Thursday, October 25, 2012

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)

முதல் பகுதி | இரண்டாம் பகுதி

அந்நிய முதலீடுகளின்மீது, அந்நிய நிறுவனங்களின்மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை:

1. இந்த அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தவே இந்தியா வருகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி. கொஞ்சம் கொஞ்சமாக நம்மவர்களை ஏமாற்றி, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிக்கொள்வார்கள்.

2. எக்கச்சக்கமாகப் பணம் கையில் வைத்திருப்பவர்கள் இவர்கள். இவர்களுடைய போட்டியை இந்தியக் கம்பெனிகளால் எதிர்கொள்ள முடியாது. பவண்டோ. காலி மார்க் சோடா. பெப்சி, கோக கோலா. தங்கக் கம்பி என்று எடுத்துக் கண்ணைக் குத்திக் கொள்ளாதீர்கள்.

3. அரசால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஊழல், லஞ்சம் எல்லாம் இவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. என்ரான். வரி கட்டமாட்டார்கள். வோடஃபோன். கொலை செய்துவிட்டு ஊரை விட்டே ஓடிவிடுவார்கள். போபால் விஷவாயு.

***

கிழக்கிந்தியக் கம்பெனி என்பது நம்முடைய உளவியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பிசினஸ் செய்ய என்று வந்துவிட்டு நாட்டைப் பிடித்துக்கொள்வான்; அப்புறம் காலனியம்தான். நாமெல்லாம் அடிமைகள் ஆகிவிடுவோம்.

இந்தக் கருத்தை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து இதனைத் தாண்டிச் செல்லாவிட்டால் வேறு வழியே இல்லை. இதே குழிக்குள் இறுகச் சிக்கிக்கொள்வோம். கிழக்கிந்தியக் கம்பெனி என்பது அந்தக் காலகட்டத்தில் நடந்த ஒன்று. அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ராபர்ட் கிளைவ் போன்ற ஒரு முரடன் அந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டான். முகலாயர்கள் மிகப் பலவீனமான நிலையில் இருந்தனர். பல்வேறு குழுக்களாகச் சிதைந்திருந்த இந்திய அரசர்களுக்கு இடையில் ஒற்றுமை சாத்தியமானதாக இல்லை. ஆனால் இன்று இந்தியா ஒரு நவீன நாடு. ஒற்றுமையான நாடு. அதற்கென மிக வலுவான ராணுவம் இருக்கிறது. ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ போன்ற ட்ராஷ் புத்தகங்களைப் படித்துக் கற்பனையைப் பெருக்கடித்துக்கொள்ளாதீர்கள்.

இன்றைய உலகமயமான சூழலில் லட்சுமி மிட்டலாலும் டாடாவாலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உருக்குக் கம்பெனிகளை வாங்கமுடிகிறது. அந்த நாடுகளிலும் இதுபோன்ற செயலுக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் இந்திய காலனிய உளவியல் பிரச்னை அவர்களிடம் இல்லாத காரணத்தால் அவர்கள் அதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இந்த இந்தியர்கள் நம் நாட்டின் பெருமைமிகு நிறுவனங்களை எடுத்துக்கொண்டு, வேலைகளைக் குறைத்து, நாளை ஒரு பிரச்னை என்றால் நிறுவனத்தையே இழுத்து மூடிவிடுவார்கள் - என்பதுதான் அவர்களுடைய கவலை.

