Wednesday, July 04, 2018

சிலை, கலை, திருட்டு

இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக காலப் பொருள்கள் உண்மையில் வழிபாட்டுக்குரிய பொருள்களா என்று எனக்குத் திட்டவட்டமாகத் தெரியாததால் அவற்றை விடுத்துவிட்டுப் பேசுகிறேன். அசோகன் காலத்திலிருந்து, அதாவது குறைந்தபட்சம் 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, சிற்பப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மௌரிய, சாதவாகன, குஷாண, குப்த என்று தொடங்கி அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இந்தியா முழுவதிலும் இந்து, புத்த, சமணக் கடவுளர்களின் சிற்பங்கள் கிடைக்கின்றன.

இந்தச் சிற்பங்களை உருவாக்கிய ஸ்தபதிகளும் இந்தச் சிற்பங்களுக்கான நிதி உதவி செய்தவர்களும், இந்தச் சிற்பங்களைக் கடவுளாக மட்டுமே கண்டனர். இவற்றைக் கலைப்பொருள்களாக அவர்கள் எப்போதும் காணவில்லை. இன்றுவரையிலும் இதுதான் நிலைமை. ஒரு சிற்பி (ஸ்தபதி), கல்லிலோ, உலோகத்திலோ, சுதையிலோ ஒரு கடவுள் படிமத்தை உருவாக்குவதற்குமுன், அக்கடவுளுக்கான தியான சுலோகத்தை மனத்தில் இருத்தி வணங்குவார். அவர் மனத்தில் தோன்றும் வடிவத்தைப் பின்னர் உருவாக்குவார். அதன்பின், ஒவ்வொரு சம்பிரதாயத்தின்படியும், முறையான ஆகம வழிமுறைகள்மூலம், குறிப்பிட்ட கடவுளின் தன்மை அச்சிலையினுள் ஆவாகனம் செய்யப்படும்.

இந்துக் கோவில்களில் மூலவர் கல் அல்லது சுதையில் இருக்கும். உற்சவரும் பலி ஏற்பவரும் (இரண்டும் வெவ்வேறு படிமங்கள்), உலோகத்தில் இருக்கும். உற்சவரை (உற்சவபேரர்) வாகனங்களில் அல்லது தேரில் ஏற்றி, அல்லது தோளில் சுமந்து கோவிலின் உள்ளேயும் வீதிகளிலும் உலா வருவர். பலி ஏற்கும் படிமம் (பலிபேரர்), பலிபீடங்களின் முன் வந்து பலியை (உணவை) ஏற்பதற்கு மட்டுமே பயன்படும். சமணக் கடவுள்களுக்கும் இவ்வாறே. கருவறை தவிர, விமான கோஷ்டங்கள், கோபுரங்கள் ஆகிய இடங்களிலும் கல்லினால் அல்லது சுதையினால் ஆன கடவுள் சிற்பங்கள் உள்ளன.

இந்து, சமணக் கோவில்கள் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை. ஆனால் புத்த சைத்தியங்களும் விகாரைகளும் வடிவத்தில் வேறுபட்டவை. கருவறையிலும் சுற்றுச் சுவர்களிலும் கற்சிலைகள் கொண்ட, இன்று வழிபாட்டில் இல்லாத பல சைத்தியங்களும் விகாரைகளும் நமக்குக் கிடைக்கினறன. சென்னை அருங்காட்சியகத்தில் சோழர் கால புத்த உற்சவர் உலோகச் சிலைகள் நிறைய உள்ளன. எனவே வீதியுலா நடந்திருக்கவேண்டும். பலியுணவு தருதல் இருந்ததா என்பது தெரியவில்லை.

