Monday, April 30, 2012

மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்

மாநிலங்கள் அவையின் 250 உறுப்பினர்களில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பொதுவாக கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, இதழியல் ஆகிய துறைகளில் நிபுணர்களாக இருப்பார்கள். இது தொடர்ந்து நடந்துவரும் ஒரு நிகழ்வுதான். நாம் பொதுவாக கவனிப்பவர்கள், சினிமாக்காரர்களாகவோ அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமான பத்திரிகைக்காரர்களாகவோ இருப்பவர்களைத்தான்.

உதாரணத்துக்கு, சோ ராமசாமி, பாஜக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர். அவர் நியமன எம்பிக்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி ஆனவர்களைவிட நியமன எம்பிக்களுக்குக் குறைவான நேரமே பேசுவதற்கு ஒதுக்கப்படும். சம்பளம், பிற வசதிகள், மக்களுக்குச் செலவிடுவதற்கான நிதி ஆகியவை ஒரே மாதிரிதான் இருக்கும். அவர்களுக்கும் பிற மாநிலங்கள் அவை உறுப்பினர்கள்போல ஒரே வாக்குதான். எழுந்து நின்று பேசத்தான் நேரம் குறைவு.

ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டோ, நியமிக்கப்பட்டோ செல்வது பெருமைக்குரிய ஒரு விஷயமே. அப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்போது, அதுவும் கட்சிச் சார்பற்று ஒரு நியமன உறுப்பினராகச் செல்ல வாய்ப்பு தரப்படும்போது எந்தத் தனி நபரும் இதனை மறுத்துள்ளதாகத் தெரியவில்லை.

தெண்டுல்கர் நியமிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஆனால் பலர் தெண்டுல்கரைக் கடுமையாகத் தாக்குகிறார்கள். அவர் இதனை ஏற்றுக்கொண்டது சரியல்ல என்கிறார்கள். இது மூடத்தனம். அரசியல் அமைப்புச் சட்டம் புரியாதவர்கள் பேசுவது. இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதன்மூலம் சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் கட்சியில் ஒன்றும் சேர்ந்துவிடவில்லை; சோனியா காந்தியை ஆதரிக்கவும் இல்லை. தன் மீதுள்ள ஊழல் புகார்களை மறைக்கும்பொருட்டு காங்கிரஸ் செய்த சதிவேலை என்கிறார்கள். இருக்கட்டுமே? அதற்காக இந்தப் பெருமைக்குரிய கௌரவப் பதவியை தெண்டுல்கர் ஏற்கக்கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எனக்கு இப்போதைய காங்கிரஸ் ஆட்சியைத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக மண்ணைக் கவ்வவேண்டும், பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இப்போதைய காங்கிரஸ் அரசு, என்னை மாநிலங்கள் அவைக்கு நியமித்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.

பலர் ட்விட்டரில் தெண்டுல்கரை unfollow செய்வதாகச் சொல்கிறார்கள். என்னவோ இதனால் தெண்டுல்கருக்கு ஏதோ குறைத்துவிட்டாற்போல! ஒழியட்டும்.

“தெண்டுல்கருக்கு அரசியல், பொருளாதார, சமூக விஷயங்கள் பற்றி என்ன தெரியும்? அவர் இந்த விவாதங்களில் எப்படிப் பங்குகொள்வார்?” என்று சிலர் கேட்கின்றனர். இந்த முக்கியமான விவாதங்களில் கனிமொழி, அபிஷேக் மனு சிங்வி போன்ற சிறப்பான அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்ளட்டும். இந்தியா பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாடவேண்டுமா, கூடாதா என்று விவாதம் வந்தால் தெண்டுல்கர் அதில் கலந்துகொள்ளலாம். அல்லது பிசிசிஐ என்ற குப்பை அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியதாக ஓர் அமைப்பை உருவாக்கலாமா, வேண்டாமா என்று ஒரு விவாதம் வந்தால் தெண்டுல்கர் அதில் கலந்துகொள்ளட்டும். அது போதும்!