இன்றைய பிரச்னை காலனியம் சார்ந்ததில்லை. அந்நியர் கையில் எம்மாதிரியான நிறுவனங்கள் இருக்கலாம் என்பது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான தொழில்கள்மீது யார் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்பது பற்றியது. இதுவும் ஒவ்வொரு தேசத்தின் உளவியல் சார்ந்தது. பெரும்பாலான மேலை நாடுகள் எண்ணெய் வளங்களை முக்கியம் என்று நினைக்கின்றன. அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களை சீனா வாங்க வருகிறது என்றால் முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள். அமெரிக்கா, தன் நாட்டின் தொலைக்காட்சி நிலையங்கள்மீதும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால்தான் ஆஸ்திரேலியரான ரூப்பர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமை வாங்கிக்கொண்டார். இல்லாவிட்டால் அவரால் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், இந்தியாவில் எந்தத் துறையிலுமே அந்நிய முதலீட்டுக்குப் பெரும் எதிர்ப்பு உள்ளது. அந்நிய முதலீட்டின்மீது கடுமையான சந்தேகம். அந்நியர்கள்மீதே கடுமையான சந்தேகம். ஒன்றிரண்டு நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்காக நாம் அந்தத் துறைமீதே சந்தேகம் கொள்வதற்கு ஒப்பானது இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் பழங்காலம் முதலே உலகின் பல பாகங்களுக்கும் இந்தியர்கள் வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். யவனர்களும் அரபிகளும் இந்தியா வந்து பெரும் வர்த்தகம் செய்துள்ளனர். சிந்து-சரசுவதி நாகரிக காலத்தில் பெருமளவு வர்த்தக்த் தொடர்புகள் உலகெங்கும் பரவியிருந்துள்ளது. ஆனால் காலனிய காலத்தின் மோசமான சூழல் மட்டும்தான் இன்று நம் மனத்தின் அடியில் தங்கியுள்ளது.

இது இப்படியிருக்க உண்மை என்ன என்று பார்ப்போம்.

இன்றைய நவீன உலகுக்குத் தேவையான எந்தப் பொருளையும் அந்நியர்கள் உதவியின்றி நம்மால் தயாரிக்க முடியாது. ஊசி, நூல் முதற்கொண்டு கார் வரை. இந்தியாவின் ஒவ்வொரு தொழிற்சாலையும் உபகரணமும் அந்நிய நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களே. அவற்றை அந்தந்த நாடுகள் தந்திருக்காவிட்டால் நாம் நவீன காலத்துக்கு வந்திருக்கவே மாட்டோம். சுதந்தர இந்தியா இன்றுவரையில் சொல்லிக்கொள்ளத்தக்க எந்தத் தொழிற்சாலை நுட்பத்தையும் உருவாக்கியதில்லை. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாதனை, வெளிநாட்டு இயந்திரங்களை உள்நாட்டில் நகலெடுத்து உற்பத்தி செய்வதுதான். இதனைக் கேவலமாகப் பார்க்கவேண்டியதில்லை. ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்நிய நாட்டில் தொழில்நுட்பம் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அந்நியனைக் கரித்துக்கொட்டுவதில் நமக்கு நிகர் இந்த உலகில் வேறு யாருமே இல்லை.

இன்று இந்தியர்கள் கை நீட்டித் தொடும் எந்தப் பொருளிலும் ஒரு சிறு துளியாவது அந்நிய நாட்டின் உதவி இல்லாமல், உள்ளீடு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.

சரி, அந்நியத் தொழில்நுட்பம் வேண்டும், ஆனால் அந்நிய முதலீடு வேண்டாம் என்கிறீர்களா, அது ஏன் என்று பார்ப்போம். முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி இல்லை இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகள். அவற்றின் மிகப் பெரும்பான்மை ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்தாம். தலைவர்களும் இந்தியர்கள்தாம். மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பிற நாட்டு நிறுவனங்களில் முக்கியப் பங்கு வகிப்பதும் பல இந்தியர்கள்தாம். இந்தியர்கள் கண்ணாடிக் கூரையை உடைக்க முடியாது என்றிருந்த முந்தைய நிலைமை இன்று மாறியுள்ளது.