சிற்பங்கள் பின்னமாகும்போது, அதாவது உடைந்துபோகும்போது, அவற்றின் கடவுள் தன்மை நீங்கிவிடும். இதுதான் மரபு. அந்த நிமிடத்திலிருந்தே அச்சிலையானது வெறும் கல்லாக அல்லது உலோகமாக ஆகிவிடுகிறது. அது கடவுள் கிடையாது. இந்திய மரபின்படி, இந்த வெறும் கல், உலோகம் அழிக்கப்படவேண்டும். குன்றின்மீது செதுக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் மேற்கொண்டு வழிபாடு தொடராது. கற்சிலையாக இருந்தால் குளத்திலோ, கிணற்றிலோ போட்டுவிடுவார்கள். உலோகமாக இருந்தால் அதனை உருக்கி, அடுத்த சிலையைச் செய்யப் பயன்படுத்திக்கொள்வார்கள். மரமோ, சுதையோ நாளடைவில் அழிந்து நமக்குக் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. அல்லது யாருக்காவது விறகாகக்கூடப் பயன்பட்டிருக்கலாம். ஆக, மரபின்படி, அது கடவுளா அல்லது வெறும் பொருளா என்பதை அதன் முழுமை மற்றும் ஆகம முறைப்படியான ஒரு வழிபாட்டிடத்தில் அது இருக்கிறதா, அதற்கு ஆகமச் சடங்குகள், குடமுழுக்கு ஆகியவை நடந்துள்ளதா என்பதைப் பொருத்ததே ஆகும்.

இந்தியர்கள் எந்தக் காலத்திலும் இந்தச் சிலைகளை எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் வைத்துக் கலைப்பொருளாகப் பார்த்ததில்லை. (இன்று மாற்றம் உண்டு.) அதற்குக் காரணம், அவை வழிபடு பொருள்கள் என்பதாலும் நியமத்துடன் அவற்றை வழிபடவேண்டும் என்பதாலுமே. இம்மாதிரியான நியமங்களைப் பின்பற்ற முடியும் என்போரே தமக்கெனக் கடவுள் சிலைகளை உருவாக்கி வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்தச் சிலைகளை வெறுக்கத்தக்க பொருளாகவே பார்த்தனர். முஸ்லிம் அரசர்கள், இந்தச் சிலைகளை அழிப்பதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாகவே செய்தனர். இந்தியா வந்த கிறிஸ்தவப் பயணிகளும் பாதிரிகளும் இச்சிலைகள் குறித்துக் கீழானவிதத்திலேயே எழுதியிருக்கின்றனர். ஆனால், பின்னர் ஆங்கிலேய ஆட்சியாளர்களாக இருந்த பலர், இந்தியக் கடவுள் சிலைகளைத் தங்களுடைய சொத்துகளாக, கலைப்பொருள்களாக, பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது வில்லியம் ஜோன்ஸ் முதலாகப் பல்வேறு இந்தியவியலாளர்கள் இந்திய மதங்களையும் இலக்கியங்களையும் சற்றே வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினர். ஆனந்த குமாரசாமி போன்றோர் இந்தியச் சிலைகளைக் கலைக் கண்ணோட்டத்துடன் எழுதியபிறகு உலக அரங்கில் இந்தச் சிலைகள் குறித்து சற்றே மரியாதைக்குரிய கருத்து தோன்ற ஆரம்பித்தது. ஆனால் பெரும் பிரச்னையும் அங்கிருந்துதான் உருவாகத் தொடங்கியது. ஆனந்த குமாரசாமியே இந்தியாவிலிருந்து எண்ணற்ற கடவுள் சிலைகளை உலக அருங்காட்சியகங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இவை வழிபாட்டில் இருந்த சிலைகளா அல்லது பின்னம் என்று தூக்கி எறியப்பட்டவையா என்பது குறித்து எனக்குத் தெரியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி மேற்கத்திய அருங்காட்சியகங்களும் தனிச் சேகரிப்பாளர்களும் இந்தியக் கலைப் பொருள்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவில் திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். பல்வேறு காலகட்டங்களில் அந்நியப் படையெடுப்பின்போது காப்பாற்றவேண்டும் என்பதற்காக நிலத்தினடியில் புதைத்துவைக்கப்பட்ட சிலைகள், குளங்களில், கிணறுகளில் எறியப்பட்டிருந்த சிலைகள் போன்றவை இன்றும்கூடத் தோண்டியெடுக்கும்போது கிடைக்கின்றன. ஆனால் இவை எப்போதாவதுதான் கிடைக்கும். மேலை நாடுகளிலோ மிகப்பெரிய ஆர்வம் இச்சிலைகளுக்கு உள்ளது. எனவே, இந்தியாவில், பாதுகாப்பற்ற கோவில்களிலிருந்து சிலைகள் கடத்துவது என்பது மிகப்பெரிய தொழிலாக ஆனது.

