Monday, March 19, 2012

கட்டற்ற பாலியல் சுதந்தரம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘நண்பேன்டா’ என்றொரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்கிறேன். வாரா வாரம் ஞாயிறு மாலை 7.30 முதல் 8.00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. இதன் மறு ஒளிபரப்பு திங்கள் இரவு 9.30-10.00 மணிக்கும் செவ்வாய் மதியமும் உண்டு.

நிகழ்ச்சியில் நான், திமுகவின் புகழேந்தி, பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் ஒரு விருந்தினர் கலந்துகொள்வார். நேற்றைய நிகழ்ச்சியின்போது திருநங்கை ரோஸ் வெங்கடேசன் கலந்துகொண்டார். அவர் ‘பாலியல் சுதந்தரக் கட்சி’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார்.

ரோஸ் பேசியதன் சாரம்: எப்படி பிற உரிமைகள் மனிதர்களுக்கு உள்ளதோ அதேபோன்று கட்டற்ற பாலியல் உரிமையும் மனிதர்களுக்கு வேண்டும். யாரும் யாருடனும் பாலுறவு கொள்ள அனுமதி வேண்டும். குடும்பம் என்னும் அமைப்பு வலுக்காட்டாயமாக உருவாக்கப்பட்ட ஒன்று. பெண்களை அடிமைப்படுத்தும் அமைப்பு இது. பாலியல் சுதந்தரம் என்றால் ஒருபால், இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கு மட்டுமல்ல, உண்மையில் பெண்கள் நம் நாட்டில் பாலியல்ரீதியில் நசுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும், ஏன் பெரும்பான்மையான ஆண்களுக்குமே பாலியல் சுதந்தரத்தைக் கொடுப்பதுதான் ஏற்படுத்தப்போகும் அமைப்பின் நோக்கம்.

சாராம்சப்படுத்துதலில் நிறையப் பிரச்னைகள் உள்ளன. அவரது வார்த்தைகளை என் பார்வையில் நான் எழுதுகிறேன். அதில் என் சாய்வுகளும் சேர்ந்துதான் இருக்கும். பார்க்க முடியுமானால் இன்று நிகழ்ச்சியைப் பார்க்கவும்.

குடும்பம் என்ற அமைப்பு செயற்கையானது என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் இந்த அமைப்பு ஒரு பக்கச் சார்புடையது, ஆண்களுக்கு மட்டுமே சாதகமானது என்று நான் கருதவில்லை. அப்படியான ஓரிடத்திலிருந்து தொடங்கிய குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றத் தாழ்வுகள் குறைக்கப்பட்டு, ஒருவித சம நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நிறைய மாற்றங்கள் இன்னும் தேவை. ஆனால் குடும்பத்தைக் குலைத்துவிட்டு அந்த இடத்தில் வேறு எந்த மாதிரியைக் கொண்டுவருவது என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் முன்வைக்கவேண்டும்.

ரோஸ் பேசும்போது, பாலுறவின் நோக்கம் என்பதே வம்சவிருத்தி என்பதாக எடுத்துக்கொள்வது தவறு, செயற்கையானது என்றார். நான் அதனை மறுத்தேன். பரிணாம உயிரியல் பார்வையில் பாலுறவின் ஒரே நோக்கம் வம்சவிருத்திதான். பாலினப்பெருக்கம் செய்யும் எல்லா உயிரினங்களுக்கும் இதுதான், இது ஒன்று மட்டும்தான் நோக்கமே. மரபணு ஒவ்வொன்றுமே தன்னைப் பிரதியெடுத்து பிற மரபணுக்களை விடத் தன் பிரதிகளே உலகில் அதிகம் பரவவேண்டும் என விரும்புகின்றது என்பது ரிச்சர்ட் டாக்கின்ஸின் கருத்து.

மனித இனத்தில் மட்டும்தான் பாலுறவு என்பதில் வம்சவிருத்தி பெருமளவு பின்தள்ளப்பட்டு உடல்/மன சுகம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதுவும்கூட பரிணாம உயிரியலின் புரிதலுக்கு உட்பட்டு விளக்கக்கூடிய ஒன்றுதான்.

