Wednesday, August 28, 2013

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

ட்ரீஸ்/சென் தங்கள் புத்தகத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து இவ்வாறு பேசுகிறார்கள்: (அடுத்தடுத்த பக்கங்களில் அவர்கள் கொடுத்துள்ள வாக்கியங்களைக் கோர்த்து மொழிமாற்றிக் கொடுத்துள்ளேன். இது ஒரு தொடர் பத்தியாக அந்தப் புத்தகத்தில் இடம்பெறவில்லை.)
டிசம்பர் 2011-ல் இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டபோது நடந்த தீவிரமான விவாதத்தைக் கவனியுங்கள். செல்வாக்குமிக்க விமர்சகர்கள் உடனடியாக அந்த மசோதாவை, நிதிரீதியாகப் பொறுப்பற்ற ஒன்று என்று கடுமையாகத் தாக்கினார்கள். இந்த மசோதாவைச் செயல்படுத்த ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் (இந்திய ஜிடிபியில் சுமார் 0.3%) தேவைப்படும் என்று அதிகாரபூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தங்க, வைர இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு கொடுப்பதால் இழக்கப்படும் வருமானம் ஆண்டுக்கு ரூ. 57,000 கோடி என்று நிதி அமைச்சகத்தின் ‘இழக்கப்பட்ட வருமானம்’ என்பதன்கீழ், கணிக்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறிப்பிடும் அதிகப்படிச் செலவைப்போல இரண்டு மடங்கு இது.

அனைத்து ‘இழக்கப்பட்ட வருமான’த்தையும் சேர்த்தால், மொத்த பொது வருமான இழப்பு 2010-11-ல் ரூ. 480,000 கோடி என்றும் 2011-12-ல் ரூ. 530,000 கோடி (இந்திய ஜிடிபியில் 5%-க்கும் மேல்) என்றும் நிதி அமைச்சகம் கணக்கிடுகிறது.

இந்த அடிப்படையிலும் பிற தரவுகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, ‘நாடு மிகவும் ஏழையானது, பொது வருமானம் மிகவும் குறைவானது, எனவே உணவு கிடைக்காமல் திண்டாடுவோர் மிக அதிகமாக இருக்கும் இந்தியாவில் அம்மக்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்’ என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை.

---- Dreze, Jean; Sen, Amartya (2013-07-04). An Uncertain Glory: India and its Contradictions. Penguin Books Ltd. Kindle Edition.
மேலே சொன்னவற்றுக்கு இடையே இரண்டு இடங்களில் ட்ரீஸ்/சென் இவ்வாறும் சொல்கிறார்கள்:
  • தங்க, வைர இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கினால் 57,000 கோடி ரூபாய் இழப்பு என்றாலும், வரி விதித்தால் இறக்குமதி குறையும் என்பதையும் இந்த இறக்குமதியில் குறிப்பிட்ட அளவு, மேற்கொண்டு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக என்பதையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், இழப்பின் மதிப்பு 57,000 கோடி ரூபாயைவிடக் குறைவாக இருக்கும்.
  • இழக்கப்பட்ட வருமானம் என்று நிதி அமைச்சகம் சொல்லும் எண்ணிக்கை அதீதமானது; அதற்கான திருத்தங்களைச் செய்தால், அளவு குறைந்தாலும் இது ‘ராட்சத’ அளிவில்தான் இருக்கும்.
ட்ரீஸ்/சென், அரசு முன்வைக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட செலவை 27,000 கோடி ரூபாய் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அரசு முதலில் சொன்ன தொகை அது. ஆனால் அரசே இப்போது சொல்லும் எண் 27,000 கோடி ரூபாய் அல்ல; மாறாக 72,000 கோடி ரூபாய். வலதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் கணிப்பு 314,000 கோடி ரூபாய். (பார்க்க: சுர்ஜித் பல்லா) இதனை மறுத்து, இடது ஓரத்தவர்கள் முன்வைக்கும் எண் 85,000 கோடி ரூபாய். (பார்க்க கொத்வால் எட் ஆல்)

கொத்வால் கட்டுரையில் இறுதிப் பத்தி வேறு ஒரு பிரச்னையை முன்வைக்கிறது. அதைப் பற்றி இப்போது நான் பேசப்போவதில்லை. பிறகு பேசுவோம்.