இது இன்று நேற்று அல்ல. நான் சிறுவனாக நாகப்பட்டினத்தில் வசிக்கும்போதே (1970, 80கள்), வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற வதந்தி பரப்பும் சாதனங்கள் இல்லாதபோதே, சிலை கடத்தல் நடப்பதாகவும் அதில் ஊரின் முக்கியமான மருத்துவர்கள், ஆடிட்டர்கள் ஆகியோர் ஈடுபடுவதாகவும் அவர்கள் அதன்மூலம் கொள்ளைப் பணம் ஈட்டுவதாகவும் மக்கள் பேசிக்கொண்டனர். சிறு சிறு கோவில்களிலிருந்து சிலைகள் கடத்தப்படுவதும் நிஜமாகவே நடந்துகொண்டிருந்தது.

மேலை நாடுகளின் அருங்காட்சியகங்கள் இந்தச் சிலைகளை வாங்குவதற்குமுன், இவற்றுக்கு Provenance Certificate என்பது தேவை. இந்தச் சிலையின் வரலாறு என்ன, இது எந்தக் காலத்தைச் சேர்ந்தது, இது எந்தக் கோவிலில் இருந்திருக்கலாம் போன்ற தகவல்கள். கடத்தல் சிலைகளுக்கும், பிரச்னை வராத வகையில் வேண்டிய மாதிரி இந்தச் சான்றிதழை எழுதித்தர பல வரலாற்று, கலைத்துறைப் பேராசிரியர்கள் கூட்டுச் சதியில் சேர்ந்துகொண்டனர். இன்று மேலை நாடுகளின் அருங்காட்சியகங்களில் நீங்கள் காணும் ‘மதிப்பு மிக்க’, ‘விலை உயர்ந்த’ இந்தியச் சிற்பங்கள் அனைத்துமே நியாயமான முறையில் இந்தியாவிலிருந்து பெறப்பட்டதல்ல. காலனியாதிக்கக் காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டவை, அல்லது இந்தியச் சுதந்தரத்துக்குப் பிறகு திருடிச் செல்லப்பட்டவை. சுதந்தரத்துக்குப் பின் திருடப்பட்ட சிலைகளைப் பொருத்தமட்டில் பெரும் குற்றவாளிகள் அனைவரும் இந்தியர்களே. மேலை நாடுகளின் ஒரே குற்றம், அவர்கள் திருட்டுச் சிலை என்ற கவலையின்றி, அவற்றுக்குக் கணிசமாகப் பணம் கொடுத்துத் தம் அருங்காட்சியகங்களில் அவற்றை வைத்துக்கொண்டதே.

ஒவ்வோர் அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகளைவிடப் பல மடங்கு சிலைகள் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. எந்த அருங்காட்சியகமும் தன்னிடம் இருக்கும் முழுச் சேகரத்தின் பட்டியலை வெளியில் கொடுப்பதில்லை. இதைவிட மோசம், தனிச் சேகரிப்பாளர்களிடம் இருக்கும் சிலைகள். அவை பற்றி நமக்குத் துளியும் தெரியாது. இவற்றில் சில எப்போதேனும் ஏல நிறுவனங்கள் வாயிலாக வெளியே வரும்போதுதான் இப்படிப்பட்ட ஒன்று ஏதோ ஒரு நாட்டில் இருப்பதே நமக்குத் தெரியவரும்.

இன்று இந்தியச் சிற்பிகள், கலைப்பொருளாகவே இவற்றைக் கல்லிலும் உலோகத்திலும் செய்துதருகிறார்கள். இவற்றை எந்த அருங்காட்சியகமும் வாங்கிக்கொள்ளலாம். இவை சட்டபூர்வமானவை. ஆனால் மேலை நாட்டு அருங்காட்சியகங்களுக்கோ பழைய சிலைகளை - சோழர், பாண்டியர், குப்தர், மௌரியர், கங்கர், பாலர், சாளுக்கியர், சாதவாகனர் காலச் சிலைகளை - சேகரிப்பதில்தான் ஆர்வம் இருக்கிறது. அத்தகைய சிலைகளைத் திருடி மட்டுமே பெற முடியும். அவை வழிபாட்டில் இல்லையாயின், இந்திய அரசின், இந்தியத் தொல்லியல் துறையின் சொத்தாகும். இந்திய அரசு, பரிசாக அவற்றில் சிலவற்றை வேறு நாடுகளுக்குக் கொடுத்தால் அவைமட்டுமே சட்டபூர்வமாகப் பெறப்பட்டவை. மீதம் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திருடப்பட்டவை மட்டுமே.

