Tuesday, January 03, 2017

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மீட்சி உண்டா?

உச்ச நீதிமன்றம், நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழு அமைத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம், ஊழல் மலிந்தது. செயல்திறன் குறைவானது. பெரும்பாலும் அரசியல்வாதிகளாலும் ஆமாம்சாமிகளாலும் நிரம்பியிருப்பது.

சில ஆண்டுகளுக்குமுன் ஐஐடி மெட்ராஸ் நிர்வாகவியல் மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் ஒப்பிட்டு ஓர் உரையை நிகழ்த்தியிருந்தேன். கிரிக்கெட்டை எப்படி நிர்வகிக்கக்க்கூடாது என்பதற்கு இந்தியா உதாரணம் என்றால் எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பதற்கு ஆஸ்திரேலியா உதாரணம்.

களத்தில் இந்திய அணியின் செயல்பாடு, இந்திய கிரிக்கெட் வாரியம் எத்தனை கோடி வருமானமும் லாபமும் பெறுகிறது போன்றதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை யாருமே புகழக்கூடாது. என்ன செய்திருக்கலாம் என்பதை என்ன செய்திருக்கிறார்கள் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

கிரிக்கெட் வாரியம் சீர்திருத்தம் பெறவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் லோதா கமிட்டி பரிந்துரைகள் நியாயமானவையா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் மத்திய, மாநில அரசில் அமைச்சராகவோ, ஐஏஎஸ் அதிகாரியாகவோ இருக்கக்கூடாது என்பது நியாயமானது. அவர் 70 வயதுக்குக்கீழ் உள்ளவராக இருக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர்கள், ஆளுநர்கள் ஆகியோருக்கோ அல்லது தனியார் கம்பெனிகளின் நிர்வாக இயக்குநர்களுக்கோ இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாதபோது இது சரியானதாகத் தோன்றவில்லை.

ஒரு மாநிலம் - ஒரு வாக்கு என்ற சீர்திருத்தம் அவசியமா என்ற கேள்வியை முன்வைக்கலாம். கிரிக்கெட் சங்கங்கள் உருவானதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. கிரிக்கெட் சங்கங்கள் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே இருந்த அமைப்புகளிலிருந்து உருவானவை. அதனால்தான் ஹைதராபாத், ஆந்திரா என்று இரண்டு கிரிக்கெட் சங்கங்கள் இருந்தன. ஆந்திரப் பிரதேசம் என்ற ஒரு மாநிலம் இருந்தபோது ஒரு வாக்குதான், தெலங்கானா, ஆந்திரா என்று இரண்டானால் இரு வாக்குகள் என்று இந்திய யூனியனின் அமைப்பை அடியொட்டிச் செய்யவேண்டுமா என்று தெரியவில்லை. குஜராத், சௌராஷ்டிரா, பரோடா என்று குஜராத் மாநிலத்தில் மூன்று சங்கங்கள். மஹாராஷ்டிடிரா, மும்பை, விதர்பா என்று மகாராடிரத்துக்கு மூன்று சங்கங்கள். புதிதாக உருவான சில மாநிலங்களுக்கு அல்லது சில வடகிழக்கு மாநிலங்களுக்கு அணிகள்/சங்கங்கள் ஏதும் கிடையாது. ஜார்க்கண்டுக்கு உண்டு. உத்தராகண்ட், சத்தீஸ்கருக்குக் கிடையாது. இவை எல்லாமே வரலாற்றுறுரீதியிலானவை. இவற்றை மறுக்க நியாயமில்லை. சர்வீசஸ் (முப்படை), ரயில்வே ஆகியவற்றுக்கும் கிரிக்கெட் சங்க/அணிகள் உண்டு. இவை எந்தக் கணக்கில் சேரும்?

ஒருவர் ஒரே நேரத்தில் மாநில கிரிக்கெட் சங்கத்திலும் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் பதவியில் இருக்கக்கூடாது என்பது நியாயமே. ஆனால் அடுத்தடுத்து இருமுறை பதவியில் இருக்கக்கூடாது, ஒட்டுமொத்தமாக மூன்று முறைக்குமேல் பதவியில் இருக்கக்கூடாது என்ற இரண்டுமே, இந்திய அமைப்புகள் எதிலும் இல்லாத புதுவித நியாயம். இதனை லோதா குழு பரிந்துரைக்க, உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டது?

மோதி தலைமையிலான அரசு கிரிக்கெட் வாரியத்தைக் காப்பாற்றும் என்று எனக்குத் தோன்றவில்லை. உச்ச நீதிமன்றமும் பின்வாங்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் செய்வது பிழை என்றே நினைக்கிறேன். முரட்டுத்தனமான விதிகளை எந்த அமைப்பின்மீதும் விதிக்கக்கூடாது. அவர்களுடைய கணக்குகள் சிஏஜி கொண்டு தணிக்கை செய்யப்படும், அவர்கள் வரி கட்டவேண்டும் போன்ற எளிமையான விதிகள் போதும். மாற்றங்கள் உள்ளிருந்தே வரும். இது தேசத்துக்குப் பெரிதும் முக்கியமான விஷயமும் இல்லை. இவர்களுடைய செயல்பாட்டால் நாட்டில் பொது அமைதிக்குப் பங்கம் வரப்போவதும் இல்லை. ஏன் இப்படிப் போட்டு முரட்டி அடி அடிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் இந்த நிலை இவர்களுக்கு வர இவர்களேதான் காரணம்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னைச் சீர்திருத்த எந்த முயற்சியுமே எடுக்கவில்லை. லோதா குழு அமைக்கப்பட்ட நிலையிலும்கூட தன்னிச்சையாகச் சில சீர்திருத்தங்களை அவர்களாகவே முன்வைத்திருந்தால், உச்ச நீதிமன்றம் அவர்களை விடுவித்திருக்கும். மாறாக, லோதா குழுவை எதிர்த்துக்கொண்டே இருந்தார்கள். தாங்களாகவும் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒன்றையும் செய்யாமல் உச்ச நீதிமன்றத்தைச் சீண்டிக்கொண்டே இருந்தார்கள். அதன்விளைவாக, இப்போதுள்ள சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளார்கள்.

5 comments:

  1. <<பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர்கள், ஆளுநர்கள் ஆகியோருக்கோ அல்லது தனியார் கம்பெனிகளின் நிர்வாக இயக்குநர்களுக்கோ இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாதபோது இது சரியானதாகத் தோன்றவில்லை.
    <<அடுத்தடுத்து இருமுறை பதவியில் இருக்கக்கூடாது, ஒட்டுமொத்தமாக மூன்று முறைக்குமேல் பதவியில் இருக்கக்கூடாது என்ற இரண்டுமே, இந்திய அமைப்புகள் எதிலும் இல்லாத புதுவித நியாயம். இதனை லோதா குழு பரிந்துரைக்க, உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டது?


    உண்மையில் இந்த மாற்றங்கள் எல்லா அமைப்புககளுக்கே தேவையான ஒன்று.
    குறைந்த பட்சம் கிரிக்கெட் வாரியத்திலாவது செய்கிறார்களே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான்.

    யோசித்து பாருங்கள் - ஒரு வேலை கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தங்கள் முதல் இரண்டு முறை மட்டும் முதல்வராக இருந்து பதவி விலகி இருந்ததால், எப்படி இருந்திருக்கும்? தங்களுக்கு அடுத்த நிலை தலைவர்களை குறைந்த பட்சம் இரண்டாவது முறை வளர விட்டிருப்பார்கள். இந்த அளவு ஊழல் புரையோடி போயிருக்காது :(


    << மாற்றங்கள் உள்ளிருந்தே வரும்.

    நீங்க இந்தியாவில் தான் இருக்கிறீர்களா ?
    எத்தனை அமைப்புகளில் உள்ளிருந்தே மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன ? ஏதாவது உதாரணம் உண்டா ?

    ReplyDelete
  2. Hi Badri, it is nice to see you are posting blogs again. Please post more as you used to in the past. They are very informative, educative as well. Thanks

    ReplyDelete
  3. //அடுத்தடுத்து இருமுறை பதவியில் இருக்கக்கூடாது//

    பி.ஜே.பியில் இந்த விதி உள்ளதே :) அது போதாதா?

    ReplyDelete
  4. விளையாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் வேண்டியது தான். ஆனால் ரொம்பவும் நோண்டக்கூடாது. பொதுவான வழிகாட்டிக் குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாடில் வாலிபால் சங்கம், ஹாக்கி சங்கம், பாட்மிண்டன் சங்கம், சடுகுடு சங்கம், கேரம் சங்கம் என முடிவில்லாது நீண்டுகொண்டே போகும்.மற்ற எதையும் கவனிக்க நேரம் இராது.
    ராமதுரை

    ReplyDelete
  5. 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆலோசகர்களாக இருக்கலாம். ஆனால் தலைவர்களாக செம்மையாக செயலாற்றும் திறம் கேள்விக்குறியது.

    ReplyDelete