Thursday, November 23, 2017

Empire of the stars - புத்தக அறிமுகம்

ஶ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு நமக்கு எப்படித் தெரிய வந்திருக்கிறது? இன்று இரண்டு சினிமாக்கள் வந்துவிட்டன. ஒன்று உள்ளூர்ப் படம். இன்னொன்று உலகப் படம். தமிழில் ரகமி (டி.வி.ரங்கசுவாமி) ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். நான்கூட சிறுவர்களுக்காக ஒரு குட்டி நூல் எழுதியிருக்கிறேன். ஆனால் ராபர்ட் கனிகல் என்ற ஓர் அமெரிக்கர் எழுதிய The man who knew infinity: A life of the genius Ramanujan என்ற நூல்தான் அதாரிடேடிவ் வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியும். அதற்கான கள ஆய்வு என்பது அப்படிப்பட்டது. முதலில் சம்பந்தப்பட்ட நபர் குறித்து என்னவெல்லாம் புத்தகமாக, கட்டுரைகளாக, ஆவணப்படங்களாக வந்திருக்கின்றனவோ அனைத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டும், பார்க்கவேண்டும். அந்த நபருடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரையும் விரிவாகப் பேட்டி கண்டு, அவருடைய வாழ்க்கையை முழுதாகப் படம் பிடித்துவிடவேண்டும். அவர் அறிவியல்/கணித நிபுணர் என்றால் அந்தத் துறை சார்ந்த நிபுணத்துவம் வேண்டும், அல்லது துறை சார்ந்த புரிதலை ஓரளவுக்காவது ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவருடைய கண்டுபிடிப்புகள் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை, அவருடைய துறையில் உள்ள பிறர் யார், யார், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று விரிவாக ஆராய்ந்து புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவர் எழுதியுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தால் மேலும் விசேஷம்.

இவற்றையெல்லாம் செய்தபின், சேர்த்துவைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சுவைபட எழுதவேண்டும். நம்முடைய வாசகர்களுக்குப் புரியும்விதத்தில் எழுதவேண்டும். இது அகடமிக் புத்தகம் அல்ல, ஒரு மாஸ் மார்க்கெட் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் என்பதைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும்.

ராமானுஜனின் வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது ராபர்ட் கனீகல் அமெரிக்கர்களுக்கு இந்தியாவைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் விளக்கவேண்டியிருந்தது. ஐயங்கார்கள், அவர்கள் எம்மாதிரி நாமம் போட்டுக்கொள்வார்கள், குடுமி வைத்திருப்பார்கள், ஆடை அணிந்திருப்பார்கள், சுதந்தரத்துக்கு முந்தைய இந்தியா எப்படியாக இருந்தது, நம்முடைய கோவில்கள் எப்படிப்பட்டவை என்றெல்லாம் பேக்கிரவுண்ட் விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும். அப்படியே காட்சி மாறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி காலேஜ், அங்கே உள்ள பேராசிரியர்கள் நடந்துகொள்ளும் விதம், முதல் உலகப்போர், அக்காலத்தைய பிரிட்டனில் மக்கள் பட்ட கஷ்டங்கள், புரியாத இடத்தில் ஆசார பிராமணரான ராமானுஜன் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டி வந்தது என்பதை வார்த்தைகளில் வடிக்கவேண்டும்.

இன்றைய நிகழ்ச்சி சந்திரசேகரைப் பற்றியது. ஆனால் நான் ராமானுஜனைப் பற்றிக் குறிப்பிடக் காரணம், ராபர்ட் கனீகல் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை முன்வைப்பதுதான். நான் பல அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துள்ளேன். வால்ட்டர் ஐசக்சன் எழுதியுள்ள ஐன்ஶ்டைனின் வாழ்க்கை வரலாறு மிக முக்கியமானது, மிக விரிவானது. அந்த அளவுக்கு ஐசக்சனுக்குத் தகவல்கள் கொட்டிக்கிடந்தன. ஆனால் கனீகல் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தகவல்களைச் சேகரிக்கவேண்டியிருந்தது.

