Sunday, April 12, 2015

நம்பிக்கை

இன்று காலை, அரிமா சங்கம் நுங்கம்பாக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 75 பெண்களுக்கு செவிலியர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓராண்டுக்கான இந்தப் பயிற்சியை முடித்ததும் அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதே பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் உரையாடிவிட்டு நான் எழுதிய பதிவு இதோ.
 

இந்தப் பெண்கள் அனைவரும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து வருபவர்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளிக்கூடங்களில் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். மேற்கொண்டு படிக்கவைக்க பெற்றோர்களிடம் வசதி இல்லை அல்லது விருப்பம் இல்லை. (இதே குடும்பங்கள் சிலவற்றில் ஆண் பிள்ளைகள் படிக்கவைக்கப்படுகிறார்கள்.) 18 வயதில் திருமணம் என்ற விஷச் சுழலுக்குள் தள்ளப்படும் நிலையில்தான் இந்தப் பெண்கள் இருக்கிறார்கள்.

சுமார் 80 பெண்களுக்கு ஓராண்டுப் பயிற்சி (உறைவிடம், உணவு சேர்த்து) அளிக்க சுமார் 20 லட்ச ரூபாய் ஆகிறது. இம்முறை இதற்கான பணச் செலவு அனைத்தையும் ஹூயிண்டாய் கார் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அரிமா சங்கத்தைச் சேர்ந்த கஸ்தூரிரங்கன் இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்திவருகிறார். ராமகிருஷ்ணா மடம், தங்கவைத்தல், பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தல், பிறகு வேலைக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவற்றைச் செய்கிறது. இந்த மாணவிகள் அனைவருக்கும் பயிற்சி முடிவதற்கு முன்பாகவே வேலை கையில் உள்ளது. சென்னையில் மருத்துவமனைகளுக்கு மேலும் நர்ஸ்கள் தேவையாக இருக்கிறார்கள்.

இந்தப் பெண்கள் ஒருவிதத்தில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். வெளியிலிருந்து ஏற்படும் இந்த இடையீடு இல்லாவிட்டால் இவர்கள் வாழ்க்கை சிக்கலானதாகவே இருக்கும். இதுபோல் பல லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். இந்தத் தலையீடுகளால் நாம் சில பத்து பெண்களை மட்டுமே காக்கிறோம்.

இப்பெண்கள் படித்த பள்ளிகளில் வேண்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடையாது. பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் நடத்த ஒரே ஒரு ஆசிரியர் ஒரு வகுப்புக்கு. ஆனால் +1/+2 வகுப்புகளை அப்படி நடத்திவிட முடியாதே. அரசு வேண்டிய அளவு பட்ஜெட்டை ஒதுக்குவதில்லை. ஒப்பந்த ஊதியத்தில் வேலை செய்யப் பகுதிநேர ஆசிரியர்களும் கிடையாது. ராமகிருஷ்ணா மடம், சுமார் 80 ஆசிரியர்களை நியமித்து சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பள்ளிக்கு வெளியே 3 மணி நேரம் பாடம் நடத்த ரூ. 150 (மணிக்கு ரூ. 50!) என்று தருகிறதாம். இந்த 80 ஆசிரியர்களால் எத்தனை கிராமங்களில் சென்று பாடம் நடத்த முடியும்? படிப்பில் ஆசை இருந்தாலும் ஒன்றுமே புரியாதபோது எப்படிப் படிப்பில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைப்பது என்று இந்த மாணவிகள் கேட்டார்கள்.

வேலை செய்துகொண்டே பணத்தைச் சேமிப்பதன் தேவை, மேற்கொண்டு தொலைநிலைக் கல்வி மூலம் படித்தல், புதிய திறன்களைக் கற்றல், தங்கள் வாழ்க்கைமீதான தங்கள் உரிமையை குடும்பத்தவருக்கு விட்டுக்கொடுக்காமல் இருத்தல் ஆகியவை குறித்து மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதன்பின் தனியான உரையாடலின்போது அரசியல் குறித்து நிறையப் பேசினோம். தங்கள் நிலை தங்கள் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் வரக்கூடாது என்பதுதான் இவர்களின் கோரிக்கையாக இருந்தது. தீவிர அரசியல் நிலைப்பாடும் செயல்பாடும் இருந்தால்தான் இவர்கள் தங்கள் நிலையை மாற்ற முடியும் என்பது குறித்து இவர்களிடம் நிறையப் பேசினேன். பெருகியுள்ள மதுக்கடைகள், குடும்பங்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுதல், சிறுவயதில் திருமணம் செய்துகொள்வதற்கு இந்தப் பெண்களின்மீது சுமத்தப்படும் அழுத்தம் போன்ற பலவற்றைக் குறித்து உரையாடினோம்.

இனியும் தொடர்ந்து உரையாடுவோம்.

No comments:

Post a Comment