Monday, January 22, 2018

ரஜினியின் அரசியல் பிரவேசம்!

[மின்னம்பலம் இணைய இதழுக்காக எழுதியது.]

இன்று தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் என்ன நடக்கும்?
திமுக வலுவான கட்சியாகத் தொடர்கிறது. கட்சியின் தலைமையில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் செயல்பாடு குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு சாரார், கருணாநிதிபோல் ஸ்டாலின் இயங்கவில்லை; கட்சி தேக்க நிலையிலேயேதான் உள்ளது என்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத்தொகையை இழந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொரு சாரார் ஆர்.கே.நகரைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஓர் இடைத்தேர்தலில் நடந்ததை வைத்துத் தமிழகம் முழுதும் நடக்கப்போகும் தேர்தலை எடைபோட முடியாது என்பது அவர்கள் வாதம். அதிமுகவில் இருப்பது போன்ற குழப்பங்கள் ஏதும் திமுகவில் கிடையாது. ஸ்டாலினின் தலைமையை கிட்டத்தட்ட அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டனர். மு.க.அழகிரி பற்றி இன்று யாரும் பேசுவதுகூடக் கிடையாது.

அதிமுக தற்போதைக்கு இரு குழுக்களாக உள்ளது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆளும் கட்சி. இன்னொருபுறம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆதரவாளர்கள். மேலோட்டமாகப் பார்த்தால், பழனிசாமி - பன்னீர்செல்வம் குழு பலம் வாய்ந்ததாகத் தெரியலாம். ஏனெனில், ஆட்சி அவர்கள் கையில் உள்ளது. இரட்டை இலைச் சின்னமும் அவர்கள் கையில் உள்ளது. இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன ஆனது? ஒரு சுயேச்சையாக தினகரனால் தன் ஆதரவாளர்களை வைத்து வேலை வாங்க முடிந்தது. அதிமுகவின் இரு தரப்புமே பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தும், தினகரனால்தான் வெல்ல முடிந்தது.

இதை வைத்துப் பார்க்கும்போது, பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிகாரம் இந்த இருவரிடமும் இருக்கும்வரையில்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இவர்களிடமிருந்து அதிகாரம் போய்விட்டால், பெரும்பாலானோர் அப்படியே தினகரன் பின்னால் போய்விடக்கூடும்.

தேர்தல் காட்சிகள்: ஒரு கற்பனை

இப்போது முதலில் ஆரம்பித்த கேள்விக்கு வருவோம். உடனேயே சட்டமன்றப் பொதுத்தேர்தல் வந்து, அதில் திமுக ஒருபக்கமும் இரண்டு அதிமுக அணிகள் தனித்தனியாகவும் போட்டியிடும் என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு தேர்தல் நடந்தால் திமுக ஜெயிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. இரட்டை இலை இல்லாத தினகரன் இரண்டாம் இடத்துக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. பழனிசாமி - பன்னீர்செல்வம் அணி மூன்றாம் இடத்துக்குத்தான் வரும்.
இப்போது குட்டையைச் சற்றே குழப்புவோம். ரஜினிகாந்த் களத்தில் இறங்குகிறார். புதிய கட்சி ஒன்றை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் கட்சியின் வாய்ப்புகள் எவ்வாறு திமுகவையும் அதிமுகவின் இரு அணிகளையும் பாதிக்கும்?

இப்போதைக்குத் தமிழகத்தில் அதிகப் பிரபலமான நபர் யார் என்றால், அது ரஜினிகாந்த்தான் என்று பட்டென்று சொல்லிவிடலாம். ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதி களத்தில் இல்லை. ஸ்டாலின் நிச்சயமாக ரஜினிகாந்த் அளவுக்குக் கவர்ச்சிகரமானவர் கிடையாது. அதிமுகவின் இரு அணிகளில் யாருமே ரஜினிக்கு அருகில்கூட வர முடியாது.
ஆனால், இது ஒன்றே ரஜினிகாந்த்துக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடுமா? ரஜினி ரசிகர்கள் வாக்குவங்கியாக மாறுவார்களா?