அந்நிய முதல் ஏன் தேவை? இந்தியா மிக அதிகமாகச் சேமிக்கும் நாடு என்றாலும்கூட அந்தச் சேமிப்பை ரிஸ்க் உள்ள தொழில்களில் முதலீடு செய்வதில்லை. அந்தப் பாரம்பரியம் இந்தியாவுக்குக் கிடையாது. மிகச் சில தொழிற்குடும்பங்கள் தவிர பெருந்தொழில்களில் பெருமளவு நிதியை முதலீடு செய்யக்கூடிய வழி இருந்தாலும் மனது இல்லாமல்தான் இந்தியர்கள் இருக்கின்றனர். பணம் உள்ளவர்கள் இப்படி. பணம் இல்லாதவர்களை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் வென்ச்சர் முதலீடு என்பது அரிச்சுவடியைத் தாண்டியே போகவில்லை. கரூரில் அல்லது கன்னியாகுமரியில் இருக்கும் இரு நண்பர்கள் அற்புதமான ஒரு ஐடியாவை யோசிக்கிறார்கள். மிக நுட்பமான வேதியியல் பரிசோதனையின் விளைவாக அவர்கள் புதிய வேதிப்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். அதனைக் கொண்டு கடின நீரை மென் நீராக்க முடியும். உவர் நீரைக் குடி நீராக எளிதில் ஆக்கமுடியும். இந்தியா முழுதும் இதனைக் கொண்டு சென்று விற்று, பெரும் நிறுவனம் ஒன்றை உருவாக்கலாம். ஆனால் அவர்கள் டிவிஎஸ் குடும்பத்தில் அல்லது முருகப்பச் செட்டியார் குடும்பத்தில் பிறந்திருந்தால்தான் அவர்களுக்கு அது சாத்தியம். இல்லாவிட்டால் நாலு பத்திரிகையில் அவர்கள் பற்றிச் செய்தி வரும். அத்துடன் சரி.

பணமும் உண்டு, தொழில்நுட்பமும் உண்டு என்றால் மட்டும் போதாது. ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தவேண்டுவதற்கான சிஸ்டம், ப்ராசெஸ் என்று எதுவுமே நம் நாட்டில் போதாது. புரஃபஷனல் தலைமை நிர்வாகிகள் நம்மூரில் எளிதில் கிடைக்க மாட்டார்கள். ஒரு சில தீவுகளைத் தவிர, இந்தியா என்பது பெரும்பாலும் ஒரு மீடியாக்கர் நாடு. அந்நியத் தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவி, அதில் நம் மக்கள் வேலைக்கு சேர்வதன்மூலமே நம் திறனை நாம் வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு நல்ல இந்திய நிறுவனத்திலும் ஒரு நல்ல அந்நிய நிறுவனத்திலும் வேலை செய்திருக்கும் உங்களில் பலரால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

நமக்கு அந்நியத் தொழில்நுட்பம் நிறைய வேண்டும். அந்நியப் பண முதலீடு வேண்டும். அத்துடன் அந்நிய நாடுகளில் வெற்றிகரமாகத் தொழில் நடத்தி பிசினஸ் நுட்பங்களைத் தெரிந்துள்ள நிறுவனங்களின் நேரடி ஈடுபாடும் தேவை. அதைத்தான் அந்நிய நேரடி முதலீடு கொண்டுவருகிறது. அது இன்ஷூரன்ஸிலும் தேவை. சில்லறை வணிகத்திலும் தேவை. பலவிதக் கட்டுமானத்திலும் தேவை. கல்வியிலும் தேவை. இவையெல்லாம் இல்லாமலேயே இந்தியா வளரமுடியாதா என்றால், நிச்சயம் வளரலாம். ஆனால் நிறைய ஆண்டுகள் ஆகும். ஆனால் என்ன, குறைந்தா போய்விடுவோம் என்கிறீர்களா? ஆமாம், குறைந்துதான் போய்விடுவோம். 1950-லிருந்து 1990 வரை நாற்பது ஆண்டுகள் குறைந்துதான் போயிருந்தோம். இனியும் இந்தக் குறை இருக்கக்கூடாது.

(தொடரும்)

19 comments:

  1. One agrees to the points you've mentioned in the article or not, it's definitely a thought provoking article. Guys like you who're in the profession that involves voracious reading should publish these kind of articles in mainstream media also for the sheer reachability they have and not just stick to just publishing in blog alone. Nice article.

    ReplyDelete
  2. //இன்றைய உலகமயமான சூழலில் லட்சுமி மிட்டலாலும் டாடாவாலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உருக்குக் கம்பெனிகளை வாங்கமுடிகிறது. //

    //அந்நிய முதல் ஏன் தேவை? இந்தியா மிக அதிகமாகச் சேமிக்கும் நாடு என்றாலும்கூட அந்தச் சேமிப்பை ரிஸ்க் உள்ள தொழில்களில் முதலீடு செய்வதில்லை. அந்தப் பாரம்பரியம் இந்தியாவுக்குக் கிடையாது. மிகச் சில தொழிற்குடும்பங்கள் தவிர பெருந்தொழில்களில் பெருமளவு நிதியை முதலீடு செய்யக்கூடிய வழி இருந்தாலும் மனது இல்லாமல்தான் இந்தியர்கள் இருக்கின்றனர்//

    இந்த இரண்டு கருத்துக்களுமே வேறு வேறு பொருளில் வருகின்றன. டாடா ஜாகுவார் கம்பெனியை வாங்க 1.5 பில்லியன் செலவு செய்தது, அது அவர்கள் கைகாசில் வாங்கியதில்லை, அத்தனையும் வங்கி கடன்.மல்யாவின் ஊப் குரூப் செய்வதும் அதேதான். அந்நிய முதலீடுதான் மேலும் பணம் கொண்டுவரும் வழி என்றாலும் அது முழுக்க அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது.

    //முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி இல்லை இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகள். அவற்றின் மிகப் பெரும்பான்மை ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்தாம். தலைவர்களும் இந்தியர்கள்தாம். மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பிற நாட்டு நிறுவனங்களில் முக்கியப் பங்கு வகிப்பதும் பல இந்தியர்கள்தாம். இந்தியர்கள் கண்ணாடிக் கூரையை உடைக்க முடியாது என்றிருந்த முந்தைய நிலைமை இன்று மாறியுள்ளது.//

    //பணமும் உண்டு, தொழில்நுட்பமும் உண்டு என்றால் மட்டும் போதாது. ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தவேண்டுவதற்கான சிஸ்டம், ப்ராசெஸ் என்று எதுவுமே நம் நாட்டில் போதாது. புரஃபஷனல் தலைமை நிர்வாகிகள் நம்மூரில் எளிதில் கிடைக்க மாட்டார்கள். //

    இந்த இரண்டு கருத்துக்களுமே எதிர் பொருளில் வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. //இந்த இரண்டு கருத்துக்களுமே வேறு வேறு பொருளில் வருகின்றன.// இல்லை. ஒரு டாடா, ஒரு மிட்டல் ரிஸ்க் முதலீடு செய்வது முதல் உதாரணம். ஆனால் இந்தியா என்ற நாட்டில், மிக அதிகமாகப் பணம் சேமிக்கப்படும் ஒரு நாட்டில் பொதுவாக மக்கள் ரிஸ்க் முதலீடுகள் செய்வதில்லை என்பது இரண்டாவது ஸ்டேட்மெண்ட்.

      மல்லையாவை இங்கு பேசப்போவதில்லை. டாடாவோ வேறு யாரோ ஒரு நிறுவனத்தை வாங்கும்போது அதை ‘ஃபண்ட்’ செய்யவேண்டும். அந்தப் பணம் கொஞ்சம் அவர்களுடைய சேமிப்பிலிருந்தும் மீதி கடனாகவும் வரும். நீங்களும் நானும் வீடு வாங்கும்போது என்ன நடக்கிறதோ அதுபோல. ஆனால் கடன் கொடுத்தவர்கள் அதனை வசூலித்துவிடுவார்கள். மல்லையா போன்ற ஓரிரு வாராக்கடனைக் காண்பிக்காதீர்கள். எல்லாமே வாராக்கடன் என்றால் வங்கிகள் திவாலாகிவிடும்.

      //இந்த இரண்டு கருத்துக்களுமே எதிர் பொருளில் வருகின்றன.//

      இதுவும் சரியல்ல. இந்தியர்கள் எல்லா பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்குப் பிறவியிலேயே சிஸ்டம், ப்ராசெஸ் எல்லாம் தெரியும் என்பதல்ல கருத்து. அந்த நிறுவனத்தில் சேர்வதனால் அதன் சிஸ்டம், ப்ராசெஸ் புரிந்துகொண்டு அதன்படி நடக்கிறார்கள்.

      ஜி.ஈ இந்தியாவில் கேப்டிவ் அவுட்சோர்சிங் நிறுவனத்தை உருவாக்கியதிலிருந்துதான் இந்தியாவின் அவுட்சோர்சிங் தொழில்துறை ஆரம்பமாகிறது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்க, வெளிநாட்டு நிறுவனங்கள் கிளையண்டாக வாய்த்ததன் காரணமாகத்தான் இன்று ஐடி துறை உலகத் தரத்தில் உள்ளது.

      Delete
  3. இந்த தொடரின் கடைசி பகுதியாக இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது சட்டங்கள் (இன்னமும் மாற்றப்படாமலேயே) எந்த வகையில் சாதகமாக இருக்கிறது, மேற்கொண்டு உள்ளே வரும் நிறுவனங்களை இந்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள என்ன மாதிரியான(தப்பு செய்து விட்டு)சட்டங்கள் நமக்குத் தேவை போன்றவற்றையும் எழுதவும்.

    ReplyDelete
  4. I didn't see any small vendors where walmart and other big retailers are having shops in midwest region in USA. But when I came to California I have seen lot of small vendors and farmer markets througuout the year. The main reason is the limit they have imposed on retailers, they can't sell vegetables but only the frozen items (now it is changing a little bit but not many are picking these items). I have seen Mobile canteens as well and they are giving quality food compared to McDs, Subways and KFCs.

    The retailers moto is very simple, less margin and more volume. if a vendor is not providing the goods at the price they are asking they will not stack it in the aisles and the product company will be at loss.

    so, it has impact on the supply side and the competition side but not much on the consumer side.

    Anyway, I am not a pro in this topic and it is good reading, thanks!

    ReplyDelete
  5. இப்படிசொல்வதற்கு மன்னிக்கவும் " ஆனா மென்னு முழுங்கி ஒரு பக்கத்த மட்டும் சொல்றிங்க"

    1> தொழில்நுட்பம் கத்துக்கணும் - அதுனால அந்நிய கம்பனியும் / முதலீடும் இங்க வரணும்.
    கொஞ்சம் யோசிச்சிங்களா - இது ஏன் இப்போ கிடைக்கல. எதிர்காலத்துல மட்டும் எப்படி குடுப்பாங்க? லாபம் இல்லாம தொழில் பண்ண அவன் மட்டும் என்ன தர்மசத்திரமா நடத்துறான். You will get out dated technology at best. May be that will still be an improvement for us. The side effect will be the loss of indigenized initiative. Eg : புரபசர் க்கு / மேனேஜர் க்கு எல்லாம் தெரியும் அதுனால அவங்களே எக்ஸாம் எழுதட்டும் / வேல பாக்கட்டும்.
    அவன் ஊர்ல இருக்கற டெக்னாலஜிய அதே டைம்ல உங்களுக்கு தங்க தட்டுல வச்சு தூக்கி குடுத்துட போறாங்களா? அப்படினா - அந்நிய நேரடி முதலீடு உள்ள - தைவான் ல/ கொரியா ல இருக்குற மெசின் டூல் பில்டர் கிட்ட ஏன் மெசின் வாங்கறது இல்ல? எல்லாரும் ஜெர்மனி / யு. எஸ் ஏ / ஸ்வீடன் ன்னு போறாங்க?
    2> இந்த கதை வெறும் கோக் பெப்சி v/s காளி மார்க் போவொண்டோ வோட முடியற விஷயம் இல்ல.
    இன்னைய தேதிக்கு பாருங்க : மலேசியா, தைவான், பிலிபின்ஸ் எல்லாமும் தான் அந்நிய முதலீட்டுக்கு திறந்த பொருளாதாரங்கள். ஆனா பார்த்திங்கன்னா அங்க இருக்குற எல்லா மேற்கு நாடுகளோட நிறுவங்களும் ஒவ்வொருத்தரா கடைய காலி பண்ணிக்கிட்டு இருக்காங்க. காரணம் : 10 வருஷத்துல காஸ்ட் ஆப் லிவிங் அதிகமாகிடுச்சாம். அதுனால அப்படியே இந்தியா பக்கம் திரும்பி பாக்குறாங்க. ஏத்தி விட்டுட்டு கழட்டி விடுற வித்தை.

    கண்ணெதிரே பார்த்த உதாரணம் : ஒரு மிகப்பெரிய பன்னாட்டு கணிப்பொறி தயாரிப்பு நிறுவனத்தோட பெரும் பங்கு உற்பத்தி விநியோகம் ஒரு காலத்துல மலேசியாலேருந்துதான் எந்த அளவுக்குன்னா மலேசியா G.D.P ல 10% வர்ற அளவுக்கு டர்ன் ஓவர். எல்லாம் 10 வருஷந்தான், இப்போ அவங்க இந்தியா பாக்டரிக்கு எல்லா உற்பத்தியும் திருப்பப்பட்டு விட்டது. மலேசியா : அம்போவென விடப்பட்டது.
    சாதாரண மனுஷனுக்கு மூணு வேலை சாப்பாட்டுக்கும், உடை, வீட்டுக்கும் வழி சொல்லுங்க சார்னா என்னவோ பொருளாதாரம் பேசறீங்க.
    ஒரு பேச்சுக்கு நம்ம ஊர்ல காஸ்ட் ஆப் ப்ரோடக்க்ஷன் சீப் அதுனால எல்லாரும் இங்க முதலீடு பண்றங்கன்னு வச்சுக்குவோம், எதுனால அப்படி காஸ்ட் ஆப் ப்ரோடக்க்ஷன் சீப்னு யோசிச்சு பாத்திங்களா?
    வேறு ஒரு விஷயத்தை தொட்டு எழுத்தாளர் திரு. ஜெ. மோ எழுதியுள்ள இந்த வரிகள் இங்கேயும் பொருந்துவதாக தோன்றியதால் இங்கு பதிகிறேன்:
    இந்த உரல்ல : http://www.jeyamohan.in/?p=31402 - அணையாவிளக்கு
    இப்படி ஆரம்பிக்கும் இந்த பத்தியிலிருந்து :

    // அந்த சினிமாவில் அந்த சர்க்கஸ் புலி குட்டிபோடும் இடம் ஒன்று உண்டு.
    …………………….
    மசானபு ஃபுகோகா இயற்கை வேளாண்மையின் தந்தை. அவரது புகழ்பெற்ற ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூல் இயற்கையின் விதிகளை மீறாமல் வேளாண்மை செய்வதைப்பற்றி சொல்லக்கூடியது. ஆனால் அந்நூலை வாசிக்கும் ஒரு பாடப்புத்தக வாசகன் ஆச்சரியமடைவான். அந்நூலில் வேளாண்மையைப்பற்றி மட்டும் பேசப்படவில்லை. வேளாண்மையில் தொடங்கி படிப்படியாக ஒரு மேலான வாழ்க்கை பற்றி அது பேசுகிறது. //

    கடைசி வரை படித்துப்பாருங்களேன்.
    தொடர்பு படுத்த முடிந்தால் நான் சொல்ல வருவது இன்னும் தெளிவாக விளங்கும் என்று நினைக்கிறேன்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
  6. *** ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’ போன்ற ட்ராஷ் புத்தகங்களை ***

    ட்ராஷ்?! அப்படியா?!


    @ iK way: /// இன்னைய தேதிக்கு பாருங்க : மலேசியா, தைவான், பிலிபின்ஸ் எல்லாமும் தான் அந்நிய முதலீட்டுக்கு திறந்த பொருளாதாரங்கள். ஆனா பார்த்திங்கன்னா அங்க இருக்குற எல்லா மேற்கு நாடுகளோட நிறுவங்களும் ஒவ்வொருத்தரா கடைய காலி பண்ணிக்கிட்டு இருக்காங்க. காரணம் : 10 வருஷத்துல காஸ்ட் ஆப் லிவிங் அதிகமாகிடுச்சாம். அதுனால அப்படியே இந்தியா பக்கம் திரும்பி பாக்குறாங்க. ///

    இதுமட்டும் உண்மையா இருந்தா என்ன இனிப்பான செய்தி! இங்க ஒரு 10 வருஷம் வந்தாங்கன்னா அதுக்குள்ள நாம் பெருமளவு வறுமையை ஒழித்துவிடலாம்! இப்ப ஒன்னும் மலேசியா, தைவான் எல்லாம் நொறுங்கிப் போயிடலயே!

