Monday, July 04, 2011

இன்றுமுதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவன்

இன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் எம்.ஏ வைணவம் படிப்புக்குப் பதிந்துகொண்டேன்.

வரிசை எண்ணைப் பார்க்கும்போது நான் இந்தப் படிப்புக்கு ஏழாவது மாணவன் என்று ஊகிக்கமுடிகிறது.

பதிந்துகொள்வது மிகவும் எளிதான வழிமுறைதான். ஒற்றைச் சாளரமுறையில் போனவுடனேயே முடிந்துவிடக்கூடிய காரியம். என் விண்ணப்பப் படிவத்தைச் சரிபார்க்கும்போது அவர்களுக்குச் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஐஐடியில் டிரான்ஸ்ஃபர் சர்ட்டிஃபிகேட் (டி.சி) கொடுப்பதில்லை. இருந்தாலும், ஐஐடி சென்று மைக்ரேஷன் சர்ட்டிஃபிகேட் என்று ஒன்றை வாங்கியிருந்தேன். ஆனால் அதனால் பயன் ஏதும் இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. அவர்களுக்குத் தேவை, என் பெயருடன் என் சரியான பிறந்த தேதி. அதைத்தான் அவர்கள் டி.சியில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்குபதில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அந்தத் தகவல் இருக்கும் என்றேன். அதனை எடுத்துக்கொண்டார்கள்.

பத்து நிமிடத்துக்குள்ளாக அட்மிஷனை முடித்து, கட்டணம் செலுத்த அனுப்பினார்கள். தொலைதூரக் கல்வி நிறுவனக் கட்டடத்தின் உள்ளேயே இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கவுண்டர் சரியான பாடாவதி. அதன்முன் சுமார் 12 பேர் ஆண்களும் பெண்களுமாக நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் பணம் பெற்று ரசீது தர வங்கி ஊழியர் அரை மணி நேரம் எடுத்துக்கொள்வார் போலத் தொண்றியது. வெளியே ஒரு இந்தியன் வங்கிக் கிளை தென்பட்டது ஞாபகம் வந்து அங்கு சென்று பணத்தைச் செலுத்திவிட்டு வந்து பார்த்தால் க்யூ அப்படியே தொங்கியபடி நின்றுகொண்டிருந்தது!

அடுத்து ரசீதைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, ஐடி கார்டையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன்.

முதலாம் ஆண்டில் மொத்தம் ஐந்து தாள்கள்:

1. வைணவ சமய வரலாறு. எழுதியவர் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார். புத்தகம் வைணவ சமய வரலாறு என்று சொன்னாலும் உண்மையில் இது ஸ்ரீவைஷ்ணவத்தின் - அதாவது ராமானுஜ பாரம்பரியமான விசிஷ்டாத்வைத உபயவேதாந்த வைணவத்தின் வரலாறு. வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும், பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் வைணவம் பற்றிய கருத்துகளிலிருந்து ஆரம்பிக்கும் புத்தகம், அடுத்து ஆழ்வார்கள் வரலாறுக்குச் செல்கிறது. அடுத்து நாதமுனிகள் தொடங்கி ராமானுஜர் வரை வருகிறது. இறுதியாக ராமானுஜருக்குப் பிந்தைய ஆசாரியர்கள் - வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் வரை சென்று முடிகிறது.

புத்தகத்தில் நிறைய எழுத்துப் பிழைகள்! பல்கலைக்கழகத்துக்கு உபயோகமாக, என் புத்தகத்தில் திருத்தங்களைச் செய்து ஆண்டிறுதியில் அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

2. தொல் இலக்கியங்களில் வைணவம். எழுதியவர் ஸுதர்சனர் எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். சமஸ்கிருதத்தில் புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், ஈஸாவாஸ்யோபனிஷத், தமிழில் பரிபாடல் ஆகியவற்றில் வந்துள்ள வைணவக் கருத்துகளை விளக்குகிறது இந்தப் புத்தகம். இதை நான் ரசித்துப் படிப்பேன் என்றே நினைக்கிறேன். முக்கியமாக பரிபாடலுக்கு - பரிபாடலின் வைணவப்பகுதிக்கு - எளிய தமிழில் உரை எழுதவேண்டும் என்று வெகு காலமாகவே நினைத்துவருகிறேன்.