வேறு சிலரோ, விளையாடப் போனதுபோக மாநிலங்கள் அவைக்குச் செல்ல இவருக்கு நேரம் இருக்குமா என்று கவலைப்படுகிறார்கள். உண்மையில், ஊழல் தவிர ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் பல உறுப்பினர்களே நிறைய அமர்வுகளுக்குச் செல்வதில்லை. சென்றாலும் கொட்டாவி விட்டுக்கொண்டு தூங்கி வழிகிறார்கள். வாயைத் திறந்து உருப்படியாக ஒன்றும் பேசுவதில்லை. சச்சின் தெண்டுல்கர் வந்தால் குறைந்தபட்சம் சுற்றி இருக்கும் பிற உறுப்பினர்களுக்காவது மகிழ்ச்சியாக இருக்கும். அது போதாதா?

29 comments:

 1. அவைக்கு வந்து செல்ஃபோனில் ஆபாசப்படம் பார்ப்பதை விட அவைக்கு வராமல் கிரிக்கெட் விளையாடுவது பரவாயில்லையே?
  பாராளுமன்ற உறுப்பினருக்குத் தகுதி என்றால் சிரிப்புதான் வருகிறது. அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? (ஒரு வேளை அவரது இளமை கண்ணை உறுத்துகிறதோ? பாவம் டெண்டுல்கர்! TOO OLD TO PLAY CRICKET. TOO YOUNG TO ENTER THE PARLIAMENT!)
  ஆனால் யாரும் என்னை ஓய்வு பெறச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக அணியில் இருப்பதே வருங்காலத்தில் அவர் சிறந்த அரசியல்வாதியாக எல்லாத் தகுதிகளும் இருப்பதற்கு சான்று அல்லவா?

  ReplyDelete
 2. //சச்சின் தெண்டுல்கர் வந்தால் குறைந்தபட்சம் சுற்றி இருக்கும் பிற உறுப்பினர்களுக்காவது மகிழ்ச்சியாக இருக்கும். அது போதாதா?//

  ஹி ...ஹி நல்லா இருக்கு இந்த கூற்று... ராக்கி சாவந்த் , சன்னி லியோன், மல்லிகா ஷெரேவத் போன்றோரை நியமன உறுப்பினராக அனுப்பி அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமா கிடைக்குமே :-))

  இப்போ தான் தெரியுது ஏன் முன்னால் நடிகைகளை கட்சில சேர்த்து, சபைக்கு அனுப்புறாங்கன்னு சுற்றி இருக்கும் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி தரத்தானே :-))

  ReplyDelete
 3. கடைசி பத்தியில் இதை விட்டு விட்டீர்கள், "இப்போதுள்ள உறுப்பினர்கள் அப்படியே அவைக்கு சென்றலாம் செல்பேசியில் பலான படம் தான் பார்க்கிறார்கள்.

  இந்த செய்தி வந்தவுடன் நல்லதா கேட்டதா என்று நான் குழம்பினாலும் இப்போது தெளிவாக இருக்கிறேன். தெடெண்டுல்கர் வருவது நல்லது தான் என்பது என் கருத்து".

  ReplyDelete
 4. பத்ரி,
  தெந்துல்கர் ஏன் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதை விளக்கும் எதிர்மறைச் சான்றுகளைத் தரும் வாதங்களாலேயே இந்தப் பதிவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதாவது சுருக்கமாக சால்ஜாப்பு சொல்வது என்று சொல்வார்களே அதைப்போல...

  தெந்துல்கர் கிரிக்கெட் பற்றிய சர்ச்சைக்குரிய விதயங்களில் கூட தனது கருத்தைத் தெளிவுறப் பல சமயங்களில் தெரிவித்ததில்லை;இந்நிலையில் மாநிலங்களைவையில் நாட்டின் பல முக்கியப் பிரச்னை தொடர்பான விதயங்களில் அவருக்குக் கருத்து இருக்கிறதா என்பதே தெரியாத நிலையில் அவர் என்ன பொது நன்மைக்கு என்ன சாதித்து விட்டார் என்பதற்கு இந்தப் பதவி?

