Tuesday, January 03, 2012

2011: கனிமொழி

கருணாநிதியின் இலக்கிய வாரிசு என்று அறியப்பட்ட கனிமொழி, அரசியலில் எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் என்பதை வெளிப்படுத்திய ஆண்டு 2011.

உண்மையில், கருணாநிதியின் அடுக்குமொழி வசன கவிதைகளைவிடச் சிறப்பான கவிதைகளை எழுதக்கூடியவர் கனிமொழி. ஆனால் மூத்தாள் பிள்ளைகள், இளையாள் பிள்ளைகளில் யாருக்குச் சொத்தும் அதிகாரமும் என்று நடந்த போட்டி காரணமாக அரசியலுக்குள் திணிக்கப்பட்டவராகவே கனிமொழியை நான் பார்க்கிறேன்.

கனிமொழியின் மொத்த அரசியல் பங்களிப்பு அதிகமில்லை. அவர் அரசியலுக்குள் நுழைந்தவுடனேயே கொள்கை, போராட்டம் என்று எதிலும் ஈடுபடாமல் பவர் பாலிடிக்ஸ் என்பதில் நுழைந்தார். அதற்குக் காரணம், கருணாநிதிக்கு மகள்மீதான வாஞ்சையும் மகளைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டதும்.

அதிகாரம் மமதையைத் தரும். மமதை இலக்கியத்தை விரட்டும். கனிமொழியின் நாடாளுமன்ற உரைகளோ அல்லது பிற பேச்சுகளோ, ஓர் இலக்கியவாதியின் திறனை வெளிக்காட்டுவதாக இல்லை.

திமுகவின் மாநில அமைச்சர்கள்கூட ‘எம்.பி மேடம்’ என்றுதான் அவரை அழைத்தார்கள். இதுபோன்ற அதிகாரக் கிளிகிளுப்புகளை அவர் புறம் தள்ளியிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இவை தரும் போதை மனிதர்களுக்குப் பிடித்துவிடுகிறது.

சங்கமம், செம்மொழி மாநாடு போன்றவற்றில் ஈடுபட்டு தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்டார் கனிமொழி.

தயாநிதி / கலாநிதி மாறன்களுக்கும் கருணாநிதிக்கும் சண்டை ஏற்படக் காரணமாக இருந்த தினகரன் எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, தயாநிதி மத்திய அமைச்சிலிருந்து பதவி விலக, ஆ. இராசா தொலைத்தொடர்பு மந்திரி ஆனார்.

தயாநிதியின் நோக்கம் தன் சன் குழுமத்துக்கு நல்லது செய்வது மட்டுமே. இராசாவின் நோக்கம் வேறாக இருந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் பங்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள். அனைவரும் சொல்வதுபோல 1,76,000 கோடி ரூபாய் என்பதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்கள் - ரிலையன்ஸ், எஸ்ஸார், யூனிடெக், ஸ்வான் ஆகியோர் எத்தனை பணம் அமைச்சருக்கு லஞ்சமாகக் கொடுத்தார்கள் என்பதை சிபிஐ இன்னமும் வெளிக்கொண்டுவரவில்லை. லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மையாக இருக்குமானால் இது 2,000 - 3,000 கோடி ரூபாயைத் தாண்டாது என்பது என் கணிப்பு.

இதில் கனிமொழியின் பங்கு என்ன?

ஆ. இராசாவை அமைச்சர் ஆக்குவதற்காக லாபியிங் செய்தது. இது நீரா ராடியா ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் வெளியானது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஓர் இயக்குநராக இருந்து, அந்த நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஸ்வான் நிறுவனத்தில் பல்வேறு உப நிறுவனங்கள்மூலம் வரவழைத்தது.

மேற்கண்ட குற்றச்சாட்டின்பேரில்தான் கனிமொழியை சிபிஐ விசாரித்தது. கைது செய்தது. திஹார் சிறையில் அடைத்தது. பல மாதங்களுக்குப்பின் இப்போதுதான் பிணையில் வெளியே வந்துள்ளார் கனிமொழி.

சிறை அவரை மாற்றியதா, இல்லையா என்பது தெரியவில்லை.

கனிமொழிமீதான வழக்கு வலுவற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து. இறுதியில் அவருக்குச் சிறைத் தண்டனை கொடுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆனால், அவரை இத்தனை நாள் சிறையில் வைத்திருந்தது நியாயமற்றது என்று ஆகும். வழக்கு முடிந்தால்தான் இதைப்பற்றி மேலே எதுவும் சொல்லமுடியும்.

கனிமொழிக்கு வலுவான அரசியல் அடித்தளம் கிடையாது. முரட்டுத்தனமான கீழ்மட்ட அரசியலில் ஸ்டாலினையும் அழகிரியையும் அடித்துக்கொண்டு அவரால் மேலே வந்துவிடமுடியாது. நல்லவேளை, அந்தக் கால ஔரங்கசீப்போல இன்று அரசியல் நடப்பதில்லை.

