எனத்தோன்றுகிறது.

    ஔவை சொல்லியிருக்கிறாள்... “நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் என்று”. நடிப்பவர்களால் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க மனம் வராது.

    ReplyDelete
  52. /* எளிய மக்கள் என்றால் அதில் காவஸ்கர், தெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள்முதல் பல சினிமா, அரசியல் பிரபலங்களும் அடக்கம்
    */
    பத்ரி, இவர்கள் எல்லோரும் விபூதிக்கும் குங்குமத்துக்கும் மயங்கினார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு வேறு அனுபங்கள்/பயன்கள் இருந்திருக்கும், அவை தற்செயலாக நடந்தைவையாக கூட இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  53. பாபாவின் உடலைப் பார்க்கவந்த கூட்டத்தை நினைத்துபாருங்கள்! லட்சங்களில் வந்தார்கள் என்று சொல்கிறார்கள். அனைவரும் வரிசையில் அமைதியாக நின்று அமளிதுமளி இன்றி கூட்ட நெரிசல்கள் இன்றி பார்த்து சென்றிருக்கிறார்கள். நம் நாட்டில் வேறு ஏதெனும் கோயிலில் இப்படி நடக்குமா? கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமாரும் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியும் இறந்தபோது நடந்த கலவரங்கள் நினைவிருக்கிறதா?

    ReplyDelete
  54. அண்ணாதுரையின் உடலைப் பார்க்கக்கூடத்தான் கூ ட்டம் கூடியது சாணக்கியன். அங்கும் ஒரு பிரச்சனையும் வரவில்லை. ஒரு காகம் இறந்தால் பிற காகங்கள் கரைவது இறந்த காகத்தை தெய்வமாக்கி விடாது. மந்தை மனோ நிலையைப் பார்த்துப் புல்லரிக்காதீர்க .

    உண்ணும், உறங்கும், சுவாசிக்கும், மலங்கழிக்கும், மரிக்கும் சக மனிதனை வணங்குவதில் தெரிவது தோல்வி மனப்பான்மை மட்டுமல்ல. எப்படியாவது எனக்கு நல்லது நடக்காதா என்ற பேராசையும்தான். சாமியார்களைப் பார்க்க கூடும் லட்சோப லட்ச முட்டாள்கள் மனிதன் சுய நலம் பொங்கும் மிருகம் என்பதன் உதாரணங்கள்.

    ReplyDelete
  55. Superbly written. And the discussions were also healthy.

    Thanks

    ReplyDelete
  56. சாய்பாபாவின் அறைகளில் கண்டறியப்பட்ட செல்வங்கள் குறிப்பாக ரொக்கங்களால் நானும் தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதத் துவங்கினே. இங்கே நல்லதொரு விவாதம் நடந்துள்ளது.. காணொளி http://www.ndtv.com/video/player/we-the-people/has-spirituality-turned-into-a-profit-industry/206047?sp

    ReplyDelete
  57. love all serve all help ever hurt never. this is the only wealth of sathya sai baba. out sider could not under stand the inner meaning. he mnever kept money. it was a river which flow to serve the people. you only saw the water when the river stopped it flow.you had seen the moneny when he died. but again it will flow towords service. critizising is easy but doing is not simple.dont say but do the right thing which is useful to others.

    ReplyDelete