  இது காங்கிரஸ் கட்சியின் துஷ்பிரயோகம் என்றும்,தெந்துல்கர் நேர்மையாக இதை மறுத்திருக்க வேண்டும் என்பதும்தான நியாயமானது..

  தவிர சோவின் நியமனத்தையும் தெந்துல்கரின் நியமனத்தையும் ஒப்பிடுவது குழந்தைத் தனமானது;சோ 50 களில் இருந்து நாட்டின் எல்லா முக்கியப் பிரச்னைகளையும் ஒட்டியோ வெட்டியோ அலசும் திறமையும் ஆலோசனை சொல்லும் தகுதியும் படைத்தவர்..
  உங்களை எடுத்துக் கொண்டால் கூட முனுசாமி முனிசிபாலிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட,சரியோ தவறோ அதைப் பற்றிய ஒட்டியோ வெட்டியோ ஒரு கருத்தைத் தெரிவித்து அதை டிஃபென்ட் செய்யும் திறன் பெற்றும் அதை கம்யூனிகேட் செய்யவும் செய்கிறீர்கள்..
  தெந்துல்கர் நியமனத்திற்குப் பதில் உங்களை நியமிப்பதே கூட எனக்கு பெட்டர் சாய்ஸாகத்தான் தெரிகிறது. :)

  தெந்துல்கர் எனக்கும் பிடிக்கும்தான்...ஆனால் இது ஓவர் என்பது வெள்ளிடை மலை.

  ReplyDelete
  Replies
  1. சோவையும் தெண்டுல்கரையும் நான் ஒப்பிடவில்லை. சோவை நான் மேற்கோள் காட்டியது நியமன உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கவே. அதாவது தெண்டுல்கர் போய் என்ன பேசுவார் என்று சிலர் கேட்பதற்கான பதிலாக. பிறர் பேச அதிக நேரம். தெண்டுல்கரே ஆனாலும், நியமன உறுப்பினர் பேச மிகக் குறைவான நேரம்தான்.

   பின் இவர்கள் ஏன்தான் நியமிக்கப்படுகிறார்கள்? ஏதோ காரணத்தால் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், இது மிகவும் முக்கியம் என்று நினைத்துள்ளனர். இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அரசியல், பொருளாதார, சமூகக் கருத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை. கலை, இலக்கியம், இதழியல் போன்ற துறைகளில் விற்பன்னர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்துள்ளனர். அந்தவகையில், தெண்டுல்கரைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை. (விளையாட்டெல்லாம் ஒரு கலையா என்று கேட்டால் நான் அப்பீட்!)

   அடுத்து, காங்கிரஸ் இந்த நியமனத்தை ஏதோ ஒருவகையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டது என்பது பற்றி. அனைத்து அரசியல் கட்சிகளும் எல்லா நிகழ்வுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவையே. இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

   தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.

   இந்தத் தேர்வு எந்தவிதத்திலும் ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களும் கண்ணியமானவர்களே.

   மக்கள் சிலருக்கு காங்கிரஸ்மீதுள்ள வெறுப்புதான் அவர்களை இப்படிப் பேச வைத்துள்ளது. அதற்காக தெண்டுல்கரை ஏன் காய்வானேன்? வரும் தேர்தலில் காங்கிரஸின் சிண்டைப் பிடித்துத் தூக்கி எறிவோம்!

   Delete
  2. ||தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.||

   பத்ரி,
   குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியம்; எப்படி இப்படி தமாஷ் பண்ணுகிறீர்கள் ?!
   :))

   Delete
  3. மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் குடியரசுத் தலைவர் இந்த உறுப்பினர்களை நியமிக்கிறார். அதனால் என்ன? அப்படித்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லொரும், காங்கிரஸ் நியமித்தது, அதனால் நான் வேலை செய்ய மாட்டேன் போ, என்றா சொல்கிறார்கள்? நீதிபதிகள், ஆளுநர்கள் போலத்தான் இந்த நியமனமும்.

   Delete
  4. இதே காங்கிரஸ் கையால் பாரத ரத்னா கிடைத்தால் மட்டும் தெண்டுல்கர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கட்சியின்மீது வெறுப்பு, கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசுப் பிரதிநிதிகளாக நமக்கு எதைச் செய்தாலும்,அது நம்முடைய தகுதி கருதிச் செய்யப்பட்டது என்று கருத இடம் இருந்தால், அதனை நாம் ஏற்றுக்கொள்வதே முறை. தெண்டுல்கரை நான் பாராட்டுகிறேன்.

   Delete
  5. நீங்கள் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்..
   நீதிபதிகள் விதயத்தில் அவர்கள் அமசி போன்றவர்களிடம் எதையும் கொடுத்து பதவி வாங்கத் துடித்தாலும் அடிப்படையில் வழக்கறிஞராகத் தம்மை நிலைநிறுத்தியவர்கள்.உங்களையும் என்னையும் அரசு பரிந்துரை செய்தால் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்க முடியுமா?அதற்கான குறைந்த பட்சத் திறன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

   இந்த நியமனத்தில் காங்கிரஸ் அரசியலுக்காக நியமித்தது தவறாகும் போது தெந்துல்கர் சுயநலத்திற்காக ஒப்புக்கொண்டது அதைவிடப் பெரிய தவறு.அதுதான் என் பார்வை.


   பாரத ரத்னா விதயம் வேறு.உன் வாழ்நாளெல்லாம் உன் திறனால் எங்களை மகிழ்வித்தாய்;உனக்கு ஒரு ஓ போடுகிறோம்;சந்தோஷமாக இருந்து விட்டுப் போ' என்னும் ஒன் டைம் அங்கீகாரம்..மக்களவை,மாநிலங்களவைப் பதவி என்பதும் முற்றிலும் வேறு.

   ஆளுனர்கள் நியமனம்-இதே அரசியல் காரணங்களுக்காக தகுதியற்றவர்கள் பெரும்பாலும் நியமிக்கப் படும் இன்னொரு பதவி.ஆனால் அவர்கள் பாலிசி மேட்டர்களில் எதுவும் முடிவெடுப்பதில்லை.அதிகபட்சம் மாநில அரசைக் கலைக்க அறிக்கை கொடுக்க கைநாட்டு வைப்பார்கள்..அல்லது திவாரி மாதிரி என்பது வயதில் மங்கையைத் தேடுவார்கள். அந்த வகை நியமனங்களும் எனக்கு ஒப்புதலற்றவையே..ஆனால் அதிகபட்சம் நம்மைப் போன்றவர்களால் எதிர்த்து எழுத மட்டுமே முடியும்.

   குறைந்த பட்சம் அதையாவது செய்ய வேண்டும் என்கிறேன் நான்;அதற்கு எதிர்ப்பதமாக அவ்வித நியமனங்களைப் பாராட்டலாம் என்பது உங்கள் பார்வை.

   நீங்கள் சாரு ஷர்மா கூறியதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   Let's agree to disagree.

   Delete
  6. நம் அரசியல் அமைப்பு, அறிவார்ந்தவர்கள் மட்டும்தான் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படியானால் தேர்தலுக்கு பதில் நுழைவுத் தேர்வுதான் வைக்கவேண்டும். மக்களவையில் பெருவாரியான மக்கள் தேர்ந்தெடுத்தால் போதும். சம்பந்தப்பட்ட நபர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் பரவாயில்லை.

   பொதுமக்கள் பாபுலாரிடியை முன்வைத்தே மக்களவைக்கு ஆள்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால்தான் மாநிலங்கள் அவைக்கு வேறு மாதிரியான தேர்தல் நடைபெறுகிறது. அங்கே மக்களவை போல் தெருவில் இறங்கிப் போட்டி போடமுடியாத, ஆனால் ஆழ்ந்த சிந்தனையாளர்களை, திறமை மிக்கவர்களைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால் கட்சியின் முக்கியஸ்தர்களைக் கொண்டுவரும் பின்வாசல் வழியாக மாநிலங்கள் அவை மாறியுள்ளது துரதிர்ஷ்டம்.