இந்தத் திருட்டில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் சட்டபூர்வமாகக் குற்றவாளிகள். விடலைத்தனமாக, ‘கடவுளால் தன் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா’ என்று கேள்வி கேட்போர் முட்டாள்கள் மட்டுமே. கடவுள் என்பது நம்பிக்கை. திருடனால் சிலுவையையும் திருட முடியும், சிவன் சிலையையும் திருட முடியும், நபியின் முடியையும் திருட முடியும், புத்தரின் பல்லையும் திருட முடியும். மக்களின் நம்பிக்கைக்குரிய படிமங்கள் தொலைந்துபோகாமல் இருக்க சட்டம் ஒழுங்கைத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசுகள்தான் அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும். திருடப்பட்ட படிமங்களைத் திரும்பிப் பெற அனைத்து சட்டபூர்வ ஏற்பாடுகளையும் அரசுகள் செய்யவேண்டும்.

மிகப் பழமை வாய்ந்த நாகரிகங்கள் உள்ள நாடுகள் மிகச் சிலவே. கிரேக்கம், இத்தாலி, மெசபடோமியப் பகுதி நாடுகள், பாரசீகப் பகுதி, எகிப்து, சீனம், இந்தியா, தென்கிழக்காசிய நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள் ஆகிய பகுதிகளில்தான் பெருமளவு பண்டைய மதங்கள் சார்ந்த கடவுள் சிலைகள் உள்ளன. இதில் பெரும்பாலான பழைய மதங்களை கிறிஸ்தவமும் இஸ்லாமும் அழித்துவிட்டன. சீனத்தில் கம்யூனிசம் அந்த வேலையைச் செய்தது. இந்தியாவிலும் சில புத்த மத நாடுகளிலும்தான் பண்டைய மதக் கடவுள்கள் இன்றும் கோவிலில் இருக்கிறார்கள். எகிப்தின் சூரியக் கடவுள் சிலை இன்றைக்கு அந்நாட்டு மக்களைப் பொருத்தமட்டில் வெறும் கலைப்பொருள் மட்டுமே. ஈராக்கிலும் அப்படியே. சொல்லப்போனால் தாலிபன், ஐஸிஸ் போன்ற பழமைவாத வெறியர்கள் இவற்றைக் கணக்கின்றி அழித்துள்ளனர். ஆனால் இந்தியாவிலும் இலங்கை, திபெத் தொடங்கி கிழக்காசிய புத்தமத நாடுகளிலும் உள்ள இந்து, புத்த, சமணச் சிலைகள் அந்நாட்டு மக்களுக்கு வழிபடு படிமங்கள் ஆகும். அவை வெறும் கலைப்பொருள்கள் அல்ல. இதனை அந்தந்த நாட்டு அரசுகள் மனத்தில் கொண்டு செயல்படுகின்றன. இந்த மதங்கள் அனைத்துக்கும் தாய்நாடு இந்தியா. ஆனால் அது தன் தலைமைத்துவத்தைச் சரியாகக் காண்பிப்பதில்லை. இத்தாலிபோல, இந்தியாவும் இதற்கென ஒரு தனி துப்பறியும் அமைப்பை ஏற்படுத்தி, இந்தியக் கடவுள் படிமங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றைத் துப்பறிந்து, சட்டபூர்வமான நடவடிக்கைகள்மூலம் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும்.

India Pride Project என்னும் தன்னார்வலர் அமைப்பு இத்துறையில் பெரும் பங்காற்றிவருகிறது. திருடப்பட்ட இந்தியக் கடவுளர் படிமங்கள் மீண்டும் இந்தியா வருவதற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நீங்கள் விரும்பினால் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். இதுநாள்வரை அவர்கள் எந்தெந்தக் கடவுள் படிமங்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவருவதில் உதவியுள்ளனர் என்ற தகவலையும் அவர்களுடைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Wednesday, June 27, 2018

வகுப்பறைகளில் அறிவியல் செயல்விளக்கம்

நேற்று நானும் பேராசிரியர் சுவாமிநாதனும் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதற்காக.

தற்போதைய பள்ளிக் கல்வி முறையின் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று, குழந்தைகளுக்குக் கண்ணில் எதையும் காண்பிக்காமல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருப்பதை அப்படியே வகுப்பறையில் கேள்வி பதிலாக மாற்றி, மனனம் செய்யவைப்பது. பொதுவாக, அறிவியல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்களைக் குழந்தைகளுக்குச் செய்து காட்டிவிடலாம். ஒருசில விஷயங்களைத்தான் செய்துகாட்டுவது கடினம்.

ஓர் அணுவின் உட்கருவைக் காண்பி என்றால் காண்பிக்க முடியாது. ஆனால் ஒரு சாய்தளத்தில் பந்து எப்படி உருண்டுசெல்லும் என்பதையோ, ஒரு தனி ஊசல் எப்படி ஆடும் என்பதையோ, ஒளிக் கதிர்கள் லென்ஸ் வில்லைகளின் ஊடாக எப்படிச் செல்லும் என்பதையோ, ஒரு காந்தத்தின் காந்தப் புலம் எப்படி இருக்கும் என்பதையோ, இன்னும் பலப்பல விஷயங்களையோ மிக எளிதாக வகுப்பறையிலேயே செய்து காட்டிவிடலாம். அவ்வாறு செய்முறையாகச் செய்து காட்டும்போது வகுப்பின் கடைக்கோடி மாணவனுக்கும் என்ன நடக்கிறது என்பது எளிதாகப் புரிந்துவிடும். சொந்தமாக எழுதும் திறன் இருந்தால் அனைத்து மாணவர்களாலும் பார்த்ததை நினைவில் இருத்தி கேள்விக்கான விடைகளை எழுதிவிட முடியும். படங்களை வரைந்து காட்டிவிட முடியும். தேவையான கருவிகள் சில நூறு ரூபாய் அல்லது சில ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

நேற்று நான், ஓர் ஒளிக்கதிர்ப் பெட்டியையும் (Ray box) சில லென்ஸ் வில்லைகளையும் அந்தப் பள்ளிக்கு எடுத்துச் சென்றிருந்தேன். நான் பள்ளியில் படித்த காலத்தில் இந்த மாதிரியான கருவிகள் பற்றி எனக்கோ என் ஆசிரியர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. லென்ஸ் வழியாக ஊடுருவிச் செல்லும் இணை கதிர்கள், சடாரென வளைந்து அதன் குவிமையத்தில் புள்ளியாகக் குவிவதாகப் பாடப் புத்தகத்தில் இருக்கும். அது நிஜமாகவே அப்படி ஆகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம் வெகுகாலமாக இருந்துவந்தது. சென்ற ஆண்டு நானே ஓர் ஒளிக்கதிர்ப் பெட்டியை வாங்கி வீட்டில் செய்துபார்த்தபோதுதான் நிம்மதி ஏற்பட்டது. ஆனால் தினம் தினம் நம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இது இப்படித்தான் என்று சொல்லித்தருகிறார்கள். மாணவர்களும் எந்தச் சலனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறார்கள். யாருமே, இதனைச் செய்துகாட்டுங்கள் என்று கேட்பதில்லை. ஆசிரியர்களும் (பெரும்பாலும்) செய்துகாட்டுவதில்லை.

நான் நேற்று அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு இதனைச் செய்துகாட்டினேன். தொடர்ந்து ஆசிரியர்களிடமான உரையாடலில், பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் முடிந்தவரையில் செய்துகாட்டல் முறைகளை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்துப் பேசினேன்.

இன்னொரு பள்ளியில் ஒரு கோடை விடுமுறையின்போது இம்மாதிரியான பல சோதனைகளைச் செய்துகாட்டினேன். அதில் ஒன்று, அறை வெப்பநிலையில் உள்ள நீரைச் சூடாக்கி, அதன் கொதிநிலையை அடையவைப்பது. அனைத்து மாணவர்களும் நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட் என்று பட்டென்று சொன்னார்கள். ஆனால் நீர் கொதிக்க ஆரம்பித்தபோது வெப்பமானி 98.5 டிகிரியைத்தான் காண்பித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து சிறிதுகூட மேலே போகவேயில்லை. வகுப்பில் பெரும் பதட்டம்.