இந்தியா போன்ற நாடுகளில், பெருகும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒருபால் சேர்க்கையை ஆதரிக்கவேண்டும் என்பதுபோல் ரோஸ் பேசினார். மேலும் பெண் கல்வி, பிள்ளை பெறுதலில் பெண்ணுக்கான முழுச் சுதந்தரம் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் மக்கள்தொகை குறைவதும் வளரும் நாடுகளில் பெரும்பாலும் மக்கள்தொகை அதிகமாவதும், அதில் பொருளாதார வளர்ச்சியின், பெண் கல்வியின் பங்கு என்ன என்பதை நாம் காணவேண்டும். பெண்கள் பெரும்பாலும் பிள்ளை பெறும் இயந்திரமாகத்தான் இருந்துவந்துள்ளனர். ஆனால் கல்வி அறிவு அதிகரிக்க அதிகரிக்க பெரும்பாலான நாடுகளில் பெண்கள், எப்பொது, எவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்பதைத் தம்மிச்சையாகவே முடிவெடுக்கின்றனர். இது முழுமையாக இல்லை. எனவே இந்த உரிமையைக் கோரிப் பெறுவது முதல் தேவை.

என் கருத்தில், கட்டற்ற பாலியல் சுதந்தரம் என்பது பெண்களுக்கு எதிராகத்தான் போய் முடியும். ஆண்கள் இதனை புதிய சுரண்டல் வாய்ப்பாகவே பார்ப்பார்கள். மேலும் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமைகளை முன்னெடுக்க ஓர் அரசியல் கட்சி ஒத்துவரும் என்று எனக்குத் தோன்றவில்லை; தேவை சில சமூக இயக்கங்கள்.

மொத்தத்தில் நல்லதொரு விவாதம். முடிந்தால் பாருங்கள்.

[பழைய நிகழ்ச்சிகள் யாவும் யூட்யூப் போன்ற இடத்தில் இல்லை. பழைய நிகழ்ச்சிகள் அனைத்தின் வீடியோக்களையும் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் அவற்றை இணையத்தில் சேர்க்கப் பார்க்கிறேன்.]

18 comments:

  1. //என் கருத்தில், கட்டற்ற பாலியல் சுதந்தரம் என்பது பெண்களுக்கு எதிராகத்தான் போய் முடியும். ஆண்கள் இதனை புதிய சுரண்டல் வாய்ப்பாகவே பார்ப்பார்கள். மேலும் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமைகளை முன்னெடுக்க ஓர் அரசியல் கட்சி ஒத்துவரும் என்று எனக்குத் தோன்றவில்லை; தேவை சில சமூக இயக்கங்கள்.//

    மூத்த பதிவர் டோண்டு ராகவன் 'சமீபத்தில்' எழுதிய பதிவிலிருந்து...

    திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் பெண்ணுக்குத்தான் அதிகக் கெடுதலைத் தரும்

    நான் கூற வந்ததே சேர்ந்து வாழ்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம், அவற்றால் பென்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பதுதான். அவை எல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்வதே புத்திசாலித்தனம்.

    சேர்ந்து வாழ்வது, பிரிவது, அந்த உறவில் பெற்ற குழந்தைகளை பங்கிடுவது, பிறகு வேறு துணையை நாடுவது ஆகிய விஷயங்கள் இந்தியாவில் இன்னும் சகஜமாக வரவில்லை. அவ்வளவுதான். ஆகையால், பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.

    ReplyDelete
  2. The program would be a lot better if this lady Vanathi gets replaced by some sensible person. Her irrelevant blabbering is a serious irritant to watch the show.