ஆர்தர் ஐ. மில்லர் - இந்த “ஐ” மிக முக்கியம் - ஏனெனில் நமக்கு ஆர்தர் மில்லர் என்ற “டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்” போன்ற நாடகங்களை எழுதிய நாடகாசிரியரை நன்கு தெரியும் - இப்போது நாம் பேசுவது அவரல்லர், இன்னொருவர், அதனால் ஐ என்ற மிடில் இனிஷியல் - இவர் எம்.ஐ.டியில் இயற்பியலில் பிஎச்டி செய்தவர். ஆனால் இப்போது ஹிஸ்டரி அண்ட் பிலாசபி ஆ சயன்ஸ் என்ற துறையில் பேராசிரியராக இருக்கிறார். கனீகல்கூட எஞ்சினியரிங் படித்தவர். பல புத்தகங்களை எழுதியபின் எம்.ஐ.டியில் அறிவியல் எழுதுதல் என்ற துறையை உருவாக்கி அதில் பேராசிரியராகச் சில ஆண்டுகள் இருந்தார். பாருங்கள், அந்த நாடுகளில் எப்படியெல்லாம் பல்கலைக்கழகத் துறைகளை உருவாக்குகிறார்கள் என்று. இந்த மில்லர் எழுதிய புத்தகம்தான் Empire of the stars: Chandra, Eddington and the quest for Black holes என்பது.

கனீகலுக்கு ராமானுஜன் யார் என்று தெரியாது. ஒரு பதிப்பாளர் கனீகலைத் தேடிப் பிடித்து அவர் ராமானுஜனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவாரா என்று ஏஜெண்ட் மூலமாக வினவுகிறார். சரி, ஆசாமி யார் என்று பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்று கனீகல் ராமானுஜன் பற்றிய தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறார். ஆனால் மில்லர் அப்படியல்லர். அவர் மாணவப்பருவத்திலேயே ஆர்தர் எடிங்க்டனுடைய புத்தககங்களைப் படித்து, அதன் காரணமாக அறிவியல் துறையில் நுழைந்தவர். ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையை நன்கு அறிந்தவர். சந்திராவின் அகடமிக் புத்தகங்களைப் படித்தவர். சந்திரா பற்றித் தெரிந்தவர். 83 வயதான சந்திராவை மில்லர் சிகாகோவில் சந்திக்கிறார். அப்போது எடிங்க்டன் பற்றி சந்திராவிடம் கேட்கிறார். அந்த வயதிலும் சந்திராவின் முகம் மாறுகிறது. அத்துடன் சந்திரா அதுபற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இருவரும் மீண்டும் சந்திப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது நடப்பதற்கு முன்பாகவே சந்திரா இறந்துவிடுகிறார். அதன்பின் உருவானதுதான் இந்த வாழ்க்கை வரலாறு.

ராமானுஜன் என்றால் உடனே நினைவுக்கு வருவது கேம்பிரிட்ஜின் ஹார்டி. ராமானுஜனை அரவணைத்து, அவருடைய திறமைகளைப் புரிந்துகொண்டு அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்து, அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். தான் செய்த மிகச் சிறந்த செயல் ராமானுஜன், லிட்டில்வுட் ஆகியோருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ததுதான் என்று பெருந்தன்மையுடன் (அது உண்மையும்கூட) சொன்னவர்! ஹார்டி இல்லையேல் ராமானுஜன் இத்தனை உயரங்களைத் தொட்டிருக்க முடியாது. அதற்கு முற்றிலும் மாறானது எடிங்க்டன் - சந்திரா உறவு. சந்திராவின் வாழ்க்கை சீரழியக் காரணமாக இருந்தவர் எடிங்க்டன் என்பது பெரும் சோகம்.