   இருப்பினும், நியமன உறுப்பினர்களைப் பொருத்தமட்டில் இந்தப் பிரச்னை ஏதும் இல்லை. சில துறைகளில் முன்னணி சாதனையாளர்கள் சிலரை (12 பேர்) அங்கே கொண்டுவருவதுதான் நோக்கம். அம்மட்டில், தெண்டுல்கர் அந்த இடத்தில் இருக்கத் தகுதியானவரே என்றுதான் நான் வாதிடுகிறேன்.

   Delete
  7. || ஆனால் ஆழ்ந்த சிந்தனையாளர்களை, திறமை மிக்கவர்களைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் பொதுவான கருத்து. ||

   மிகச் சரி.இதை வலியுறுத்திக் கருதுவதால் தான் தெந்துல்கருக்குத் தகுதி இல்லை என்று நான் கருதுகிறேன்.
   இதில் எம்எல்ஏ க்களின் ஓட்டு மூலம் வருவதோ நியமனமாக வருவதோ பொருட்டில்லை;வருபவரின் தகுதியும் அவர் என்ன செய்வார் என்ன செய்ய முடியம் என்ற நோக்கத்தில்தான் நியமனம் அமைய வேண்டும்.

   ஒரு சட்டப் பிரிவை அது என்ன சொல்கிறது என்று பார்க்க இரு வித வழி இருக்கிறது; சட்டம் நேரடியாக என்ன சொல்கிறது என்று பார்ப்பது ஒன்று;சட்டப் பிரிவின் தேவைக்கான இன்டன்ஷனல் இன்டர்ப்ரெட்டேஷன் என்றது ஒன்று.அதாவது எந்த நோக்கத்திற்காக அந்த சட்டப் பிரிவு வரையப் பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறுகிறதா என்று பார்ப்பது.
   In essence and spirit. அது எல்லாப் பிரிவுகளிலும் நீர்த்துக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே..அதைத் தடுக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது எனது பார்வை.
   :)))

   Delete
 5. டெண்டுல்கர் பூஸ்ட்,பெப்சி போன்ற விளம்பரங்களில் தோன்றுவாரா.எம் பி குறிப்பிட்ட பொருள்களுக்கு விளம்பரம் செய்வது சரியா.அப்படி செய்ய கூடாது என்றால் பதவியில் தொடர்வாரா.
  எம் பி சம்பளம் வாங்கி கொண்டு வேறு சம்பளம் வாங்கினால் ஆபீஸ் ஒப் ப்ரோபிட் என்று கூச்சல் வருமே.அது நியமன உறுப்பினர்களுக்கு செல்லாதா.

  ReplyDelete
  Replies
  1. இவை நல்ல கேள்விகள். எம்.பிக்கள் எந்தப் பொருள்களுக்கு வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தாலும் சரி, நியமிக்கப்பட்டவராக இருந்தாலும் சரி.

   எம்.பி சம்பளம் வாங்கிக்கொண்டு தனியார் துறையில் வேறு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்து சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். ராஜிவ் சந்திரசேகர், விஜய் மல்லையா போன்றோரைப் பாருங்கள்.

   Delete
  2. விஜய் மல்லய்யா பிரபுல் படேல், சந்திரசேகர் போல கம்பெனி நடத்துவது/சொந்தமாக வைத்திருப்பது வேறு,பொருள்களை விளம்பரபடுத்துவது வேறு.
   அவர் தொலைதொடர்பு பற்றிய குழுவில் உறுப்பினராக/பெப்சியில் அதிக பூச்சி மருந்து உள்ளதா,அவற்றை தடை செய்ய வேண்டுமா என்ற குழுவில் இருந்து கொண்டு யாரேனும் ஒரு கம்பெனிக்கு ஆதரவாக விளம்பரத்தில் நடிக்க முடியுமா.அது சரியா
   பொது நல வழக்கு ஏதாவது வந்து தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.மார்க்கெட் இல்லாத ஹேமமாலினி ஒன்றிரண்டு விளம்பரங்களில் வந்ததாக நினைவு.அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.ஆனால் சச்சின் கதை வேறு.