    ReplyDelete
  3. அடுத்து மனிதர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருந்தால் பெண் சுதந்திரம் பரிபூரணமாகும்?
    1. உணவைக் கண்டதும் பாய்ந்து மேலே விழுந்து கவ்வும் உரிமை(பந்தி, பரிமாறுதல், உபசரித்தல் இதெல்லாம் நாகரீகம் என்ற பெயரால் வந்த கட்டுப்பாடுகள் தானே? இதெல்லாம் வந்ததால்தானே சமைக்கும் வேலையும் பரிமாறும் வேலையும் பெண்கள் தலையில் விடிந்து விட்டன?)
    2. உடை அணியாமல் இருக்கும் உரிமை.(நாகரிகம் வந்ததால் ஆடை அணியும் பழக்கம் ஏற்பட்டதால் தானே பெண்கள் இழுத்து மூடிக் கொண்டு திரிய நேர்கிறது?)
    3. வீடில்லாமல் தெருத் தெருவாக அல்லது காடுமேடுகளில் சுற்றும் உரிமை.(வீடு என்று ஒன்று இருப்பதால் தானே பெண்கள் அதில் பொறுப்பாக இருக்க நேர்கிறது?)
    4.சொத்தில்லாமல் இருக்கும் உரிமை(சொத்து இருப்பதால் தானே அதற்கு வாரிசு, தந்தை, தாய், குழந்தைகள்,குடும்பம்,உறவுகள், என்றெல்லாம் ஏற்பட்டிருக்கிறது?)
    5.தொழில் செய்யாமலிருக்கும் உரிமை(தொழில் என்று ஒன்று இல்லாவிட்டால் வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது அல்லவா?)
    6.மனிதரை மனிதர் அடித்துத் தின்னும் உரிமை- இதுதான் உரிமைகளில் பிரதானமானது. பாலியல் புரட்சியின் முடிவான லட்சியம் இதுதான். இந்த உரிமை மட்டும் மனிதர்களுக்குக் கிடைத்துவிட்டால் யாரும் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. விரும்பிய பெண்ணை / ஆணை அடைய வேண்டுமா? ரோஜாப்பூ, காதல் கடிதம், வாழ்த்து அட்டைகள் போன்ற கற்கால வஸ்துக்களுடன் சுற்றித் திரியத் தேவை இல்லை.சம்பந்தப்பட்ட நபருக்கு விருப்பமிலையா? வேறொரு பெண்ணோ ஆணோ குறுக்கே வருகிறார்களா? எதற்கு சும்மா பேசி போரடித்துக் கொண்டு? கையில் கிடைப்பதை எடுத்து ஒரே போடு! ஆஹா! இதை விட ஒரு புரட்சி, கட்டற்ற சுதந்திரம் இருக்க முடியுமா? அது சரி, அடி படுகிறவனுக்கு நிறைய உரிமைகள் பாதிக்கப் படுமே? அவனுக்கு சுதந்திரம் கிடையாதா என்று கேட்கிறீர்களா? மூச்! மேலே சொன்ன உரிமைகளில் உயிர் வாழும் உரிமை, அடிபடாமல் தப்பிக்கும் உரிமை எதுவும் இல்லையே?
    பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும், தடியெடுத்தவன் தண்டல் காரன் என்ற நிலை ஏற்படாமலிருக்கவும்தானே மனிதன் சமூக அமைப்பை வலுப்படுத்தியிருக்கிறான்? மனிதன் தனது உரிமைகளை மனமுவந்து விட்டுத்தந்துதானே அரசு, சமூகம், குடும்பம் போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளான்? அவ்வாறு விட்டுத்தந்த உரிமைகள் தானே பலவீனமானவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்கிறீர்களா? நீங்கள் இன்னும் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? பலவீனமானவர்களுக்கு உரிமை ஒரு கேடா? காட்டில் புலி,சிங்கத்துக்கு உரிமை அதிகமா? மானுக்கும் முயலுக்கும் அதிகமா? மனிதனுக்கு மட்டும் எதற்கு உடல் வலிமையை விட அறிவு, அன்பு, பண்பு, புண்ணாக்குதான் முக்கியம் என்றெல்லாம் உபதேசங்கள்?
    அப்படியானால் மனிதன் காட்டு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியிருக்குமோ என்று கவலைப் படுகிறீர்களா? அதற்குக் கவலைப்பட என்ன இருக்கிறது? காட்டு ராஜ்ஜியம் என்பது முன்பெல்லாம் கண்டிக்கவும் நிந்திக்கவும் உபயோகப்பட்ட சொல். அந்தக்காலம் மலையேறி விட்டது. மனித சமூகம் மிருகங்களிலிருந்து விலகி வெகுதூரம் வந்தாதாக இதுவரை நினைத்ததெல்லாம் தவறு. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மிருகங்கள் இப்படியா செய்கிறது அப்படித்தானே செய்கிறது என்று கேட்பதுதான் ஃபேஷன்.
    குடும்பம், கற்பு, போன்றவை அழிந்தால் கூடவே அன்பு, பாசம், ஆசை, காதல் எல்லாமும் அழிந்து விடும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள்! அதையெல்லாம் காப்பாற்றத்தான் மிருகங்கள் இருக்கின்றனவே? நல்ல வேளை மிருகங்களுக்குத் தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் எதுவும் இதுவரை தெரியவில்லை. நண்பேன்டா போன்ற நிகழ்ச்சிகள் கிடையாது. ரோஸ் போன்ற சிந்தனையாளர்கள் கிடையாது.
    வாழ்க காட்டு ராஜ்ஜியம்! சீக்கிரமே அதை அமைத்து மனிதன் நாகரிகம் அடைந்தவன் என்ற மனப்பிரமையைப் போக்குவோமாக!

    ReplyDelete
  4. Really , ROSE is not ready to listen any one of the 3 persons in the program.If possible,Please remake with some correct person.
    Karvind79

    ReplyDelete
  5. கட்டற்ற பாலியல் சுதந்தரம் ரோசுக்கு வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன் .... அதே போல் எனக்கும் கட்டற்ற போக்குவரத்து சுதந்திரம் வேண்டும் .... நான் சிக்னலில் நிக்க மாட்டேன் ... எதிர்பக்கம் தான் ரோடு ரோலர் ஓட்டுவேன் .... நீங்க நடுவரா அனுமதிப்பீங்களா ?? இல்லை அதே கட்டற்ற பாலியல் சுதந்திரத்துடன் காட்டு மிருகம் போல் பெண்களை பலாத்காரம் செய்து "உண்டு"ம் முடித்தால் இல்லை இல்லை இதுதான் நாகரீகம் கட்டற்ற சுதந்திரம் பரவாயில்லை என்று விட்டுவிடுவீர்களா ?? ஒரு சமூகக் கூட்டமைப்பில் பொதுநன்மைக்காக ஏற்படுத்தும் கோட்பாடுகளில் சிலருக்கு தீமை விளையலாம் அதை தடுக்க முடியாது. இது இயற்கையின் நியதி. ஏற்க மனமில்லாதவர்கள் ஒரு நாள் கட்டற்ற சுதந்திரத்துடன் நடு ரோட்டில் மவுண்ட்ரோடில் நடுப்பகலில் மற்ற வாகனங்களுக்கு எதிர்பக்கமாக சைக்கிள் ஓட்டி புரட்சி செய்யலாம் ... நாங்கள் கண்டுகளிக்கத் தயாராக இருக்கிறோம்

    ReplyDelete
  6. ரோசின் தற்போதைய அஃபிசியல் பெயர் என்ன? ரோஸ் வெங்கடேசனா? அப்படி இல்லாது நீங்கள் அவர் பூர்ணாசிரம பெயரை சேர்த்துக்கொண்டிருந்தால் அதை திருத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்கண்ணா, அப்படியெல்லாம் நான் தப்பு ஏதும் செய்யலீங்கண்ணா. அது அவங்க அப்பா பேரு. பல ஆங்கிலக் கட்டுரைகள்ளயும் அந்தப் பேரைச் சொல்லித்தான் போடுறாங்கண்ணா.

      Delete
  7. //poornamMar 19, 2012 12:07 AM
    அடுத்து மனிதர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருந்தால் பெண் சுதந்திரம் பரிபூரணமாகும்?//
    நச் !!

    ReplyDelete
  8. என் கருத்துக்கள் பத்ரியின் கருத்துக்களுடன் பெருமளவில் ஒத்து போகின்றன. குடும்பம் என்பது செயற்கையல்ல. அது தான் இயற்கை. பாலியல் சுதந்திரம் திருமணமாகாதவர்களுக்கு தானே ஒழிய திருமணம் ஆனவர்களுக்கு அல்ல. திருமணம் செய்யும்போதே அவர்கள் தம் சுதந்திரத்தை கட்டுக்குள் வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். கள்ள உறவின் மூலம் அது உடைபட்டால் அதன்பின் அந்த குடும்பம் நீடிப்பதில் பொருள் இல்லை. மற்றபடி பாலியல் சுதந்திரத்துக்கு கட்சி துவக்குவது ஜோக்காக தான் முடியும்.

    ReplyDelete
  9. //பழைய நிகழ்ச்சிகள் யாவும் யூட்யூப் போன்ற இடத்தில் இல்லை. பழைய நிகழ்ச்சிகள் அனைத்தின் வீடியோக்களையும் கேட்டிருக்கிறே//ன். கிடைத்தால் அவற்றை இணையத்தில் சேர்க்கப் பார்க்கிறேன்.//

    sir, waiting for it ! Plz upload sir! PT chaneel giving awesome pgms. If possible they should upload it in Youtube. So, reach will be vast.

    ReplyDelete
  10. கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது திருமணமாகாத 20 வயதுகளில் உள்ள ஆண் பெண்களுக்கு ஒரு கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதில் ஈடுபடுகின்றவர்கள் 40 வயதுக்குள் பல வியாதிகளுக்கு உட்பட்டவர்களாக --கிழவன் கிழவிகளாக ஆகிவிடுவார்கள். உடலியல் என்பது அப்படித்தான்.
    தவிர, எந்த விஷயமானாலும் சுதந்திரம் என்பதுடன் பொறுப்பு என்ப்தும் ஒட்டிக்கொண்டுள்ளது. பொறுப்பு இல்லாத சுதந்திரமே கிடையாது.எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் எல்லாவற்றிலும் மட்டற்ற சுதந்திரங்களை அனுபவிக்க முற்பட்டால் அவர்கள் சமூகத்தின் விரோதிகளாகிவிடுவர்.
    குடும்பம் என்பது இயற்கையானது.அண்டார்டிகாவில் ஆண் பெங்குவின்கள் உணவு கொள்ளாமல் கடும் குளிரில் எவ்விதம் வாரக்கணக்கில் முட்டைகள் மீது அமர்ந்து அடை காக்கின்றன என்பது பற்றிப் படித்தவர்களுக்கு நெஞ்சம் உருகும்.
    குடும்பம் என்ப்து சமூக வாழ்க்கையில் அடிப்படை யூனிட்.குடும்பம் என்பது தேவையில்லை என்றால் உலகம் முழுவதிலும் வீடுகளே தேவையில்லை.கல்லூரி ஹாஸ்டல்கள் மாதிரியில் ஹாஸ்டல்களே போதும்.
    எந்த மனிதனுக்கும் அவன் மனைவி ஒரு சொத்து. மனைவிக்கு கணவன் ஒரு சொத்து. இவர்களது உறவின் மூலம் பிறக்கும் குழந்தை அவர்களது சொத்து.எந்தக் கணவனும் தனது மனைவி மட்டற்ற பாலியல் உறவில் ஈடுபடுவதை விரும்பமாட்டான். மனைவியும் தனது கணவன் அவ்விதம் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவாள். தனது தந்தையும் தாயும் மட்டற்ற பாலியல் உறவில் ஈடுபடுவர்கள் என்று தெரிந்தால் மகனோ மகளோ தனது பெற்றோர்களை வெறுப்பார்கள்.
    மட்டற்ற பாலியல் உறவில் ஈடுபவர்களுக்கும் தீங்கு தான் உண்டு. அதனால் சமூகத்துக்கும் தீங்குதான்.
    விபரீதக் கருத்துள்ளவர்கள் அதை பகிரங்கப்படுத்துவது தவறு. அதற்கு விளம்பரம் அளிப்பதும் தவறு.

    ReplyDelete
  11. கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது, நாகரிகமற்ற பேச்சு!. வக்கிரமனம் படைத்த சில இச்சகர்களுக்கு இது தேவைப்படத்தான் செய்யும். கட்டற்ற பாலியல் சுதந்திரம் நாயாகப்பிறந்திருந்தால் அனுமதிக்கப்படும்.

    ReplyDelete
  12. I live in Japan and the timing of program was very difficult to watch. However always after finishing it around 11.30PM on sunday night i go to bed..

    1. Rose was not allowing you to talk, and it was at right time you said that you need to keep silent if she does not listen/allow.

    2. I also very much accept that there is a lot of scope to change, but the uncontrolled sexual freedom is not the solution.

    3. i felt whenever rose feels trapped or cannot answer she much deviated from the topic of gay/lesbian freedom to women's safety..

    4. one question which she raised was relevant..since you could not explain much in that program i would like you answer briefly in this forum.. I also have the same idea, sex's is the mode of reproduction in nature. but homosexual also exist among animals, which is nature..

    5. Many times i posted in PT's website to have these programs uploaded in videos section. but no reply.. please also try to convince them to create an app for ipad/iphone...

    thanks and regards
    Dhivakaran

    ReplyDelete
  13. கட்டற்ற பாலியல் சுதந்திரம் எனபது காலம் காலமாக ஆண்களுக்கு இருந்து வருகிறது.அந்தபுரங்களும் பல தாரங்களும் இல்லாத சிற்றூர்கள் கூட எங்கும் கிடையாது.ஒருவனுக்கு ஒருத்தி எனபது தான் ரொம்ப ரொம்ப புதுசு.இப்போது கூட அது மைனோரிட்டி தான்.
    ஒரு பெண்ணை தவிர்த்து இன்னொருவளிடம் செல்பவன் ஒதுக்கப்படுவான் என்று எந்த மதமாவது சொல்லியிருந்தால் அந்த மதம் அதனுடைய கடவுள் உடனே ஒழிந்திருக்கும்.
    தேவதாசிகளும்,லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளிகளும் காட்டுவது எதை.கட்டுப்பாடான வாழ்க்கையையா
    வரி எனபது தவறு என்ற கோட்பாடுள்ள கட்சிகள்,இசங்கள் இல்லையா.அவற்றின் மேல் வராத கோவம் ரோசின் மேல் கொந்தளிப்பது ஏன்
    ஆணுக்கு இருக்கும் அதே கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெண்,மூன்றாம் பாலினம் அனைவருக்கும் வேண்டும் என்கிறார்.
    ஆதரவிருந்தால் செய்க்க போகிறார்.இல்லை தோற்று கொண்டு இருக்க போகிறார்.இதில் வெறுப்பு வர காரணம் என்ன.இதன் மூலம் பயம் வந்து ஆணும் பெண்ணை போல பாலியல் கட்டுப்பாடுகளோடு வாழ ஒத்து கொண்டால்/பழகி கொண்டால் நல்லது தானே

    ReplyDelete
    Replies
    1. வரி தவறு என்று சொல்வதற்கும் கற்பு தவறு என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு உறைக்கவில்லையா? வரி இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். கற்பு இல்லாவிட்டால் சமூகத்தின் ஆதாரமே பொருளற்றதாகி விடும்.
      மதங்கள் பற்றிப் போகிற போக்கில் சாடியிருக்கிறீர்கள். எந்த மதம் பகிரங்கமாக ஆணுக்குக் கட்டற்ற சுதந்திரம் தருகிறது? மதம் விதித்த கட்டுப்பாடுகளை மீறத்தான் செய்கிறார்களே தவிர கட்டுப்பாடே இல்லையென்று யார் சொன்னது?
      ஆணுக்கு இருக்கும் கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அந்த ஊரில் மட்டும் ஆண்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருக்கிறது போலும். அந்தப்புரமெல்லாம் ராஜாக்கள் காலத்து சமாச்சாரம். இப்போதும் வசதியும் அதிகாரமும் படைத்தவர்கள் அப்படி இப்படி இருக்கலாம். அவர்கள் மனைவிகள் தலையெழுத்தே என்று சகித்துக் கொண்டிருக்கலாம். சமூகமும் மற்ற பல விஷயங்களைப் போல் இதிலும் அவர்களைக் கண்டும் காணாமலும் இருக்கலாம். மற்றபடி நான் அறிந்தவரை இந்நாளில் எந்த சராசரி ஆணும் பலதாரம் வைத்துக் கொண்டு இஷ்டம் போல் திரிவதாகத் தெரியவில்லை. பெண்ணைப் பெற்றவர்கள் அப்படி ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லையே? அதிலும் கிராமப் புறங்களில் மற்றொரு பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொள்வது ஆண்களுக்கு அவ்வளவு ஒன்றும் சுலபமல்ல. சாதிசனம் பஞ்சாயத்துக் கூட்டி நிற்க வைத்துக் கேள்வி கேட்பார்கள். ரெண்டு பெண்டாட்டி வைத்திருப்பவன் நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை தான் நிதர்சனம்.
      தேவதாசிகள், பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். உண்மை. ஆனால் எந்த ஆணாவது யானை மீதேறி மேளதாளத்துடன் அவர்களிடம் செல்வதுண்டா? திருட்டு தவறென்று சமூகம், மதம், சட்டம் எல்லாம் சொன்னாலும் இரவில் சுவரேறிக் குதிப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள், அதனால் பட்டப் பகலில் எவன் வேண்டுமானாலும் எந்த வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழைய சுதந்திரம் வேண்டும் என்று சொல்வீர்களா? உங்கள் வீட்டுக்குக் கதவே வேண்டாம் என்பீர்களா? அது போலத்தான் இதுவும். இன்னும் தவறு செய்கிறவர்கள் ஒளிந்துதான் செய்கிறார்கள். அதில் ஆண்கள் எவ்வளவு உண்டோ அதே அளவு பெண்களும் உண்டு. அவர்களைப் பற்றிப் பேசி ஆராய்வது தேவையற்ற வேலை. ஏனெனில் அது அவர்களின் சொந்த பலவீனம். ஆனால் ஒளிந்து ஒளிந்து செய்வது போலித்தனம். அதையே சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக ஆகி விடலாம் என்றால் அது சமூகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.
      பெண் உரிமை பற்றி வாய் கிழிகிற எல்லாருக்கும் அடிப்படையில் ஒரு பிரமை இருக்கிறது. எல்லா ஆண்களும் கொடிய அரக்கர்கள். பெண்கள் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத அப்பாவிகள். அல்லது புருஷனைத் தலையில் சுமந்து கொண்டு தாசி வீடு செல்கிறவர்கள். நாம் வடிக்கிற முதலைக் கண்ணீர்தான் அவர்களைக் காப்பாற்றப் போகிறது இத்யாதி, இத்யாதி....... எல்லாமே தவறு.
      ஆண்களுக்கும் பந்தம், பாசம், காதல், மனைவியிடம் விசுவாசம் எல்லாம் உண்டு. மனைவிக்கு மனதறிந்து தொடர்ந்து துரோகம் செய்பவர்கள் 10% வேண்டுமானால் இருப்பார்கள். அந்த 10% சதவீதத்தினரையும் கூட சமுதாயம் அப்படி ஒன்றும் சும்மா விட்டு விடுவதில்லை. அப்படித் திரிகிற ஆண்களின் குழந்தைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு, அவமானங்கள் ஏராளம்.
      பெண்களும் அப்படி ஒன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டு கையறு நிலையில் நிற்பதில்லை. பெண் உரிமை வாய்ஜாலக்காரர்களின் முதலைக் கண்ணீரை எதிர்பார்க்காமல் குடும்ப வன்முறை சட்டத்தையும் நாடாமல் தம் கட்டற்ற சுதந்திர புருஷனுக்கு instant ஆகத் துடைப்பம், செருப்பு மரியாதை தருகிற பெண்களும் நம் சமூகத்தில் எக்காலத்திலும் ஏராளமாகவே உண்டு. இந்த விஷயத்தில் பெண்களுக்குத் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள நன்றாகவே தெரியும்.
      அதனால் பெண்களை விடுவிக்க ரோஸோ மல்லிகையோ தேவலோகத்திலிருந்து குதிக்கத் தேவை இல்லை. காம வெறியர்கள் பெண்ணுரிமை என்ற போர்வையில் மொத்த சமூக ஒழுங்கையும் கெடுத்து சொந்த இச்சையைத் தீர்த்துக் கொள்ள முயலத் தேவையும் இல்லை. அதற்கு பதில் நான் காம வெறி பிடித்தவன். என் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள என்னைப் போலவே அரிப்பெடுத்த வெறியர்கள் தேவை என்று கழுத்தில் ஒரு போர்டை மாட்டிக் கொண்டு கட்டற்ற சுதந்திரத்தைக் காணலாமே!

      Delete
  14. நான் பத்ரியின் கருத்தோடு ஒன்றுபடுகிறேன், இனவிருத்திக்காக மட்டுமே மனிதனின் உணர்வுகள் உண்டாக்கப்பட்டன, மனிதன் அதனை சுகத்துக்காக என்று உணர்ந்தாலும் அதை இனவிருத்திக்காக அவன் அதிகம் பயன்படுத்துகி றான். இன்றைய மக்கள் தொகைபோன்ற பிரச்சினைகளால் இனவிருத்திக்கான காரணம் தடைப்பட்டதால் அவன் வேறு காரணங்கள் உண்டாக்குகிறான். சவுதி போன்ற நாடுகளில் குடும்ப கட்டுப்பாடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அபார்ஷன் செய்தால் உடனடி தண்டனைதான். அங்கு அவர்கள் பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பு என்பது மனைவி குழந்தை என்று பாசங்களுடன் மனிதனை கட்டிப்போட்டு விட்ட ஒரு செயற்கையான அமைப்புதான், ஆனால் அமெரிக்கா போன்ற பலமுறை திருமணங்கள் அனுமதிக்கப்பட்ட நாட்டில் கூட இன்னமும் ஒரு குடும்பம் என்கிற அமைப்பு இருக்கத்தான் செய்கிறது. அது இல்லாமல் எந்த மனிதனுக்கும் வாழ்வில் பிடிப்பு அல்லது முன்னேற்றம் பற்றி சேமித்தல் பற்றி சிந்திக்கவே தோன்றாது. ஹாஸ்டல் போல் வாழலாம் என்றால் பிறகு வீடுகட்ட பணம் வேண்டாம், குழந்தைகளுக்கு சேமிக்கவேண்டாம், பிறகு சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்க வேண்டி வந்தால் அதுவும் அவ்வளவு தேவை இல்லை என்றால் பிறகு நல்ல வேலைகளில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். கற்பனை செய்யவே கடினமாக இருக்கிற ஒரு நிலைதான் இந்த கட்டுபாடற்ற பாலியல் என்று தோன்றுகிறது. உணவு உன்பது, உறங்குவது,போன்ற இயற்கை சம்பந்தமான விஷங்களில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல், இதிலும் அதுதானே, அந்த அளவை உறுதிப்படுத்துவதுதான் குடும்பம். குழந்தைகள் சுற்றம் என்று வரும்போது மனைவிக்கும் சரி கணவனுக்கும் சரி பொறுப்புகள் வந்து விடுகிறது. அதெல்லாம் இல்லாமல் ஆக்கிவிடும் இந்த வாதம்.

