Friday, January 13, 2012

கூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்

கூகிள், பேஸ்புக் போன்றவை தத்தம் தளங்களில் உள்ள ‘ஏற்கத்தகாத விஷயங்களை’ (Objectionable materials) நீக்குவதற்கு ஒரு முறையை ஏற்படுத்தாவிட்டால், சீனாவில் நடப்பதைப் போல அவர்களுடைய தளங்கள் தடை செய்யப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கு தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கூடவே, கூகிள், ஃபேஸ்புக் இன்னபிற சோஷியல் தளங்கள் பற்றிய புரிதலும் குறைவாக உள்ளது என்றே கருத வாய்ப்புள்ளது. அவர் எதிர்பார்ப்பதைச் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியில் மிகக் கடினமானது. சொல்லப்போனால் செய்யவே முடியாத ஒன்று.

இப்படிப் பேச்சு வரும்போதெல்லாம் சீனாவில் செய்கிறார்களே என்ற கேள்வி எழுகிறது. சீனாவில் எம்மாதிரியான தணிக்கை முறை இணையத்தில் நிலவுகிறது என்பதை விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேற்கண்ட பக்கத்திலிருந்து, சீனாவில் என்னவெல்லாம் தடை செய்யப்பட்டது என்று பார்ப்போம்:
  1. அரசியல் அமைப்புச் சட்டத்தை, அரசு விதித்துள்ள சட்டங்களை, நிர்வாக ஆணைகளை எதிர்க்க அல்லது உடைக்கத் தூண்டுவது
  2. அரசையோ, சோஷலிச முறையையோ தூக்கி எறியத் தூண்டுவது
  3. தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்குமாறு அல்லது நாட்டைத் துண்டாடுமாறு தூண்டுவது
  4. தேசியங்களுக்கு இடையில் வெறுப்பை ஊட்டுவது, பாரபட்சம் காட்டுவது அல்லது தேசியங்கள் ஒன்றிணைந்து இருப்பதற்கு ஊறு விளைவிப்பது ஆகியவற்றைத் தூண்டுவது
  5. பொய் பேசுதல், உண்மையைத் திரித்தல், வதந்திகளைப் பரப்புதல், சமூக ஒழுங்கைக் குலைத்தல்
  6. பழங்கால மூட நம்பிக்கைகள், பாலுணர்வைத் தூண்டும் விஷயங்கள், சூதாட்டம், வன்முறை, கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பது
  7. பயங்கரவாதத்தை அல்லது குற்றச் செயல்களை ஊக்குவித்தல், பிறரை வசைபாடுதல், உண்மையைத் திரித்து பிறரை அவதூறு செய்தல்
  8. அரசு அமைப்புகளின் பெருமைக்கு பங்கம் வருமாறு செய்தல்
  9. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் அரசு சட்டங்களுக்கும், நிர்வாக ஆணைகளுக்கும் எதிரான பிற நடவடிக்கைகள்
  10. பெயரை மறைத்துக்கொள்ளுதல் - அநாமதேயம்
இதுபோன்ற சட்டங்களும் தணிக்கை முறையுமா நமக்குத் தேவை?

இப்போது நம் நாட்டில் அரசியல்வாதிகளும் சில ப்யூரிட்டன்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மேலே உள்ளதில் இரண்டு விஷயங்களைத்தான். ஒன்று, பாலுணர்வைத் தூண்டும் விஷயங்களைத் தடைசெய்வது குறித்து. இரண்டாவது பிறரை வசைபாடுதல், அவதூறு செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வது குறித்து. இவை இரண்டைப் பற்றியுமே எனக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன.

1. பாலுணர்வைத் தூண்டக்கூடிய விஷயங்கள், மனிதர்களுக்கு அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன். அதற்கான வசதிகள், வாய்ப்புகள் அனைவருக்கும் சட்டபூர்வமாகவே தரப்படவேண்டும். ‘அனைவருக்கும்’ என்றால் சிலரையும் சிலவற்றையும் தவிர்த்து. உதாரணமாக, 18 வயது நிரம்பாதோருக்கு இவை சென்று சேரக்கூடாது. அதேபோல 18 வயது நிரம்பாதோரை வைத்து எடுக்கப்படும் படங்கள்/வீடியோ, சுய அனுமதியின்றி சுரண்டி எடுக்கப்படும் படங்கள்/வீடியோ, வன்முறையையும் பாலுறவையும் சேர்த்துக் காட்டும் படங்கள்/வீடியோ... இப்படி சட்டத்தால் ஏற்கெனவே விலக்கப்பட்டவை. அதே நேரம் ஒருபால் சேர்க்கை, பிற ‘பிறழ்’ விஷயங்கள் இருப்பதில் கருத்துரீதியாக எனக்குப் பிரச்னை இல்லை. அவையும் அனுமதிக்கப்படவேண்டும்.