3. திருமங்கையாழ்வார் பாசுரங்கள். எழுதியவர் முனைவர் இரா. ரங்கராஜன். பெரிய திருமொழியிலிருந்து சில பாசுரங்கள், சிறிய திருமடல், திருநெடுந்தாண்டகம் ஆகியவை மட்டுமே. சிறிய திருமடலும் பெரிய திருமடலும் தமிழ் பக்தி இலக்கியத்தின் மாஸ்டர்பீஸ். பெரிய திருமொழியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாசுரங்களும் பிரமாதமானவை.

4. இரகசிய இலக்கியம். எழுதியவர்கள்: முனைவர் டி. ராஜலக்ஷ்மி, முனைவர் எம்.கே. சீனிவாசன். ரகஸ்யம் என்று சொல்லப்படுவது மூன்று மந்திரங்களான: (1) எட்டெழுத்து (ஓம் நமோ நாராயணாய) (2) த்வயம் எனப்படும் ‘ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே ஸ்ரீமதே நாராயணாய நம:’ (3) சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும், ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:’ இந்த மூன்று மந்திரங்களுக்கும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக நுணுக்கமான (எனவே ரகசியமான) பொருள் உள்ளது. ஆசாரியனிடமிருந்துதான் இவற்றைக் கற்கவேண்டும் என்பதன்மூலம் ஆசார்யனின் இடம் உயர்வாகக் குறிக்கப்படுகிறது.

வடக்குத் திருவீதிப் பிள்ளையின் பிள்ளை லோகாசாரியரின் யாத்ருச்சிகப்படி (இவரது முமுக்ஷுப்படி என்ற நூல் அதிகப் பிரபலமானது), ஸ்ரீவசனபூஷணம், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்யஹ்ருதயம், வேதாந்த தேசிகரின் ரஹஸ்யத்ரயஸாரம் ஆகியவற்றை முன்வைத்து வைணவ ரகசியங்கள் பற்றி இந்தப் பாடப் புத்தகம் விரித்துரைக்கிறது.

சமாஸ்ரயணம், பரன்யாசம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரும்பாலும் இந்த மந்திரத்தைக் கற்று தினசரி சொல்லிக்கொண்டிருந்தாலும் அதிகம் இதன் நுண்ணிய விளக்கங்களில் ஆழ்ந்திருக்கமாட்டார்கள்.

5. இறுதியாக வைணவத் தத்துவங்களின் பிரிவுகள் என்ற தாள். எழுதியவர் முனைவர் எம்.கே.சீனிவாசன். ஒருவிதத்தில் இதுதான் ‘இந்தியாவில் வைணவமும் பிற வைதீக சமயங்களும் - வரலாறு’ என்ற தலைப்பில் இருக்கக்கூடியது. உத்தர மீமாம்சைப் பின்னணியில் வந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சமயங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்து நிம்பார்கரின் த்வைத அத்வைத தத்துவம், விஷ்ணு ஸ்வாமியின் விசுத்த அத்வைதம், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அசிந்த்ய பேதாபேதம் (கௌடீய வைஷ்ணவம்), ராமானந்தரின் ஜானகீ வல்லபசம்பிரதாயம், வல்லபாசார்யரின் சுத்த அத்வைதம், சங்கர தேவரின் மஹாபுருஷ சித்தாந்தம், ஸ்வாமி நாராயணரின் நவ்ய விசிஷ்டாத்வைதம் ஆகியவை பற்றிய அறிமுகங்களையும் ஆசிரியர் கொடுத்துள்ளார். இவற்றில் தெற்கில் உள்ள சம்பிரதாயங்களைத் தவிர பிறவற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, அவை குறித்து எந்தப் புரிதலும் கிடையாது. எனவே இவற்றைப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது.

***

ஆழ்வார்கள் பற்றி இன்னுமொரு தாள் முதல் ஆண்டிலேயே இருந்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் + ஐந்தாம் தாள்களை ஒரே பாடமாகச் சுருக்கி வைத்துவிட்டு, பெரியாழ்வார்/ஆண்டாள் பாசுரங்களை ஒரு பாடமாகக் கொடுத்திருக்கலாம்.

