Monday, May 25, 2015

பாடத்திட்டம், தேர்வு, மதிப்பெண்கள்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியின் கீழான 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடவே மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. பத்தாம் வகுப்பில் ஒரு சிலராவது 500/500 பெற்றுவிடுகிறார்கள். தமிழை ஒரு பாடமாக எடுப்போர்கூட 499/500 பெறுகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 1196/1200 என்ற நிலை வந்துவிட்டது. வருமாண்டுகளில் 1200/1200 என்பது நிகழும்.

பத்தாம் வகுப்பில் 93% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பில் 90%. பொதுவாக ஆண்களைவிடப் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது.

அதீதமான ரிசல்ட் இது என்று பலருமே நினைக்கிறார்கள். சமச்சீர் கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசம் என்றும் சிபிஎஸ்ஈ திட்டம் சிறப்பானது என்றும் சிலர் எழுதியதைப் படித்தேன். ஆனால் சிபிஎஸ்ஈ ரிசல்டைப் பார்த்தால் பெரும்பாலும் அது 98%-க்கு மேல்தான் இருக்கிறது. எனவே தேர்ச்சி விகிதத்தை மட்டும் வைத்துப் பாடத்திட்டத்தைச் சீர்தூக்கிப் பார்க்க முடியாது.

பாடத்திட்டம், வினாத்தாள்களின் தன்மை, திருத்துதல் எப்படி உள்ளது, தேர்வை நடத்தும் அமைப்பின் குறிக்கோள்கள் போன்றவற்றைத் தனித்தனியாகப் பரிசீலிக்கவேண்டும்.

சிபிஎஸ்ஈ - சமச்சீர் பாடத்திட்டங்கள்: என் கணிப்பில் சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் தேவையற்ற அளவு கடினமானதாக, விரிவானதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதன் காரணமாக வகுப்பறையில் பாடங்கள் வேகவேகமாக நடத்தப்பட்டு, ஒப்பேற்றி முடிக்கப்படுகின்றன. சென்னையின் முக்கியமான சிபிஎஸ்ஈ பள்ளிகளிலும்கூடக் கேள்விகள் 'குறித்து' கொடுக்கப்பட்டு, மனப்பாடம் செய்ய வைக்கப்படுகிறது. பாடப்புத்தகத்தில் உள்ள அதே சொற்கள் பரீட்சையிலும் எழுதப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

பாசிடிவாகச் சொல்லவேண்டும் என்றால், சிபிஎஸ்ஈ சிலபஸுக்காக என்.சி.ஈ.ஆர்.டி உருவாக்கியிருக்கும் புத்தகங்கள் மிக நன்றாக உள்ளன. பெரும்பாலும் தவறுகள் இல்லாமல், மிக நல்ல நடையில் உள்ளன. ஆனால் சிக்கல் புத்தகங்களில் அல்ல, அடிப்படையான பாடத்திட்டத்தில் உள்ளது. மிகக் கடினமான போர்ஷன் உள்ள காரணத்தால், மாணவர்கள் படிப்பதற்கும் ஆசிரியர்கள் சொல்லித்தருவதற்கும் நிச்சயமாகச் சிரமப்படுகிறார்கள்.

சமச்சீர் முறையை விதந்தோதிப் பல பதிவுகள் வந்திருப்பதையும் படித்தேன். சமச்சீர் முறை காரணமாகத்தான் அரியலூர் மாவட்ட கிராமத்திலும் ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் முதல் இடம் பெற்றுள்ளான் என்றும் இப்போது நாம் பார்க்கும் மிகப் பிரமாதமான ரிசல்ட்டுக்குக் காரணம் கலைஞர் உருவாக்கிய சமச்சீர் கல்வி முறைதான் என்றும்கூடப் படித்தேன். சமச்சீர் சிலபஸ் வருவதற்கு முன்பும்கூட சிற்றூர்களில் உள்ள மாணவர்கள் முதலிடம் பெற்றிருக்கிறார்கள்.