இத்தனைக்கும் சந்திரா, ராமானுஜன் போல, சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர் அல்லர். சந்திராவின் சித்தப்பா சர். சிவி ராமன். ராமனுடைய அண்ணா சுப்பிரமணிய ஐயரின் முதல் மகன்தான் சந்திரசேகர். சுப்ரமணியன், ராமன் இருவருமே கணிதம், அறிவியல் என்று படித்தாலும் மிடில் கிளாஸ் பார்ப்பனக் குடும்பத்தின் சாவதான உணர்வின் அடிப்படையில் கணக்காளர் வேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது அதை நோக்கி அவர்களுடைய தந்தையாரால் தள்ளப்படுகிறார்கள். இவர்களுடைய தந்தை சந்திரசேகரோ கணிதமும் இயற்பியலும் கற்றுத்தரும் கல்லூரிப் பேராசிரியர்! அகடமிக் துறையில் வெட்டி முறிப்பதைவிட சிவில் சர்வீஸில் சேர்ந்து சௌகரியமான வாழ்க்கை வாழ்வது சிறந்தது என்பது அவர்கள் சித்தாந்தம். இன்றுகூடப் பாருங்கள், அடிப்படை அறிவியல், கணிதமா அல்லது ஐஐடி எஞ்சினியரிங்கா என்றால் என்ன முடிவை எடுக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

ஆனால் ராமன் வித்தியாசமானவர். கல்கத்தாவில் கணக்காளராக இருந்துகொண்டே பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்திலேயே வேலை கிடைத்ததும் அதிக சம்பளம் தரும் கணக்காளர் வேலையை விட்டுவிட்டு இயற்பியல் ஆராய்ச்சிக்குள் நுழைந்துவிட்டார். பின்னர் நோபல் பரிசையும் பெற்றார். ராமன் பெற்ற பெருமை, ராமனின் மோசமான குணம் இரண்டும் சேர்ந்து சுப்ரமணியம் குடும்பத்தில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியது. தன் மகன் சந்திரா மிகப் பெரும் இடத்தை அடையவேண்டும், ராமனைவிடப் பெரிய இடத்தை அடையவேண்டும் என்று சுப்ரமணிய ஐயரும் அவருடைய மனைவி சீதாலக்ஷ்மியும் விரும்பினர். ஆனால் ராமனின் தயவு இல்லாமல் இது நடக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். என்ன நடந்தாலும் சித்தப்பாவிடம் மட்டும் ஆலோசனை கேட்காதே என்பதுதான் தாயின் விருப்பமாக இருந்தது!

ஆனாலும் ராமன்தான் சந்திராவின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லக் காரணமாக இருந்துவிட்டார். ஆர்தர் எடிங்க்டனின் The Internal Constitution of the Stars என்ற புத்தகத்தை பள்ளிச் சிறுவன் சந்திராவுக்கு ராமன் அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்தப் புத்தகம் சந்திராவை அப்போதுதான் வளர்ந்துவந்துகொண்டிருக்கும் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறைக்கு அறிமுகப்படுத்தியது. சந்திராவின் ஹீரோவும் வில்லனுமான எடிங்க்டனையும்கூட அவருக்கு இந்தப் புத்தகம் அறிமுகம் செய்துகொடுத்தது.

ராமனைப் போலவே சந்திராவும் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரசிடென்சி காலேஜில்) இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்றார். அங்குள்ள ஆசிரியர்களுக்கு ராமன்போலவே சந்திராவும் எங்கோ உயரங்களுக்குச் செல்லப்போகிறார் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை. மிகப்பெரிய விஞ்ஞானிகள் சென்னை வந்து பிரசிடென்சி கல்லூரியில் பேசப்போகிறார்கள் என்றால் சந்திராவைத்தான் அவர்கள் நம்பியிருந்தனர். சந்திராதான் அந்த விஞ்ஞானிகளையும் அவர்களுடைய ஆராய்ச்சிகளையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும்! கல்லூரியில் ஆர்னால்ட் சாமர்ஃபீல்ட் என்ற ஜெர்மன் விஞ்ஞானி வந்து பேசியிருந்தார். அவர் தங்கியிருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அவரைச் சந்திக்கப் போய்விட்டார் சந்திரா. சாமர்ஃபீல்டும் இளைஞன், மாணவன் என்றெல்லாம் நினைக்காமல் அவரிடம் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொடுத்து, அவர் எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்தல் நலம் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் ஜெர்மனியின் இளம் விஞ்ஞானியும் குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையின் பிதாமகர்களில் ஒருவருமான ஹெய்சன்பர்க் பிரசிடென்சி கல்லூரிக்கு வந்தபோது அவரையும் குவாண்டம் மெக்கானிக்ஸையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசியதே சந்திராதான். ஹெய்சன்பர்க் சென்னையில் இருந்த காலம் முழுதும் அவருடன் சுற்றி இயற்பியல் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பு சந்திராவுக்குக் கிடைத்தது.