இங்கே, இந்த விஷயங்கள் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களை எப்படிச் சென்று சேராமல் இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேவை. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நுட்பச் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இது தனி டாபிக். எனவே இங்கே பேசப்போவதில்லை.

2. வசை, அவதூறு. இதில் முதலாவது முழுமையாகவே அனுமதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை வந்தடைந்துள்ளேன். எனவேதான் நான் வினவை, அதன் வசவை ஆதரிக்கிறேன். வகைதொகையின்றி, என்னையும் சேர்த்து, வசை பாடுவதில் அவர்கள் வல்லவர்கள். வசையை ஏற்பது, மறுப்பது, கொதித்துக் களத்தில் இறங்குவது, கத்திச் சண்டை போட்டு ஒருவர் உயிரை விடுவது என்பதெல்லாம் பழங்காலம். பெரும்பாலும் வசை என்பது பாலுறுப்புகளில் தொடங்கி, உறவுமுறையினரை இழுத்து, ஒருவர் செய்யும் வேலையை, ஒருவர் புனிதமாகக் கருதுவனவற்றை எல்லாம் இழுத்து அசிங்கப்படுத்துவது. அடுத்து, ஒருவர் தான் எது இல்லை என்று சொல்கிறாரோ அதுதான் அவர் என்று சித்திரிப்பது.

வசை ஒரு கட்டத்தில் அவதூறாகிறது. எப்போது என்றால், அதனால் அவரது புகழுக்கும், கௌரவத்துக்கும், அவரது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் குறை ஏற்படும்போது. அப்போது சட்டரீதியான நடைமுறை அவசியமாகிறது. குறைந்தபட்சம் அதன்மூலம் பிறரை நம்பவைப்பதற்காவது.

இந்தியாவில் அவதூறை எதிர்கொள்ளக்கூடிய வழக்காடுமன்றச் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததில்லை. எனவே மான நஷ்ட வழக்கு போன்றவை நீங்கள் முதல்வர் ஜெயலலிதாவாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.

வேண்டுமானால், இந்த இடத்தில் சட்டம் கொஞ்சம் கடினமாக ஆவது நல்லது. அவதூறு என்று நிரூபிக்கப்பட்டால், அதனால் அவதூறு செய்தவர் தண்டனையாக அடையவேண்டிய பொருளாதார நஷ்டம் கடுமையானதாக இருக்கவேண்டும். இங்கும், அவதூறு என்பது உயர்தரத்தில் நிரூபிக்கப்படவேண்டும். வசையா, அவதூறா; மனம் நோகவேண்டும் என்பதற்காக மட்டும் செய்யப்பட்டதா அல்லது எதிராளியின் புகழ் பாதிக்கப்பட்டு அவர் பணரீதியாக நஷ்டம் அடையவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்று கவனமாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

*

இப்போது மீண்டும் கையில் உள்ள பிரச்னைக்கு வருவோம். இணைய நிறுவனங்கள் இதற்காக தொழில்நுட்பத்தைக் கிண்டி எதையாவது செய்தாகவேண்டுமா?

என் கணிப்பில், தேவை இல்லை. இது தொழில்நுட்பம் உருவாக்கிய ஒரு பிரச்னை இல்லை. எனவே தொழில்நுட்பம் இதைத் தீர்க்கவேண்டாம். திட்டுவது மனிதர்தான். மனிதர்கள் ஒருவரை ஒருவர் வசைபாட நிறையக் காரணங்கள் உள்ளன. என்னைத் திட்ட வினவுக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவர்களுக்கு இணையம் ஒரு கருவி. இணையத்தில் திட்டக்கூடாது என்று சட்டம் இருந்தால் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். செலவு கொஞ்சம் அதிகமாகும். இங்கே இணையம் செலவைக் குறைக்கிறது. எளிதாகப் பரவ வழிவகை செய்கிறது. ஆனால் ஆதாரமான வசை/அவதூறு மனநிலையை அது உருவாக்குவதில்லை. எனவே பழியை இணையத்தின்மீது போடுவதில் நியாயம் இல்லை.

இணையத்தில் செய்தாலும் வேறு எங்கு செய்தாலும் அவதூறு அவதூறுதான். அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டரீதியாகத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். அதுவும் இந்தியாவில் அதற்கு ஒரு மாமாங்கம் ஆகிவிடும்.