சமச்சீர் சிலபஸுக்கும் சிபிஎஸ்ஈ சிலபஸுக்கும் இடையே குறைவான வித்தியாசங்கள்தான் உள்ளன. அதுவும் கணிதம், அறிவியல் ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிடும் சமச்சீர் புத்தகங்களின் தரத்தில் நிச்சயம் குறைபாடுகள் உள்ளன. என்.சி.ஈ.ஆர்.டி புத்தகத் தரம் இங்கு நிச்சயம் இல்லை. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்களில் காணப்படும் ஆங்கிலத்தின் தரம் படுமோசம். தமிழும் சுமார்தான். இவை சரி செய்யப்படவேண்டும். செய்வது கடினமும் அல்ல. அதற்கான விருப்பம்தான் தேவை.

இதைத் தாண்டி, சமச்சீர் - சிபிஎஸ்ஈ இரண்டையும் சில இடங்களில் ஒப்புநோக்கலாம். சிபிஎஸ்ஈ வினாத்தாள்கள், திருத்தும் முறை இரண்டும் சமச்சீர் கல்வியிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சமச்சீர் கல்வியில் இரண்டு இரண்டு தாள்கள் உள்ளன. சிபிஎஸ்ஈ தேர்வில் ஒரு தாள்தான். சிபிஎஸ்ஈ தேர்வில் பாடத்திலிருந்து நேரடியாக எழுதும் பகுதி குறைவாகவும் வெளியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியைப் படித்து, புரிந்துகொண்டு பதில் எழுதும் பகுதியும் இலக்கணப் பகுதியும் கூடுதலாகவும் உள்ளது. [சிபிஎஸ்ஈ ஆங்கிலம் 70 மதிப்பெண்கள் = 25 பாடப்பகுதி + 20 காம்ப்ரிஹென்ஷன் + 25 கிராமர்.]

சமச்சீர் கல்வி ஆங்கில வினாத்தாளில் சப்ஜெக்டிவான பகுதிகள் நிறைய உள்ளன. படங்களைக் கொடுத்து அவற்றைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொல்கிறார்கள். சில கேள்விகள் கேட்கிறார்கள் தமிழில் இரண்டு வரிகள் கொடுத்து ஆங்கிலத்தில் மொழிமாற்றச் சொல்கிறார்கள். இம்மாதிரிக் கேள்விகளில் முழு மதிப்பெண் வாங்குவது எளிதல்ல. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விடைத்தாள்களைத் திருத்துவது என்பது மிகவும் லிபரலாக ஆகியுள்ளது. மதிப்பெண்களை அள்ளிப் போடுமாறு திருத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிபிஎஸ்ஈ விடைத்தாள் திருத்துவது இவ்வாறு நடப்பதில்லை.

பொதுத்தேர்வின் நோக்கம் மாணவர்களை வேண்டுமென்றே ஃபெயில் ஆக்குவதல்ல. பொதுவாக 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 40 மதிப்பெண்களுக்கு மிக எளிதான, யார் வேண்டுமானாலும் பதில் சொல்லக்கூடிய கேள்விகளாக இருக்கவேண்டும். அடுத்த 40 மதிப்பெண்கள், கொஞ்சம் கடினமானதாக, ஆனால் நன்கு தயாரித்து வந்திருக்கக்கூடிய யாரும் சரியாக எழுதக்கூடியதாக இருக்கவேண்டும். கடைசி 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மிகவும் கடினமானவையாக இருந்தால், மிகச் சிறந்த மாணவர்களை இனம் கண்டுபிடிக்க உதவும். ஆக, பெரும்பாலான மாணவர்கள்ள் 80% மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். அதற்குமேல் மதிப்பெண் பெறவேண்டும் என்றால் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பாடத்தில் நிஜமாகவே நல்ல புலமை உடையவர்களாக இருத்தல் வேண்டும். பொதுவாக சிபிஎஸ்ஈ வினாத்தாள்கள் இப்படிப்பட்டவையாக உள்ளன. சமச்சீர் தேர்வுகளில் இப்படிக் கிடையாது.

தேர்வுகள் மூன்று வகைப்படும். நுழைவுத் தேர்வு, பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு, தரப்படுத்தப்பட்ட தேர்வு. நுழைவுத் தேர்வின் நோக்கம் கழித்துக் கட்டுதல். மொத்தம் உள்ள 100 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் போட்டி போடுகிறார்கள் என்றால் 99,900 பேரை எப்படியாவது கழித்துக் கட்டவேண்டும் என்பது மட்டும்தான் இந்தத் தேர்வின் நோக்கமாக இருக்கிறது.