ராமானுஜன் கேம்பிரிட்ஜ் செல்ல சென்னையையே புரட்டிப்போடவேண்டி இருந்தது. ஏனெனில் ராமானுஜனுக்கு ஒரு காலேஜ் டிகிரிகூடக் கிடையாது. சந்திராவோ கல்லூரி டாப்பர். அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கியிருந்தன. கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஃபௌலர் என்பவர் “வெள்ளைக் குள்ளன்” (வைட் ட்வார்ஃப்) நட்சத்திரங்கள் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்த சந்திரா, சாமர்ஃபீல்டிடம் தான் கற்றுக்கொண்டதையும் சேர்த்து தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். தன் மேற்படிப்புக்கு ஏற்ற இடம் கேம்பிரிட்ஜ்தான் என்று அவர் இந்தக் கட்டத்திலேயே முடிவு செய்துவிட்டார். அதற்கேற்ப தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் ஃபௌலருக்கு அனுப்பினார். ஃபௌலர் சில மாற்றங்களைக் குறிப்பிட அவற்றைச் செய்து சந்திரா ஃபௌலருக்கு அனுப்ப அது Proceedings of Royal Society இதழில் வெளியானது. இதை ராமானுஜனுடன் ஒப்பிடுங்கள். ராமானுஜன் என்ன எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதே பல பேராசிரியர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால் சந்திராவோ விஞ்ஞானிகளுக்குப் புரியும் வகையிலான கட்டுரைகளை எழுதினார். எனவே கேம்பிரிட்ஜிலிருந்து அவருக்கு மேற்படிப்புக்கான உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருக்கவில்லை.

1930-ம் ஆண்டு, இருபது வயதை முடிக்காத நிலையில் கேம்பிரிட்ஜ் செல்லக் கப்பல் ஏறினார் சந்திரா. அவருடைய தாய் மரணப் படுக்கையில் இருந்தார். “ராமானுஜன் கணிதத்துக்கு என்ன செய்தாரோ அதனை நீ இயற்பியலுக்குச் செய்வாய் என்று நான் நம்புகிறேன்” என்று ராமன் சந்திராவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது அந்தக் கப்பல் பயணத்தின்போதே நிகழ்ந்தது. அதாவது தன் பிஎச்டி ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன் ஆராய்ச்சி வாழ்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பை சந்திரா அந்தக் கப்பல் பயணத்தின்போது செய்துமுடித்திருந்தார்.