   Delete
  3. சத்ருக்கன் சின்ஹா உறுப்பினராக இருந்துகொண்டே சாராய விளம்பரத்தில் வந்துள்ளார். ஹேமமாலினி (மார்க்கெட் இருக்கோ இல்லியோ) விளம்பரங்களில் வருகிறார். ஷபனா ஆஸ்மி நியமன உறுப்பினராக இருந்தபோது விளம்பரங்களில் வந்தார். ஆஸ்மியின் கணவர் ஜாவீத் அக்தரும் அப்படியே.

   நியமன உறுப்பினர்களையெல்லாம் பொதுவாக நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

   Delete
  4. ||நியமன உறுப்பினர்களையெல்லாம் பொதுவாக நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.||

   இது வெறும் மரபுதான் என்று நினைக்கிறேன்;சட்டப் பிரிவு தடுப்பதாகத் தெரியவில்லை.

   அரசியல்வாதிகள் குடைச்சல் வேண்டாம் என்பதால் சேர்த்துக் கொள்வதில்லை.

   Delete
  5. நீங்கள் சொல்வதை பார்த்தால் கபில் சிபல்,எம்,பி ,எம் எல் ஏ எல்லாம் அமிதி உனிவேர்சிட்டி,பாரத இன்ஜினியரிங் கல்லூரி விளம்பரங்களில் நடிக்கலாம்,ஹிந்துவை கிண்டலடிக்கும் டைம்ஸ் ,அதற்க்கு பதிலளிக்கும் ஹிந்து விளம்பரங்களில் நடிக்கலாம் .தடை ஏதுமில்லை எனபது போல் உள்ளது.
   நீதிபதிகள்,மாவட்ட ஆட்சியர்கள்,தலைமை போரியார்கள்,மருத்துவர்கள் விளம்பரங்களில் நடிக்க முடியுமா.சோனியா பெப்சிக்காகவும்,சுஷ்மா COKE குடிக்கவும் விளம்பரம் செய்ய முடியுமா
   சின்ஹா எம் பி ஆன பிறகு நடித்த மாதிரி தெரியவில்லை.

   Delete
 6. Completely agree with அறிவன்.....

  டெண்டுல்கர் நியமனத்திற்குப் பதில் உங்களை நியமிப்பதே கூட எனக்கு பெட்டர் சாய்ஸாகத்தான் தெரிகிறது. 100% correct.

  உங்களை போன்றவர்கள் அங்கு சென்றால் தான் , அந்த பதவியின் மூலம் குறைந்தபட்சம் எதாவது செய்வீர்கள்.
  டெண்டுல்கர் எம். பி யானால், அவருக்குதான் பெருமை. Nothing else going to happen.

  -Siva

  ReplyDelete
 7. good post Badri sir ! Jayaditya Gupta has written a stronger post in Cricinfo. Do check it out.

  ReplyDelete
 8. //(ஒரு வேளை அவரது இளமை கண்ணை உறுத்துகிறதோ? பாவம் டெண்டுல்கர்! TOO OLD TO PLAY CRICKET. TOO YOUNG TO ENTER THE PARLIAMENT!)
  ஆனால் யாரும் என்னை ஓய்வு பெறச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக அணியில் இருப்பதே வருங்காலத்தில் அவர் சிறந்த அரசியல்வாதியாக எல்லாத் தகுதிகளும் இருப்பதற்கு சான்று அல்லவா?//
  @Poornam Good one.
  @Badri - Your article convinced me much. Worthy one
  -Jagan

  ReplyDelete
 9. வெகு நாட்களாக தலையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி: உங்கள் பதிவுகளின் கமென்டுகளுக்கு நீங்கள் குறிப்பிடும் நேரம் ஏன் இந்திய நேரத்திற்கு எட்டு அல்லது ஒன்பது மணி நேரங்கள் பிந்தி இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. That is the setting in blogger. Probably he forgot to change it or intentionally kept.

   Delete
 10. Awesome badri. I cannot understand why this hue and cry over Sachin's nomination.
  Parliament/Assembly is right now made of members from party(BJP) who watch porn movies and members from another party(Congress) who act in porn movies. Sachin Tendulkar is much much much better person to be in a Parliament who commands decent amount of respect.
  Only one tamil proverb comes to my mind, "Indha ulagam vazhndhaalum yesum, thaazhndhaalum yesum".Everybody has tons of advice on what others should do.

