Thursday, July 19, 2012

உலகம் பிறந்தது எதனாலே?

[புதிய தலைமுறை இதழில் வெளியான என் கட்டுரை]

இந்த உலகம் எப்படி உருவானது? நம்மைச் சுற்றியுள்ள கோள்களும் நட்சத்திரங்களும் எப்படிப் பிறந்தன? இந்தப் பிரபஞ்சம் உருவானது எப்படி?

நீண்டகாலமாக அறிவியல் இந்தக் கேள்விக்கு விடைகாண முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இதற்கான விடைகள் அவ்வப்போது கீற்றுப் போலத் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றாலும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி நமக்கு இன்னமும் ஏகப்பட்ட விடை தெரியாத கேள்விகள் உள்ளன.

ஒரு பெருவெடிப்பு என்பதன் மூலமாகத்தான் இப்போதைய பிரபஞ்சம் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தைக் கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தைப் பற்றி அறிவியல்ரீதியாக ஒன்றையும் சொல்லமுடியாத நிலையில் இப்போதும் இருக்கிறோம். ஆனால்-

அந்தக் கணத்துக்குச் சில விநாடிகள் கழித்து, பிரபஞ்ச வெளியில் எக்கச்சக்கமாக வெப்பத்தின் ஆற்றல் மட்டுமே விரவி இருந்திருக்கும். அங்கிருந்து எப்படி இத்தனைத் துகள்களும், அவற்றிலிருந்து இத்தனை அணுக்களும், அவற்றிலிருந்து இத்தனை தனிமங்களும், இன்று நாம் காணும் அனைத்தும் உருவாகின? முதலில் இந்தத் துகள்களின் அடிப்படைக் குணங்களான நிறையும் மின்னூட்டமும் எப்படித் தோன்றின?

மின்னூட்டம் எப்படி வந்திருக்கலாம் என்பதற்கு சில கோட்பாடுகள் உள்ளன. ஆனால் நிறை எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கு ஹிக்ஸ் கோட்பாடு ஒன்றுதான் இப்போதைக்கு அறிவார்ந்ததாக உள்ளது.

அது என்ன ஹிக்ஸ் கோட்பாடு?

பெருவெடிப்பை ஒட்டிய தருணத்தில் ’ஹிக்ஸ் போஸான்கள்’ என்ற துகள்கள் உருவாகி, பிரபஞ்ச வெளியை முழுமையாக நிறைத்திருக்கவேண்டும். பிற துகள்கள் அடுத்துத் தோன்றியிருக்கவேண்டும். அவை ஹிக்ஸ் புலத்தில் நகர்ந்தபோது ஹிக்ஸ் போஸான்களுடன் ஊடாடி, தமக்கான நிறையைப் பெற்றிருக்கவேண்டும்.

அதன்பின் இந்தத் துகள்கள் எல்லாம் ஒன்றுகூடி, கொஞ்சம் கொஞ்சமாக அணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து இன்று நாம் காணும் இந்தப் பிரபஞ்சப் பெருவெளி, நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள், தூசுகள் என அனைத்துமே தோன்றியிருக்கவேண்டும்.

அதாவது பிரபஞ்சத்தின் முதல் துகள் ஹிக்ஸ் போஸான். அதிலிருந்துதான் எல்லாமே உருவாகியிருக்க வேண்டும்

ஹிக்ஸ் போஸான் என்றால்?

தமிழ் நாட்டில் இன்று பள்ளிப் பிள்ளைகளுக்குக்கூட அணுவைப் பற்றித் தெரிந்திருக்கும். அணுவின் உள்ளே புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போன்ற அணுத் துகள்கள் இருப்பதாக நாம் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம்.

இந்தத் துகள்களுக்கெல்லாம் அடிப்படையாக இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று நிறை (mass), மற்றொன்று மின்னூட்டம் (charge).

நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ஒத்த மின்னூட்டம் உடைய இரு பொருள்கள் ஒன்றை ஒன்று விலக்கும்; எதிரெதிர் மின்னூட்டம் உடைய இரு பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது. இது அடிப்படை விதிகளில் ஒன்று.