***

இனி நான் எழுதவுள்ள வைணவம் சம்பந்தமான பதிவுகள் அனைத்துக்கும் ‘வைணவம்’ என்று tag கொடுத்து எழுதுகிறேன். இவற்றைத் தனியே சேர்த்துவைத்துப் படிக்க விரும்புபவர்களுக்கும் சரி, ஒதுக்க விரும்புபவர்களுக்கும் சரி, உபயோகமாக இருக்கும்.

24 comments:

 1. எனக்கென்னவோ நீங்கள் தான் அவர்களுக்கு வகுப்பெடுப்பீர்கள் என்று தோன்றுகிறது.

  அமெரிக்க பல்கலைகழகங்களில் டிசி முறை உண்டா?

  ReplyDelete
 2. What you do for Tamil language is much better than what some of the self-proclaimed Dravidians (who sit in Bangalore and whining about Hindi-thinippu) do. All the best. It is very interesting to see someone voluntarily studying after marriage ;-) I wish I dont lose my curiosity to learn and thanks for being an inspiration.

  ReplyDelete
 3. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எனக்குத் தெரிந்து டிசி கிடையாது.

  மாணவர்களுக்கு அவசியம் தேவை அடக்கம். நான் எப்போதுமே அடக்கமான மாணவனாகவே இருந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே.

  ReplyDelete
 4. All the best Badri. Hoping to learn a lot about Srivaishnavism through your posts. Are the books you have mentioned available for non-students ?

  ReplyDelete
 5. ஆல் தி பெஸ்ட்.
  அன்னன்னிக்கு பாடத்தை அன்னன்னிக்கே படிச்சிடுங்க.

  //வைணவ ரகசியங்கள் //
  ரகசியம் என்பதற்கு revelation என்று பொருள் (eg. Thilak's Geetha Rahasya). அவ்வாறு புரிந்துகொள்ளாமல் secret என்று தவறாக திருக்கோஷ்டியூர் நம்பி புரிந்துகொண்டார் என்று படித்த ஞாபகம். ராமானுஜருக்கு சமஸ்கிருத சொல்லிற்கானப் பொருளுக்கும், தமிழில் புழக்கத்திலுள்ள பொருளுக்கும் வித்தியாசம் தெரிந்திருந்ததால் துணிந்து கோவில் கோபுரம் ஏறி அறிவித்ததார் என்றும் நினைக்கலாம்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள். ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் எனது பாட்டி வகையறா சொந்தம். நல்ல மனிதர், பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். புத்தகம் பற்றிய உங்களது கருத்துக்களை அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், தற்போது அவரது பதிப்பகத்தை அவரது தனயன் நடத்துவதாக கேள்வி. ஸ்ரீரங்கம் செல்லும் பட்சத்தில் அவர் இல்லத்துக்கு செல்ல முயற்சிக்கவும். இல்லத்தின் பெரும்பான்மையான பகுதி புத்தகங்களால் நிரப்பப்பட்டிருக்கும். இலக்கியம், பக்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம், சமஸ்க்ருதம் உட்பட. அவரே வைஷ்ணவம் பற்றிய வகுப்புகள் நடத்துவதாக கேள்வி. தங்களது புதிய தேடலுக்கு வாழ்த்துக்கள். உங்களது பதிவின் மூலம் நானும் வைஷ்ணவம் பற்றி மேலும் அறிய முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 7. ராமதுரை எழுதியது
  திருமணமாகி அத்துடன் தந்தையுமாகி விட்ட பின்னர் உயர் படிப்பு படிப்பது என்ப்து அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல. என் அனுபவத்தை வைத்து இதைக் கூறுகிறேன். திரு.பத்ரி அவர்களுக்கு இது பெரிய விஷயமல்ல.அவர் கூறியுள்ளதிலிருந்து அவர் தான் படிக்கப் போகிற விஷயங்கள் பற்றி எடுத்த எடுப்பிலேயே தெளிவாக இருக்கிறார் என்பது புரிகிறது.ராமதுரை

  ReplyDelete
 8. ராமன் அழகிய மணவாளன்: நான் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வீட்டுக்குச் சென்றுள்ளேன். நாலாயிரத்தின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானங்கள் (கூடவே பிற ஈடுகள்) அவரிடமிருந்தே வாங்கினேன். கோயில் ஒழுகு, குரு பரம்பரப் பிரபாவம் ஆகியவற்றையும் அவரிடமிருந்தே பெற்றேன். அபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்.