இந்தியாவுக்குள் நுகரப்படும் தங்க/வைர இறக்குமதிமீது சுங்க வரி விதிப்பதை நான் ஆதரிக்கிறேன். அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்குச் சோறிடவேண்டும் என்று சொன்னால் தங்கத்தை அள்ளிக் கழுத்திலும் காதிலும் மாட்டிக்கொள்ளும் அதே ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் தங்க/வைர இறக்குமதியைக் குறைக்க கடுமையான வரிகளை விதிப்பதில் எனக்குச் சம்மதமே. இதனால் அந்நியச் செலாவணித் தேவை கொஞ்சமாவது குறையும். அதே நேரம், தங்கத்தையும் வைரத்தையும் இறக்குமதி செய்து, அதில் மதிப்பு கூட்டி, மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் நம் அந்நியச் செலாவணி வருமானம் பாதிக்கப்படும். இவ்வாறு வரி விதிப்பதன்மூலம் கிடைக்கும் மேலதிக வருமானம், அதிகபட்சம் 20,000 கோடி ரூபாயைத் தாண்டாது என்று நான் கணிக்கிறேன்.

அடுத்து, ‘இழக்கப்படும் வருமானம்’ என்ற கணிப்பை நிதியமைச்சகம் வருடா வருடம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. அனைத்து இடதுசாரி நண்பர்களும் உடனே இதைப் பார்த்துவிட்டு, “பார்த்தீர்களா, பார்த்தீர்களா, பணக்காரர்களுக்கு எவ்வளவு சலுகைகள்!” என்று சொல்கிறார்கள். ட்ரீஸ்/சென் அதையே தொடர்கிறார்கள். அவர்கள் சொல்லவருவது இதைத்தான்: “நிதிப் பற்றாக்குறையைக் கொஞ்சம்கூட அதிகப்படுத்தாமல், சர்வ சாதாரணமாக சில லட்சம் கோடிகளை நம்மால் பொது வருமானத்தில் சேர்க்க முடியும்; ஆனால் அவ்வாறு செய்யாமல் பல லட்சம் கோடிகளை நாம் இழக்கிறோம்; இதனால்தான் நம் நாட்டில் பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.”

இது உண்மையா? யார் இம்மாதிரி அரசின் வருமானத்தை அபகரித்துச் செல்லும் திருடர்கள்? இதை முழுமையாகப் புரிந்துகொள்ள, ரோஹித் சின்ஹாவின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நான் கீழே கொடுத்துள்ள அட்டவணைகள் இரண்டும் இந்தக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை.

2011-12-க்கான ‘இழக்கப்படும் வருமானம்’ சுமார் 530,000 கோடி ரூபாய் எப்படிப் பிரிகிறது என்று பாருங்கள். இதில் மிகப் பெருமளவு சுங்க வரி விலக்கு அளிப்பதில்தான் நடக்கிறது (236,852 கோடி ரூ). அடுத்து, கலால்/ஆயத்தீர்வை (195,590 கோடி ரூ). அடுத்து நிறுவனங்களுக்கான வருமான வரியில் அளிக்கப்படும் விலக்கு (61,765 கோடி ரூ). இறுதியாக தனி நபர் வருமான வரியில் அளிக்கப்படும் விலக்கு (39,375 கோடி ரூ).

Overview of Revenue Foregone 2011-12 (in Rs. Crore)
Tax Type
Revenue Foregone
Aggregate Tax Collection
Revenue Foregone as a %age of Aggregate Tax Collection
Corporation Tax
61765
322816
19.1%
Personal Income Tax
39375
170342
21.3%
Excise Duty
195590
145607
134.3%
Customs Duty
236852
149327
158.63%
TOTAL
533582
788092
67.7%

முதலில் தனி நபர் வருமான வரிக்கு அளிக்கப்படும் விலக்கை எடுத்துக்கொள்வோம். கட்டுமானக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தல், வரிவிலக்கு அளிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தல் ஆகிய காரணங்களால் அளிக்கப்படும் வரிவிலக்கு, பெண்கள், முதியோர்களுக்கு வருமான வரியில் அளிக்கப்படும் வரிவிலக்கு போன்ற பலவும் சேர்ந்து உருவாகும் எண்ணிக்கை இது. இந்த ஒவ்வொரு வரிவிலக்கும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத் தரப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரிவிலக்கு கிடையாது என்றால் கட்டாயமாக தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை குறையும். அதனால் விளையும் தீமைகள் யாருக்கு? பெண்கள், முதியோர்களுக்கு வருமான வரியில் அதிக விலக்கு கொடுப்பதன் காரணத்தை உங்களால் நியாயமாக எதிர்க்க முடியுமா? அப்படியே பார்த்தாலும் ஒரு தனி நபர் பெறும் வருமான வரி விலக்கு என்பது சில ஆயிரம் ரூபாய்களுக்குமேல் போகாது.

