Tuesday, May 17, 2011

தங்கம்மாள்புரம் தண்ணீர் சேகரிப்பு

வேம்பார் சென்றிருந்தபோது அருகில் இருந்த தங்கம்மாள்புரம் என்ற கிராமத்துக்கு அழைத்துச்சென்றனர். அந்தப் பகுதிகளில் பொதுவான தண்ணீர்ப் பிரச்னை ஒன்றுதான். ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது?

‘ஒரு காலத்தில் தரவைகளில் கிடைத்த தண்ணீரைக் கொண்டு நல்ல விளைச்சல் பார்த்தவர்கள் நாங்கள்’ என்றார் கிராமத்தில் இருந்த ஒருவர். இப்போது அங்கு மிளகாய் பயிர் செய்துள்ளார்கள். அது முழுவதும் மழையை மட்டுமே நம்பிப் பயிர் செய்யப்பட்டது. அதற்குப் பாசனம் செய்ய நீர் கிடையாது. மழை சற்றே குறைவாக இருந்ததால் அளவில் சிறியதாக இருந்தது காய்த்துக் குலுங்கும் மிளகாய்கள். ‘முன்பெல்லாம், நீட்ட நீட்டமாக, விரல் மாதிரி இருந்தன மிளகாய்கள்’ என்றார் ஒரு பெண்.

குடிக்கவே தண்ணீர் போதாத நிலையில் மிளகாய்ப் பயிருக்குத் தண்ணீர் கிடைப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். சுமார் 2006-ல் இந்த தண்ணீர்ப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று PAD என்ற தொண்டு நிறுவனம் அந்த கிராமத்து மக்களிடம் பேசியது. அரசுகளை நம்பிக் காத்திருக்காமல், மக்களாகவே நீர் நிலைகளை முன்னேற்றுவதில் ஈடுபடலாம் என்று முடிவானது.

அருகில் ஒரு கண்மாய் உள்ளது. தூரத்து மலைகளில் மழை பெய்யும்போது நீர் இந்தக் கண்மாய் வழியாக நிறைந்து ஓடி கடலில் கலக்கும். அந்த நீரை தடுப்பணை கட்டிச் சேகரித்து, ஒரு குளத்தில் பாய்ச்சினால், ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கும் என்று சிந்தித்து முடிவெடுத்தனர். ‘திட்டத்துக்கு ஆகும் செலவில் PAD பெரும்பான்மை நிதியைக் கொண்டுவரும். ஆனால் கிராம மக்கள் ஏதேனும் பங்களிப்பு தரவேண்டும்’ என்றார்கள் தொண்டு நிறுவனத்தினர். கிராமத்தினர் குறைந்தது ரூ. 10,000 திரட்டித் தருவதாகச் சொன்னார்கள்.

‘இதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான். கிராமத்தார்கள் பணம் சேர்த்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. அப்படி நடக்காது என்று நான் ரூ. 1,000 பந்தயம் கட்டுகிறேன்’ என்று கிராமத்தில் வம்பு பேசுபவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். கிராமப் பெரியவர் ஒருவர் உடனே, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு நன்கொடை நோட்டுப் புத்தகத்தில் வம்பர் பெயரை எழுதி, அதற்கு எதிராக ரூ. 1,000 என்று போட்டுத் தொடங்கிவிட்டார். விரைவில் 12,000 ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. மொத்தத் திட்டத்துக்கு ஆகும் தொகை ரூ. 4 லட்சம்.

ஹைதராபாத்திலிருந்து குழாய்கள் வந்து இறங்கின. சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு குழாய்களை, 3 மீட்டர் ஆழத்தில் தரையில் பதிக்கவேண்டும். அந்தக் குழாய்கள் செல்ல அப்பகுதியில் நிலம் வைத்திருந்தவர்கள் எழுத்துபூர்வமாக பத்திரத்தில் பதிவுசெய்து அனுமதி கொடுத்தனர். குழாய்கள் வந்திறங்கி ஜேசிபி இயந்திரம் வந்து சேர்ந்தது. கிராம இளைஞர்கள் குஷியில் ஹோதாவில் இறங்கினர். பெண்கள் தங்கள் பங்குக்கு காபி தயார் செய்து கொடுத்தனர். இயந்திரம் மண்ணைத் தோண்டத் தோண்ட, குழாய்கள் பதிக்கப்பட, மண் மேலே மூடப்பட, இரண்டே நாளில் குழாய் போடுதல் முடிந்தது. பிறகு அதே இயந்திரத்தைக் கொண்டு குளத்தைத் தூர்வாரி, ஓரத்தில் கற்கள் பதித்து, கம்பி வலைகள் போட்டு தயார் நிலைக்குக் கொண்டுவந்தாயிற்று.

மழைதான் உடனே வரவில்லை.

ஆனால் விரைவில் எங்கோ மழை பெய்ய, கண்மாயில் நீர் வர, குளம் நிறைந்தது. அன்றுமுதல் இன்றுவரை இந்தக் குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கிறது. மழை இல்லாத நேரங்களில் நீரில் மட்டம் குறைகிறதே ஒழிய முற்றிலும் வறண்டுவிடுவதில்லை.

செலவு செய்தது மக்கள். ஆனால் தூத்துக்குடி கலெக்டர் திறந்துவைத்தார் என்று கல்வெட்டு இருக்கிறது. அரசுத் தரப்பில் இதுபோல திறந்துவைக்கவாவது வருகிறார்களே என்று பாராட்டவேண்டும்.