ஆனால் இதனைத் தாண்டி இன்னொரு பிரச்னை இருக்கிறது. அதுதான் அநாமதேயம். மெய் உலகில் அவதூறு செய்தவரைக் கண்டுபிடித்து அவர்மீது நடவடிக்க எடுக்க முயற்சி செய்யமுடியும். ஆனால் இணையத்தில் அநாமதேயங்கள் அவதூறைப் பரப்பி, பரவவிட்டு, காணாமல் போய்விடுவார்கள். இதுதான் அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஆனால், மாறிவரும் உலகில் இதனையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என நினைக்கிறேன். ஒருவர் நம்மை அவதூறு செய்வதால் ஏற்படும் பண நஷ்டங்களையும்கூட நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்று மோசமான அரசு பதவியில் இருப்பதன் காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பண நஷ்டம் ஏற்படுகிறதல்லவா? அதனை ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? அதேபோல, இணையம் தரும் வசதிகளை அனுபவிக்கும் நாம், அவதூறு காரணமாக நம்மில் சிலருக்கு ஏற்படும் தொல்லைகளையும் ஏற்கவேண்டியிருக்கும்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தன் கருத்தை மாற்றிக்கொள்வார் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் சென்று கருத்துரிமையை நிலைநாட்டவேண்டியதுதான். வசையுரிமை, அவதூறு உரிமை ஆகியவற்றையும் சேர்த்துத்தான்.

12 comments:

  1. தாங்கள் இதன் ஆக்கப்பூர்வமான பக்கத்தைப் பற்றி மட்டுமே பார்க்கிறீர்கள். மிஷேல் ஒபாமா என்று அடித்தால் குரங்கு படம் வந்தது. பெரிய இடத்து கோரிக்கை என்பதால் குகுள் நீக்கியது. நம்ப லோகலுக்கு வருவோம். நிறைய பேரின் குடும்பத்தையே வைத்து பாலியல் கதை பின்னிக் கொண்டு - பாதிக்கப்பட்டவரின் மதி நுட்பத்தால் விரைவிலேயே போலீசால் பிடிக்கப்பட்டார். இவைகள் விதிவிலக்குகளே.

    நீக்கப்படனுமா வேண்டாமா என்று தெரியலை. ஆனால் ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பது தவறா. கட்டுப்பாடில்லாத சுதந்திரம் காட்டுமிராண்டித்தனத்திற்கு வழி வகுக்காதா?

    ரயிலில் ரோகம் பவுத்திரம் போஸ்டர் ஒட்டுவது மாதிரி இணையம் ஆகாதா? சமயங்களில் தமிழ்மணமே அவ்வாறு குப்பைகளால் ஆன பதிவுகளால் நிறைந்துவிடுகிறதே!

    பாலியல் கல்வியா. தவறு... மாற்றுக்கருத்தா தவறு என்று சொல்லவில்லை. ஆனால் பாலியல் கல்வி என்கிற பெயரில் கில்மா படங்களையும் மாற்றகருத்து என்கிற பெயரில் துவேசங்களையும் அனுமதிக்கத்தான் வேண்டுமா என்ன?

    -----
    ஆரோக்கியமான ஜனநாயகம் என்று எல்லாருக்கும் பேச்சுரிமை தந்தார்கள் நமக்கு. அதனால்தான் இந்தியா பெற்ற வளர்ச்சி என்ன. கூடாது என்று சொல்லவில்லை. அந்த கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு முதிர்ச்சி உள்ளதா என்றுதான் தெரியவில்லை..

    ReplyDelete
  2. sorry i am n ot with you on this. we need a "guidance factor" in terms of what can be written and said in a public domain. Very sad that there isn't "civic senses" taught in general-- same like in streets, public places as well as the web world.
    Surya

    ReplyDelete
  3. பாலியல் கல்வி குறித்து சான்றோர்கள் அனைவரும் பேச தொடங்கி இப்போது நம்ம பிளாக் வரை வந்து விட்டது. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் அதை பற்றி தெரியாமல் தான் நாம் அனைவரும் பிறந்தோமா, அது தெரியாமல்தான் நாம் முன்னேற்றத்தில் பின் தங்கி இருக்கிறோமா.

    பிறகு கட்டுபாடு என்பது எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை இருப்பது நல்லதுதான் அது வலைதளமாக இருந்தாலும் என்பதே என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. @vengaimarbhan; முதலில் பத்ரி குறிப்பிடுவது வெறுமே 'பாலியல் கல்வி' மட்டும் அல்ல. பொழுதுபோக்குக்காகவே நடத்தப்படும் பாலியல் வலைத்தளங்களையும் தடை செய்யத்தேவையில்லை என்பதே அவர் சொல்லவருவது (+எல்லா லிபரல்களின் நிலைப்பாடும்). இதில் கல்வி சமாசாரத்தை இழுத்து ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை.

