Sunday, April 01, 2018

எதிரொலி அறையில் அமர்ந்திருக்கும் மனிதர்கள்!

[மின்னம்பலம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை]

ஃபேஸ்புக் தகவல்களை வைத்துத் தேர்தல் முடிவுகளை மாற்றிவிட முடியுமா?

கடந்த சில வாரங்களாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற பிரித்தானிய நிறுவனம் பற்றி நிறைய பேச்சுகள் அடிபட்டன. ஃபேஸ்புக் வழியாக அமெரிக்க நாட்டின் பல தனிநபர்களின் தகவல்களையும் அவர்களுடைய நண்பர்களின் தகவல்களையும் கல்விப்புல ஆராய்ச்சி என்ற பெயரால் ஒரு பேராசிரியர் திரட்டி, ஃபேஸ்புக் விதிகளுக்கு மாறாக இத்தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார். இந்த நிறுவனமும் இந்தத் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவான சமூக வலைதள விளம்பரத் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தியிருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி நடத்திய ரகசியப் படப்பிடிப்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிறுவனம், ஒருவித மெர்சினரி கூலிப்படை நிறுவனம். கூலிப்படையினர் என்போர் ஒரு நாட்டின் படையினராக இல்லாமல், யார் காசு கொடுத்தாலும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவருடைய எதிரிகளைக் கொன்று குவிப்பர். தர்ம நியாயங்கள் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. யார் அதிக காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பணி புரிவர். எதிர்த்தரப்பு மேலும் அதிக காசு கொடுப்பதாக இருந்தால் அணி மாறத் தயங்க மாட்டார்கள்.

காசுக்காக வெறுப்பும் விதைக்கப்படும்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவும் அப்படிப்பட்ட மெர்சினரி நிறுவனம்தான் என்பது சானல் 4 ஸ்டிங்கில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. ஒரு பஞ்சாயத்துத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும் சரி, இவர்கள் களம் இறங்கத் தயாராக இருக்கிறார்கள். வெறுப்பை விதைத்துத்தான் தங்கள் கட்சி ஆட்களை வெற்றிகொள்ளச் செய்ய முடியும் என்றால் அதை விதைக்கத் தயங்காதவர்கள். கென்யாவில் 2013 தேர்தலின்போது வெறுப்பு விதைத்தல், பொய்ச் செய்தி தயாரித்தல், அவற்றை வைரலாகப் பரவ வைத்தல் போன்றவை மூலமாக தங்கள் வாடிக்கையாளரைத் தேர்தலில் ஜெயிக்க வைக்க கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முயன்றது தெரியவந்துள்ளது. அந்தத் தேர்தலின்போது நடந்த கலவரங்களில் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல், பிரிட்டனின் பிரெக்சிட் தேர்தல் ஆகியவற்றிலும் பொய்ச் செய்தி பரப்புதல், வெறுப்புப் பிரசாரம் செய்தல் முதற்கொண்டு பலவற்றிலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதேபோல இந்தியாவிலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின் கைவேலை இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், பாஜகவும் காங்கிரஸும் ஒருவர் மற்றவரைக் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். சரியானதொரு மெர்சினரியாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா டபுள் ஏஜெண்ட் கேம் விளையாடி இரு கட்சிகளுக்கும் ஆலோசனை கொடுத்து இருவரையுமே ஏமாற்றியிருக்கலாம். இதுகுறித்து முழுத் தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

இப்போது விவாதத்துக்கு வருவோம்.
  1. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை ஏமாற்றிப் பெற்று, குறிப்பான அரசியல் விளம்பரங்களைச் செய்வது சரியா?
  2. ஃபேஸ்புக் பயனர்களை ஏமாற்றி அவர்களுடையதும் அவர்களுடைய நண்பர்களுடையதுமான தகவல்களைப் பெற்று அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விளம்பரங்களைச் செய்யலாமா?
  3. பொய்ச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் கட்சிகள் லாபம் பெறலாமா?
  4. வெறுப்பைப் பரப்புவதன் மூலம் லாபம் பெறலாமா?
  5. பொய்ச் செய்திகளை விதைத்து அதன்மூலம் வெறுப்பைப் பரப்பி, அதன்மூலம் உயிர்க் கொலைகள் நடந்தாலும் பரவாயில்லை என்று கவலைப்படாமல், அரசியல் லாபம் பெறலாமா?
  6. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் மூலம் மக்களின் கருத்துகளை எளிதில் மாற்றிவிட முடியுமா? இதனால் வாக்களிக்கும் போக்கில் மாறுதல் ஏற்பட்டு, ஒருவர் வெற்றி பெற முடியுமா?
  7. இதுவரையில் நடந்திராத எது ஒன்று இப்போது நடந்துவிட்டது என்று அனைவரும் பதறுகிறார்கள்?