நீரின் கொதிநிலை எப்போது 100 டிகிரி ஆக இருக்கும்? கடல் மட்டத்தில், தூய நீருக்குத்தான் அந்தக் கொதிநிலை. நாம் இருக்கும் இடம் கடல் மட்டத்துக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளது? நாம் குழாயில் பிடித்துக் கொண்டுவந்திருக்கும் நீரில் என்னென்ன உப்புகள் கலந்துள்ளன? அவை காரணமாக நீரின் கொதிநிலை மாறத்தானே செய்யும்? இவற்றை விளக்கிச் சொல்ல இந்தப் பரிசோதனை முக்கியமாகிறது.

இந்த ஆண்டு, ஒரு பள்ளியிலாவது பெரும்பாலான வகுப்புகளில், பெரும்பாலான அறிவியல் பாடங்களை செயல்விளக்கமாகச் செய்து காட்ட, ஆசிரியர்களைத் தூண்ட முடியுமா என்று பார்க்கப்போகிறேன். அவ்வாறு நடப்பதை வலைப்பதிவில் எழுத முயற்சி செய்கிறேன்.

Monday, June 04, 2018

ஓப்பியப் போர்கள்

இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்றுவந்தது. கொஞ்சமாக கர்நாடக நவாபுகளின் பங்காளிச் சண்டைக்குள் புகுந்தது. வங்கத்தில் முகலாய ஆட்சி ஆட்டம் கண்டபோது அதிலும் தலையிட்டது. மொத்தத்தில் வர்த்தக வருமானத்தைவிட வரி வருமானம் கணிசமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையையும் பட்டையும் இறக்குமதி செய்தது. ஆனால் அந்நாட்டு மக்களுக்கு விற்க கம்பெனியிடம் ஏதும் பொருட்கள் இல்லை. தங்கத்தை மட்டும்தான் அவர்கள் கேட்டனர். ஆனால் இங்கிலாந்து, பிரான்சுடன் நீண்டகாலப் போரில் ஈடுபட்டிருந்தது. தன் நாட்டுத் தங்கத்தையெல்லாம் தேநீருக்குத் தாரை வார்க்க அரசு தயாராக இல்லை. ஆனால் அதே நேரம், நாட்டு மக்களெல்லாம் தேநீர் பருகி சந்தோஷமாக இருந்தனர். தேநீர் இனி கிடையாது என்று சொல்லியிருந்தால் புரட்சியேகூட வெடித்திருக்கலாம்.

எனவே வேறு வழியின்றி, சர்வதேச போதைக் கடத்தல் கும்பலாக ஆவதே மேல் என்ற முடிவுக்கு வந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. சீனாவில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் அபின் அல்லது ஓப்பியத்துக்கு அடிமையாகி இருந்தனர். இந்தச் சரக்கு இந்தியாவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் பிகாரில்தான் உத்தமமான சரக்கு கிடைத்தது. காசிப்பகுதியில் சுமாரான சரக்குதான். துருக்கி சரக்கும் அவ்வளவு சிலாக்கியமானதில்லை. பிகார் சரக்கோ, சீனர்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

கம்பெனி, ஓப்பியக் கொள்முதல் மற்றும் ஏற்றுமதிக்கு ஏகபோக உரிமை கொண்டாடியது. நம் ஜாம்ஷெட்ஜி டாட்டா போன்ற பல்வேறு வணிகர்கள்மூலம் உள்ளூரில் கொள்முதல் செய்து, இங்கிலாந்து வணிகர்களைக் கொண்டு சீனாவில் கள்ளத்தனமாக விநியோகம் செய்ய ஆரம்பித்தது.

ஏன் கள்ளத்தனமாக? சீனப் பேரரசர், தன் நாட்டு மக்கள் ஓப்பியத்தில் மூழ்கி உயிரிழப்பதை விரும்பவில்லை. எனவே ஓப்பியம் விற்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லிவிட்டார். ஆனால் கம்பெனிக்கோ வேறு வழியில்லை. ஓப்பியம் விற்ற காசில்தான் தேயிலை வாங்கவேண்டும்.

கம்பெனியின் கண்காணிப்பில் ஓப்பிய வருமானம் பிரமாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானத்தில் மிகப் பெரும் பகுதி ஓப்பியத்திலிருந்தே வந்தது. ஆனால் இந்த லாபத்துக்குப் பலரும் பலவிதமான விலைகளைக் கொடுக்கவேண்டியிருந்தது.