      சரவணன்

      Delete
  4. எல்லா வாய்லயும் விழுந்து உருளணும்னு நியூ இயர் ரெஸல்யுஷன் ஏதாச்சும் உண்டோ பத்ரி? :D

    ReplyDelete
  5. பை தி வே, இந்தக் கூத்தையெல்லாம் பார்க்கும்போது டில்பர்ட்டோட இந்த கார்ட்டூன் தான் நினைவுக்கு வருது :) http://dilbert.com/strips/comic/1999-06-06

    ReplyDelete
  6. Just because some website is giving you free publicity you cannot say that you are happy in whatever way they are expressing their views against your business establishment.. Few people may have self respect and may expect fairness and decency in the same way they treat others....

    ReplyDelete
  7. Sir, what will be the responsibility of the blog owner/facebook company, if the comments/postings are defaming ?
    Is a blog owner mandated by law to moderate the postong?

    ReplyDelete
  8. பாலியலுக்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லை என்பதே நான் சொல்ல வந்தது, அது எதனால் இப்படி திட்டமிட்டு புகுத்தப்படுகிறது என்பதை பேச தொடங்கினால் இடம் போதாது.

    ” பொழுதுபோக்குக்காகவே நடத்தப்படும் பாலியல் வலைத்தளங்களையும் தடை செய்யத்தேவையில்லை என்பதே எல்லா லிபரல்களின் நிலைப்பாடும்”, - என்பது லிபரல்களுக்கு அவை எப்படிப்பட்ட வக்கிரங்களை பார்ப்பவர் மனதில் புகுத்துகின்றன என்பதை பற்றி அறியாமல் இருக்கிறார்களா அல்லது அறிந்தேதான் சொல்கிறார்களா என்பது தெரியவில்லை,

    ஆனால் இவர்கள் பிள்ளைகள் அதை பார்க்க அனுமதிப்பார்களா என்றால் ஆண் பிள்ளைகள் வைத்திருக்கும் லிபரல்கள் திமிராக ஆமாம் என்று சொல்லலாம்.

    ஆனால் அதன் வக்கிரங்களால் பாதிக்கப்பட்டு அவர்கள் ஏதேனும் குற்றம் புரிவதற்கு இவர்கள் துணை போவார்களா அல்லது இவர்கள் வீட்டு பெண் பிள்ளைகள் அந்த வக்கிரங்களால் பாதிக்கப்பட்டால் ஆதரிப்பார்களா என்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்,

    அஞ்சாதே, யுத்தம் செய், நான் மகான் அல்ல போன்ற படங்கள் எடுத்துக்காட்டுவது அதைத்தான்.

    ReplyDelete
  9. மத்திய அரசு புதிய அறிவிப்பு: ஆட்சேபிக்கத் தக்க கருத்துக்களை தபால் மூலம் அனுப்ப முடியும். எனவே, விரைவில் தபால் துறை இழுத்து மூடப்படும்.

    ReplyDelete
  10. appa censor board podungappa. Nalu members polachukkatum. blogger restriction must.

    ReplyDelete
  11. கட்டுப்பாடு தேவை என்று கூறுபவர்கள் பொதுப்படையாகப் பேசுகிறார்கள். வெளியிடுவதற்கு முன்பாக கட்டுப்பாடா அல்லது வெளியிட்ட பின் கட்டுப்பாடா என்பது பற்றித் தெளிவாகப் பேசவில்லை. வெளியிடுவதற்கு முனபாக என்றால் அது தணிக்கை முறை. தணிக்கை முறை வந்துவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற அமைச்சர் அல்லது அவர் சார்பாக இயங்கும் அதிகாரிக்குப் பிடிக்காத எதுவும் இடம் பெறாது. அது ஆரம்பத்தில் வரவேற்கத் தக்கது போலத் தோன்றினாலும் சர்வாதிகாரத்தில் போய் முடியும்.ஜனநாயகம் குழி தோண்டிப்புதைக்கப்படும்.
    வெளியிட்ட பின் கட்டுப்பாடு என்றால் இப்போதுள்ள சட்டங்களே போதும். புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை.
    ஆபாச விஷயங்கள், திட்டுவது, அவதூறு போன்றவை காலப் போக்கில் குறைய ஆரம்பிக்கும்.இவற்றுக்கு எல்லாம் மக்களிடையே நீண்ட கால அளவில் ஆதரவு இராது. அவர்களாகவே ஓய்ந்து விடுவார்கள்.
    ஆட்சியாளர்கள் எப்போதுமே புதிது புதிதாக அதிகாரங்களைப் பெற ஆசைப்படுவார்கள். பொதுமக்களின் நலன் பெயரில் அவ்வித புது அதிகாரங்களைப் பெற முற்படுவார்கள். அதே அதிகாரங்கள் பின்னர் பொதுமக்களுக்கு எதிராக்ப் பயன்படுத்தப்படும். ஆகவே அரசுக்கு புதிய அதிகாரங்களை வழங்குவதில்/ ஏதாவது சாக்கு சொல்லி அவர்களாக அந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்வதில் மக்கள் மிக உஷாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete