Wednesday, December 12, 2012

அண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்

அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை சென்ற ஆண்டு தொடர்ந்து நடத்தினார். அதன் பின்னணியில் இருந்து, கூட்டங்களை நிர்வகித்து, பணப் பரிமாற்றத்தைக் கவனித்துக்கொண்டதில் பெரும் பங்கு ஆற்றியவர் அர்விந்த் கெஜ்ரிவால்/மனீஷ் சிசோதியா ஆகியோர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

ஜன் லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் கெஜ்ரிவாலும் போராடினர். பின்னர் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைக் கலைத்துவிட்டு நான் என் வழி, நீ உன் வழி என்று இருவரும் பிரிந்துவிட்டனர்.

அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அண்ணா ஹசாரே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களில் ஹசாரே வாயைத் திறந்தாலே உளறலாகக் கொட்டுகிறது. அவர் பேசாமல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்தல் நலம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கெஜ்ரிவால் தன் பெயரையோ படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றார் ஹசாரே. கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார். கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆசைகள் இருக்கக்கூடாது என்றோ தேர்தலில் நின்று ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடாது என்றோ ஏன் ஒருவர் எதிர்பார்க்கவேண்டும்? அவரவர்க்கு அவரவர் வழி.

ஹசாரே நேற்று உதிர்த்த முத்தில், ‘நான் பலவற்றையும் வெளியே பேசிவிட முடியாது. பேசினால் பிரச்னை ஆகிவிடும்’ என்று தெரு ஓரத்தில் நின்றுகொண்டு சினிமா கிசுகிசு பேசுபவர்போல் பேசுகிறார். ஊழலுக்கு எதிரானவர்; தைரியமானவர் என்ற பிம்பம் இருக்கும்போது, கெஜ்ரிவால் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஹசாரேயிடம் இருந்தால் அதனை வெளியிடுவதுதானே முறை?

எனக்கு கெஜ்ரிவால் கட்சிமேல் பெரும் நம்பிக்கை இல்லை. அரசியலில் அடித்துப் புரட்டி மாற்றம் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. அரசியல் மாற்றங்கள் நடக்கப் பல பத்தாண்டுகள் தேவை. ஆனால் கெஜ்ரிவால் அவருக்கே உரித்தான அதிரடி முறையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று நம்புகிறார். அது அவர் இஷ்டம். ஆனால் அவருடைய நேர்மைமீது சந்தேகம் வருவதுபோல் ஆதாரம் இன்றி ஹசாரே பேசுவது அழகல்ல.

[கெஜ்ரிவாலின் “ஸ்வராஜ்” புத்தகம் படித்துவிட்டேன். மிக அருமையாக எழுதியுள்ளார். தன் கட்சியின் அடிப்படைக் கொள்கையை, தான் நம்பும் அரசியல் மாற்றத்தை இப்படிப் புத்தகமாக ஒருவர் கொண்டுவந்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. கிராமத் தன்னாட்சி என்பதை நான் பெருமளவு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாயல் எனக்கு ஏற்புடையதல்ல. கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மிக அருமையான தமிழாக்கம் - ஜவர்லால் செய்துள்ளார். புத்தக அட்டையை அடுத்த இரு வாரங்களில் வெளியிடுகிறேன்.]

9 comments:

  1. Dear Badri,
    நல்ல கட்டுரை, மற்ற அரசியல் கட்சிகளோடு ஒப்பிடும்போது , கேஜ்ரிவால் கட்சின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. கேஜ்ரிவால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. பார்ப்போம் என்ன செய்கிறாரென்று.

    அண்ணா ஹசாரே , நீங்கள் சொன்னது போல் ,
    மௌன விரதத்தைக் கடைப்பிடித்தல் நலம் என்று எனக்கும் தோன்றுகிறது.
    -Siva

    ReplyDelete
  2. I can see an analogy between Anna-Kejriwal to Periyar-Annadurai.

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் பண்ணாதீங்க

      Delete
    2. நல்ல ஒப்பீடுதான்ன்னு தோணுது. அது சரி, யாரைக் கிண்டல் பண்றதா நினைக்கறீங்க? திராவிட அண்ணாவையா, ஆரிய அன்னாவையா?

      Delete
    3. Mr. Poornam & Mr. Badri,

      ஆரிய, திராவிட என்ற சொற்களின் அர்த்தம் என்ன ?
      நன்றி

      Delete
    4. ஆரியன்னா என்னன்னு தெரியாது? இனமானக் கூட்டணியின் ஊழலுக்கு எதிரா மூச்சு விட்டா கூட 'ஆரிய'தானே? ஸிஏஜி,கேஜ்ரிவால், நான், நீங்க யார் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் ஆரிய/திராவிட ஆக முடியும். (பாண்டியன்னு பேர் வெச்சுக்கிட்டாலும் தமிழக அரசியல் பத்தி ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி கேக்குறதிலருந்தே ஆரிய சூழ்ச்சிக்கு நீங்க பலியானது தெரியுதே!)

      Delete
    5. ஆரியன்னா என்னன்னு தெரியாதா? இனமானக் கூட்டணிக்கு எதிரா மூச்சு விட்டாக் கூட ‘ஆரிய’ தானே? ஸி ஏ ஜி, கேஜ்ரிவால், நீங்க, நான் யார் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கூட்டணி தர்மத்தைப் பொறுத்து ஆரிய/திராவிட ஆக முடியும். (பாண்டியன்னு சுத்தத் தமிழ்ப் பேர் வெச்சுக்கிட்டாலும் தமிழக அரசியல் பத்தி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்கறதுலருந்தே நீங்க ஆரிய சூழ்ச்சிக்கு பலியானது தெரியுதே?)

      Delete
    6. 'திராவிட', 'ஆரிய' என்ற சொற்களை எந்த தமிழ் இலக்கியங்களிலும் நான் பார்த்ததில்லை. Rahul 'Dravid' ஒரு பிராமணர் என்று கேள்விபட்டிருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் 'Aryas' ஹோட்டல் பார்த்திருக்கிறேன், ஆனால் அவை பிராமணர்களால் நடத்தப்படவில்லை. மற்றபடி நம் அரசியல்வியாதிகளும், ஊடகங்களும் குழப்பதான் செய்கின்றன.

      Delete
  3. Thank You Saar! for publishing 'Swaraj' - All citizens will be grateful to you

    ReplyDelete