ஆர்தர் எடிங்க்டன் நட்சத்திரங்கள் பற்றிய தன்னுடைய புத்தகத்தில் ஒரு முக்கியமாண கேள்வியை எழுப்பியிருந்தார். ஒரு நட்சத்திரத்துக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காலகட்டம் அது. இன்று நமக்கு அது நன்றாகவே தெரியும். ஹைட்ரஜன் அணுக்கள் நான்கு அணுச்சேர்க்கை மூலம் ஒன்று சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவை உருவாக்குகின்றன. இது நிகழும்போது கொஞ்சம் நிறை அழிக்கப்படுகிறது. அது E=Mc2 என்னும் சமன்பாட்டின்படி ஆற்றலாக மாறுகிறது. ஒரு நட்சத்திரத்தில் எக்கச்சக்கமான பொருண்மை - நிறை - இருப்பதால் ஈர்ப்பின் காரணமாக அது நசுங்கத் தொடங்குகிறது. ஆனால் அதே நேரம் அணுச்சேர்க்கை காரணமாக உருவாகும் ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியேறுவதனால் வாயுக்கள் விரிவடையத் தொடங்குகின்றன. ஈர்ப்பின் நசுக்குதலும் வெப்பத்தின் விரிவடைதலும் ஒரு கட்டத்தில் சமநிலையை அடைகின்றன. ஆனால், என்றொ ஒருநாள் அணுச்சேர்க்கை முடிந்துபோகும். அந்த நேரத்தில் அந்த நட்சத்திரத்துக்கு என்னவாகும்? அதன் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். இப்போது ஈர்ப்பு அதிகமாகி நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கும்.

ஃபௌலர், குவாண்டம் மெக்கானிக்ஸை அடிப்படையாக வைத்து எலக்ட்ரான் டீஜெனரசி என்ற கொள்கையை முன்வைத்தார். ஒரு “செத்த” நட்சத்திரம் சுருங்கிக்கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் அதன் மையத்தில் எலக்ட்ரான்கள் குழுமத் தொடங்கும். Pauli’s Exclusion Principle அடிப்படையில் எலெக்ட்ரான்களை ஓரளவுக்குமேல் நசுக்க முடியாது. அப்போது வெப்பநிலை விரிவாக்கம் என்பது நடைபெறாவிட்டாலும்கூட எலக்ட்ரான்கள் ஒன்றுசேர்ந்து ஈர்ப்பினால் தாம் நசுக்கப்படுவதை எதிர்த்து இறுகிய பாறைபோல ஆகிவிடும் என்றார் ஃபௌலர். கப்பல் பயணத்தின்போது இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த சந்திரா, மையத்தை நோக்கிச் செல்லும் எலக்ட்ரான்கள் எந்த வேகத்தில் இருக்கும் என்று கணக்கிட்டார். கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதி வேகத்தில் அவை செல்லும் என்று கணக்கு சொன்னது! ஆஹா, அப்படியானால் ஐன்ஶ்டைனின் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தியாகவேண்டுமே? ஈர்ப்பினால் நசுக்கப்படும் எலக்ட்ரான்கள் அத்துணை வேகத்தில் செல்லா என்றே ஃபௌலர் நினைத்திருந்தார். ஆனால் அது தவறு என்று சந்திரா புரிந்துகொண்டார். சிறப்புச் சார்பியல் சமன்பாடுகளைச் சேர்த்து கணக்குப் போட ஆரம்பித்தார். ஆனால் கப்பல் பயணத்தின்போது செய்யக்கூடிய எளிதான கணக்கல்ல இது. சில குத்துமதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரா. வெள்ளைக் குள்ளன் நட்சத்திரத்தின் நிறைக்கு ஒரு எல்லை உண்டு என்பதுதான் அது. அதாவது ஒரு உயிருள்ள நட்சத்திரம் வெள்ளை குள்ளனாக ஆகவேண்டும் என்றால் அதன் நிறை ஒரு எல்லைக்குள் இருந்தாகவேண்டும்.