    ReplyDelete
  15. I would like to ask a question to all who support unconditional freedom to women (in fact my view includes men too in this). Will you accept this and provide the same freedom to your wife and daughters? If your wife goes and sleeps with another man with everyone's knowledge, will you be happy and praise her because she is independent? Don't be a hypocrite!! This applies for men too. I won't blame Rose because women lib supporters all over the world take the same way... - Ravi (just lazy to select a profile and enter my deails!)

    ReplyDelete
  16. கட்டற்ற பாலியல் சுதந்திரம் - இதைப் பேசினாலே பிரச்சனைதான். ஆனாலும் பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

    இல்லறம் என்ற அமைப்பு நல்லதுதான். அதிலிருக்கும் பயன்கள் மிகமிக அதிகம்.

    இன்றைக்கு இல்லம்/இல்லறம்/குடும்பம் என்று சொல்வது முதலிலிருந்தே அப்படியிருக்கவில்லை. கட்டற்ற பாலியலில் இருந்து சிறிது சிறிதாக மாறி ஒரு கட்டமைப்பிற்குள் வந்தது. அந்தக் கட்டமைப்பு என்பது இல்லறம் என்று அழைக்கப்படுகிறது.

    மேலே டிராபிக்கை எடுத்துக்காட்டியிருந்தார்கள். நாம் எப்பொழுதுமே 100% சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கு மீறிக்கொள்கிறோம். இதுதான் இன்றைய நிலை.

    மனதளவிலாவது அனைவரும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக இருப்பதுதான் இன்றைய உண்மையான நிலையும் கூட. மனைவியையோ கணவரையோ தவிர மனதால் வேறு யாரையும் இதுவரை நினைத்ததேயில்லை என்று யாரும் கூறிவிட முடியாது.

    நிற்க. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு ஆதரவாகச் சொல்வதாக முடிவு கட்ட வேண்டாம். இரண்டு பக்கமும் உள்ள அம்சங்களை எனது பார்வையில் சொல்கிறேன்.

    இல்லறத்தில் உள்ள ஒரு பிரச்சனை, அது ஆண்-பெண் என்ற குடும்ப அமைப்பை மட்டுமே ஏற்றுக்கொள்வது.

    ஒருவேளை அது மற்ற பாலின ஈர்ப்புகளையும் இணைத்துக் கொள்ளுமானால் அவர்களுக்குள்ளும் குடும்ப அமைப்பு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

    ஆனால் குடும்ப அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அதில் எதையும் மாற்ற விரும்புவதில்லை. பெண்ணே வீட்டையும் சமையல்கூடத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இருந்தும் கூட பெரும்பாலானோர் மாறுவதில்லை.

    ஆகையால்தான் அந்த அமைப்பிற்குள் பொருந்தாதவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ எல்லை மீறுகிறார்கள்.

    கட்டற்ற பாலியல் சுதந்திரத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆரோக்கியம் என்பது பேண வேண்டியது. முறையான பாலியல் அறிமுகம் இல்லையென்றால் ஆரோக்கியக் கேடு உண்டாகும் வாய்ப்பு நிறைய.

    என்னைப் பொருத்த வரை யாருக்கு எது வேண்டுமோ அவர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு.

    ஒருவர் தாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்யலாம். அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடாது. நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் கையைப் பிடித்துத் தடுக்கும் உரிமை இல்லை. புரிந்து கொள்ளாமல் தடுத்தால் விளைவுகள் எதிராகத்தான் இருக்கும்.

    ReplyDelete