நிறுவனங்களின் வருமான வரிக்கு அளிக்கப்படும் விலக்கு 61,765 கோடி ரூபாய். இதில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்குத் தரப்படும் வரிவிலக்கு முதல் பல்வேறு வரிவிலக்குகள் அடக்கம். இங்கு அரசு கொஞ்சம் கடுமையாக நடந்துகொண்டு பல வரிவிலக்குகளைக் குறைக்கலாம். ஆனால் ஏற்கெனவே நசிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தில், நிறுவனங்கள் இதனை எப்படி எதிர்கொள்ளும் என்று யோசியுங்கள்.

ஆயத்தீர்வையில் தரப்படும் விலக்குகளால் பொதுமக்களுக்கு அதிக நன்மை போய்ச்சேருவதில்லை என்கிறார் சின்ஹா. பெரும்பாலான வரிவிலக்கை நிறுவனங்கள் தம்மிடமே வைத்துக்கொண்டு, மிகக் குறைவான அளவையே மக்களுக்குத் தருகின்றன என்கிறார். இதில் வேண்டுமானால் கையை வைக்கலாம் அரசு. இதன் காரணமாக நிச்சயமாக பிஸ்கட் முதல் பல்வேறு பொருள்களுக்கு விலை அதிகமாகும்; அதனால் பணவீக்க அளவு சற்றே அதிகமாகும். தவறில்லை என்று தோன்றுகிறது. வரிச் சீர்திருத்தத்துக்கு உகந்த இடமாக இது உள்ளது.

கடைசியாக சுங்க வரி விலக்கு. இதில் எதெதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று விளக்குகிறார் சின்ஹா. 

Contribution of Top 5 Commodity Groups contributing to Custom Duty Foregone 2011-12 (in Rs. Crore)
Sector
Revenue Foregone
% Share in Total Custom Duty Foregone
Diamond & Gold
65975
23%
Crude Oil and Mineral Oils
55576
19.5%
Vegetables Oils                                
32407
11.5%
Machinery
32386
11.5%
Chemicals & Plastics
20758
7%
TOTAL
207102
72.5%

தங்கம்/வைரம் முதலிடத்தில். நான் ஏற்கெனவே சொன்னதுபோல உள்நாட்டுப் பயனுக்கு என்று இறக்குமதி செய்யப்படும் தங்கம்/வைரத்தின்மீது வரிவிலக்கு தராமல் வரி விதிப்பது நியாயமாகத் தோன்றுகிறது. ஆனால் மதிப்புக் கூட்டி வெளிநாட்டுக்கு விற்கப்போகும் தங்க/வைர இறக்குமதிமீது வரி விதிப்பது பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வதற்குச் சமம். அதையும் சேர்த்துக் கணக்குக் காட்டியுள்ளதால் அதனை விடுத்துப் பார்ப்பதே சரியானது.

கச்சா எண்ணெய் மீதான வரிவிலக்கு அடுத்து. பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு விலையைக் கண்டு ஏற்கெனவே சமூகப் பீதி அடைந்துள்ளது. ஆனாலும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவாக இருப்போர்கள் பெட்ரோல் விலையைக் கண்டு பீதி அடையவேண்டியதில்லை. எனவே இந்த வரிவிலக்கை நீக்க நான் பரிந்துரை செய்கிறேன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான மான்யங்களையும் முற்று முழுதாக நீக்க நான் பரிந்துரைக்கிறேன். இதனால் பணவீக்கம் கடுமையாக அதிகமாகும். ஆனால் வேறு வழியில்லை.

அடுத்து இயந்திரங்களை இறக்குமதி செய்வதன்மீதான வரிவிலக்கு. இதனைத் தொடருமாறு கோருவேன். இந்த இயந்திரங்கள் உள்ளே வருவதன்மூலம்தான் நாட்டில் வேலைகள் அதிகமாகும்.