கவர்ச்சி மட்டும் போதுமா?

கட்சியை ஆரம்பித்து, ரசிகர்களை மட்டும் முதலாக வைத்து ஆட்சியைப் பிடிப்பது தற்போதைக்குச் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. தேர்தல் என்பது கடுமையான உழைப்பைக் கோருகிற ஒன்று. டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜெயித்ததன் பின்னால் கடுமையான உழைப்பு இருந்தது. முதல் தேர்தலில் அவர் பெற்ற இடங்கள் குறைவுதான். மறு தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் பெற்ற வாக்குகள் கெஜ்ரிவாலின் கட்சிக்கு மாறின. அதன் காரணமாகவே அவர் மாபெரும் வெற்றி அடைந்தார்.

ரஜினியோ அவரது ரசிகர்களோ தீவிர அரசியல் களத்தில் இல்லை. நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ரஜினி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் என்ன கருத்து சொன்னாலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவை அந்நியப்படுத்த நேரிடும். ஆனால் இதற்கெல்லாம் பயந்துகொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாதே. வாயே திறக்காமல் தேர்தலுக்கு முதல் நாள் வந்து மக்களுக்குக் கும்பிடு போட்டால் வாக்குகள் வந்துவிடுமா?

சட்டமன்றத் தேர்தல்தான் தன் இலக்கு என்கிறார் ரஜினி. நியாயமாகப் பார்த்தால் அது 2021இல்தான் வர வேண்டும். ஆனால், இப்போதைக்கு ஆளும்கட்சியின் நிலையைப் பார்த்தால் தேர்தல் கட்டாயம் அடுத்த ஆண்டு வந்துவிடும் என்று தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கும் அதேநேரம் 2019இல் தமிழகச் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்துவிடும் என்றே நான் கருதுகிறேன். தமிழக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம். தினகரன் ஆதரவாளர்களை அவைத்தலைவர் தகுதிநீக்கம் செய்ததால்தான் தற்போதைய ஆட்சி நீடிக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கில் கொடுக்கும் தீர்ப்பு ஆட்சிக் கலைப்பில் முடியலாம். இல்லாவிட்டாலும்கூட இந்த ஆட்சி எளிதில் கலையக்கூடிய ஒன்றுதான்.

அப்படி அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தால், அதுவும் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கும்?
தமிழகத்தில் எம்மாதிரியான கூட்டணி அமையும்?

திமுகவின் கூட்டணி மிகவும் தெளிவானது. காங்கிரஸ், மதிமுக, குறைந்தபட்சம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் இணைவார்கள். மற்றொரு பக்கம் பாஜக, பாமக, பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஆகியோர் ஒரு கூட்டணியாகப் போட்டியிடச் சாத்தியங்கள் உள்ளன. தினகரனுடன் கூட்டுசேர சொல்லிக்கொள்ளும்படியான கட்சி ஏதும் இருக்காது. ரஜினிகாந்த் தனியாகத்தான் களம் இறங்குவார்.

இப்படி ஒரு நிலை இருந்தால் வாக்குகள் எவ்வாறு பிரியும்? இது முழுக்க முழுக்க, திமுகவின் பலத்தையும் அவர்கள் களத்தில் செய்யும் வேலையையும் பொறுத்தது. ஒவ்வொருவரும் அவரவர் தொகுதியில் நிறுத்திவைக்கும் வேட்பாளர்களைப் பொறுத்தது. ரஜினி களத்தில் இறங்கி வாக்குகளைப் பிரித்தால், திமுக தலைமையிலான அணியே அதிக இடங்களைப் பெறும். ஆனால் தனிப் பெரும்பான்மையிலிருந்து சற்றே பின்தங்கிவிட நேரிடலாம். அப்படி நடந்தால், எதிர்த்தரப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க பாஜக தூண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டால் இது எளிதில் சாத்தியமாகிவிடும். அதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.