பொய்யும் வெறுப்பும் பரவும் வேகம்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இல்லாத காலகட்டத்திலேயே பொய்யும் வெறுப்பும் நன்கு பரவின. ஆனால், சமூக வலைதளங்கள்மூலம் இவற்றை மின்னல் வேகத்தில் மாநிலம் முழுதும் பரப்ப முடிகிறது. இதனால் பெரும் வன்முறையைச் செயல்படுத்த முடிகிறது. கென்யா போன்ற நாடுகளில் மட்டுமல்ல; நம் நாட்டிலும் இலங்கையிலும் இது நடப்பதை நம்மால் காண முடிகிறது. அதனால்தான் காஷ்மீரிலோ அல்லது கண்டியிலோ, பெரும் வன்முறை வெடிக்க ஆரம்பித்துவிட்டது என்றால் முதலில் தடை செய்யப்படுவது சமூக வலைதளங்கள்தாம்.

பொய்ச் செய்தி தயாரித்து மக்களைப் பொங்கவைக்க இன்று மிக எளிதாக முடியும். ஸ்டாலினோ, மோடியோ இப்படித்தான் சொன்னார் என்று ஒரு பொய் ட்விட்டர் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் செய்து அதைப் பகிர்ந்துகொள்ள முடியும். உடனே எல்லோரும் தங்கள் முன்முடிவுகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களை அர்ச்சனை செய்யத் தொடங்கிவிடுவர். எதற்கு மோடி, ஸ்டாலின் என்றெல்லாம் செல்ல வேண்டும். பாபர் மசூதி தொடர்பான என்னுடைய ட்வீட் ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதன் பின்புலத்தைத் தெரிவிக்காமல் இன்றும் பலரும் சுற்றுக்கு விட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இம்மாதிரி செய்யும் நபர்களில் சமூக அறிவுஜீவிகளும் உண்டு, சாதா சில்லுண்டிகளும் உண்டு. ஆக, சமூக வலைதளங்கள்மூலம் ஒருவரை எளிதில் ஏமாற்றிவிட முடியும் என்பது மட்டுமல்ல; உங்களுடைய பிரசாரத்தால் அவர்களையும் உள்ளிழுத்துக் கொண்டு உங்கள் வேலையை அவர்களைக் கொண்டு மேலும் திறம்படச் செய்ய வைக்க முடியும்.

இதெல்லாம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் தெரியாத விஷயங்கள் அல்ல. அவர்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற மெர்சினரிகளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. உள்நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பம் தெரிந்த ஆட்கள் இருக்கின்றனர்.

பொய்ச் செய்திகளுக்கும் நம்பகத்தன்மை வேண்டும்

ஆனால், இம்மாதிரியான அரசியல் விளம்பரப் பிரசார இயக்கங்களினால் மட்டுமே ஒருவருடைய உட்கருத்தை மாற்றிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்த விளம்பரங்கள் ஏற்கெனவே மக்கள் மனத்தில் படிந்துள்ள விகாரங்களை வெளியே காண்பிக்கும். ரஜினி பற்றி, கமல் பற்றி, ஸ்டாலின் பற்றி, திருமாவளவன் பற்றி, ராமதாஸ் பற்றி நம் மக்கள் அனைவருக்கும் சில கருத்துகள் உள்ளன.

“பார்ப்பனர்களை நாட்டை விட்டே விரட்டுவோம்” என்று ஸ்டாலின் சொல்வதாக ஒரு ட்வீட்டைக் காண்பித்தால் உடனே ஒரு கோஷ்டியினர் அதை நிச்சயமாக நம்புவர். அதே ட்வீட்டை ரஜினிகாந்த் சொல்வதாக யாராவது ஸ்க்ரீன் ஷாட் போட்டால் படிப்பவர் நம்ப மாட்டார். “மோடியை அடுத்த பிரதமர் ஆக்குவோம்” என்று ரஜினிகாந்த் ஒரு ட்வீட் போட்டதாக யாரேனும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்டால் உடனே அதைப் பலரும் நம்பிவிடுவார்கள். “சூரிய பகவானின் கதிர்களை சோலார் பேனல்கள் உறிஞ்சுகின்றன என்பதால் பாஜகவினர் அவற்றை உடைக்கிறார்கள்” என்று ஒரு படத்தை எடுத்துப்போட்டால் உடனே நம்ப பலர் இருக்கிறார்கள். அதேபோல, “இந்துக் கோயில்களை இடிப்போம்; அவற்றை இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களாக மாற்றுவோம்” என்று திருமாவளவன் சொன்னதாகச் செய்தி பரப்பப்பட்டால், அவர் உண்மையிலேயே அப்படிச் சொல்லியிருப்பாரா என்றெல்லாம் பலர் யோசிக்க மாட்டார்கள்.
இந்த மாதிரியான அடிப்படையில்தான் பொய்ச் செய்திகள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. அதாவது பொய்ச் செய்திகளிலும் ஓரளவு நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