பள்ளி இறுதிப் பொதுத் தேர்வின் நோக்கம், எழுதிய அனைவரையும் பெரும்பாலும் தேர்ச்சி பெறவைக்கவேண்டும் என்பதே. இங்கு, குறைந்தபட்சத் தகுதி இல்லாதவர்கள் மட்டும்தான் ஃபெயில் ஆக்கப்படவேண்டும். நாளையே 100% தேர்ச்சி நடைபெற்றால் நமக்கு அது மகிழ்ச்சியே. ஆனால் குறைந்தபட்சத் தரம் என்பதை அனைவரும் தாண்டியிருக்கிறார்களா என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

தரப்படுத்தப்பட்ட தேர்வு இந்தியாவில் நடைபெறுவது இல்லை. அமெரிக்காவில் நடத்தப்படும் எஸ்.ஏ.டி (SAT), ஜி.ஆர்.ஈ (GRE) போன்றவை தரப்படுத்தப்பட்ட தேர்வுகள். இந்த வகைத் தேர்வு, நுழைவுத் தேர்வும் அல்ல, பொதுத் தேர்வும் அல்ல. பலதரப்பட்ட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை ஏதோ ஒருவகையில் ஒப்பிட்டு ஒவ்வொருவருடைய தரமும் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஒரு முயற்சி. இந்தத் தேர்வில் பாஸ் அல்லது ஃபெயில் கிடையாது. தேர்வு எழுதியவர்களில் நீங்கள் எந்த பெர்சண்டைலில் உள்ளீர்கள், அதாவது உங்களுக்கு மேல் எத்தனை பேர், கீழ் எத்தனை பேர் என்பதை இந்தத் தேர்வு தரும். இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கேள்வித்தாள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வெவ்வேறு நாள்களில் தேர்வு எழுதலாம். இப்போதெல்லாம் ஒவ்வொரு மாணவருக்குமே முற்றிலும் வித்தியாசமான கேள்விகள் தரப்படுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்ட ஸ்கோர், பள்ளி இறுதித் தேர்வு ஸ்கோர், மேலும் பலவற்றை அடிப்படையாக வைத்து ஒரு மாணவருக்கு இடம் தருகிறார்கள். இம்மாதிரியான ஓர் அமைப்பை நோக்கித் இந்தியா செல்வது சிறப்பானதாக இருக்கும்.

தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேர்ச்சி விகிதமும் மதிப்பெண்களும் மிகவும் லிபரலாக வழங்கப்படுகின்றன என்று நான் கருதுகிறேன். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் 12-ம் வகுப்புக்கு இணையான பியூசியின் தேர்ச்சி விகிதம் 60%-க்குக் கீழ்தான் உள்ளது. அம்மாநில மாணவர்களைவிட தமிழக மாணவர்கள் மிக மிகச் சிறப்பாகப் படிப்பவர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை. சென்ற ஆண்டைவிட ஓரிரு சதவிதமாவது தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கவேண்டும் என்ற அழுத்தம் தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. கர்நாடகத்தில் அப்படி இல்லை. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இப்போதைக்கு மாநிலங்களுக்கு இடையேயான போட்டிக்குரிய ஒரு விஷயமாகப் பார்க்கப்படவில்லை. அப்படிப் பார்க்கப்பட்டால், ஒவ்வொரு மாநிலமும் தாங்கள் கட்டுப்படுத்தும் தேர்வில் 100% ரிசல்டைப் பொய்யாகவாவது காட்ட முற்படுவார்கள்.

