Wednesday, November 30, 2011

அந்நிய நேரடி முதலீடு - 2/n

உற்பத்தியாளர் - சி & எஃப் - மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் என்ற இந்த மாபெரும் சங்கிலி, நவீன வணிக யுத்தி. பாரம்பரியமாகப் பொருள்கள் உருவாக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்ததிலிருந்து மாற்றம் பெற்ற ஒன்று. ஆனால், மேல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று சொல்லமாட்டேன்.

ஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் மாபெரும் உற்பத்தி நிலையங்களாகச் செயல்பட்டன. இந்தியர்கள்போல பருத்தித் துணி நூற்று, அதில் சாயம் சேர்த்து, டிசைன்களைச் செய்யும் நுட்பம் உலகில் எங்கும் இருக்கவில்லை. அதனால்தான் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியா வந்து அந்தத் துணிகளை வாங்கிச் சென்றன. பின் நிலைமை மாறியது.

தொழில்நுட்பம், வணிகத் திறன், முதலீடு, சந்தை ஆகிய நான்கும் சரியாக அமைந்தால்தான் அங்கே லாபம் சாத்தியமாகும். இன்று மிகச் சில துறைகள் தவிர்த்து, தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ராக்கெட் தொழில்நுட்பம், அணுத் தொழில்நுட்பம் மற்றும் சில அதி உயர் நுட்பங்கள் தாண்டி அனைத்தும் இன்று இந்தியாவில் ஓரளவுக்கு இருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் 1990-களுக்கு முந்திவரை இந்தியாவில் சொந்தமாக கார்கள் தயாரிக்கத் திறன் கிடையாது. இரு சக்கர மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும் சரியான திறன் கிடையாது. அதனால்தான் தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்திக்கொண்டோம். மாருதி சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா, இப்படி.

ஆனால் இன்று நம் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு உலகின் பல மூலைகளிலிருந்தும் வேண்டிய தொழில்நுட்பத்தை வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்து வணிகத் திறன். இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல. நம் நாட்டிலேயே கடந்த மூன்று பத்தாண்டுகளில் விற்பனைத் திறன் படைத்த பல எக்சிகியூட்டிவ்கள் உருவாகியுள்ளனர். விளம்பர ஏஜென்சிகள் (பெரும்பாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் கிளைகள்!) உருவாகியுள்ளன.

இப்போது முதலீட்டுக்கு வருவோம்.

இந்தியாவில் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எல்லாம் புளிப் பானைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பணம். இந்தியர்கள் ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளில் தம் பணத்தைப் போடுவதே இல்லை. அதற்கான பாரம்பரியம் வெகு சில சாதிக் குழுக்களில் மட்டுமே இருந்தது. தமிழ் பதிப்புலகம் பெரும்பாலும் செட்டியார்களின் கைகளிலேயே இன்றும் இருப்பது ஏன்? அவர்கள்தான் அதில் முதலீடு செய்யத் தயாராக இருந்தார்கள்.

ஏழை பாழைகள் எல்லாம் தம் பணத்தைக் கொண்டு பெரும் முதலீடு ஒன்றில் இறக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பணம் படைத்தவர்களைப் பற்றித்தான் என் கருத்தே. மாறாக, 16-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இங்கிலாந்தவர்களும் டச்சுக்காரர்களும் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனிகளை உருவாக்கி, பணத்தை முதலீடு செய்து, பெரும் வணிகத்தில் இறங்கினார்கள். தொழில்முனைய விரும்பும் எவருக்கும் அந்தப் பணம் கிடைத்தது. இந்தியாவில் பார்சிகள், செட்டியார்கள், மார்வாடிகள், குஜராத்தி மேமோன்கள் போன்ற சில சாதிக் குழுக்களிடையே மட்டும்தான் இது சாத்தியமானதாக இருந்தது.

இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு 1990-கள் வரை, பணம் படைத்தவர்கள் மட்டுமே நிறுவனங்களை உருவாக்க முடிந்தது. அவர்களுக்கு ஞானம் உள்ளதா என்பதெல்லாம் முக்கியமில்லை. விஷயம் தெரிந்த நான்கைந்து பேரை அடிமை வேலையாளாகக் குறைந்த சம்பளத்துக்கு வைத்துக்கொண்டால் போதும்.