இறுதியாக ரசாயனங்கள்/பிளாஸ்டிக். இதில் ரசாயனங்கள் என்பவதில் உரங்கள்மீதான வரிவிலக்குதான் பிரதானம் என்பது என் யூகம். அதன் அடிப்படையில் உணவுக்கு இந்த ரசாயனங்கள் மிக முக்கியத் தேவை என்பதால் இந்த வரிவிலக்கைத் தொடரலாம். அல்லது உரங்கள்மீதான மான்யத்தையும் வரிவிலக்கையும் முற்றிலுமாக நீக்கிவிட்டு, ஒரு கிலோ அரிசி ரூ. 100/150 என்று போனால் பரவாயில்லை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியும் நாட்டில் 2/3 பங்கு மக்களுக்கு ரூ. 3-க்கு அரிசி கிடைத்துவிடும். எனவே மிச்சமுள்ள 1/3 கிராம மக்கள், 1/2 நகர மக்களுக்கு மட்டும்தானே இந்தச் சிக்கல்?

ஆகா, ஆனால் வேறு சில சிக்கல்கள் வந்ந்துவிடும். டீசல், மின்சாரம், உரம் ஆகியவற்றின் மான்யங்களை நீக்கிவிட்டால், விளைவிக்கப்படும் அரிசி/கோதுமை/தானியங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். அப்போதும் அவற்றை 3/2/1 ரூ. என்ற விலைக்கு விற்கவேண்டும் என்று சட்டம் சொல்வதால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த ஆகும் மானியச் செலவு விண்ணைத் தொடும். அந்தப் பணத்தைத் திரட்ட மேலும் வரிகளை விதிக்கவேண்டும். இப்படியே போனால், நாடு நாசமாகப் போய்விடும்.

இந்த நெகடிவ் ஃபீட்பேக் லூப் பிரச்னையை ட்ரீஸ்/சென் போன்றோர் கண்டுகொள்வதில்லை. பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து அதிலிருந்து நியாயமாகப் பெறும் வரி வருமானம் அதிகரித்து, அந்த வருமானத்தைக் கொண்டு பட்டினிப் பிரச்னையைத் தீர்ப்பதா அல்லது ‘இழக்கப்படும் வருமானம்’ என்று சொல்லப்படும் ஒரு தொகையை உண்மை என்று கருதி, அதை இழக்காமல் அப்படியே கைப்பற்றி, அதிலிருந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் (சரி, கிட்டத்தட்ட அனைவருக்கும்) உணவை 3/2/1 ரூபாய்க்குத் தர முயற்சிப்பது உண்மையிலேயே நடைபெறுமா? அப்படி நடைபெற்றால் அதன் பொருளாதார விளைவுகள் என்னென்ன?

சிந்தியுங்கள்.

13 comments:

  1. Well said Sir. I think at this point of time, our concern and top most priority should be saving economy. This is not the right time to play politics with food security bill.

    ReplyDelete
  2. Badri I read somewhere India gets his 1/5 indirect taxes only from Oil industries. I really do not know what is revenue foregone in Oil industries mean? please explain. Thank you

    ReplyDelete
  3. The left would love big schemes and also huge`expenditure by state on them. The outflow on account of them will increase over the time and since these are entitlements state cannot go back and cut them. You project your income first and then plan for spending. Left economists dont understand this because they all think that they are the saviours of the poor. They love to play with our money.

    ReplyDelete


  4. India’s oil and gas sector, often regarded as the country’s growth engine, has grown by leaps and bounds over the past decade, but the quest to reach the top of global league remains a challenge because of rising under-recoveries and lack of policy incentives.

    The sector is a key revenue earner for the central and state governments. In 2011/12, it contributed 2,327.69 billion rupees to central and state governments in taxes, accounting for 20.6 percent of total indirect taxes.
    in Reuters
    by Lalith Kumar CEO, Essar Oil

