Wednesday, November 16, 2011

ஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்

[இன்று வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

எனக்கு வரும் எல்லாத் தொலைபேசி அழைப்புகளையும் நான் பெரிதும் மதிப்பேன். புதிய அழைப்பு என்றால், புதிய மனிதருடனான அறிமுகம் என்று அர்த்தம். ஒருநாள் காவ்யா என்ற இளம் பெண் தொலைபேசியில் பேசினார். ஹெலிகாப்டருக்கு வாடகை எவ்வளவு என்று கேட்டார். பறக்கும் நேரத்தையும் காத்திருக்கும் நேரத்தையும் பொருத்தது என்றேன். சுமார் மூன்று மணி நேரப் பயணம் என்றால் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் ஆகும் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய குரலில் ஒரு சோகம் கவ்வியதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மிகவும் தயக்கத்துடன், அரை மணி நேரத்துக்குக் கிடைக்காதா என்று கேட்டார். அரை மணி நேரத்துக்கு என்றாலும் முழு நாளையும் அதற்கென ஒதுக்கத்தான் வேண்டியிருக்கும். சரி எங்கு போகவேண்டும் என்று கேட்டேன். கூர்க் என்றார். அப்படியானால், கூர்குக்குப் போக வரும் செலவையும் அவரே கொடுக்க வேண்டியிருக்குமே என்றேன். அந்தப் பெண்ணுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவர் படிக்கிறாரா? எங்காவது வேலை பார்க்கிறாரா? எதற்காக ஹெலிகாப்டர் தேவைப்படுகிறது? அந்தப் பணத்தை எப்படிக் கொடுப்பார்? அந்தப் பெண் சொன்ன கதையைக் கேட்டதும் நெகிழ்ந்து போய்விட்டேன். அந்தப் பெண், தன் அப்பாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தர விரும்புகிறாராம். ஹெலிகாப்டரில் அப்பாவைப் பறக்கவைக்க விரும்புகிறாராம்.

காவ்யா சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய அப்பா மிகவும் உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தாராம். என்ன விஷயம் என்று கேட்டபோது, நான் இன்று ஹெலிகாப்டரில் வந்தேனே என்று குழந்தைபோல் குதூகலித்தாராம். என்ன விஷயம் என்றால், அவரும் முதலமைச்சர் குண்டு ராவும் நண்பர்களாம். எதேச்சையாக இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அவர் தன் ஹெலிகாப்டரில் காவ்யாவின் அப்பாவை அழைத்துவந்திருக்கிறார். அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த காவ்யாவின் அப்பா சிறிது நேரம் கழித்து ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார்: ‘இது என் முதல் ஹெலிகாப்டர் பயணம் மட்டுமல்ல. இதுவே கடைசியாகவும் இருக்கும்.’

அப்பா அப்படிச் சொன்னது காவ்யாவின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அன்றே தன் அப்பாவை எப்படியாவது மறுபடியும் ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அன்று தொடங்கி, தனக்குக் கிடைக்கும் காசு அனைத்தையும் சேமித்து வந்திருக்கிறார். இப்போது அவருடைய அப்பாவுக்கு அறுபதாவது வயது நெருங்கிவிட்டிருக்கிறது. பிறந்த நாள் பரிசாக ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்யத்தான் என்னிடம் வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். கூர்கில் மடிகேரி என்ற ஊரில் அவர்கள் வசித்துவந்தார்கள். மடிகேரிக்கு ஹெலிகாப்டரைக் கொண்டுபோய் அப்பாவை அசத்தவேண்டும்; அங்கிருந்து அவரை பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பெண்ணின் ஆசை. ஒரு மணி நேரப் பயணத்துக்கு எவ்வளவு வாடகை என்பதைச் சொன்னேன். பயண நேரம் எவ்வளவு என்பதையும் சொன்னேன்.

‘ஒன்று, அவரை பெங்களூருக்குக் கொண்டுவரலாம். அல்லது வெறுமனே பத்து இருபது நிமிடங்கள் வானில் பறக்க வைக்கலாம். எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மொத்த வாடகையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி தருகிறேன்’ என்று சொன்னேன். நான் சொன்ன தொகை அவரைப் பொருத்தவரை அப்போதும் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இருந்தும் உறுதியாக, ‘இன்னும் ஒரு வருடத்துக்குள் அந்தப் பணத்தை எப்படியும் சேமித்துவிடுவேன். அதன் பிறகு உங்களை வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னார். அதன் பிறகு வேறு வேலைகளில் ஈடுபடலானேன். அவரை மறந்தேவிட்டேன்.

சிறிது காலம் கழித்து திடீரென்று ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னைத் தெரிகிறதா என்று கேட்டார். முதலில், எனக்கு யார் என்று தெரியவில்லை. ‘நான்தான் காவ்யா! என் அப்பாவுக்காக ஹெலிகாப்டர் வேண்டும் என்று கேட்டிருந்தேனே?’ என்று நினைவுபடுத்தினார்.

நாங்கள் பேசிப் பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. காவ்யாவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. அவருடைய கணவரும் மாமனாரின் ஆசையை நிறைவேற்றித் தர முன்வந்திருந்தார். காவ்யாவிடம் சொன்னேன்: ‘இதோ பார். மடிகேரிக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிக்கொள். வாருங்கள், சும்மா வெளியே போய்விட்டு வருவோம் என்று உன் அப்பாவை வாசலுக்கு அழைத்து வா. காரிலோ அல்லது ஆட்டோவிலோ எங்கோ போகக் கூப்பிடுகிறாள் என்று நினைத்து வருவார். வாசலில் இருக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் மூழ்குவார். எங்களுடைய சிறிய பரிசாக உங்களை காவிரி ஆற்றின் மேலாகப் பறக்கவைக்கிறோம்’ என்று சொன்னேன்.

காவ்யாவுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது.

காவ்யாவின் அம்மாவிடமும் சகோதரியிடமும் இந்தத் திட்டத்தைச் சொல்லி ரகசியமாக வைத்துக்கொள்ளச் சொன்னோம். அவர்களும் பயண ஏற்பாடுகளை அப்பாவுக்குத் தெரியாமல் செய்தனர். காவ்யாவும் அவருடைய கணவரும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மடிகேரிக்குப் போய் நின்றார்கள். அப்பாவை வாசலுக்கு அழைத்து வந்தார்கள். வாசலில் நிற்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் கிட்டத்தட்ட அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்று சிரித்தபடியே பின்னர் சொன்னார் காவ்யா. நடு வானில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். காவிரி மேலாகப் பறந்தார்கள்.

கூர்கில் இருப்பவர்களுக்கு காவிரி ஒரு புனித நதி. அதை வலம் வந்து அந்தப் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். யாருமே வாழ்வில் அப்படி ஒரு பிறந்த நாளைக் கொண்டாடியிருக்க முடியாது. நாங்கள் வெறும் ஒரு ஹெலிகாப்டர் கம்பெனி நடத்தவில்லை என்ற மன நிறைவு அடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

புத்தகத்தை வாங்க

No comments:

Post a Comment