இது பெரியளவில் மாறத் தொடங்கியதே 1990-களின் பிற்பகுதியில்தான். அமெரிக்காவின் சிலிகான் வேலியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே வென்ச்சர் கேபிடல் பணம் 1970-களிலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தது. புத்துணர்ச்சி மிக்க இளைஞர்கள், தம் ஐடியாக்களை மட்டுமே முன்வைத்து, முதலீட்டாளர்களின் ரிஸ்க் கேபிடலை எடுத்துக்கொண்டு பல புதிய கம்பெனிகளை உருவாக்கினார்கள். 10-க்கு 9 தோற்றுப்போயின. ஆனால் வெற்றி பெற்ற ஒவ்வொன்றும் மாபெரும் நிறுவனமாக ஆனது.

இன்று இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் வால்மார்ட்டோ டிஸ்னியோ கோககோலாவோ சிறுவாட்டுப் பணத்தால் வளர்ந்துவிடவில்லை. முதலீட்டாளர்களின் ரிஸ்க் முதலீட்டால்தான் வளர்ந்தன.

இதனை மேலும் புரிந்துகொள்ள முதலீடுகளைப் பற்றிய முழுமையான புரிதல் முதலில் அவசியம். அடுத்து அதனைப் பார்ப்போம்.

10 comments:

  1. அப்பாடா, தமிழில் நிஜமாகவே Risk Premium பற்றி பேசக்கூடிய ஒரு நல்ல பதிவு, மேலும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. திரு.பத்ரி

    நான் இந்தப் பிரச்சனையை வேறு மாதிரி அணுகுகிறேன்.

    நீங்கள் சொல்வதுபோல அந்நிய முதலீட்டால் ஏற்பட்ட வளர்ச்சியை பொருளாதார வளர்ச்சி என்று பார்க்கலாமே தவிர ஒட்டுமொத்த வளர்ச்சி என்று பார்க்க முடியவில்லை.

    வங்கிகள், ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை
    மட்டுமே பார்த்துவிட்டு ஏற்பட்ட விளைவுகளை பார்க்காமல் விட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

    வங்கிகளை எடுத்துக் கொள்வோம். வங்கிகள் அதிகமாக வீட்டுக்கடன் கொடுத்ததால் மனிதனின் பேராசை
    அதிகமாகி விவசாய நிலங்களையெல்லாம் வாங்கி வீடு கட்டிக் கொண்டான்.
    காடுகளையும் அழித்துவிட்டான். அழித்துக் கொண்டிருக்கிறான். ஆடம்பரமாக வீடு கட்டும்போது
    தேவைக்கு அதிகமாக ஆற்று மணலை சுரண்டி விட்டான். காடுகள் இருந்தால் மழையாவது வரும்.
    அழித்ததால் மழையின் அளவு குறைந்து விட்டது. வரும் மழையும் ஆற்று மணலை சுரண்டி விட்டதாலும்
    தார் சாலைகளாலும் நிலத்திற்கு போகும் வழியில்லாமல் நிலத்தடி நீரையும் குறைத்து விட்டான்.

    வீட்டு வாடகை அதிகமாகின்றன். யாரும் தேவைக்குத் தகுந்ததுபோல வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.
    பெரிய பெரிய வீடுகளாக கட்டுகிறான். வாடகைக்கு விடுகிறான். வாடகையும் மிக அதிகம்.

    வங்கிகள் கார் வாங்க கடன் கொடுப்பதார் கார்களின் எண்ணிக்கை அதிகமாகின்றன. சுற்றுப்புறச் சூழலைக்
    கெடுக்கிறான். எரிபொருளின் தேவையை அதிகமாக்குகிறான். எரிபொருளின் விலையும் அதிகமாகின்றன.

    சரி ஆடம்பரமாக வீடுகளைக் கட்டிக் கொள்ளட்டும். கார்களை வாங்கிக் குவிக்கட்டும். பக்கத்து வீட்டில்
    யார் இருக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. பேசுவதில்லை. பண்பாட்டைச் சீர்குலைக்கிறார்கள்.

    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அந்நிய முதிலீடு என்று சொல்லி எல்லாத் துறைகளிலும்
    முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக சொல்லிக் கொள்ளலாமே தவிர வாழ்க்கைத்
    தரத்தைக் குறைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. நீங்கள் இதையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும்.

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

    ReplyDelete
  3. பத்ரி சார் அருமையான பதிவு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நம் எதிர்காலம் இருண்டுவிடும் கிரீஸ் ,ஸ்பெயின் போல் நாமும் பொருளாதரத்தில் வீழ்ந்துவிடுவோம் என்று பயம் காட்ட படுகிறது . வளர்ச்சியில் உள்ள வாய்ப்பும் வியாபார உள்ள கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி நமது வளர்ச்சியில் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து, நமது மனநிலை எதிலும் பாதுகாப்பு பாட (Build opperate Transfer ) விஷயங்களில் நம்மவர்களுக்கு நம்பிக்கை இல்லை .