ஆனால் ஓர் அணுவின் உட்கருவில் ஒரே மின்னூட்டம் கொண்ட பல புரோட்டான்கள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று விலக்கி அல்லவா தள்ளவேண்டும்? ஆனால் அப்படியின்றி ஒன்றை ஒன்று இறுக்கிப் பிடித்தபடி ஒரே உட்கருவில் உள்ளனவே? இது எப்படிச் சாத்தியம்?

விஞ்ஞானிகள் இதனை விரிவாக ஆராய்ந்தனர். புரோட்டான், நியூட்ரான் ஆகியவையே அடிப்படைத் துகள்களாக இல்லாதிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இவற்றுக்கும் அடிப்படையாக குவார்க்குகள் என்ற ஆறு துகள்கள் இருக்கவேண்டும் என்றும் அவற்றின் பல்வேறு கூட்டமைப்பே புரோட்டானாகவும் நியூட்ரானாகவும் ஆகியிருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

இந்தக் குவார்க்குகளுக்கு இடையே மிகவும் வலுவான ஒரு விசை இருக்கவேண்டும் என்ற அவர்கள், இதற்கு ‘வலுவான உட்கரு விசை’ (ஸ்ட்ராங் நியூக்ளியர் ஃபோர்ஸ்) என்று பெயரிட்டனர்.

இதேபோல ‘வலுவற்ற உட்கரு விசை’ என்ற கருத்தாக்கமும் உருவானது. சில குறிப்பிட்ட கட்டங்களில் ஒரு நியூட்ரான் ஒரு புரோட்டானாக மாறுகிறது. வேறு சில கட்டங்களில் புரோட்டான் ஒன்று எலெக்ட்ரான் ஒன்றைக் கவ்விப் பிடித்து, நியூட்ரானாக உருவெடுக்கிறது. இதுபோன்ற மாற்றங்களுக்குக் காரணம் இந்த வலுவற்ற உட்கரு விசை.

ஆக, நமக்கு ஏற்கெனவே தெரிந்த மின்காந்த விசை, ஈர்ப்பு விசை ஆகியவற்றோடு வலுவற்ற உட்கரு விசை, வலுவான உட்கரு விசை ஆகியவை சேர்ந்து மொத்தம் நான்கு அடிப்படை விசைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் பேசத் தொடங்கினர். இதைத்தான் ஸ்டாண்டர்ட் மாடல் என்று விஞ்ஞானிகள் சொல்லத் தொடங்கினர்.

துகள்கள்

இந்த விசைகள் பரவியிருப்பதை விசைப்புலங்கள் என்றும் அந்த விசைப்புலங்களை சில சில துகள்கள் உருவாக்குவதாகவும் சொல்லலாம். உதாரணமாக மின்காந்த விசைப்புலத்தை உருவாக்குவது போட்டான்கள் என்ற ஒளித்துகள்கள்தான் எனலாம்.

அப்படியானால் வலுவான உட்கரு விசை, வலுவற்ற உட்கரு விசை ஆகியவற்றை உருவாக்குவதிலும் ஏதேனும் துகள்கள் இருக்குமோ?

அப்படிப்பட்ட ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது. வலுவான உட்கரு விசையை உருவாக்கக்கூடிய துகள்களுக்கு குளூவான் என்றும் வலுவற்ற உட்கரு விசையை உருவாக்கும் துகள்களுக்கு டபிள்யூ போஸான், இஸட் போஸான் என்றும் பெயர் தரப்பட்டது.

இந்தத் துகள்களை ஏன் போஸான் என்று அழைக்கிறார்கள்?

பால் டிராக் என்ற விஞ்ஞானி,  வேறு சில விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஐன்ஸ்டைனின் சார்பியல் விதிகளையும் இணைத்து, எலெக்ட்ரானின் இயக்கத்தை விளக்கும் சமன்பாடுகளை வெளியிட்டார்.அப்போது அவர் இருவிதமான துகள்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

(1) ஒரே குவாண்டம் நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் இருக்கலாம்.