கனிமொழி இப்போது தனக்குக் கிடைத்துள்ள வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபட்டால் ஒரு மாற்றத்தை ஒருவேளை கொண்டுவரலாம். ஆக்கப்பூர்வமான அரசியல் என்றால் என்ன? மாறியுள்ள சூழ்நிலைக்கேற்ப திமுகவின் அரசியல் கொள்கைகளை வகுப்பது, அதற்கு சித்தாந்தபூர்வமான அடிப்படைகளை எழுதுவது, அவற்றை எளிமையான கோஷங்களாக மாற்றித் தொண்டர்களிடம் கொண்டு சேர்ப்பது, கட்சியின் முகமாக நின்று கட்சிக் கொள்கைகளை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் கொண்டு சேர்ப்பது - இப்படி.

ஏன் இதனை கனிமொழி செய்யவேண்டும்? ஏனெனில் பின்னறைகளில் குதிரை பேரம் செய்வது, அடவாடி செய்வது, ஆட்களைக் கடத்துவது, தன் விசுவாசிகளுக்கு டிக்கெட் வாங்கித் தருவது போன்றவற்றை அவரால் சிறப்பாகச் செய்யமுடியாது என்று நினைக்கிறேன். மேலும் இதனை ஸ்டாலினாலோ அழகிரியாலோ செய்யமுடியாது. எனவே இந்த ஆல்டெர்னேடிவ்தான் கனிமொழியின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

அதனை ஆரம்பிக்கச் சரியான நேரமும் இதுதான்.

6 comments:

  1. "மகளே இன்று மட்டும் நான் உன்னோடு" - என்று கனிமொழி விமான நிலையத்தில் வந்தபோது யாரோ கமெண்ட் அடித்தது நியாபகம் வருகிறது

    ReplyDelete
  2. //மாறியுள்ள சூழ்நிலைக்கேற்ப திமுகவின் அரசியல் கொள்கைகளை வகுப்பது, //

    - அடிநிலை சமுதாயத்தின் குரலாக எடுத்து வைக்கப்பட்ட திராவிட அரசியல் பதவிக்கு வந்த உடன் செய்த முதல் வேலை அந்த அடிநிலை சமுதாயத்தின் பெயரால் காசு சேர்த்தது மட்டும்தான்! ஏனென்றால் அடி நிலை பெயரைச்சொல்லி
    ஆட்சிக்கு வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே ஆதிக்க சாதியினர்தான்! பெயருக்கு சில ஒடுக்கப்பட்டவர்கள் அங்கே இருந்தாலும் உண்மையான சவுக்கு பிடித்தவர்கள் லோக்கல் மத்திய ஆதிக்க ஜாதிகளே! சொல்ல வருவது என்னவென்றால் தி மு காவின் "கொள்கை" என்ற ஒன்று அண்ணா துரை மறைந்ததுமே மறைந்து விட்டது! வியாபாரிகளின் ஆட்சியாக அது எப்போதோ திரிந்து விட்டது! ஆகையால் இன்றைய திமுகாவின் கொள்கை என்பது வியாபார
    சாமாச்சரங்களை விரிவாக்கி அதை பாதுகாக்கும் ஒரு வழிமுறை மட்டுமே!

    மேடம் கனிமொழியும் அதைதான் செய்தார். ஏனென்றால் அவர் சிறுவயதிலிருந்து பார்த்த அரசியல் என்பது சுற்றி இருந்தவர்கள் செய்த வியாபாரம் மற்றும் பணம் சேர்க்கும் வழிமுறைகளே!

    நீங்கள் சொல்லுவது போல மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை வகுப்பது என்றால், அடுத்த முறை மாட்டாமல் காசடிப்பது எப்படி என்ற வியூகம் ஒன்றை கண்டுபிடித்து அதற்க்கு வேண்டுமானால் கொள்கை என பெயரிட்டுக்கொள்ளலாம்!! முக்கியமாக கனிமொழிக்கு அந்த கொள்கைதான் இப்போதைக்கு தேவை!!

    //உண்மையில், கருணாநிதியின் அடுக்குமொழி வசன கவிதைகளைவிடச் சிறப்பான கவிதைகளை எழுதக்கூடியவர் கனிமொழி//

    கலைஞர் பெயர் பின்னால் இல்லையென்றால் கலைந்து போகும் மேகத்தை விட வேகமாக தொலைந்து போயிருப்பார் இந்த கவிஞர்! கலைஞரின் தமிழ் அடுக்கு மொழி ஆர்ப்பாட்ட வரி, பிரச்சார நெடி என்றாலும் சினிமாவில் பார்க்கும் பொழுதும் மீட்டிங்கில் கேட்க்கும் பொழுதும் சுவையாகவே இருக்கும்!!
    ஆனால் இந்த சிற்றின்பங்களை கூட தராத எழுத்துக்கள் இந்த கவிஞருடையது என்று படித்த பலர் கூறுகிறார்கள்!! நண்பர் ஒருவர் கூறியது - கனிமொழி எழுதுவது கவிதை என்று கூறுபவர்கள் கலைஞரை பார்க்கிறார்களே தவிர கனிமொழியின் வரிகளை பார்த்து அல்ல! கூடவே அவர் சொன்னது - கனிமொழி கவிஞர் என்றால், நான் கம்பன்!! நீங்கள் இளங்கோ அடிகள் என்று!