*

இதில் பெரும் படிப்பினை நமக்கு உள்ளது. குறைந்தபட்சம் கிராமப்புறங்களில் தத்தம் பிரச்னைகளை மக்கள் ஓரளவுக்குத் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்குத் தேவையான பணத்தை பல வழிகளில் திரட்டமுடியும். இவற்றைச் செய்தபின், மக்கள் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கலாம். ஏன் தமக்கான நலத்திட்டங்கள் நடைபெறவில்லை என்று அதிகாரத்துடன் கேட்கலாம்.

நான் அங்கே போன நேரம், சில பெண்கள் குடத்தில் நீர் மொண்டபடி இருந்தனர். மாலை நேரம் ஊராட்சிக் குழாயிலும் நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர் உப்புத்தன்மை கொண்டது. எனவே, குடிக்க, சமைக்கப் பயன்படாது. அதற்கு குளத்தில் சேர்ந்திருக்கும் மழை நீர்தான் சரிவரும். இந்தக் குளத்தில் Reverse Osmosis வசதிகள் செய்துள்ளனர். தேவைப்பட்டால் அதனை இயக்கி, மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பெறலாம். அதற்கு, குடத்துக்கு இத்தனை என்று பணம் தரவேண்டியிருக்கும்.

இது முழுமையான தீர்வல்ல. ஆனால் ஓர் ஆரம்பம்.

தங்கம்மாள்புரம் நீர்நிலை மேம்பாட்டுக்குப்பின், அருகில் பிற கிராமங்களில் இதேபோலச் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றுதான் தெரியவருகிறது. இவர்களது அடுத்த முயற்சி, இதே ஊரிலேயே மேலும் சில பொது நீர்நிலைகளை உருவாக்கி, அதன்மூலம் விவசாயத்தையும் மேம்படுத்துவது. மழை நீரைச் சேகரித்தே இங்கு நிறையச் சாதித்துவிடலாம். இதுபோன்ற முயற்சிகள் தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற வறண்ட பகுதிகளுக்கு பெரும் பயனுள்ளதாக ஆகிவிடும்.

7 comments:

  1. நல்ல முயற்சி வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. very interesting! we should not depend on government for everything. so every village can do this and get improvement. thank you.

    ReplyDelete
  3. தூத்துக்குடி-நெல்லை நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டையிலிருந்து தெற்க்கு (சாயர்புரம்)நோக்கி சென்றால் தங்கம்மாள்புரம் என்று ஒரு கிராமம் உண்டு. நீங்கள் இங்கு குறிப்பிடும் கிராமம் அதுதானா?

    ReplyDelete
  4. தமிழகத்தில் RTI club என்று இருக்கிறதா ? தாங்கள் அது போன்று ஏதாவது துவங்க விருப்பமா ? என்னைபோன்ற இளைஜர்கள் நிறைய பேர் அதில் சேர்ந்து மாதம் ஒரு தொகை வழங்கி, வழக்கு போன்ற விசயங்களில் பங்கு கொண்டு நமது தமிழகத்தை ஒரு முன் மாதிரி மாநிலம் ஆக்க பாடுபடுவோம்.

    தயவு செய்து பதில் எழுதவும்.

    ReplyDelete
  5. //...இது முழுமையான தீர்வல்ல. ஆனால் ஓர் ஆரம்பம்....//

    ஆரம்பம் அல்ல. விட்டுப்போன பாரம்பரியம். நம் சமூகம் எப்போதும் குளம், ஏரி, கிணறு என்று தன்னிறைவு காணும் கலாச்சாரமே.

    ஆனால், பாரம்பரியம் கலாச்சாரம் போன்றவை கெட்ட வார்த்தைகள் என்று நினைத்து, வெள்ளைக்காரன் சொன்னபடி செய்வதுதான் நவீனம் விஞ்ஞானம் என்று குழப்படி செய்துவிட்டார்கள். முக்கியமாக நேரு. அந்த குழப்படியைப் பயன்படுத்தி பெரிய அணைகள் கட்டி காவிரி நீர், கேரளத்து நீர் என்று அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    மக்கள் பாரம்பரியம் நோக்கித் திரும்புவது நல்ல செய்தி. நல்ல செய்தி சொன்ன நீங்கள் வாழ்க !

    ReplyDelete
  6. பதிரி அவர்களே!

    2G Scam பற்றி உங்கள் கருத்துகளை நான் படித்த பிறகு உங்களை பற்றீய நல்ல அபிப்ராயம் எனக்கு இல்லாமலே போயிற்று. படித்தவர்கள் புத்திசாலியாகவோ, மனசாட்சி உள்ளவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. எனது கோரிக்கை அதை பற்றீயது அல்ல. நீங்கள்தான் அதில் ஊழலே இல்லை என்று ரொம்ப காலமாக எல்லா இடத்திலும் எழுதி வந்து உள்ளிர்களே? நீங்கள் ஏன் சுப்ரமணி சுவாமியைபோல் ஒரு பொது வழக்கு போட கூடாது. இதில் ஊழலே இல்லை என்ற உங்கள் வாதத்தை அவரை போல கோர்ட்டில் வாதடலாமே? அப்படி நடந்தால் உங்களுக்கு பிடித்த நபர்கள் இதில் இருந்து இந்த குற்ற(?)சாட்டில் இருந்து வெளி வருவார்களே? செய்வீர்களா? அப்படி இல்லையென்றால் இதில் நடந்துள்ள ஊழலின் அளவையாவது எழுதி இதுவரை இந்த விவகாரத்தில் அரைவேகாட்டுதனமாக நீங்கள் நடந்து கொண்டதற்கு (ஸ்பெக்ட்ரன் சர்சை எனும் கையேடு வெளியிட்டது)
    பரிகாரம் தேடி கொள்ளாலாமே? இதில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு பகலவன் என்றாலும் செய்த தப்பிற்கு ஒரு நல்லது செய்யலாமே? செய்வீர்களா?

    ReplyDelete