மொத்தத்தில், சிலபஸையும் தேர்வுமுறை மற்றும் திருத்துதல் முறை ஆகியவற்றையும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இங்கே ஒப்பீடு, சிலபஸ்களுக்கு இடையே இருக்கவேண்டிய தேவை இல்லை. மாறாக சமச்சீர் கல்வி கற்பிக்கப்படும் முறையிலும், வினாத்தாள் தயாரிக்கப்படும் முறையிலும், மதிப்பெண்கள் வழங்கப்படும் முறையிலும் எம்மாதிரியான ஆரோக்கியமான மாற்றங்கள் தேவை என்பதைத் தமிழகக் கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும். மதிப்பெண்களுக்கு பதில், சிபிஎஸ்ஈ போல் கிரேடுகளைத் தருவது சிறப்பாக இருக்கும்.

ஐஐடிக்கு மாணவர்களை அனுப்புவது ஒரு போர்டின் நோக்கமல்ல. விரும்பும் மாணவர்கள் தாங்களாகவேதான் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டும். சிபிஎஸ்ஈ மாணவர்களும்கூடப் பிரத்யேகத் தயாரிப்பு காரணமாகத்தான் ஐஐடிக்குள் நுழைகிறார்கள். எனவே அதன் காரணமாக சமச்சீர் கல்வியைத் திட்டவேண்டிய அவசியமில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதற்கெனச் சில கல்வி இலக்குகளை வைத்துக்கொண்டு அதன்படிச் செயல்பட்டாலே போதும்.

Thursday, May 07, 2015

அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு

நேற்று மாலை, முனைவர் நாகசாமியின் வீட்டின் வாகன நிறுத்திமிடத் தளத்தில் கோபு மாமல்லபுரத்தைப் பற்றி அருமையானதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். நாகசாமி, அறிமுக உரை, முடிவுரையை வழங்கி, மாமல்லபுரத்தின் அனைத்துச் சின்னங்களும் ராஜசிம்மன் காலத்தில் உருவானவையே என்ற தன் கோட்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சொல்லப்போனால் அது மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.


சில வாரங்களுக்குமுன் கோபுவின் உந்துதலினால் அவருடன் பேரா. சுவாமிநாதன், சிவா ஆகியோருடன் நானும் மெட்ராஸ் லிடரரி சொசைட்டி என்ற நூலகத்துக்குச் சென்றிருந்தோம். சென்னையின் மிகப் பழமையான நூலகம் இது. கல்லூரிச் சாலையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு எதிராக உள்ள டிபிஐ வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடம் ஒன்றில் இந்த நூலகம் இயங்கிவருகிறது.

இந்நூலகத்தில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் அச்சான மிக அருமையான பழைய புத்தகங்கள் சில உள்ளன. அவற்றில் சிலவற்றை நூலகத்தினர் லாமினேட் செய்து சிறப்பாகப் பாதுகாத்துவருகின்றனர். ஆனால் வருந்தத்தக்க முறையில் நூலகத்தின் பிற பகுதிகள் புழுதி படிந்து, பல பழைமையான புத்தகங்கள் மடிந்துவருகின்றன. புரவலர்கள் இல்லாததால் இந்நிலை.

நியூட்டனின் பிரின்சிபியா மேத்தமேடிகா முதல் எடிஷன், ஏசியாடிக் சொசைட்டியின் வெளியீடுகள் சில என்று கோபு கொண்டுவர, அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்படி கோபு உருவி எடுத்துக் காண்பித்த ஒரு புத்தகம்தான் The Seven Pagodas on the Coromandel Coast, Descriptive and Historical Papers என்ற கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுத்த ஒரு புத்தகம். [கூகிள் புக்ஸில் கிடைக்கிறது - ஆனால் பல பக்கங்கள், முக்கியமாக பாபிங்டனின் கட்டுரையில் பெரும் பகுதி கிடைப்பதில்லை] 1869-ல் வெளியானது. [சற்றுமுன் ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ் மறுபதிப்பு செய்திருக்கும் இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கினேன். இப்போது புத்தகம் அச்சில் இல்லை. ஆறு பிரதிகள்தான் மிச்சம் இருக்கின்றன.] அதுவரையில் மாமல்லபுரம் பற்றி வந்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்து, மிக அற்புதமான வரைபடங்களைச் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்ட புத்தகம். மிக அகலமான பக்கங்கள். பக்கங்களைப் பிரித்தால் ஒரு மேஜை முழுவதுமாகப் பரவியிருக்கும்படியான அளவிலான புத்தகம்.