பொதுத்தளத்தில் இவையெல்லாம் ஏற்கெனவே புழங்கிவரும் கருத்துகள். உண்மையான நடுநிலையாளர்கள், ஒரு நிமிடமாவது இந்தச் செய்தியின் மூலம் என்ன, இது உண்மையா அல்லது உண்மைபோல உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யா என்று கொஞ்சம் விசாரிப்பார்கள். ஆனால், இவற்றை ஏற்கெனவே உண்மை என்று நம்புவோர், முதலில் ஃபேஸ்புக்கில் இந்தச் செய்தியைப் பகிர்ந்துவிட்டு, வாட்ஸ்அப்பில் தான் இருக்கும் நாற்பது குழுக்களிலும் வெட்டி ஒட்டிவிட்டு, கூடவே “இவனுகளே இப்படித்தான்” என்று எழுதிவிட்டு, அதன் பிறகு யாரேனும் அந்தக் குறிப்பிட்ட செய்தி உண்மை இல்லை என்று சொன்னாலும் அதற்கு எதிராக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இல்லுமினாட்டி சதி என்பார்கள்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற நிறுவனங்களின் பங்கு இங்கு, எங்கு வருகிறது? 

இவர்களுடைய ஒரே வேலை, இந்த வெட்டிக் கூட்டத்துக்குத் தொடர்ந்து தீனி அளிப்பதில் இருக்கிறது. விசுவாசிகளின் விசுவாசத்தைத் தக்கவைக்கத் தீனி வேண்டும். வாக்களிக்கும் வரை பொங்கிப் பொங்கி மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வழி வேண்டும். ஆனால், உண்மையான ‘நடுநிலை’ வாக்காளர்களை வழிமாற்றிட முடியுமா?

முடியாது என்பதுதான் என் தாழ்மையான கருத்து.

காங்கிரஸ் கட்சி, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அது எவ்வாறு அக்கட்சிக்கு உதவியுள்ளது? மாறாக, திரினாமுல் காங்கிரஸோ, அதிமுகவோ இம்மாதிரியான நிறுவனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அவர்களெல்லாம் ஜெயிக்கவில்லையா?

நாளை அனைத்து முக்கியக் கட்சிகளுமே சமூக வலைதளத்தில் உண்மைச் செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பப் போகின்றனர். அதே அளவுக்கு அமைப்பு சாரா தனி மனிதர்களும் அரசு சாரா நிறுவனங்களும்கூட தங்களிடம் இருக்கும் பணத்தின் அளவுக்கேற்ப உண்மை, பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டே இருக்கலாம். ‘போஸ்ட் டுரூத்’ எனப்படும் நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். நமக்கான ‘உண்மை’யை நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டு அவற்றை நம்பிக்கொண்டு, அவ்வாறு நம்புபவர்களை மட்டுமே நம்மைச் சுற்றி வைத்துக்கொண்டு, எதிரொலி அறை ஒன்றில் மீண்டும் மீண்டும் நாம் விரும்பும் உண்மைகள் மட்டுமே எதிரொலிக்குமாறு செய்து அவ்வறையின் மையத்தில் நாம் அமர்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவைக் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை.

நாம் உருவாக்கியுள்ள போஸ்ட் டுரூத் உலகில் பலனடைய உருவாகியிருக்கும் ஒரு நிறுவனம்தான் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவே தவிர, அவர்கள் நம்மைச் சுற்றிப் பின்னியிருக்கும் வலையில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் அல்ல நாம்.

1 comment:

  1. I used to check & read your blog regularly. But offlate there were huge gaps between them. So nearly forgot to check. Now that I wanted to see, here they are! Please continue to post your valuable thoughts on genuinely serious issues.

    ReplyDelete