பிகார் விவசாயிகள் கஞ்சாச் செடிகளை மட்டுமே பயிரிடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் நிரந்தரக் கடனில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.

சீனாவின் கஞ்சா தேவையை உணர்ந்த பலர், மராத்தியர்களின் ஆளுகையில் இருந்த மால்வா பகுதியில் கஞ்சா பயிரிட்டு சீனாவுக்குக் கொண்டுசென்றனர். கம்பெனி, மராத்தியர்கள்மீது போரிட்டு அவர்களைத் தோற்கடிக்க இதுவும் ஒரு காரணம். மால்வா பகுதி கைவசம் வந்ததும் இங்கு பல வழிமுறைகளைக் கையாண்டு ஓப்பிய விற்பனையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது கம்பெனி.

இதன் விளைவாக, மிக அதிக அளவுக்கு சரக்கு கைவசம் வந்தது. அனைத்தையும் சீனாவில் விற்பனை செய்ய முற்பட்டதில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு பெட்டிக்கான லாபம் குறைந்தாலும் வால்யூம் விற்பனை காரணமாக கம்பெனிக்குப் பணம் வந்துகொண்டே இருந்தது.

சீனப் பேரரசரின் ஒரு மகன் ஓப்பியப் பயன்பாட்டால் உயிர் துறக்க, வெகுண்ட பேரரசர், லின் என்ற அதிகாரியை அனுப்பி ஆங்கிலேயர்களின் ஓப்பிய வியாபாரத்தை அழிக்கக் கட்டளையிட்டார். லின் அதிரடியாக ஆங்கிலேய வணிகர்களிடமிருந்து ஓப்பியப் பெட்டிகளைக் கைப்பற்றி, அதில் உப்பைக் கொட்டிக் கடலில் எறிந்து நாசமாக்கிவிட்டார்.

உடனே ஆங்கிலேய வணிகர்கள் தாய்நாட்டிற்கு ஓலை அனுப்பினர். தங்களுடைய பொருள்களைச் சீனர்கள் அழித்துவிட்டார்கள் என்றும், சுதந்தர வர்த்தகத்துக்கு சீனப் பேரரசு எதிராக இருக்கிறது என்றும் அதில் புகார் கூறியிருந்தனர்.

தான் செய்வது மகா கேவலமான விஷயம் என்றாலும், எக்கச்சக்கமான பணம் புழங்குவதாலும், இந்த ஓப்பிய விற்பனை இல்லை என்றால் தன் நாட்டு மக்களுக்குத் தேநீர் குடிக்கக் கிடைக்காது என்பதாலும், கிழக்கிந்தியக் கம்பெனியே ஒட்டுமொத்தமாக திவால் ஆகிவிடும் என்பதாலும் பிரிட்டன் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. தன் போர்க்கப்பல்களை சீனக் கடற்கரைக்கு அனுப்பியது.

சீனாவின் கப்பல்கள் எல்லாம் உதவாக்கரை. அவர்களுடைய படைகளே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஜோக் வகைதான். எனவே பிரிட்டிஷ் படைகள் எளிதாகச் சீனப் படைகளை உதைத்து நொறுக்கின. அடுத்தடுத்த இரண்டு சண்டைகளுக்குப் பிறகு சீனா வேறு வழியின்றிப் பணிந்து ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, அதிகாரி லின் அழித்த ஓப்பியத்துக்கு நிகரான பணம் ஆங்கிலேய வணிகர்களுக்கு ஈடாகத் தரப்படும். மேலும் பிரிட்டனிலிருந்து கஷ்டப்பட்டு கப்பலை ஓட்டிக்கொண்டுவந்து சண்டை செய்த செலவும் ஈடு செய்யப்படும். ஓப்பிய வர்த்தகத்தைத் தடையின்றிச் செய்ய உதவியாக ஹாங் காங் என்ற தீவு நீண்டகால லீஸுக்கு பிரிட்டனுக்கு அளிக்கப்படும்.

இப்படியாக பிரிட்டன் இந்த உலகில் நீதியை நிலை நாட்டிய கதையைப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். உங்களிடம் கிண்டில் அன்லிமிடெட் இருந்தால் பிரையன் இங்க்லிஸ் எழுதிய இந்தப்புத்தகத்தை நீங்கள் இலவசமாகவே படிக்கலாம்.