    பெரும்பாலும் பேப்பர் டீலேர்களாகவும் ,அச்சகங்களும் அதனை சார்த்த தொழில்களிலும் செட்டியார் இருந்துள்ளார்கள் ,பேப்பர் கடன் வாங்காமல் பதிப்பக தொழில் செய்ய முடியாது ,பாதுகாப்பு இல்லாமல் அடுத்தவர்க்கு பேப்பர் கடன் தராமல் தன் சமுகதவற்கு பேப்பர் கடன் கொடுத்து கட்டுக்குள் வைத்து இருந்ததால் தான் இன்றும் பதிப்பக துறையில் செட்டியார்கள் அதிகம்

    ReplyDelete
  4. "levis jeans" ஸும்,"van heusen"ஸும்
    வந்ததால் - எங்களின்
    பருத்தி காதி துணிகள்
    பழசாய்ப் போயின!

    "நைட்டியும்","கவுனும்"
    வந்ததால் - எங்களின்
    தாவணிகளும்,புடவைகளும்
    தரமிழந்துப் போயின!

    "pizza" வும் "burger" ரும்
    வந்ததால் - எங்களின்
    இட்லி,சப்பாத்திக்களை
    சுவை இழக்க வைத்தன!

    "axe perfume" உம் "olay" க்களும்
    வந்ததால் - எங்களின்
    மஞ்சளும்,மருதாணிக்களும்
    வாசம் இழந்துப் போயின!

    "valentine's day, friendship day" க்களும்
    வந்ததால் - எங்களின்
    நட்புக்களும்,கல்யாணங்களும்
    கோர்ட் படிகள் ஏறுகின்றன!

    "cricket"டும்,"golf" பும்
    வந்ததால் - எங்களின்
    கபடியும்,மல்யுத்தமும்
    களையிழந்துப் போயின!

    "wine" னும்,"vodka" வும்
    வந்ததால் - எங்களின்
    கூழையும்,கள்ளையும்
    குழித்தோண்டிப் புதைத்தன!

    "standard charted,american express bank" கும்
    வந்ததால் - எங்களின்
    கூட்டுறவு வங்கிகள்
    திவாலாகிப்போயின!

    "dollar ,euro" க்களும்
    வந்ததால் - எங்களின்
    மூளைகள் வெளிநாடுகளில்
    அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

    இதோ....
    "walmart" டும்,"tesco" வும்
    வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
    நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
    உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
    அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
    மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

    இருப்பதை விட்டுவிட்டு
    பறப்பதற்கு ஆசைப்படும்
    அரசியல் அதிகாரிகளுக்கு
    மீனைவிட தூண்டில் பெரிதென்று
    புரிவதெப்போது?

    ReplyDelete
  5. பத்ரி, போற போக்கப் பாத்தா நாளைக்கு யாருக்காவது ஜுரம் வந்தா கூட அந்நிய முதலீடுதான் காரணம்னு சொல்லிருவாங்க போல! மேல இருக்கற லிஸ்டு பாத்தீங்களா? :)

    ReplyDelete
  6. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டுக்காரன் நன்றாக மந்திரம் ஓத தெரிந்தவன் என்பதால், இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெளிநாட்டுக்கு சேவை செய்ய வழங்கப்படும்.

    கேரளா "பத்மநாப சாமி கோவில்" உட்பட............

    ReplyDelete
  7. //சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நம் எதிர்காலம் இருண்டுவிடும் கிரீஸ் ,ஸ்பெயின் போல் நாமும் பொருளாதரத்தில் வீழ்ந்துவிடுவோம் என்று பயம் காட்ட படுகிறது //

    இல்லை. அந்நாட்டு அரசுகள் வாங்கியிருக்கும் கடனைத் (180-190% of their GDP) திருப்பித்தர முடியாததால். வட்டி கட்ட வட்டிக்கு கடன் வாங்கினால் கடன் சுமை ஏறுமல்லவா?

    ReplyDelete
  8. **
    தேவைக்கு அதிகமாக ஆற்று மணலை சுரண்டி விட்டான்.
    **

    மணலே இல்லாமல் வீடு கட்டும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே? நம்மூர் IITக்களையும், அண்ணா பல்கலைக் கழகங்களையும் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியது யார்?

    தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய்?

    ReplyDelete
  9. @விஜயன்

    ஏர்டெல், டாடா, பிர்லா நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது ஓக்கேவா?

    ReplyDelete