கேம்பிரிட்ஜ் சென்று ஃபௌலரிடம் தன் முடிவை சந்திரா காண்பித்தார். ஃபௌலருக்கு அதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. மில்ன் என்பவரிடம் இதைக் குறித்துப் பேசச் சொன்னார். மில்ன், ஸ்டோனர் ஆகியோர் இதே திசையில் யோசித்துக்கொண்டிருந்தனர். அவர்களும் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தி சில கணக்குகளைப் போட்டிருந்தனர். ஆனால் சந்திராதான் சரியான மாதிரியை உருவாக்கியிருந்தார். மில்னும் சந்திராவின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் சந்திரா எடிங்க்டனைச் சந்தித்தார். ஆர்வத்துடன் தன் மாதிரியைக் காட்டினார். எடிங்க்டன் ஒன்றும் சொல்லவில்லை. இடையில் கோப்பன்ஹேகன் சென்ற சந்திரா அங்கே குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருந்த போர், ஹெய்சன்பர்க் போன்றோருடன் சில மாதங்களைக் கழித்தார். ஆனால் அவர்களுக்கு ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் எந்த விருப்பமும் இருக்கவில்லை. கேம்பிரிட்ஜ் திரும்பிய சந்திரா மிகச் சாதாரணமான சில ஆராய்ச்சிகளைச் செய்து அதன் அடிப்படையில் பிஎச்டி பரீட்சையைக் கடந்தார். அடுத்து என்ன செய்யவேண்டும்? சந்திராவின் தந்தை அவரை இந்தியா திரும்பிவருமாறு சொல்லிக்கொண்டிருந்தார். சந்திராவுக்கோ இந்தியா போனால் ஆராய்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் இருக்காது என்று தோன்றியது. மேலும் ராமனின் நிழலில் இருக்கவேண்டியிருக்கும். ராமனுக்கோ சந்திரா ஆஸ்ட்ரோபிசிக்ஸில் ஆராய்ச்சி செய்வது பிடிக்கவில்லை. அது நிஜமான பிசிக்ஸே அல்ல என்று ராமன் கருதினார். அதை வெளிப்படுத்தவும் செய்தார். இதற்கிடையில் சந்திரா Fellow of Royal Society என்று தெரிந்தெடுக்கப்பட்டார். அப்படியானால் அவர் கேம்பிரிட்ஜில் தங்கியபடி ஆராய்ச்சிகள் செய்துகொண்டே இருக்கலாம். அவருக்கு மாதாமாதம் சம்பளம் கிடைத்துவிடும்.

இதன்பிறகுதான் சந்திராவுக்கு மிக மோசமான அனுபவம் கிடைத்தது. 1935-ல் ராயல் சொசைட்டியின் சந்திப்பின்போது சந்திரா தன்னுடைய முக்கியமான முடிவை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட நிறை எல்லைக்குக் கீழ் நிறை கொண்ட நட்சத்திரங்கள்தாம் வெள்ளைக் குள்ளனாகும் சாத்தியங்கள் உண்டு. இந்த எல்லைக்கு மேல் நிறை கொண்ட நட்சத்திரங்கள் நிச்சயமாக வெள்ளைக் குள்ளனாக ஆகமுடியாது. என்னவாக ஆகும் என்பதைச் சொல்வது கடினம். அந்த நேரத்தில் கருந்துளை என்ற கருத்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சந்திரா அந்தக் கருத்து வெளிப்படும்விதமாக, ஒரு நட்சத்திரம் கிட்டத்தட்ட ஜீரோ அளவுக்குச் சுருங்கிவிடும் என்று காண்பித்தார். சந்திரா பேசி முடித்ததும் எடிங்க்டன் எழுந்து தன் பேச்சைத் தொடங்கினார். 25 வயதான சந்திரா பேசியது அனைத்தும் பிதற்றல் என்றார். இயற்கை இம்மாதிரியான கிறுக்குத்தனங்களை அனுமதிக்காது என்றார். சந்திரா தன் தரப்பு நியாயத்தை முன்வைக்க எழுந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சந்திராவின் ஆராய்ச்சிகளை ஆதரித்துப் பேச பெரிய ஆட்கள் யாரும் முன்வரவில்லை. சந்திராவின் ஆராய்ச்சி வாழ்க்கையும் கண்ணியமும் பெருத்த அடிக்கு உள்ளாயின.