(2) ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்க முடியாது.

குவாண்டம் நிலை என்றால்?

குவாண்டம் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள, ஓர் உதாரணம் உதவும். சென்னையில் இருக்கும் பாம்புப் பண்ணையில் இருளர்கள் பாம்புகளைப் பானையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலவகைப் பாம்புகள் பலவற்றை ஒரே பானையில் ஒன்றாகச் சேர்த்து வைக்கலாம். ஆனால் வேறு சிலவகைப் பாம்புகளை அப்படிச் செய்ய முடியாது. ஒரு பானையில் ஒன்று மட்டும்தான். அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு பாம்பைக்கூட தன்னுடன் இருக்க அது அனுமதிக்காது. பானைதான் குவாண்டம் நிலை; பாம்புதான் துகள்.

எலெக்ட்ரான்களை எடுத்துக்கொண்டால், இரு வேறு எலெக்ட்ரான்கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்காது. ஆனால் போட்டான் எனப்படும் ஒளித்துகள் பலவும் ஒரே குவாண்டம் நிலையில் இருக்கும்.

இந்த இரண்டுவகைப் பாம்புகளையும் வேவ்வேறு விதமாகக் கையாளவேண்டும் என்பதை டிராக் தெளிவாகப் புரிந்துகொண்டார். அதற்கான கணிதமுறைகளைத் தேடினார். அவருடைய முன்னோடிகள் இதனை ஏற்கெனவே செய்து வைத்திருந்தனர்.

கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திர நாத் போஸ், ஒளித்துகளான போட்டானின் இயக்கம் பற்றிச் சில கணக்குகளைச் செய்யும்போது புதுவிதமான ஒரு புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் இதனை யாரும் ஏற்கவில்லை. போஸ் சற்றும் மனம் தளராமல் தன் கட்டுரையை ஐன்ஸ்டைனுக்கு அனுப்பிவைத்தார்.

அந்தக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஐன்ஸ்டைன்,  அதை ஜெர்மன் மொழிக்கு மாற்றிப் பதிப்பிக்கச் செய்தார். நிறையற்ற ஒளித்துகளுக்காக போஸ் உருவாக்கிய கணித முறையை ஐன்ஸ்டைன் நிறை கொண்ட பொருள்களுக்கும் நீட்டித்தார்.

டிராக் இந்தக் கணித முறையை அப்படியே எடுத்துக்கொண்டார். பல துகள்களும் ஒரே குவாண்டம் நிலையில் இருந்தால், அவை போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் முறையில் இயங்கும். எனவே இத்தகைய துகள்களுக்கு  போஸான் என்று பெயர் கொடுத்தார் டிராக்.

ஒரே குவாண்டம் நிலையில் இருக்காத துகள்கள், ஃபெர்மி-டிராக் புள்ளியியல் முறையில் இயங்கும். எனவே இத்தகைய துகள்களை ஃபெர்மியான் என்று அழைத்தார் டிராக் .

ஹிக்ஸ் கண்டுபித்த, போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் முறையில் இயங்கும் துகள்தான், ஹிக்ஸ் போஸான்.

மாற்றி யோசி

பல்வேறு துகள்கள் இருக்கின்றன என்ற உண்மை இன்னொரு கேள்விக்கு இட்டுச் சென்றது. பல்வேறு துகள்களுக்கும் வெவ்வேறு நிறை எப்படி ஏற்படுகிறது? அவற்றுக்கு உள்ளே என்னதான் புகுந்துகொண்டு ஒன்றை அதிக நிறையுடனும், ஒன்றை மிகக் குறைந்த நிறையுடனும், இன்னொன்றை நிறையே இல்லாமலுமாக ஆக்குகிறது?

1963-ல் ஆறு விஞ்ஞானிகள் இது குறித்து விரிவான கோட்பாடு ஒன்றை முன்வைத்தனர். அந்த ஆறு பேரில் ஒருவர்தான் பீட்டர் ஹிக்ஸ்.