    // கனிமொழியின் மொத்த அரசியல் பங்களிப்பு அதிகமில்லை. //
    "பங்கு" கேட்டார், சண்டை போட்டார், கோபத்தில் புகுந்து எக்கச்சக்கமாக எடுத்தார், கடைசியில் மாட்டினார்!!! திமுக பிராண்டு அரசியலில் அவரின் பங்களிப்பு குறுகிய காலத்தில் மிக அதிகமாக இருந்ததால்தான் அவருக்கு இந்த நிலைமையே வந்தது! என்ன, அக்கம் பக்கம் கொஞ்சம் பார்த்து பொறுமையாக நக்க வேண்டியதை சத்தம் போட்டு சொம்பு நிறைய அள்ளினார், அகப்பட்டார்! எல்லோரும் "பங்கு" பெரும் திமுகாவில் இவர் மட்டும் பங்கு பிரிக்காமல் பங்களித்தார்! அதான் வினையாகிவிட்டது!

    கனிமொழியின் எதிர்காலம் - கலைஞரின் நிகழ்காலம் மட்டுமே!

    கலைஞர் இல்லையென்றால் திமுகாவிற்கு கனிமொழி வேண்டாத தொல்லை!! ஸ்டாலிநிக்கும் மதுரை மாவீரருக்கும் வாரிசுகள் உள்ளார்கள்!! கூட பிறக்காத தங்கை வாரிசாக முடியாது! திரை மூடிவிடும். ஜானகி எம் ஜி ஆர் ரூட்டில் போனால் புரட்சி தலைவி காட்டிய கடைசிகால கரிசனத்தை சகோதரர்களும்
    காட்டுவார்கள் என்று நம்பலாம்! சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ பெரிய வீடு ஒன்றை பார்ப்பது நல்லது! (அண்ணன்கள் அருளித்தாலும் சி பி ஐ அருளுமா என்று சொல்ல முடியாது என்பது வேறு விடயம்)! ஆதலால் அவர் கிடைத்த பெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு அரசியலுக்கு இப்பொழுதே முழுக்கு போடுவது நல்லது! தலைவர் காலத்திற்கு பின் அவரை நல்லவர் என்று சொல்ல எந்த திமுகாவினரும் முன்வரபோவதில்லை, மறுபடியும் திகாருக்கு போனால் அவரை பார்க்கவும் யாரும் வரப்போவதில்லை!!

    ReplyDelete
  3. என்னடா புது வருசம் பொறந்துருச்சே இன்னும் ஜிங்குச்சா சத்தத்தையே காணோமேன்னு பாத்தேன் !@!!

    ReplyDelete
  4. கனிமொழி புதிதாக என்ன செய்யப் போகிறார்? ஊழல் வழக்குகளில் உள்ளே போய் வந்த எல்லாரையும் போல தமக்குத்தாமே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வார். இலக்கியவாதி என்ற கூடுதல் தகுதி இருப்பதால் சுயசரிதை எழுதுவார். அடுத்த திமுக ஆட்சியில் பிழைத்துக் கிடந்தால் அதற்கு விருது கிடைக்கலாம். கலைஞர் மீண்டும் முதல்வரானால் செம்மொழி மாநாடோ பசும்மொழி மாநாடோ நடந்தால் அந்த சுயசரிதை பற்றிய ஆராய்ச்சிக் (ஜால்ரா) கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படலாம். இயக்கம், புரட்சி, தொண்டு, சேவை........ இம்மாதிரி சொற்கள் எல்லாம் தண்ணீர் பட்ட பாடாகத் தமிழில் கொட்டிக் கிடப்பதே இவர்களுக்காகத்தானே? காது குத்தினால் குத்திக் கொள்ள நாம் இருக்கும் போது அவர்களுக்கென்ன கவலை?

    ReplyDelete
  5. Boss petiya petiya kuduthadhaan thappaa? license grantingla favoriting, non-transparency are also punishable offences.

    ReplyDelete
  6. Thigar kosuukkum veyilukkum payanthavar than arasiyalla kilikkaporara. Than or mother women endrallam yarmariyatha unmaikalai courtil sonna veera mangai naatukku enna kilikkapporar?

    Ragam" Ramesh kumar

    ReplyDelete