    ReplyDelete
  5. வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் மக்களின் வாங்கும் சக்தியைப் படிப்படியாக அதிகரித்து வந்தால் உணவுப் பாதுகாப்பு ம்சோதா போன்ற திட்டங்களுக்கு அவசியமே இராது.தவிர, உணவ்ப் பாதுகாப்பு திட்டம் செம்மையாக, ஒழுக்கு இல்லாமல், வீணடிப்பு இல்லாமல், தில்லுமுல்லு இல்லாமல் அமல் நடத்தப்பட்க்கூடிய ஒன்று அல்ல.இது மக்களைக் கப்பரை ஏந்த வைக்கும் திட்டமே.உணவுத் தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலைகள் மிக அதிகமாக இருப்பதற்கு இடைத்தரகர்களின் கொல்ளை லாபமே முக்கிய காரணமாகும்.
    ஒரு குடும்பத்தின் மாதாந்திரச் செலவில் வாடகை, சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் பங்கு தான் அதிகம்.அரிசியின் பங்கு அவ்வளவு அதிகமில்லை.ஆகவே அரிசி கோதுமை ஆகியவற்றை மட்டும் மிகக் குறைந்த விலையில் அளிப்பதால் மிகக் குறைந்த வருமானம் உள்ள மக்களின் சுமையைப் பெரிதாகக் குறைத்து விட முடியாது.இது நிச்ச்யம தோல்வியில் போய் முடியக்கூடிய ஒன்றே ஆகும்..

    ReplyDelete
  6. However, Sonia, who is the main force behind the bill, could not participate in voting as she fell ill during voting on amendments and had to leave the House at around 8.15 pm. She was later admitted to AIIMS's intensive care unit. She was later discharged after her check-up was completed.

    ReplyDelete
  7. ஒண்டிப்புலிThu Aug 29, 04:54:00 PM GMT+5:30

    பத்ரி,

    இழக்கப்படும் வரியை தடுப்பது ஒரு பக்கம் என்றால் (வருமான)வரி கட்டும் கூட்டத்தைப் பெருக்குவது எப்படி? 2011 அரசு தகவலின்படி நாட்டின் 2.77 சதவிகித மக்களே வரி செலுத்துகின்றனர். இவர்கள் யாவரும் 1-ஆம் தேதி கழுத்தில் துண்டு போடப்பட்டு TDS மூலம் வரி செலுத்தும் மாதச்சம்பளக்காரர்கள். இவர்களைத் தவிர்த்த டாக்டர், வழக்குரைஞர், ஆடிட்டர், சேவைத்தொழில் செய்வோர் எத்தனை பேர் வருமான வரி செலுத்துகிறார்கள்? 2.77 சதவிகிதத்தை ஒரு 5 அல்லது 10 சதவிகிதமாக்கினாலும் அரசின் வருமானத்தை ஏற்ற முடியுமல்லவா?

    ReplyDelete
  8. //எனவே இந்த வரிவிலக்கை நீக்க "நான் பரிந்துரை செய்கிறேன்".//

    நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

    //பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான மான்யங்களையும் முற்று முழுதாக நீக்க "நான் பரிந்துரைக்கிறேன்".//

    ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    So now what ?

