Thursday, May 24, 2018

ஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்

சென்ற பதிவில் ஜேஇஇ தேர்வு எழுதியது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

//ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதியும் எனக்கு ஆல் இந்தியா ரேங்க் 469 கிடைத்திருந்தது.//

இதுகுறித்துச் சிலர் விளக்கம் கேட்டிருந்தனர்.

இன்றைய ஜேஇஇயில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மெயின்ஸ் என்றும் அட்வான்ஸ்ட் என்றும் இரண்டு நிலையில் தேர்வுகள் நடக்கின்றன. இதில் ரேங்க் - வரிசையெண் - தருவதற்கு சில புள்ளியியல் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய அட்வான்ஸ்ட் தேர்வு இரண்டு பகுதிகளாக, ஒவ்வொன்றும் மூன்று மணிநேரங்கள் நடக்கிறது. ஒவ்வொன்றிலும் கணிதம், இயற்பியல், வேதியியல் கேள்விகள் கலந்து கலந்து வருகின்றன. ஆனால் 80களில் நான் எழுதியபோது இரண்டு நிலைகளில் தேர்வு கிடையாது. மொத்தம் நான்கு தாள்கள். அதில் ஆங்கிலம் ஒன்று. அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றவை கணிதம், இயற்பியல், வேதியியல். ஒவ்வொன்றும் மூன்று மணி நேரத் தனித்தனித் தேர்வுகள்.

தனித்தனியான தேர்வில் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடினத்தன்மையில் இருக்கும். இதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை அப்படியே கூட்டி 300க்கு இத்தனை மதிப்பெண் என்று சொல்லமாட்டர்கள். மாறாக, ஒவ்வொரு தாளிலும் சராசரி (ஆவரேஜ்), திட்டவிலக்கம் (ஸ்டாண்டர்ட் டீவியேஷன்) ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து, நார்மலைசேஷன் என்பதை செய்வார்கள்.

உதாரணமாக, கணிதம் மிக மிகக் கடினமான தாள் என்று வைத்துக்கொள்வோம். அதில் சராசரியே 8 மதிப்பெண்கள்தான் என்று வைத்துக்கொள்வோம். அதில் மிக அதிக மதிப்பெண்ணே 42தான் என்றும் வைத்துக்கொள்வோம். இயற்பியலில் சராசரி 46 மதிப்பெண், மிக அதிக மதிப்பெண் 78 என்று வைத்துக்கொள்வோம். இரண்டு தாள்களிலும் பெறும் மதிப்பெண்ணை அப்படியே கூட்டினால் வருவது ஒரு மாணவரின் சரியான தரத்தைக் காண்பிக்காது. மேலும் இந்த தாள்களில் கட்-ஆஃப் அதாவது பாஸ் மார்க் என்பது 35 என்றெல்லாம் இருக்காது. ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு தாளிலும் சராசரி, விலக்கம் இரண்டையும் அடிப்படையாக வைத்து, அந்தத் தாளில் பாஸ் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பதோடு, அந்தத் தாளில் அனைவரும் பெற்றுள்ள மதிப்பெண்களை சராசரி 0, விலக்கம் 1 என்று வருமாறு நார்மலைஸ் செய்வார்கள்

இப்படி ஒவ்வொரு தாளிலும் செய்தபின், மாணவர் மூன்று தாள்களிலும் பெற்றுள்ள நார்மலைஸ்ட் மதிப்பெண்களைக் கூட்டி, அவற்றின் அடிப்படையில் வரிசையெண் தருவார்கள்.

இதில் என்ன ஆதாயம்? மிகக் கடினமான தாளில் சராசரிக்குக் கொஞ்சம் மேலே வாங்கினாலும் டீவியேஷன் அதிகமாக இருந்தால், நார்மலைஸ்ட் மதிப்பெண் நன்கு அதிகரிக்கும். ஜேஇஇ 1987-ல் கணிதத்தில் எனக்கு அப்படித்தான் நடந்திருக்கவேண்டும். அந்த ஆண்டு நான் கணிதத்தில் 13 மார்க் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். சராசரி அந்த ஆண்டு 10-க்கும் கீழாக இருந்திருக்கலாம். டீவியேஷனும் மிக அதிகமானதாக இருந்திருக்கலாம். எனவே நார்மலைசேஷனில் கணிதத்தில் எனக்குக் கணிசமான வெயிட்டேஜ் கிடைத்திருக்கும். இது தரவரிசையில் என் ரேங்கை அதிகமாக ஆக்கியிருக்கவேண்டும்.

இதெல்லாம் என் ஊகங்கள்


இன்று மெயின்ஸ் தேர்வில், ஒருவித கலந்துகட்டிய நார்மலைசேஷன் நடக்கிறது. அதில் போர்ட் எக்ஸாம் பெர்சண்டைல் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்வில் பெற்ற சதவிகிதம், மெயின்ஸில் கிடைத்த பெர்சண்டைல், அவரவர் போர்ட் எக்ஸாமில் கிடைத்த பெர்சண்டைல் மூன்றையும் வைத்து ஒரு ஸ்கோரை உருவாக்கி, அதன் அடிப்படையில் மெயின்ஸ் ரேங்க் வருகிறது. அடுத்து அட்வான்ஸ்ட் தேர்வில் தனி ரேங்க். அதில் ஏதேனும் நார்மலைசேஷன் உள்ளதா என்று எனக்குத் தெரியாது

No comments:

Post a Comment