  ReplyDelete
 9. Krishnan: These books are not sold in the market. If they did, who would buy anyway? They are prepared specifically for the University by the concerned authors, I guess commissioned by the Univ. They are printed like 'standard univ like' books.

  If you are too keen, you can take my books and photocopy them, though we will be violating all sorts of copyrights:-)

  ReplyDelete
 10. இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. யாரும் கலங்கவேண்டாம்.

  ReplyDelete
 11. அடக்கமான மாணவர், பிழைதிருத்தம் என்று துவங்கி பொருள்திருத்தம் என்று கைவக்காதிருக்க ஹரன் பிரசன்னா வழிபடும் இறைவன் அருள் பாலிக்கட்டும்.
  ஒருவேளை இன்னும் பத்தாண்டுகள் கழித்து அடியேன், பூர்வாசிரமத்தில் புத்தக வெளியீட்டாளர் என்று பத்ரி என்று முன்னர் அறியபட்ட ஜீயர் பேட்டி கொடுத்தாலும் வியக்க வேண்டாம்,எம்பெருமான் திருவுள்ளம எப்படியோ :).

  ReplyDelete
 12. Great inspiration for everybody.

  கோனார் நோட்ஸ் மாதிரி விளக்கப்பதிவுகளை எதிர்பார்க்கிறேன். :-) ஒரு வேளை எதிர்காலத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் படிக்கும்போது வசதியா இருக்கும்.

  வைஷ்ணவம்னு தலைப்பு வெச்சிட்டு, த்வைதம் பற்றி மிக குறைவாகவே பாடங்கள் இருப்பதாக கருதுகிறேன். சரிதானே?

  அன்புடன்
  சத்யா
  http://dasar-songs.blogspot.com
  http://boochandi.com

  ReplyDelete
 13. //வடக்குத் திருவீதிப் பிள்ளையின்....(இவரது முமுக்ஷுப்படி என்ற நூல் அதிகப் பிரபலமானது)//

  அட நாராயணா! ஆரம்பமே அபசுருதியுடனா?

  முமுக்ஷுப்படி அஷ்டாதச ரஹஸ்யங்களில் ஒன்று. இதை அனுக்ரகித்தவர் பிள்ளை உலகாரியன் என்றும் பிள்ளைலோகாசாரியார் என்றும் அழைக்கப்பட்ட ஆசாரியன். வடக்குத்திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாச்சரியருக்குக் காலத்தில் முற்பட்டவர். திருவாய்மொழிக்கு முப்பத்தாறாயிரப்படி ஈடு அருளிச் செய்தவர்.

  டகால்டி வேலை வைணவத்தில் எடுபடாது. ரகசியம் என்பது கிறித்தவத்தில் சொல்லப்படுகிறமாதிரியான ரிவிலேஷன் இல்லை.திருக்கோஷ்டியூர் நம்பி தவறாகப் புரிந்துகொண்டார் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  ReplyDelete
 14. பத்ரி என்ற பெயரை வைத்து கொண்டு, சைவமா அவர் படிக்க போகிறார். எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு, சேலைக்குள் வேலை, சந்திற்குள் சிந்து.

  ReplyDelete
 15. கிருஷ்ணமூர்த்தி: சரி செய்துவிட்டேன்.

  ReplyDelete
 16. Thanks Badri. Do not want to violate any copyright :-) Maybe if lucky may find it in some secondhand book shop/pavement stalls, etc.