இவர்கள் முன் வைத்த கோட்பாடு, துகள்களின் நிறை பற்றி நாம் அதுவரை வைத்திருந்த கருத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிப்போட்டது. ஒரு துகளுக்கு உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று அதன் நிறையைத் தருகிறது என்று யோசிப்பதைவிட, ஒரு துகள் ஒரு விசைப்புலத்தில் செல்லும்போது அதன்மீது உருவாகும் வினைதான் அதன் நிறையைத் தருகிறது என்பதாக ஏன் சிந்திக்கக்கூடாது என்றனர் இவர்கள்.

இவர்கள் முன் வைத்த கருத்துகளின் முக்கிய அம்சங்கள்:
  • எப்படி வலுவான/வலுவற்ற உட்கரு விசைப்புலங்களை அவற்றுக்கான துகள்கள் உருவாக்குவதாகச் சொல்கிறோமோ, அதேபோல ஹிக்ஸ் புலத்தை ஹிக்ஸ் போஸான் என்ற துகள் உருவாக்குகிறது.
  • எப்படி மின்காந்தப் புலத்தில் மின்னூட்டம் கொண்ட ஒரு துகள் செல்லும்போது அது உருவாக்கும் மாற்றத்திலிருந்து அதற்கு என்ன மின்னூட்டம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமோ...
  • அதே போல ஹிக்ஸ் புலத்தில் ஒரு துகள் செல்லும்போது ஏற்படும் மாற்றத்திலிருந்து ஒரு துகளின் நிறை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இப்படிப் பார்க்கலாம். ஹிக்ஸ் புலத்தில் ஒரு துகள் மிக எளிதாக, வேகமாகச் செல்கிறது என்றால் அதன் நிறை குறைவாக இருக்கவேண்டும். இன்னொரு துகள் சிரமப்பட்டு மெதுவாக நீந்திச் செல்கிறது என்றால் அதன் நிறை அதிகமாக இருக்கவேண்டும்.

அதெல்லாம் சரி, உண்மையிலேயே ஹிக்ஸ் போஸான் என்ற துகள் ஒன்று உள்ளதா? அதனைக் கண்டுபிடிக்க முடியுமா?

உண்மையிலேயே இருக்கிறதா?

இதற்கு முன்னர் பரிசோதனைச் சாலையில் சில துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல இப்போதும் சில பரிசோதனைகளைச் செய்தால் ஹிக்ஸ் போஸான் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்து விடலாமே?

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ஹிக்ஸ் கோட்பாடு உருவானது 1964-ல். அதற்குப்பின், 1970-களில்தான் வலுவான உட்கரு விசை முன்மொழியப்பட்டது. ஆனால் அதன் விளைவாகச் சிந்திக்கப்பட்ட துகள்கள் எல்லாம் கண்டறியப்பட்டுவிட்டன. ஹிக்ஸ் போஸான் துகள் மட்டும் கண்ணில் படவில்லை.

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

இந்தத் துகள்களையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டுமானால் அதிவேகத்தில் செல்லும் இரு அணுத் துகள்களை மோதவிடவேண்டும். அதன் விளைவாக உருவாகும் ஆற்றலில் இந்தத் துகள்கள் உடைந்து, நாம் எதிர்பார்க்கும் சில துகள்கள் கிட்டலாம்.

ஹிக்ஸ் போஸானின் உள்ளார்ந்த ஆற்றல்-நிறை மிக மிக அதிகமானது. பிற துகள்களைக் கண்டுபிடிக்கவேண்டுமானால் இரண்டு எலெக்ட்ரான்களை அல்லது குறைந்த வேகத்தில் செல்லும் இரு புரோட்டான்களை மோதவிட்டால் போதுமானது. ஹிக்ஸ் போஸானைக் கண்டறியவேண்டுமானால் மிக அதிகமான வேகத்தில் இரு புரோட்டான்களை மோதவிட வேண்டியிருக்கும். இதனைச் சாத்தியப்படுத்த நிறையத் தொழில்நுட்ப மேம்பாடு தேவைப்பட்டது. இதன் விளைவாக உருவானதே சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிச் சாலையில் உள்ள லார்ஜ் ஹேட்ரான் கொலைடர் (பெரும் துகள் மோதற்களம்).