  ReplyDelete
  Replies
  1. தோடா...!
   those members who watch porn movies and those who act in porn movies are elected by people like you who watch porn movies, don't you think so ?

   Delete
 11. டெண்டுல்கருக்கு இப்போதைக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாது. அது பல சர்ச்சைகளைக் கிளப்பும். ஆகவேதான் அவரை எப்படியாவது கவுரவிக்கக் கருதி ராஜ்ய சபா உறுப்பினராக்கி விட்டாகள் என்றே கருதுகிறேன்.
  டெண்டுல்கர் ராஜ்ய சபாவில் என்ன கிழித்து விடப் போகிறார் என்பது அர்த்தமற்ற கேள்வி. கிரிக்கெட் ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்த டெண்டுல்கரால் மக்களின் நாடித் துடிப்பையும் அறிய இயலும். அவர் நாட்டை எதிர்ப்பட்டுள்ள பல பிரச்சினைகளைப் பற்றி நன்கு பேசக்கூடியவராக விளங்கலாம். வாய்ப்புக் கொடுத்தால் தான் தெரியும்.
  இந்த நாட்டின் பல்வேறு அகில இந்திய விளையாட்டு அமைப்புகளில் பழம் பெருச்சாளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களால் விளையாட்டுக்கோ விளையாட்டு அமைப்புகளுக்கோ எந்தப் பலனும் இல்லை. டெண்டுல்கர் இந்த ஒரு பிரச்சினையை வைத்து ராஜ்ய சபாவில் குரல் எழுப்பி நிலைமையை மாற்ற முற்பட்டால் அது பெரும் சாதனையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ராமதுரை சார்..
   நீங்கள் ரொம்ப உடோபியனாக யோசிக்கிறீர்கள் போலிருக்கிறது..
   பவாரின் ஆதிக்கம் கிரிக்கெட் வாரியத்தில் ஒழிந்ததா? கில்லின் ஆதிக்கம் ஹாக்கியைச் சீரழிக்காமல் விட்டதா? தன்ராஜ் கரடியாகக் கத்திப் பார்த்தாரே,என்ன செய்ய முடிந்தது?

   Delete
  2. ராமதுரை
   ”கிரிக்கெட் ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்த டெண்டுல்கரால்” இப்படி ஏன் ஏற்றி விட்டு அவர் உடம்பைப் புண்ணாக்குகிறீர்கள் ?அவர் பாட்டுக்கு அவரது ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் .நாம்தான் இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை பண்ணிக் கொள்கிறோம்.நாம் ஆசைப் படுகிறோம் என்பதற்காக ஒற்றை ஆளாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சீரிஸ் ஜெயித்துக் கொடுத்தாரா என்ன?ஏதோ அவர்ரல் முடிந்த அளவுக்கு அவர் சின்சியராக ஆடுகிறார்.அதை அனுபவிப்பதோடு நிறுத்திக் கொள்வோம் :)

   Delete
 12. கிரிக்கெட்டிலேயே கருத்து சொல்ல வாய்ப்பு வந்த போதும் டெண்டூல்கர் எந்த விஷயம் பற்றியும் வாய் திறந்ததில்லை.நான் உண்டு என் வேலை உண்டு என்று நல்ல பெயர் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்.அது தப்பென்றும் சொல்ல மாட்டேன்.அவரது நிலைப்பாடு அது.அது மாதிரிதான் வாய்ப்பு கிடைத்தால் அதை (நம் மன விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப) அவர் நிராகரிக்க வேண்டும் என்றும் அவசியமில்லை.அவைக்குப் போவாரா, பேசுவாரா, சதிப்பாரா என்பதெல்லாம் அடுத்த பிரச்சினை.விஜய் மல்லையா மானிலங்களவை உருப்பினராக இருந்து என்ன பேசினார் அல்லது என்ன சாதித்தார் ( சாதித்துக் கொண்டார்) என்று பார்ப்பது இந்த விவாதத்துக்கு மேலும் சுவாரஸ்யம் ஊட்டக் கூடும்

  ReplyDelete