  ReplyDelete
 17. கைல பேனா புடிச்சு எழுதி டச் விட்டுப் போயிருக்குமே? பரீச்சைக்கு லேப்டாப்பெல்லாம் கெடையாது... எழுதி பிராக்டீஸ் பண்ணிக்கிடுங்க

  ReplyDelete
 18. Hallo Badri
  வைணவத்தை ஒரு பாடமாய் ஒரு பல்கலை கழகம் வைத்துள்ள விஷயம்,ஆச்சரியத்தை தருகிறது.சரித்திரம் தெரிந்து கொள்ள கல்லூரிக்கோ, பல் கலை கழகத்துக்கோ போக வேண்டாம், நல்ல புத்தக கடையை அனுகுவதே உசிதம்.நமது பாட திட்டத்தின் நோக்கம் மரபு வழி சிந்திக்க கூடிய middle class முகங்களை தயாரிப்பதே.தொல் காப்பியம் பற்றி வித்யாசமான விமர்சன பார்வை உள்ள நீங்கள் சரித்திரம் அல்லது வைணவம் பற்றிய அறிவு தாகத்தால் பல்கலை கழகம் என்கிற பாலைநில சோலைகளை நாடியது வேடிக்கயாய். உள்ளது .கல்வி கூடங்கள் MALL களாய் மாறிப்போன நாள் இது.
  வைணவம் பற்றி திரு.உ.வே.திருமலாச்சாரியார் சில அரிய நூல்கள் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கம் கோவில் மணல் வெளியில்,ராமர்,ஆண்டாள் சன்னதியை தொடர்ந்து கிழக்கு கோபுரத்துக்கு (வெள்ளை கோபுரம்) போக நுழையும் வெளி வாயிலுக்கு இடது கை புறம் ஒரு நூலகம் இருந்தது, அதில் நல்ல வைணவ புத்தகங்கள் இருந்தது.இப்போது நூலகம் அங்கு இல்லை.உடையவர் சன்னதிக்கு அருகே இருந்த நந்தவனம் எதிரில் அந்த நூலகம் ஆரம்ப நாட்களில் இருந்தார் போல் ஞாபகம். இப்போது நூலகமும் இல்லை; நூல்களும் இல்லை.நாலாயிர திவ்விய ப்ரபந்தம் பற்றி யூனிவர்சிட்டி கண்டு கொள்ளவில்லையா?
  ரகசியம் என்பது உள் உறை பொருளாய் சொல்லப்பட்டதாய் அர்த்தம் செய்து கொள்ளலாம்.ரகசியம்- revelationக்கு வழி காட்டும்."எத்தை தின்று எங்கே கிடக்கும் என்பதற்க்கு, அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்ற பதில் புரிந்தால் ரகசியம் வசப்படும். எல்லாம் கண்டவர், விண்டிலர்,, விண்டவர் கண்டிலர் கதை தான்.ஏதுவும் புரியவில்லை என்றால்-
  மானாட, மயிலாட பார்த்த நேரம் போக மீதி நேரத்தில்....
  "மண் கொண்டு,மண் உண்டு,மண் உமிழ்ந்த மாயன் என்று
  எண் கொண்டு என் நெஞ்சே இரு"

  நல்ல தமிழில் எழுதும் உங்களுக்க வாழ்த்துக்கள்.
  a-nagarasan

  Ps-Please visit a-nagarasan2000Blogspot.com

  ReplyDelete
 19. ஏதாவது அதிரடியா செஞ்சிக்கிட்டே இருக்கீங்க சார் :-)

  ReplyDelete
 20. புதிய போஸ்ட் ஒன்றுமே வரவில்லையே! இவ்வளவு தீவிரமாக படிக்க ஆரம்பிப்பீர்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

  ReplyDelete
 21. வைணவம் தங்கள் மூலம் நாத்தீகன் வாய் மொழியாக வருமென்று காத்திருந்தேன்.. அநேகமாக தேர்வு நேரத்தில் படித்ததிலிருந்து ஏதாவது பதிவு போடுவீர்கள் என நினைக்கின்றேன். எப்ரலில் ஏதாவது எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
 22. அறிமுகமே கண்ணக் கட்டுதே :)

  ஒர் சந்தேகம். எம்.ஏ. வரலாறு படிக்க சென்னைப் பலகலைக் கழகத்தில் இடம் இல்லை எனில் வேறு பல்கலைக் கழகத்தில் சேர முயற்சித்திருக்கலாமே? ஏன் வேறு பட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்!

  ReplyDelete