இந்த மோதற்களத்தில் இரண்டு புரோட்டான்களை அதிவேகத்தில் மோதச் செய்ய முடியும். ஆனால் பல்வேறு தொழில்நுட்ப இடைஞ்சல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களையும் தாண்டி, சென்ற ஆண்டில்தான் லார்ஜ் ஹேட்ரான் கொலைடரில் குறிப்பிட்ட வேகத்தை அடைய முடிந்தது.

அந்தச் சோதனைகளின்போது கிடைத்த தகவல்களை ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இரு விஞ்ஞானிக் குழுக்கள் கடந்த வாரம் (4 ஜூலை 2012) அறிவித்தனர்.

கிட்டத்தட்ட என்றால்? இன்னும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதுதான். அதாவது மேலும் சில சோதனைகள் தேவை. ஆனால் இதுவரை அறிந்ததிலிருந்து ஹிக்ஸ் போஸான் போல ஒன்று இருப்பது உறுதி. அதாவது ஹிக்ஸின் கோட்பாடு கிட்டத்தட்ட உறுதி.

ஆனால் இதுவே இறுதி கிடையாது. நாளை மேலும் சில கேள்விகள் எழலாம். அப்போது நாம் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகலாம்.

ஆனால் சமீப காலத்தில், அதாவது கடந்த கால் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று சொல்லலாம்.

இதன் அடிப்படைகள் 1920-களிலிருந்து உருவானவை. அதில் இந்தியரான சத்யேந்திர நாத் போஸின் கணிதப் பங்களிப்பு அடிப்படையாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

***

சத்யேந்திர நாத் போஸ் (1 ஜனவரி 1894 - 4 பிப்ரவரி 1974)

கல்கத்தாவில் பிறந்த சத்யேந்திர நாத் போஸ், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தபோதிலும் சுடர்விட்டுப் பிரகாசித்த ஒரு சில விஞ்ஞானிகளில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. கல்கத்தாவில் கல்வி பயின்ற இவர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

டாக்கா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு ஆசிரியராகச் சென்ற இவர்,  வகுப்பில் மாணவர்களுக்கு ஒளித்துகள் பற்றிய பாடம் ஒன்றை விளக்க முற்பட்டபோது தன் பெயர் கொண்ட புள்ளியல் முறையை ஒரு விபத்தாகக் கண்டுபிடித்தார். அதனை அவர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதி இங்கிலாந்தின் ஆராய்ச்சி இதழ்களுக்கு அனுப்பியபோது அவர்கள் அக்கட்டுரையை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆனால் போஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு அந்தக் கட்டுரையை அனுப்பிவைத்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமையை அவர் ஏற்கெனவே ஐன்ஸ்டைனிடமிருந்து பெற்று, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியாவில் வெளியிட்டும் இருந்தார். இதன் காரணமாக ஐன்ஸ்டைன் அந்தக் கடிதத்தைப் படித்திருக்கக்கூடும். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தவுடனேயே போஸ் அனுப்பிய கருத்துகள் மிகச் சிறப்பானவை என்று ஐன்ஸ்டைன் புரிந்துகொண்டார். தானே அந்தக் கட்டுரையை ஜெர்மனுக்கு மொழிபெயர்த்து, தன் பரிந்துரையுடன் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் வெளியாகுமாறு செய்தார். கூடவே, போஸின் ஆராய்ச்சியை மேலும் ஒருபடி எடுத்துச் சென்றார்.

அதன் விளைவாக உருவானதுதான் போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல். அதன்படி இயங்கக்கூடிய பொருள்களுக்குத்தான் பால் டிராக், போஸான் என்று பெயர் சூட்டினார். அப்படிப்பட்ட ஒரு போஸான்தான் ஹிக்ஸ் போஸான் என்ற துகள்.

போஸ் உருவாக்கியது ஒரு கணக்கு முறை மட்டுமே. அந்தக் கணக்கின்படி போட்டான் என்ற ஒளித்துகள் இயங்கும் என்று மட்டுமே போஸ் சொன்னார். ஒளித்துகள் மட்டுமல்ல, இன்னும் பல பொருள்களும் இதே கணக்கின்படி இயங்கும் என்பதை ஐன்ஸ்டைனும் பின்னர் டிராக்கும் முன்வைத்தனர்.

ஐரோப்பா சென்று திரும்பிய பின்  போஸ், பல்வேறு விஷயங்களில் தன் ஆர்வத்தைச் செலுத்த ஆரம்பித்தார். அதில் தாய்மொழியிலேயே அறிவியலைச் சொல்லித்தரவேண்டும் என்ற கருத்து மிக முக்கியமானது. பல்வேறு அறிவியல் கட்டுரைகளையும் வங்க மொழியில் மொழிமாற்றி எழுத ஆரம்பித்தார். மேற்கொண்டு உலகத் தரத்தில் அவர் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு, அவர் பிற துறைகளில் தன் கவனத்தைச் சிதறவிட்டதே காரணம். ஆனால் அவரிடமிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் கட்டுரைகள் தாய்மொழியில் வரவேண்டும். அப்போது மட்டும்தான் நாம் சத்யேந்திர நாத் போஸ் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளை உருவாக்கமுடியும்.

***

கடவுளைக் கண்டுபிடித்தார்களா?

ஹிக்ஸ் போஸான் பற்றி ஒரு புத்தகம் எழுதிய லியான் லெடர்மேன் என்பவர் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தை வெளிப்படுத்த இந்தத் துகளை ‘நாசமாய்ப்போன துகள்’ என்று பொருள் பட ‘காட் டாம்ண்ட் பார்ட்டிகிள்’ என்று எழுதியிருந்தார். ஆனால் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் அதனை ‘காட் பார்ட்டிகிள்’ (கடவுள் துகள்) என்று மாற்றிவிட்டார்.

ஹிக்ஸ் உண்மையில் ஒரு நாத்திகர். அவருடைய கருத்தாக்கத்துக்கும் கடவுளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று அவரும் பிற விஞ்ஞானிகளும் சொன்னாலும் பத்திரிகைகள் இன்றுவரை அதனைக் கேட்பதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் ‘கடவுள் துகள்’ என்றும், ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ என்றும் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

19 comments:

  1. அருமையான விளக்கம்..
    எடுத்துக்கொண்ட பொருளே மிகவும் கனமானது/கடினமானது எனவே அதை இதைவிட எளிமைபடுத்த முடியாது..
    சுஜாதா பாணியை காப்பி அடிக்காமல் உங்கள் பாணியில் எழுதியதற்கும் ஒரு விசேஷ நன்றி..
    Thank you very much Badri.

    ReplyDelete
  2. Very wonderful explanation in simple layman terms. It gives a comprehensive view about the whole thing. I really liked the way you concluded with origination of the term "God Particle". Most of the reports don't mention that. Very well written. Thanks for the article.

    ReplyDelete
  3. இணையத்தில் இது பற்றி ஏதேதோ படித்தும் புரியவில்லை. உங்கள் கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஜூலை 4ஆம் தேதியிலிருந்தே நீங்கள் இது பற்றி எழுதவில்லையே என்று கேள்விக்குறியுடன் காத்திருந்தேன். நல்ல கட்டுரை! நன்றி!

    ReplyDelete
  5. தெளிவான விரிவான கட்டுரை..

    இந்தப் பொருளில் தமிழ்ப் பத்திரிகை உலகில் எதுவும் குறிப்பாகக் கூட எழுதியதாகப் படிக்கவில்லை.

    டைம்ஸ் ஆங்கில இதழ் மட்டுமே சத்யேந்திரரின் பங்களிப்பைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது..

    எளிய நடையில் அழகுற எழுதியதற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா புத்தகமும் இதைத் தொட்டுச் சென்றதாக நினைவு.

      அவரு அபுனைவு எழுத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்தப் புத்தகம் !

      Delete
  6. பத்ரி

    நடராஜர் நடனத்திற்கேற்பவே அலை வரிசையும், அடிப்படை அணுக்களும் விரிவடைந்தன என்பதாய் படித்தோம். அது உண்மையா.. அதைப்பற்றிய தகவலை தரமுடியுமா..

    அதைப்பற்றிய எழுதப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் ஏதும் உண்டா.

    ReplyDelete
    Replies
    1. This was started by Fritjof Capra. Unfortunately, I don't think such views are tenable. Erwin Schrodinger was quite enomoured by the Upanishads and the concept of Brahman and quotes them in his lecture "What is Life?" Compared to Capra, Schrodinger is a higher authority to me. Still I have not enough explanation that the Nataraja concept indeed explains whatever it is that Capra says it explains.

      Delete
    2. I have high opinion about our Spiritual Philosophies, But at the same time I think We do not entertain these kind of thoughts (Scientific theories is compatible Spiritual Philosophies). I guess Indians are suffering from some kind of jittery about our accomplishment in Modern science, that's why they always linking Science with Spiritual thoughts like advaida.

      Delete
  7. புதிதாக ஒன்று தோன்றிற்று, தொடங்கிற்று என்றால் அத்தோற்றமும் தொடக்கமும் ஏற்கனவே நிலவிக்கொண்டிருக்கிற ஏதோ ஒன்றின் அல்லது பலவற்றின் விளைவு என்பதே அறிவியல் மெய்ப்பிக்கிற உண்மை. சிக்கலான காரண-விளைவுத் தொடர்ப்பின்னலினூடாக பொருள்(matter) எண்ணற்ற வடிவங்களில் தொடக்கம்-முடிவு இன்றி என்றென்றைக்குமாக நிலவிக்கொண்டிருக்கிறது. அதன் மீப்பெரு-மீச்சிறு நிலைகளிலும் பொருள் எல்லையற்றே இருக்கிறது. ஈற்றிலும் ஈறான மீநுண்துகள் என்பதாய், தனிமுதலான(absolute), இனியும் பிளக்கவேவியலாத ஆதாரத்துகள் என்பதாய் எதுவும் இருக்கப்போவதில்லை. அதனினும் நுண்ணியனவற்றை அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சிநிலை கண்டறியவேசெய்யும்.

    ReplyDelete
  8. அன்புள்ள பத்ரி,
    அருமையான விளக்கம்.

    முதலில் between goddamn and god என்பதே எப்படிப்பட்ட திரிபு என்று பாருங்கள். நீங்கள் எப்படி
    "ரஜினி நடித்த படங்களின் பன்ச் வசனங்களைக் கொண்டு அவற்றிலிருந்து பிசினஸ், வாழ்க்கை இரண்டுக்கும் உதவும்வகையில் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் புத்தகம்." என்று விளம்பரப் படுத்துவது போல் :)


    ஆயினும் நடராஜர் குறித்து நாம் ஆய்ந்து இன்னும் விளக்கவில்லை என்பதே என் கருத்து. over a period of time we have left the substance and caught the customs. ஆகவே ஆடுவதைதான் பார்க்கிறமோ தவிர ஆடுதலின் பாவம், அதன் விளக்கம் போன்றவை யோசிப்பதில்லை. நாம் இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இவைப் போன்ற ஆராய்ச்சிற்கு அரசோ அல்லது தனி மனிதர்களோ பெரும் முதலீடு தரும் நிலையிலும் இல்லை. எதோ a.p.nagarajan அவர்கள் மூலமாக திரைப்படத்தில் வந்தவைகள் மட்டுமே நமக்கு வரலாறு, கடவுள் எல்லாம். may be ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் நம் மக்கள் இதைப் போன்றவற்றைக் கண்டுபிடித்து அதை நடராஜர் என்ற ஒன்றின் மேல் உருவகப் படுத்தியிருக்கலாம். probably we are coming a full circle again.

    அன்புடன்
    கணேஷ்.

    ReplyDelete
  9. Thanks for the nice explanation!
    - Sankar

    ReplyDelete
  10. பத்ரி, மிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள். பாம்புப்பண்ணை ஒப்பீட்டில் சிறிது குழப்பம் ஏற்படலாம் என்று நினைக்கின்றேன். அதாவது துகள்கள் பற்றிய புள்ளியியலில், துகள்கள் ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியா ஒரே வகையான துகள்களாகும். அது எதிர்மின்னி (எலக்ட்ரான்) போன்ற வெர்மி-திராக்கு புள்ளியல் படி இயங்கும் வெர்மியான் வகைத் துகள்களானாலும் சரி, ஒளியன் (ஃபோட்டான்) போன்ற போசான் துகள்களானாலும் சரி. மேலும், ஒவ்வொரு துகளுக்கும் நிறை, மின்மம் (மின்னூட்டம்) என்பதோடு தற்சுழற்சி (spin) என்னும் பண்பும் உண்டு. (எதிர்மின்னி (எலக்ட்ரான்), நேர்மின்னி (புரோட்டான்) போன்றவற்றுக்குக் காந்தத்திருப்புமையும் உண்டு). நல்ல தமிழிலும் எழுதியற்கு என் பாராட்டுகள். [சிறு குறிப்பு: போசான் என்றும் இசட்(டு) போசான் என்றும் எழுதி இருக்கலாம். "பேசு, காசு, இசை" என்பது போன்ற இடங்களில் வரும் காற்றொலி சகரம் தானே!]

    ReplyDelete
  11. தலைப்பும் அண்டம் பிறந்தது எதனாலே ? என்று இருந்திருக்க வேண்டுமோ? குறிப்பாக அண்டம் என்பதும் நாம் அறியும் அண்டம். கரும்பொருள் (dark matter) பற்றி இன்னும் தெரியவில்லை, எனவே இந்த இகிசு துகளுக்கும் இக்கரும்பொருளுக்கும் தொடர்பு ஏதும் இருப்பதாக இப்பொழுது கருத முடியாது.

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து..
      அண்டம் அல்லது பால்வெளி ?????

      Delete
  12. மணிவண்ணன்Fri Jul 20, 08:53:00 AM GMT+5:30

    யார் வேண்டுமானாலும் எளிதாக படித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு விஷயங்களை எழுதியிருப்பதற்கு நன்றி.ஆனாலும் இந்த பத்திரிக்கைக் காரர்கள் கடவுள் துகள்கள் என்று மாற்றி எழுதிவிட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய தவறு ஆனால் இது வரையில் பெரிய அளவில் மறுப்பேதும் தெரிவிக்காமல் இருப்பது அதைவிட தவறு..உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது......

    ReplyDelete
  13. Wonderful aricle Badri. Enjoyed a lot. Please write more such scientific articles. Thanx.

    ReplyDelete
  14. எளிமையாக புரிய வைக்கும் தெளிவான பதிவு
    ஆனால் இதனால் என்ன நன்மைகள்,தீமைகள் விளைவிக்கும் கண்டுபிடிப்புகள் உருவாக கூடும் என்பதை தொடவே இல்லையே
    அணு உலை இல்லாமல் எளிமையாக மின்சாரம் தயாரிக்க இது வழி வகுக்குமா

    கடவுளுக்கும் பதிப்பாளர்களுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை,கடவுள் வளர்ச்சியில் அவர்கள் எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை எப்படி goddamned என்ற தலைப்பை மாற்றி கடவுளை நுழைத்தார்கள் என்பதில் இருந்து விளங்குகிறது
    கடவுள் புண்ணியத்தில் அவரை வைத்து இப்போது கல்லா கட்டுவதில் மத குருக்களை விட பதிப்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்

    ReplyDelete
  15. எளிமையாக புரியும்படி இருந்தது...நன்றிகள்..

    கடவுளுடன் இணைத்து இதில் பலர் கல்லா கட்டுகின்றனர் என்பதும் தெளிவாகிறது.

    kandaswamy-Coimbatore

    ReplyDelete