    சரவணன்

    ReplyDelete
  7. // அந்நியத் தொழில்நுட்பம் நிறைய வேண்டும்.
    அந்நியப் பண முதலீடு வேண்டும். ....
    அந்நிய ....நிறுவனங்களின் நேரடி ஈடுபாடும் தேவை....
    அந்நிய நேரடி முதலீடு கொண்டுவருகிறது. அது இன்ஷூரன்ஸிலும் தேவை.
    சில்லறை வணிகத்திலும் தேவை.
    பலவிதக் கட்டுமானத்திலும் தேவை.
    கல்வியிலும் தேவை. இவையெல்லாம் இல்லாமலேயே இந்தியா வளரமுடியாதா என்றால், நிச்சயம் வளரலாம்.//

    ஏன் இந்த அந்நிய மோஹம்?? நமது முன்னேற்றம் என்பதின் உங்கள் அளவுகோல் என்ன? கலாச்சாரச் சீரழிவு அடைந்துள்ள மேற்கத்திய நாடுகளை பார்த்து நீங்கள் அறிந்துகொண்டது என்ன? குடும்ப அமைப்பை ஒழித்து தனி மனித கடமைகளை மறந்து சுய வாழ்வை தொலைத்து நிற்கும் அமெரிக்கா உங்களுக்கு பெஞ்ச்மார்க் ???

    ReplyDelete
  8. கம்பனிகளை கட்டுபடுத்தும் சட்டங்கள் போதிய அளவுக்கு நம்மிடம் இல்லை. பெப்சி&கோக் இங்கு வந்த போது சிறு முதலாளிகளை எப்படி அழித்தார்கள் தெரியுமா?. அவர்களுடைய காலி பாட்டில்களை வாங்கி ரோடில் உடைத்தார்கள். மோனோபோலி அல்லது illegal association தடுக்கும் எந்த தெளிவான சட்டங்களும் நம்மிடம் இல்லை. அதேபோல் தமிழ்நாட்டையும் UP யும் ஒரே தராசில் வைத்துதான் சட்டம் இயற்றுகிறோம் (இது அப்படித்தான் என்று நினைக்கிறேன் ). இந்த நிலையில் இது premature ஆக தெரிகிறது.

    ReplyDelete
  9. When the British initially came to India, it was the Brahmin community who was the brain behind them in succeeding the capture of this country. Now also the same Brahmin community person(ie the author) who still support the foreign community. Modern way of propaganda done with the same intentions.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. @ Anon : you can have your own view but saying someone on personel note is completely wrong.. please grow up.

      Delete
  10. "indigenized initiative" i really like this commnet. its human nature it finds a solution only when it faces trouble. most of the invention came out of this situation. now we need foreign technology, investment, system everything for our learning i agree, but we should not make ourself completely dependent on it, taking foreign investment and technology is dependent which will kill our thinking process in long term, may its a short term solution but we should be clear how much we need to dependent on foreign. our fear is not about foreigners but about our governance they fail ensure the interest of nation while allowing such foriegn involvement in any matter. looking all grown up economy they are not dependent on foreign investments, they try to create their own economy thats what we need learn, putting ourself in comfort zone with foreign dependency is no good for long term growth. its only short cut, no longer will stay.

    ReplyDelete
  11. உங்கள் பதிவுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு பாடம் போல் உள்ளது. நல்ல வேளை எதிர்க்கருத்துக்கள் என்று தெரிந்தும் தயங்காமல் வெளியிடும் உங்களுக்கு என் பாராட்டு.

    ஆனால் நீங்கள் சிலவற்றுக்கு மட்டும் பதில் அளித்து விட்டு மற்றவர்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பது ஏனோ? அவர்களின் கருத்துக்கு நீங்கள் சொல்லும் பதில் வேறொரு பாதையை அறிமுகம் செய்யக்கூடும்.