அதில் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டிருக்கும்போது கோபு திடீரென துள்ளிக் குதித்தார். சாளுவன்குப்பத்தில் புலிக்குகை மற்றும் அதிரணசண்ட மண்டபம் என்ற இரண்டு பல்லவச் சின்னங்கள் உள்ளன. அதிரணசண்ட மண்டபத்தில் மிகவும் சுவாரசியமான விஷயம், அதில் ஒரு நீண்ட சமஸ்கிருத சுலோகம் இரண்டு பக்கமும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் பல்லவ கிரந்த எழுத்துகளில் இருக்கும். மற்றொரு பக்கம் நாகரியில் இருக்கும். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சுலோகம் (சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே). ஆனால் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் எழுதப்பட்டது.

ஆனால் கார் புத்தகத்தில் இந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் காட்டப்பட்ட வரைபடத்தில் மூன்று கல்வெட்டுகளுக்கான அச்சுகள் இருந்தன.

An Account of the Sculptures and Inscriptions at Mahamalaipur; illustrated by Plates. By Benjamin Guy Babington, M.B, F.R.S, Sec. R.A.S என்பதுதான் இந்தக் கட்டுரை.

கணேச ரதத்திலும் தர்மராஜ மண்டபத்திலும் உள்ள கல்வெட்டுகளை பாபிங்டன் தானே பார்த்து, பிறருடைய உதவியுடன் படித்து அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து டி ஹாவில்லாண்ட் என்பவர் பாபிங்க்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாமல்லபுரத்துக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஓரிடத்தில் உள்ள குகைக்கோவில் ஒன்றில் மூன்று கல்வெட்டுகள் இருப்பதாகவும் அவற்றின் படங்கள் இவை என்றும் மூன்று படங்களை அனுப்பியுள்ளார்.

இந்த மூன்று படங்களையும் பாபிங்டன் தன் கட்டுரையில் இணைத்திருந்தார். (1828-ல் படிக்கப்பட்டு, 1830-ல் ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆராய்ச்சி இதழில் வெளியானது.) அந்தக் கட்டுரை அப்படியே காரின் புத்தகத்தில் (1869-ல்) பதிப்பாகியிருந்தது. அந்தப் பக்கம்தான் கோபுவைத் துள்ளி எழ வைத்தது.


பாபிங்டனுக்குப் பின் இன்றுவரையில் மாமல்லபுரத்தை ஏகப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கடந்த 185 ஆண்டுகளில் ஆராய்ந்துள்ளனர். ஆனால் அனைவருமே அதிரணசண்ட மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள்தான் இருப்பதாகச் சொல்கின்றனர். ஹுல்ஷ், துப்ரே முதல் என்.எஸ்.ராமசாமி, நாகசாமி, மைக்கல் லாக்வுட், கிஃப்ட் சிரோமணி என்று அனைவரும் குறிப்பிடுவது இரண்டு கல்வெட்டுகளை மட்டுமே. இன்று நாம் சென்று பார்த்தால் அங்கே இருப்பது இரண்டு கல்வெட்டுகள்தான்.

மூன்றாவதாக ஒரு கல்வெட்டு இருந்ததா?

இருந்திருக்கவேண்டும். ஏனெனில் டி ஹாவில்லாண்ட் வரைந்து, பாபிங்டன் இணைத்திருக்கும், கார் கொடுத்திருக்கும் படம் இன்று நமக்குக் காணக் கிடைத்துள்ளது. (மெட்ராஸ் லிடரரி சொசைட்டி + கோபுவுக்கு நன்றி.) ஆனால் இது பாபிங்டனுக்குப் பின்னான ஆய்வாளர்கள் கண்ணில் ஏன் சிக்கவில்லை.

அதைவிட முக்கியமான கேள்வி, இன்று அந்தக் கல்வெட்டு எங்கே?

பல்லவ கிரந்தம் - அதிரணசண்ட மண்டபம்
நாகரி - அதிரணசண்ட மண்டபம்
மூன்றாவது - இதுவும் நாகரி - ஆனால் எங்கே இருக்கிறது?
கர்னல் காலின் மெக்கன்ஸியின் மாமல்லபுர வரைபடம் ஒன்றும் காரின் புத்தகத்தில் உள்ளது. அதில் மெக்கன்ஸி மிகத் தெளிவாக அதிரணசண்ட மண்டபத்தில் மூன்று இடங்களில் கல்வெட்டுகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். இரண்டு இப்போது இருக்கும் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது. மூன்றாவதாக அவர் மண்டபத்தில் நட்டநடுவில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகக் காட்டுகிறார். அது எங்கே போனது என்று தெரியவில்லை.

அது தவிர, அதிரணசண்ட மண்டபம் இருக்கும் சாளுவன்குப்பத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதாக ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்டிருக்கிறார். (Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the 'Seven Pagodas' by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George.) இந்தக் கட்டுரையும் காரின் புத்தகத்தில் வருகிறது. இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடம் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஏதோ கல்வெட்டுகள் இருப்பதுபோல மெக்கன்ஸியின் வரைபடமும் குறிக்கிறது. கோபு சென்று தேடியபோது இந்தியத் தொல்லியல் துறையின் குறிப்புக்கல் ஒன்று அங்கே நடப்பட்டிருக்கிறது. அருகில் ஒரு பெரிய பாறை இருக்கிறது. ஆனால் அடிஹ்ல் கல்வெட்டு ஒன்றும் காணோம். அந்தக் கல்வெட்டுகளின் படி காருடைய புத்தகத்தில் (ஜார்ஜ் மாஹோன் வழியாக) கிடைக்கிறது.

குறைந்தபட்சம் இந்த இரண்டு கல்வெட்டுகள் - அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது சமஸ்கிருதக் கல்வெட்டு, சாளுவன்குப்பத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு இரண்டையும் மீண்டும் கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

நேற்றைய பேச்சின்போது, மாமல்லபுரம் தொடர்பான ஆரம்பகாலக் கண்டுபிடிப்புகள், தவறுகள், தவறுகள் திருத்தப்பட்டமை, பின்னர் கல்வெட்டுகள் மற்றும் சின்னங்களை ஆராய்வதன்மூலம் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் ஆகியவை பற்றி கோபு விளக்கினார். அதன்பின் காருடைய புத்தகத்தைப் பார்த்ததற்குப் பிறகு மாமல்லபுரம் சென்று தான் தேடிய சில விஷயங்கள், கணேச ரதத்தில் உள்ள கல்வெட்டின் அடிப்பாகத்தில் எழுத்துகளின்கீழே கணேச ரதம் போன்ற ஒரு கோவிலின் வடிவமும் செதுக்கப்பட்டிருந்தது (இது காருடைய புத்தகத்தில் உள்ளது) - இது பொதுவாக யார் கண்ணிலும் பட்டதில்லை ஆகியவற்றைப் பற்றியும் பேசினார்.


முனைவர் நாகசாமி பேசும்போது, ஸ்டைல், புள்ளிவிவர ஆராய்ச்சி ஆகியவை மூலம் மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்கள் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு அரசர்களின்கீழ் உருவானவை என்று சொல்வதெல்லாம் சரியல்ல என்றார். இதைப்பற்றி அவர் 1964-ல் எழுதிய கட்டுரை இன்றுவரை சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. கட்டுமானக் கோவில்களை உருவாக்கவதற்குத்தான் காலம் பிடிக்கும். தஞ்சையின் பெரிய கோவிலைக் கட்டுவித்தது யார் என்று நூறு ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் தெரியவில்லை. அதன்பின் அதன் அடிக் கட்டுமான கல்வெட்டு ஒன்றில் ராஜராஜன், நான்தான் இந்தக் கோவிலைக் கட்டுவித்தேன் என்று எழுதினேன். அத்துடன் அது குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தன. அதேபோல மாமல்லபுரத்தைப் பொருத்தவரையில் ராஜசிம்மன் மிகத் தெளிவாக தான்தான் அதிரணசண்ட மண்டபத்தையும் தர்மராஜ மண்டபத்தையும் கணேச ரதத்தையும் கட்டினேன் என்று எழுதியிருக்கிறான். அது ஒன்றே பிரமாணம். வேறு எதையும் ஏற்கத் தேவையில்லை என்றார்.

கைலாசநாதர் கோவிலை எடுத்துக்கொண்டால் சுற்றியுள்ள சந்நிதிகளில் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் (ஒவ்வொன்றிலும் இரண்டு எழுத்துருவில்) மொத்தம் நான்கு வெவ்வேறு ஸ்டைலில் தன் விருதுப் பெயர்களை எழுதியிருக்கிறான். அதேபோல அதிரணசண்ட மண்டபத்தில் கிரந்தத்தில் ஒன்றாகவும் இருவேறு நாகரி முறையில் இரண்டாகவும் மொத்தம் மூன்று கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறான். இது அவனுடைய தன்மை - ஏனெனில் அவன் அத்யந்த காமன். எனவே ஐந்து வெவ்வேறு விதமான ரதங்களை ஒரே இடத்தில் உருவாக்க முனைத்திருக்கிறான். முற்றிலும் வெவ்வேறு விதமான அமைப்புகள் கொண்ட மண்டபங்களையும் கட்டுமானக் கோவில்களையும் திறந்தவெளி புடைப்புச் சிற்பங்களையும் படைக்க முற்பட்டிருக்கிறான். இவையெல்லாம் ஒருவனுடைய ஆயுள் காலத்தில் சாத்தியமே. எனவே தன் கோட்பாடு மேலும் உறுதியாகியிருக்கிறது என்றார் நாகசாமி.

கோபு தொழில்முறை தொல்லியலாளராக இல்லாவிட்டாலும் பல்லவ கிரத்த எழுத்துகளைக் கற்று, கல்வெட்டுகளைப் படிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பாராட்டிய நாகசாமி, தொல்லியல் என்பது தொழில்முறையாளர்களுக்கு மட்டுமல்ல, ஆர்வலர்கள் அனைவருமே தொல்லியலாளர்களாக ஆகவேண்டும் என்றார். பிறகு இறுதியாக, மாமல்லபுரம் பற்றிய சர்ச்சை தொடர்வது நல்லதுதான், அதுதான் நம்மை மாமல்லபுரத்தைத் தொடர்ந்து சென்று பார்ப்பதற்கும் ஆராய்வதற்கும் வழிகோலும் என்றார். யார் மாமல்லபுரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம், அங்கே உள்ள சிற்பங்களை ரசிப்பதற்கு. உடனடியாகச் சென்று ரசித்துவிடுங்கள், ஏனெனில் 20 வருடங்களில் அங்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்றும் சொன்னார். 1960-களில் அங்கே அவை இருந்த அழகுக்கும் இப்போது இருக்கும் நிலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லும்போது வருந்தினார்.

இந்தப் புதிய இரண்டு கல்வெட்டுகள் பற்றிப் பேசும்போது, மெக்கன்ஸி எழுதிய ஒரிஜினல் கட்டுரையைத் தேடுவதற்காக லண்டன் நூலகத்துக்கு எழுதியிருப்பதாகச் சொன்னார். இந்தியத் தொல்லியல் துறை இந்த இரண்டு கல்வெட்டுகளையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டும், அது ஒன்றும் செலவு எடுக்காதது என்றும் சொன்னார்.

***

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் குறித்த மாபெரும் ஆவணப்படுத்தல் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கோபுவை ராஜசிம்மனின் ஆவி பீடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். கைலாசநாதர் கோவிலில் காணப்படும் ராஜசிம்மனின் ஓவிய கிரந்த எழுத்துகளை கோபு தன் சட்டைகளில் எம்பிராய்டரி செய்து போட்டுக்கொள்கிறார். அதன் காரணமாகவே கனவிலும் புத்தக ரூபத்திலும் ராஜசிம்மனின் ஆவி கோபுவைச் சில வழிகளில் இட்டுச் செல்கிறது. அவர் மேலும் பல பல்லவச் சுவடுகளைத் தேடிப் பிடிக்க வாழ்த்துகிறேன்.

Tuesday, May 05, 2015

மதுவிலக்கு

ஒரு புத்தகத்துக்கான முன்னோட்டப் பதிவு மட்டுமே இது. Daniel Okrent எழுதியிருக்கும் Last Call: The Rise and Fall of Prohibition என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு ஒரு காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொடாக் குடிகாரர்களால் நிரம்பியிருந்த நாடு அது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1920-ல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டம் அது. மதுவிலக்கை அமல்படுத்த முனைந்த போராட்டம்தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கு ஆதரவாகவும் இருந்தது. ஏனெனில் பெண்களுக்கு வாக்குரிமை இருந்தால் அவர்கள் கட்டாயம் மதுவிலக்கை ஆதரிப்பார்கள். இதன் காரணமாகவே சாராய கம்பெனிகள் பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக இருந்தனர். மதுவிலிருந்து வரும் வருமானம் போய்விட்டால் அரசை எப்படி நடத்துவது என்ற குரல்கள் எழுந்தன. அதனால் அதுவரை இல்லாத வருமான வரி நுழைக்கப்பட்டது.

மதுவிலக்கு அமலுக்கு வந்தாலும் அதைச் செயல்படுத்தும் ஆர்வம் அரசுக்கு அவ்வளவாக இருக்கவில்லை. இதன்காரணமாக கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், காவல்துறையிலிருந்து நீதித்துறைவரை லஞ்சம், ஊழல் என்று பெருகியது. இதன் இறுதிவிளைவாக அமெரிக்காவின் கிரைம் சிண்டிகேட் மாஃபியாக்கள் உருவாயின.

1933-ல் பூரண மதுவிலக்கு, மற்றொரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கிக்கொள்ளப்பட்டது.

இவ்வளவுதான் விஷயம். ஆனால் இந்தக் காலகட்டத்தின் அமெரிக்க வரலாறு அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இதனை டேன் ஆக்ரென் எழுதியிருக்கும் விதம் மிக மிகப் பிரமாதம்.

***

இந்தப் புத்தகம் சொல்லியிருக்கும் வரலாறு இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழகத்துக்கு மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

தமிழகம் இன்று மதுவின் ஆதிக்கத்தில் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு ஒரு முனையில் குவிக்கப்படாமல் இருக்கிறது. உண்மையிலேயே மதுவை ஒழிக்க விரும்புபவர்கள் அமெரிக்காவின் ஆண்ட்டி சலூன் லீகைக் கூர்ந்து படிக்கவேண்டும். எப்படி ஓர் அமைப்பு தனக்கு வேண்டிய ஒன்றை சட்டத்துக்கு உட்பட்டு, கடுமையான எதிர்ப்புகளைத் தாண்டி சாதித்துக்கொண்டது என்பதனை ஆண்ட்டி சலூன் லீகிடமிருந்து தெரிந்துகொள்ளலாம்.

மது வருமானம் தமிழக அரசுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டிருக்கிறது. அதனால்தான் திமுகவும் அஇஅதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசுவதே இல்லை. பாமகவும் மதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசும்போது இதனால் நேரப்போகும் வருமான இழப்பை (இப்போது ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்) எப்படிச் சரிக்கட்டப் போகிறார்கள் என்று அதிகம் சொல்வதே இல்லை. இதனைப் பற்றி யோசிக்காமல் முன்னேறவே முடியாது.

மூன்றாவதாக, மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமா அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. மதுவை ஒழித்தவுடன் அமெரிக்காவில் என்ன நடந்தது? ஊழலும் குற்றமும் பெருகியது. மது அருந்துதல் வெறும் 30% மட்டுமே மட்டுப்பட்டது. இன்று பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் என்ன நடக்கிறது என்று விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

நான்காவதாக, பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மது தாறுமாறாக ஓடியபோது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே. இன்று தமிழகத்தில் ஏழைக் குடும்பங்கள்தான் மதுவால் பாதிக்கப்படுகிறார்கள். மதுவை வைத்துக்கொண்டு ஏழைகளின் தரத்தை மேலே உயர்த்துவது சாத்தியமே அல்ல. எனவே இதையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டியிருக்கும்.

***

நான் சந்திக்கும் அரசியல்வாதிகள் சிலரிடம் இந்தப் புத்தகம் குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தபின், சில பதிவுகளாவது எழுதுவேன்.