    ReplyDelete
  9. இந்தியாவின் இப்போதைய நெருக்கடிக்குக் காரணம் நடப்புக் கணக்கிலான கடும் பற்றாக்குறை என்கிறார்கள்.அதாவது வரம்பில்லாத அளவில் தங்க இறக்குமதி, தொடர்ந்து அதிகரித்து வரும் குரூட் எண்ணெய் இறக்குமதி ஆகியவை பிரதான காரணம் என்கிறார்கள்.
    இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் என்றுமே மக்களின் வாழக்கை முறை நமது இயற்கை வளங்கள்,பாதுகாப்புத் தேவைகள் ஆகியவற்றுக்குப் பொருத்தமானவையாக இருக்கவில்லை.
    இந்தியா குரூட் எண்ணெய் வளம் இல்லாத நாடு.கிட்டத்தட்ட நமது குரூட் எண்ணெயின் தேவையில் ( பெட்ரோல், கெரசின், டீசல் முதலியவை அடங்கும்) முக்கால் பங்குக்கு வெளி நாடுகளை அதாவது இறக்குமதியை நம்பியிருக்கிறோம்.இது ஆரம்பத்திலிருந்தே தெரிந்த விஷயம்.இதன் உபயோகதைக் கட்டுப்படுத்தை வைத்தாக வேண்டும் என்று கூறித்தான் 1970களில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீது மத்திய மானில அரசுகள் வரி மேல் வரி போட்டுத் தள்ளின.(அப்போது நமக்குக் கடும் அன்னியச் செலாவணிப் பிரச்சினை இருந்தது)
    ஆனால் பின்னர் சாப்ட்வேர் ஏற்றுமதி மூலமும் இதர வழிகளிலும் அன்னியச் செலாவணி வருமானம் அதிகரித்த போது நாம் எல்லாவற்றையும் மறந்து பெட்ரோல் டீசல் உபயோகத்தை அதிகரிக்க பச்சைக் கொடி காட்டினோம். அதாவது நாட்டில் பல கார் தொழிற்சாலைகள் தோன்றின.அட்வான்ஸாக ஒரே ஒரு ரூபாய் கட்டிவிட்டு காரை ஓட்டிச் செல்லுங்கள் என்று விளம்பரம் செய்கின்ற நிலை தோன்றிவிட்டது.மேலும் மேலும் ரயில் திட்டங்கள். அனைத்தும் டீசலைக் குடிப்பவை. இதற்குப் பதில் மின்ரயில் திட்டங்களை அமல்படுத்தியிருக்க வேண்டும். மின் ரயில் போட செலவு அதிகம் தான் நிறைய நாள் பிடிக்கும். ஆனால் டீசல் தேவைப்படாது. நமது பொருளாதாரமே இறக்குமதியாகின்ற ஒரு பொருளை நம்பி நிற்பதாகியது.
    கல்வித் துறை, வைத்தியத் துறை என எல்லாவற்றிலும் அடித்தள மக்களின் தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல் முன்னேற்றம் என்பது கோணல் பாதைகளில் சென்று விட்ட நிலை தான் உள்ளது.
    பல வெளினாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு இந்தியா வருகிறார்கள்.இந்தியாவில் சிறந்த சிகிச்சை கிடைக்கிறது. செலவும் குறைவு என்கிறார்கள். எல்லாம் சரி, கிராமப்புறங்களில் நிலைமை என்ன? \
    இந்தியாவின் வளர்ச்சி இந்த நிலையில் தான் உள்ளது.

    ReplyDelete
  10. I read somewhere, that Petrol/Diesel prices are much higher in India, compared to our neighboring countries, like Pakistan, Bangladesh, Sri Lanka, Myanmar, which are all dependant on imported oil like us. How is that possible? Are they doing so, to encourage usage? Or some other factors?

    ReplyDelete
  11. மத்திய அரசு அண்மைக் காலத்தில் அரசுடைமை வங்கிகள் மூலம் தங்கம் விற்று வந்தது. அதாவது அர்சானது மக்கள் தங்கம் வாங்கி வைத்துக் கொள்வதை ஊக்குவிதது.ஆனால் அதே அரசு இப்போது தங்கம் வாங்காதீர் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.இப்படியான முரண்பாடான கொள்கைகளால் தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து நிற்கிறது.
    சொல்லப் போனால் தங்கம் அத்தியாவசியமான பொருளே அல்ல.மக்களிடம் தங்கம் மேலும் மேலும் சேருவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை.அதே தங்கம் அரசிடம் இருந்தால் அது நல்லது.
    முதலீடு என்று கருதி தங்கம் வாங்குவது இப்போது மிகவும் அதிகரித்து விட்டது.மக்கள் பெருக்கம். ஓரளவிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணமாக ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவதும் அதிகரித்து விட்டது.
    மக்கள் தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்ய அரசு தகுந்த வழி வகைகளைத் தோற்றுவிக்காத் காரணத்தால் இந்தியாவில் தங்க மோகம் குறையவில்லை.மாறாக அதிகரித்து வருகிறது.இப்பிரச்சினைக்கு விடை காண புத்திசாலித்தனமான திட்டம் தேவை

    ReplyDelete
  12. Brilliant Writeup !

    ReplyDelete
  13. ஒரு கிலோ அரிசி ரூ. 100/150 என்று போனால் பரவாயில்லை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியும் நாட்டில் 2/3 பங்கு மக்களுக்கு ரூ. 3-க்கு அரிசி கிடைத்துவிடும். எனவே மிச்சமுள்ள 1/3 கிராம மக்கள், 1/2 நகர மக்களுக்கு மட்டும்தானே இந்தச் சிக்கல்?

    Superb - Please work hard and pay taxes to get rice at Rs 100/150. = room pottu yosikkareengala? boss - nattula niraya per vela paaththu tax cuttaradhaladhan govt nadakkudhu. avangala bpl without rice aakkidatheenga.

    ReplyDelete