நல்லவேளையாக கேம்பிரிட்ஜுக்கு வெளியே துறை வல்லுனர்கள் சந்திராவின் ஆராய்ச்சியை மதித்தனர். அமெரிக்காவுக்கு வந்து பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியலுக்கு என்று தனியாக ஒரு இடம் தொடங்கப்பட இருந்தது. அமெரிக்கா 1935-ல் வான் இயற்பியலில் பின்தங்கியிருந்தது. எனவே உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை வரவழைத்து முன்னேறிச் செல்லவேண்டும் என்ற பெரும் வேட்கை அவர்களிடம் இருந்தது. சந்திராவுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் வேலை தந்தது; சிகாகோ பல்கலைக்கழகமும் வேலை தந்தது. சந்திரா சிகாகோ பல்கலைக்கழக வேலையை எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையில் சந்திராவின் தந்தைக்கு மிகப்பெரும் மனவருத்தம். சந்திரா இந்தியா திரும்பிவந்து வேலை செய்யவில்லையே என்று. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சந்திரா அமெரிக்கக் குடியுரிமை பெற்றுக்கொண்டபோது சந்திராவின் தந்தை அவருடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்.

எடிங்க்டன் - சந்திரா மோதல் பற்றிப் பேசியபடி சந்திராவின் தனி வாழ்க்கையை மறந்துவிட்டோமே. சந்திராவின் கூடப் படித்த பெண் லலிதா துரைசாமி. லலிதாவின் தாய் சாவித்ரி, தந்தை துரைசாமி. லலிதாவின் தாயுடைய சகோதரி சுப்புலக்ஷ்மி, நமக்கு அதிகம் தெரிந்தவர். சிஸ்டர் சுப்புலக்ஷ்மி. சிறுவயதுக் கல்யாணம், சிறுவயது விதவை என்றாலும் மேலே படிக்கவைக்கப்பட்டு பட்டம் பெற்று பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். சென்னையில் பெண்கள் கல்லூரி வருவதற்கு முதன்மை முயற்சிகளை எடுத்தவர். அதன் விளைவுதான் ராணி மேரி கல்லூரி. எனவே லலிதா கல்லூரிக்குச் சென்று படித்தது பெரிய விஷயம் அல்ல. சந்திராவும், அதே வகுப்பில் பிசிக்ஸ் படித்த லலிதாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் கேம்பிரிட்ஜ் சென்றவுடன் சந்திராவின் முழுக்கவனமும் ஆராய்ச்சியிலேதான் இருந்தது.

அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் சந்திரா செய்த முதல் காரியம் சென்னை வந்து, தந்தையை ஏற்கச் செய்து, லலிதாவைத் திருமணம் செய்துகொண்டதுதான். சிகாகோ சென்ற இருவரும் அங்கே தம் வாழ்க்கையைத் தொடங்கினர். லலிதா கருவுற்றார், ஆனால் கரு கலைந்துபோனது. அதன்பின் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது. லலிதா இறுதிவரை தன் வாழ்க்கையை சந்திராவுக்கு என்றே அர்ப்பணித்துக்கொண்டார்.

சந்திரா தன் வாழ்நாளின் இறுதிவரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தார். முதல் 20 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்கிஸ் அப்சர்வேட்டரியிலும் அதன்பின் அதன் இயற்பியல் துறையிலும் தன்னை ஆழ்த்திக்கொண்டார்.

எடிங்க்டன் பிரச்னைக்குப்பிறகு வெள்ளைக் குள்ளன், கருந்துளை ஆகியவை பற்றி அதிகம் பேசாத சந்திரா தன் ஆராய்ச்சிக்கென்ற குறிப்பிட்ட ஒரு துறையை எடுத்துக்கொள்வார். ஐந்திலிருந்து பத்தாண்டுகள் அதில் இயங்குவார். அதன்பின் அந்தத் துறையில் ஒரு காத்திரமான புத்தகத்தை எழுதுவார். அத்துடன் அந்தத் துறையை விட்டுவிட்டு அடுத்த துறையைக் கையில் எடுப்பார். அவருடைய புத்தகங்கள் அனைத்தும் கிளாசிக் வகையைச் சேர்ந்தவை.

1939 - An Introduction to the Study of Stellar Structure
1942 -
Principles of Stellar Dynamics
1950 - Radiative Transfer
1960 - Plasma Physics
1969 - Ellipsoidal Figures of Equilibrium
1983 - The Mathematical Theory of Black Holes
1995 - Newton's Principia for the Common Reader

கருந்துளைகள் பற்றி அவர் மீண்டும் எழுதவந்தது, பிரச்னைகள் எல்லாம் அடங்கிய 1980களில். தன் வாழ்நாளின் இறுதியில் அவர் நியூட்டனின் பிரின்சிபியா புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். நியூட்டன் பற்றி சிறப்புப் பேச்சு ஒன்றைத் தருவதற்கான முன்னேற்பாடுகளின்போது பிரின்சிபியா புத்தகத்தைப் பார்வையிட்ட அவர், அந்தப் புத்தகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு சந்திராவுக்குத் தரப்பட்டது. அப்போது அவர் வயது 73! காலம் கடந்து தரப்பட்ட பரிசு என்று அனைவருமே ஏற்றுக்கொண்டார்கள். 1968-ல் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் அவருக்குத் தரப்பட்டது.

மில்லர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, கனீகல் எழுதிய வாழ்க்கை வரலாற்றைவிட ஒருபடி குறைவானது என்பது என் கருத்து. மில்லர் அறிவியலை அதிகமாக வைக்கிறார். சில அத்தியாயங்கள் சாதாரணர்கள் படிப்புக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. கனீகல் மிகுந்த கவனத்துடன் எழுதுவார். கணிதம் புரியவில்லை என்று யாரும் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிடக்கூடாதே என்ற பயம் புத்தகம் முழுவதிலும் காணலாம். ஐசக்சனின் ஐன்ஶ்டைன் வாழ்க்கையிலும் இந்த கவனத்தைக் காணலாம். மேலும் மில்லர், கனீகல் அளவுக்கு இந்தியாவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கனீகலுக்கு அந்த சுதந்தரமும் செலவுக்கான பணமும் இருந்தது என்று நினைக்கிறேன். அதன்காரணமாக மில்லருடைய புத்தகத்தில் சந்திராவின் தனி வாழ்க்கை குறைவாகவே வெளிப்படுகிறது.

நம் நினைவுகளில் ராமானுஜன் பெரிதாக எழுந்து நிற்கிறார். ராமன் பற்றியும் நமக்கு நிறையத் தெரியும். ஆனால் சந்திரா பற்றி மிகக் குறைவானவர்களுக்கே தெரியும். அந்தவிதத்தில் மில்லர் நமக்கு மிகப்பெரும் நன்மையைச் செய்திருக்கிறார்.

இன்னொரு வருத்தமான விஷயம், இந்த வெளிநாட்டவர் இல்லாவிட்டால் நம்மால் ராமானுஜனைப் பற்றியோ சந்திராவைப் பற்றியோ இவ்வளவுதூரம் தெரிந்துகொண்டிருக்க முடியாது. என்னவொரு அநியாயம்! ஏன், ராமன்குறித்து இந்த அளவுக்கு விரிவான வாழ்க்கை வரலாறு நம்மிடம் கிடையாது. ஹோமி பாபா குறித்தோ, மேக்நாத் சாஹா குறித்தோ, சத்யேந்திரனாத் போஸ் குறித்தோ, ஜகதீஷ் சந்திர போஸ் குறித்தோ, ஜி.என்.ராமச்சந்திரன் குறித்தோ நம்மிடம் விரிவான பதிவுகள் கிடையாது. மிகச் சுமாரான புத்தகங்கள்தான்.


கையில் பணம் இருக்கும் பெரும் இந்திய தனவந்தவர்கள் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அமெரிக்க எழுத்தாளர்களைப் பிடித்து, கணிசமான பணத்தைக் கொடுத்து மேற்சொன்ன இந்திய அறிவியலாளர்களைப் பற்றி விரிவான வாழ்க்கை வரலாறுகளை எழுதச் செய்வதுதான். அவர்களுக்கு வாய்த்திருக்கும் திறமை நம்மிடம் இப்போது இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.