    ஆரோக்கியமான விவாதமாக இருக்கும்பட்சத்தில்.

    ReplyDelete
  12. நோக்கியா, ஹுண்டாய் கம்பெனிகளை ஆதரித்தோம் என்றால், அவர்கள் நமக்குத் தெரியாத ஒரு தொழில்நுட்பத்தில் தொழில் செய்ய வந்தார்கள். ஆகவே அவர்களுக்கு வரிச்சலுகையெல்லாம் கொடுத்து வரவேற்றோம். அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குட்பட்டே இருக்க வேண்டும். பின்னர் கண்டிப்பாக வரி வசூலிக்கப்பட வேண்டும்.

    சில்லறை வணிகத்தில் நமக்குத் தெரியாத என்ன தொழில்நுட்பத்தை வால்மார்ட் புகுத்தி விடப்போகிறது..? மிஞ்சிப்போனால் இணையத்தின் மூலம் ஆர்டர் கொடுக்கலாம்.. டோர் டெலிவரி செய்வார்கள்.. இதெல்லாம் பணக்கார வர்க்கத்துக்கு மட்டுமே உதவும் சோம்பேறிகளை வளர்க்கும் தொழில்நுட்பம்... இவர்கள் வராமல்போனால் என்ன இழந்துவிடப் போகிறோம்... அல்லது வந்தால் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்..?

    உற்பத்தியாளர்கள் லாபம் அடைவார்களா.. இடைத்தரகர்கள் நஷ்டம் அடைவார்களா என்றெல்லாம் பேசுகிறோம்...எது எப்படியோ நூறு கோடி நுகர்வோர்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை!

    ReplyDelete
  13. //ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான தொழில்கள்மீது கட்டுப்பாடு இருக்கவேண்டும்..// உணவு மற்றும் பழக்கவழக்கம் என்பதும் ஒரு இன்றியமையாத தேவைதானே. இதையும் முதன்மை தொழிலாக கொண்டு கட்டுப்பாடு தொடரலாமே. இதில் வரும் மாற்றங்களும் நாளைய சமுதாயம் உளவியல் ரீதியாக அந்நிய நாட்டு உணவு முறைக்கு அடிமையாகாது என எப்படி உறுதியாக கூற முடியும். நமது உணவு பழக்கவழக்கம் மாறாது என உறுதியாக கூற முடியுமா? கட்டுரையில் கூறியது போல் தேவையான தொழில் நுட்பம் இல்லாத போது வெளிநாட்டு முதலீட்டை எதிர்க்க வேண்டாம். கார், கிளாஸ்,மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றை வரவேற்கும் நாம் வால்மார்ட்டை ஏற்க மறுக்கிறோம் என்றால், சிறுவனிகத்தில் வால்மார்ட் வந்து எந்த பெரிய தொழில் புரட்சியும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதுமட்டுமின்றி இதனால் விவசாயியோ பொதுமக்களோ உடனடியாக சில நன்மைகள் அடைவது போல தெரிந்தாலும் நீண்ட நாள் கணக்கில் எடுத்து பார்க்கும் போது எந்த முன்னேற்றமும் இருக்க போவதில்லை. இன்று ஒருபொருள் உற்பத்தியாளரிடம் இருந்து உபயோகிப்பாளரிடம் வருவதற்குள் நான்கு இடை தரகர்கள் உள்ளதாகவே வைத்துகொள்வோம் இவர்களின் மற்றும் இவரை சார்ந்த குடும்பத்தாரின் உடனடி பாதிப்பு மற்றும் வேலையிழப்புக்கு என்ன மாற்று?

    ReplyDelete
  14. சேஷாத்ரி சார் உங்கள் பின்னூட்டங்களுக்கு நீங்கள் தரும்/தரப்போகிற பதில்கள் மிக முக்கியமாகப்படுகிறது. எனவே நேரம் ஒதுக்கி பதில் தாருங்கள். உங்கள் கட்டுரையில் நீங்கள் எதிர்பாராத ட்விஸ்ட் பலவற்றை நீங்கள் இந்த பின்னூட்டங்கள் வாயிலாக சந்திக்க நேரும். உங்கள் பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete