எண்ணங்கள்
  திமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்

மாறன் இறந்தபின் சுயமாக சிந்தித்து கருணாநிதி எடுத்திருக்கும் முதல் முடிவு இது என்று தோன்றுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும். இது வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்று தோன்றுகிறது.

இதனால் தமிழக அரசியலில் அதிகக் குழப்பமே ஏற்படும். யார் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்று புரியாமல் முழிப்பர் என்றே தோன்றுகிறது. வைகோ கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்து பாஜக உறவை வெட்டிக் கொள்வாரா? பாமக ராமதாஸ் என்ன செய்வார்? பாஜக, ஜெயலலிதாவோடு கூட்டணி அமைக்குமா? இல்லை, ஜெயுடன் கூட்டணி வைத்து பட்ட கஷ்டம் போதாதா, இதற்குத் தனியாகவே போய்விடலாம் (பாமக, மதிமுக மட்டும் ஒருவேளை கூட இருக்கலாம்) என்று தோன்றுமோ என்னவோ?

தமிழகக் காங்கிரஸ் இப்பொழுது திமுகவுடன் இணைய இது வழிவகுக்கும். தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? தனியாகப் போட்டியிட்டால் காங்கிரஸால் ஓரிடத்திலும் இப்பொழுது பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. பாஜகவால் ஓரிரு இடங்களில் ஜெயிக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸுக்கு தமிழகம் முழுவதையும் சேர்த்து பாஜகவை விட அதிக வாக்குகள் கிடைக்கும். எனவே பாஜகவை விட காங்கிரஸ் திமுகவுக்கு அதிக வாக்குகளைக் கொண்டுவரும். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஜெயிக்க வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. அப்படியே ஜெயித்தாலும், கூட்டணி அமைச்சரவை அமையுமா, அதில் திமுகவுக்கு ஏதேனும் இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
 

  தலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது

கடந்த வாரத்தில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்: போடா, கட்சித்தாவல் சட்டங்களில் சட்டத்திருத்தம், போடா மற்றும் ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி, செத்துப்போன சத்யேந்திர துபேவை இடையில் நிறுத்தி மத்திய அரசும், பீஹார் அரசும் செய்யும் அரசியல். இதற்கு நடுவில் அதிகம் பேசப்படாத, தி ஹிந்துவில் ஒரு மூலையில் கண்ட செய்தி, தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் (தலித் இந்துக்களைப் போல) என்னும் கேள்விக்கு சமூகநீதி அமைச்சர் (எதுக்கெல்லாம் அமைச்சருங்க இருக்காங்க, பாருங்க!) சத்ய நாராயண் ஜாதீயா சொன்ன பதில்.

இந்தியாவின் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) இப்படிச் சொன்னாராம்:

"முஸ்லிம்களையும், இந்து சாதிகளுக்கு இணையாகப் பிரித்தால், தங்கள் மீது இந்துக்களின் பிற்போக்கான வழக்கத்தைப் புகுத்துவதாக முஸ்லிம்கள் அமைதியிழந்து கோபம் கொள்வர்."

"கிறித்துவர்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பதித்தால், பன்னாட்டளவில் இது பிரச்சினையில் முடியும். வெளிநாடுகளில், இந்தியா தனது சாதிப்பிரிவினையை கிறித்துவர்கள் மேல் திணிக்கிறது என்ற ஒரு கருத்தை இது தோற்றுவிக்கும்."

இதைக் காரணம் காட்டி அமைச்சர் முஸ்லிம், கிறித்துவர்களின் மனம் கோணாமலும், சர்வதேச அளவில் பிரச்சினை வராமலும் இருக்க, தலித்துகளாக இருந்து இந்து மதத்திலிருந்து இஸ்லாம், கிறித்துவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷமத்தனமான கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

1. முதலில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதியும், மதமும் தனித்தனி தளங்களில் இயங்கி வந்துள்ளன, வருகின்றன. தலித்துகளை இந்து மதத்திற்குள்ளேயே அடைத்து வைக்க என்றே இந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள். "அவமானத்தோடு சேர்ந்த இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை உன்னிஷ்டப்படி மதம் மாறிக்கொள், ஆனால் இட ஒதுக்கீடு கிடையாது" என்னும் உள்நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

2. பெருநகர் அல்லாதவிடங்களில் இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தங்களுக்குள்ளே தாங்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். சாதிப் பிரிவினை வேறு, தீண்டாமை வேறு. இந்துக்களின் இடையில்தான் 'தீண்டாமை' தலை விரித்தாடுகிறது. ஒரு சில சாதியினரைத் தொடத்தகாதவர்கள், கோயிலுக்குள் புக அனுமதி இல்லாதவர்கள், நாலு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், டீ குடிக்கத் தனிக்குவளை, கதிமோட்சம் இல்லாதவர்கள், ஆனாலும் இந்துவாகவே இருக்க வேண்டும் என்று மேல்சாதி இந்துக்கள் கருதுகின்றனர். கிறித்துவ, முஸ்லிம்கள் இடையே சாதி வித்தியாசம் இருந்தாலும், இந்த 'சர்ச்சுக்குள் நுழையாதே, தீட்டுப் படிந்து விட்டது', 'உனக்குத் தனி டீ டம்ளர், எனக்குத் தனி' என்பது இல்லை என்று தோன்றுகிறது.

இப்பொழுதைக்கு முக்கியமானது தீண்டாமையை ஒழிப்பது. அதன் பிறகு சாதிப் பிரிவினைகள் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

3. இன்று பார்ப்பனர்களில் பொருளாதாரக் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் தலித்தாக இருந்து கிறித்துவனாகவோ, முஸ்லிமாகவோ மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது என்றால் அது பெரும் கேலிக்கூத்து.

இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் துண்டு துண்டாக இருக்கிறார்கள். இதுமாதிரி விஷமத்தனமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடக்கும்போது உடனடியாக அதனை எதிர்த்து, தங்கள் மதம் சாதிப்பிரிவினைகளை அங்கீகரிக்காவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக பொருளாதார, சமூகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கிறித்துவ, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு அரசு தரும் சலுகைகள் இந்து மதத்தினருக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

இதில் புத்த மதத்திற்கு மாறும் தலித்துகளுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்து தலித்துகளுக்குக் கிடைக்கும் அதே சலுகைகள் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கும் கிடைக்குமா? இல்லை இந்தியத் தலைமைப் பதிவாளர், இலங்கையில் உள்ள புத்த குருமார்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று புருடா விடுவாரா?
 

  பல்லூடகக் கணினி எத்தனை மலிவு?

இதைப்பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். என் நான்கு வயது மகள் பிரியா வீட்டிலிருக்கும் கணினியைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து வீட்டில் தகராறுதான். பிரியா விரும்புவது லயன் கிங், டாய் ஸ்டோரி, பக்ஸ், சிண்டிரெல்லா, ஜங்கிள் புக் போன்ற அருமையான படங்களைப் பார்ப்பது, பூவா & க்வாலா தளம் சென்று அங்கு விளையாடுவது, மென்தட்டு மூலம் விளையாட்டுகள் விளையாடுவது, மழலையர் பாடல்கள் கேட்பது ஆகியன. இதற்காகவென்று எத்தனை பணம் செலவழிக்க முடியும்?

வயா சைரிக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதும், அதனை வைத்து ஒரு கணினியை சேர்த்தேன். வயா சைரிக்ஸ் சில்லு, 733 MHz, 128 MB RAM, அதில் 8MB வீடியோ மெமரியாக எடுத்துக் கொள்ளப்படும். மதர்போர்டிலேயே ஒலி அமைப்பு உள்ளது. என்னிடம் ஒரு கடினவட்டு இருந்தது. 52x CDROM, floppy drive, mouse, keyboard, ethernet card எல்லாம் சேர்த்து ரூ. 8000 ஆனது. ஒரு பழைய மானிட்டர் திரை ரூ. 1,500க்குக் கிடைத்தது (15"). ஒலிபெருக்கி ரூ. 500 ஆனது. ஆக ரூ. 10,000 க்கு ஒரு பல்லூடகக் கணினி தயார். இது சரியாக வேலை செய்யுமா என்று தெரிந்திருக்கவில்லை அப்பொழுது. முதலில் மாண்டிரேக் லினக்ஸ் போட்டேன். அதில் ஒலிச்செயல்பாடு சரியாக இல்லை. பின்னர் என்னிடம் இருந்த பழைய Windows 98 போட்டேன். அருமையாக உள்ளது. இணையத்தில் உலாவ, விசிடி போட்டுப் பார்க்க (இப்பொழுது லயன் கிங் ஓடிக் கொண்டிருக்கிறது).

உங்களுக்குத் தேவை நான் மேலே சொன்னது மட்டுமே என்றால் அதற்கு ரூ. 12,000க்கு மேல் ஆகாது (புது கடினவட்டோடு சேர்த்து). இன்னுமொரு ரூ. 1,000க்கு கணினி விற்பனையாளரிடமிருந்து ஒரு வருட அணுக்கம் (assistance, support) கிடைக்கும்.

லினக்ஸை இதில் ஓட வைக்க முடியும். அதற்கு என்னிடம் நேரம் இல்லை இப்பொழுது. அப்படி யாரேனும் லினக்ஸ் போட நினைத்தாலும் இப்பொழுதுள்ள கொழுத்துப் பெருத்த லினக்ஸ் (ரெட் ஹாட்டோ, மாண்டிரேக்கோ) சரியாயிருக்காது. மிகவும் இலேசான ஒரு லினக்ஸ் தேவை.
 

  போடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்

நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம், இன்று. உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்குப் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் முதற்கொண்டு மூன்று பேருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தபின்னர், இன்று மற்றுமொரு வழக்கில் கோபாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
 

  இந்தியா ஒளிர்கிறது!

இதுதான் தற்பொழுது மத்திய அரசின் "சுய-தம்பட்ட" விளம்பரங்களுக்குப் பெயர். "India Shining!" என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு, ஒவ்வொரு மொழியிலும் மாற்றப்பட்டு, தமிழில் மேற்கண்ட பெயரில் வெளிவருகிறது. வானொலியில், செய்தித்தாள்களில் எங்கும் ஒரு சிரிக்கும் பஞ்சாபி விவசாயி, பொங்கும் மலர்ச்சியுடன் ராஜஸ்தானத்துப் பெண், கையில் செல்பேசியுடன் ஒரு தொழில்முனைவர் என்று 'ஒளிமிகுந்த பாரதத்தின்' மக்கள் காட்டப்படுகின்றனர்.

இவையெல்லாம் தற்போதைய மத்திய அரசின் சாதனைகளாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருமுன்னர் செய்து விட வேண்டும் என்று இறக்கை கட்டிக்கொண்டு செயல்படுகிறது அரசு இயந்திரம். ஒவ்வொரு மலர்ந்த முகத்தைக் காண்பிக்கும் போதும் அதற்கு இணையாக பசித்து, ஒட்டிய வயிரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்க்கை முழுவதையும் கழிக்கும் சுருக்கம் விழுந்த முகத்தையும், கோடிக் கணக்கான ஊழல்களையும், மதக்கலவரங்களையும், நக்சல்கள் உருவாகக் காரணமான வறட்சியையும் காண்பிக்கலாம்.

இந்த 'ஒளிரும் இந்தியா' யாரை மயக்குவதற்கு? நிச்சயமாக தற்போதைய அரசின் காலத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதற்காக அரசின், மக்களின் வரிப்பணத்தை இப்படியா விரயம் செய்வது? அந்தப் பணத்தில் எத்தனை பேருக்கு சோறூட்டலாம்? இன்னமும் எத்தனை வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் கொடுக்கலாம்?
 

  ஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்

ஜெயலலிதா மீது பத்து வழக்குகள் தொடரப்பட்டது. அந்த முழுப் பட்டியலும் இங்கே. அதில் இரண்டு வழக்குகள் டான்ஸி நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள். இவை கடைசியாக உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இப்பொழுது ஸ்பிக் பங்கு ஊழல் பற்றிய வழக்கு சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் உள்ளது. ஜெயலலிதா நேற்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். முழு விவரம் தினமலரில்.

இதற்கிடையில் "வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு" தமிழ்நாட்டிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, கர்நாடகாவுக்கு மாற்றச் சொன்னது. ஜெயலலிதா கர்நாடக மக்கள் தனக்கு எதிரானவர்கள் (காவிரிப் பிரச்சினையை முன்வைத்து), அதனால் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று முறையீடு செய்தார். பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேறு எந்த மாநிலமாக (கேரளா, ஆந்திரா...) இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டுக்கொள்ள, அவர்களது மனுவை மாற்றி அனுப்ப உச்ச நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிடம் ஜெயலலிதாவின் முறையீட்டின் மேலான அவர்களது பதிலை அனுப்பக் கோரியுள்ளது.

நீதி வழங்கப்படுவதுடன், நீதி வழங்கப்பட்டது போன்ற தோற்றமும் இருக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம், இந்த சொத்துக் குவிப்பு வழக்கை கேரளாவுக்கு (பாண்டிச்சேரி கூடாது!) மாற்ற வேண்டும். நேரத்தை விரயமாக்கக் கூடாது.
 

  போடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்

நெடுமாறனுக்கு 17 மாதங்களுக்குப் பின்னர் போடா வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிபதிகள் "நாங்கள் முழுக் குற்றப் பத்திரிக்கையையும் படித்ததில் புகார் வெறும் நெடுமாறன் பேசியுள்ள பேச்சுக்கள் பற்றி மட்டுமே உள்ளது" என்று சொல்லியுள்ளனர். மேலும் 'தடை செய்யப்பட்ட புத்தகங்கள்' இவர்களிடமிருந்து கிடைத்தது அன்று குற்றம் சாட்டி விட்டு, அந்தப் புத்தகங்கள் யாவும் தமிழ்நாட்டில் அல்லது வேறு எந்த இடங்களிலும் தடை செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது! தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு, அந்தத் தொடர்பு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டுகோலாயிருந்திருக்கிறது என்று ஒரு நிரூபணமுமில்லை. ஆக சென்னை உயர்நீதிமன்றம் கிட்டத்தட்ட இந்த வழக்கு ஜோடனை செய்யப்பட்ட பொய் வழக்கு என்ற அளவிற்கு சற்று குறைவாக கருத்தைச் சொல்லி, நெடுமாறனுக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.

நெடுமாறன் மீதுள்ள வழக்கு போடா நீதிமன்றத்தில்தான் நடைபெற வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிடாது, ஆனால் ஜாமீன் வழங்கி இந்த நீதிபதிகள் சொன்ன கருத்தை போடா நீதிமன்ற நீதிபதி கருத்தில் வைத்தல் வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மனதில் வைக்க வேண்டும்.

இதர போடா பற்றிய செய்திகள்:

ஒரு மாநிலம் ஒருவர் மீது சாற்றியுள்ள போடா வழக்கினைத் தானாகவே திரும்பிப் பெற இயலாது, மத்திய அரசும் இசைந்தால்தான் அவ்வாறு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியுள்ளது.

போடா சட்டத்திருத்தம் மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் எதிர்க்கட்சிகள், போடாவை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வெளிநடப்பு செய்தன.. இங்கு சுவாரசியமானது: சோ ராமசாமி மாநிலங்கள் அவையில் நியமன உறுப்பினர். இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக அஇஅதிமுக மட்டும்தான் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வாக்களித்தன. மற்ற எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளிலும் வெளிநடப்பு செய்தன. சோ எப்படி வாக்களித்தார் மாநிலங்கள் அவையில்? வாக்கெடுப்பின் போது மாநிலங்கள் அவையிலேயே இல்லையா? அல்லது ஆதரவாக வாக்களித்தாரா? இல்லை எதிர்ப்பெல்லாம் துக்ளக்கிலும், ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதுவதற்கு மட்டும்தானா?

மேலும் நேற்று அத்வானி மாநிலங்கள் அவையில் போடா சட்டம் (திருத்தத்துடன்) இருக்க வேண்டும் என்று ஆதரித்துப் பேசிய படத்துண்டு ஒன்று பார்த்தேன். அதில் "I agree that this (POTA) law is draconian" என்று கைகள் இரண்டையும் மடித்தவண்ணம் சொன்னார். "draconian" என்றால் மிகவும் கடினமான சட்டம். டிராகோ என்பவர் கிமு 7ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகரப் பாராளுமன்ற உறுப்பினர். இவர் இயற்றிய சட்டங்கள் எல்லாம், கிட்டத்தட்ட எந்தக் குற்றம் புரிந்தாலும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கடைசியில் முடியும். காசைத் திருடினால் மரணம், அடுத்தவனைத் திட்டினால் மரணம்! இப்படிப்பட்ட சட்டமா ஒரு நாகரிகக் குடியாட்சி முறையில் வாழ விரும்பும் மக்களுக்குத் தேவை? அதை நாட்டின் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஒத்துக் கொள்ளவும் செய்கிறார்! ஒருவேளை அத்வானிக்கு "டிராகோனியன்" என்பதன் பொருள் முழுதாகப் புரியவில்லையோ, என்னவோ?
 

  சோவின் போடா ஆதரவு

சோ ராமசாமி, துக்ளக்கின் ஆசிரியர், போடா சட்டத்தின் தீவிர ஆதரவாளர். அது மட்டுமல்லாமல், வைகோ, நெடுமாறன் ஆகியோரை போடா சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறையில் அடைத்ததை ஆதரிப்பவர். போடா சட்டத் திருத்தம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதனை தனக்கே உரிய கேலியான முறையில் எதிர்த்து "The Prevention of Terrorism Act is gone and has been substituted by the Protection of Terrorism Act. POTA is dead. Long live POTA." என்கிறார் தன்னுடைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையில்.

சுப்ரமணியம் சுவாமியும் இதே கருத்தை முன்மொழியக் கூடும். அதாவது உச்ச நீதிமன்றம் - வெறும் சொல்லளவில் கொடுக்கும் ஆதரவு போடாவின் கீழ் வர முடியாது, செயலும் இருந்தால்தான் - என்றதனால் இனி இந்தியா முழுவதும் மக்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிற இந்திய நாட்டின் எதிரிகளுக்கும், ஈழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் பிற இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் "கேடு விளைவிப்பவருக்கும்" ஆதரவாகக் குரல் எழுப்பலாம், கருத்தரங்கங்கள் நடத்தலாம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டத் தொடங்கி விட்டார்.

அப்படித்தான் நடக்கட்டுமே? என்ன கெட்டுப் போய் விட்டது? ஒரு எழுவரல் குடியாட்சி (liberal democracy) முறையில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் எப்பொழுதும் இருக்க வேண்டும். சொல்லளவில் எத்தகைய தீவிரவாதக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கலாம். கனடாவில் பிரிவினைவாதம் பேசும் பலர் உள்ளனர். அமெரிக்காவில் பல சிறு குழுக்கள் அரசினை வெறுக்கின்றன. ஆயுதப் புரட்சி செய்ய வேண்டுமென்றெல்லாம் பேசுகின்றன. அவர்கள் அனைவரையும் அள்ளிக் கொண்டுபோய் உள்ளே போட வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.

பத்திரிக்கைக் கருத்து சுதந்திரம் பற்றிக் கொட்டி முழங்கும் சோ, தனி நபர் கருத்து சுதந்திரத்தில் கட்டுப்பெட்டித்தனத்துடன், பிற்போக்காளராகவும் இருப்பதேன்?

போடா பற்றிய என் பதிவுகள்: ஓன்று | இரண்டு
 

  மத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்

இது மாநில, மத்திய அரசுகள் டென்னிஸ் ஆடுவது போல ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முழுப்பக்க விளம்பரம் செய்யும் நேரம். சத்யேந்திர துபே கொலை பற்றி கடைசியாக மத்திய தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் ஒரு விளம்பரம் மூலம் தன் நிலையை விளக்கியது. அதில் பீஹார் மாநில அரசை இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பாளி என்றது. இதற்கு பதிலாக பீஹார் மாநில அரசு தன் நிலையை விளக்கி ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சாரம்:

* தங்க நாற்கோணத் திட்டத்திற்கு, பீஹார் மாநில அரசு, எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.
* துபே தனது கடிதம் எதிலும் பீஹார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதென்று குற்றம் சாட்டவேயில்லை.
* துபேயின் குற்றச்சாட்டு அனைத்துமே தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் மலிந்திருக்கிறது என்பதுதான். இதில் முழுப்பங்கு மத்திய அரசிடம் மட்டுமே. பீஹாரின் சட்டம் ஒழுங்கைக் குறை கூருவது ஏன்?
* துபேயுடன் கூடப் படித்த ஐஐடி மாணவர்தான் கயாவின் காவல்துறை ஆணையராக உள்ளார். துபே அவரைப் பலமுறை சந்தித்துள்ளார். ஒருமுறை கூடத் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னதில்லை.

ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தினாலும், மக்களிடம் தங்களது நிலையை விளக்க வேண்டும் என்ற இருவரது எண்ணமும் அந்த அளவில் வரவேற்கத் தக்கதே.

இனி அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

  போடா பற்றி

இன்றைய தி ஹிந்து தலையங்கம் "POTA reinterpreted" படிக்க வேண்டிய ஒன்று. அதன் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

எனது நேற்றைய பதிவையும் கவனிக்கவும்.

வைகோ ஆனால் போடா தனி நீதிமன்றத்தை அணுகி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்கிறார்.

மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவது மட்டுமே போடா குற்றமாகாது. இது மிகவும் வரவேற்கத் தக்க தீர்ப்பு.
 

  போடா மற்றும் கட்சித் தாவல்

நேற்று இந்தியா, ஆஸ்திரேலியாவை டெஸ்டில் தோற்கடித்தது. நேற்று மற்ற சில முக்கியமான நிகழ்வுகளும் இருந்தன.

1. தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போடா (POTA) பற்றிய வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வை.கோபால்சாமி (வைகோ) உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் "சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அப்படி இருக்கையில் நாட்டின் பாராளுமன்றம் போடா சட்டத்தை இயற்றியிருக்க முடியாது. அது மாநிலங்களின் சட்டமன்றங்களில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும்" என்னும் வகையில் அமைந்திருந்தது போலும். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை; "தீவிரவாதம் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, நாடு முழுவதையும் உள்ளடக்கி நிகழ்கிறது. எனவே இதனைத் தடை செய்யுமாறு சட்டம் இயற்ற நாட்டின் பாராளுமன்றத்திற்கு அனுமதி உண்டு" என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களால் தீவிரவாதத்தைத் தடை செய்ய முடியாது என்பதனை ஆராய்ந்த பின்னரே பாராளுமன்றம் இச்சட்டத்தை இயற்றியுள்ளது என்பதனையும் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.

முதலில் வைகோ ஏன் இந்த 'டெக்னிகாலிட்டி'யைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் சென்றார் என்று புரியவில்லை.

ஆனால் மிக முக்கியமாக, மேற்குறிப்பிட்டுள்ள தீர்ப்பில், நீதிபதிகள் இவ்வாறும் சொல்லியுள்ளனர்: "தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஒருவர் கருத்து ரீதியாக ஆதரவு காட்டினார் என்பதனால் மட்டுமே போடாவின் பிடிக்குள் வர முடியாது. போடாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமானால், ஒருவர் ஒரு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்ட வேண்டும், அல்லது அந்தத் தீவிரவாதச் செயலைச் செய்வதற்குத் துணைபோக வேண்டும்.

இதனைக் காரணம் காட்டி வைகோ போடா தனி நீதிமன்றத்திடம் தான் நிச்சயமாக தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டவுமில்லை, தீவிரவாதச் செயலுக்குத் துணைபோகவுமில்லை என்று வாதாடலாம்.

செய்வார், விடுவிக்கப்படுவார் என்று நம்புவோம்.

2. பாராளுமன்றத்தில் போடா சட்டத்திருத்தம் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் இதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன. அஇஅதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இந்த சட்டத் திருத்தம் மாநில அரசுகள் போடாவைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுகிறது என்பது மத்திய அரசின் வாதம். எதிர்க்கட்சிகள் போடா தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது தெரிந்துதான் நாங்கள் இந்த சட்டம் நடைமுறையாகக் கூடாது என்று எதிர்த்தோம். இப்பொழுது சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று நீங்களே சொல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டின.

ஆனால் துணைப் பிரதமர் அத்வானி, தீவிரவாதத்தை எதிர்க்க போடா அவசியம் தேவை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை போடா அநாவசியமான சட்டம். இந்த சட்டத்தை இதுவரை மாநில அரசுகள் தவறாகத்தான் பயன்படுத்தியுள்ளன என்று தோன்றுகிறது. இந்த சட்டத்தை நீதிமன்றங்களால் தூக்கி எறிய முடியாது. அரசே முன்வந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அது இப்பொழுதைக்கு நடக்காது. இந்த சட்டத்தின் தேவையின்மையை எதிர்க்கட்சிகள்தான் தீவிரமாக விளம்பரப் படுத்த வேண்டும். வாக்கெடுப்பின் போது வெளியேறுவது கையாலாகாத் தனத்தையே குறிக்கிறது.

3. கட்சித் தாவல் தடை சட்டத் திருத்தம்: மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இந்த சட்டம் அமலுக்கு வரும். இதன்படி சட்டமன்றங்கள், பாராளுமன்றத்தில் இடைக்காலத்தில் கட்சி மாறினால் அப்படி மாறுபவருக்கு பணம் கிடைக்கும் அரசியல் பதவிகளுக்கான வாய்ப்பு போய்விடும். அதாவது கட்சி மாறுபவருக்கு அமைச்சர் பதவியோ, வாரியத் தலைவர் பதவியோ இனிமேல் கிடைக்காது.
 

  இந்தியா வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து விட்டது! இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது நான் இப்படி நடக்கும் என்று துளியும் நம்பவில்லை. இந்த டெஸ்டு போட்டி ஆரம்பிக்கும்போதும் நம்பவில்லை. திருப்பு முனையே நான்காவது நாள் ஆட்டமும், அகர்காரின் பந்து வீச்சும்தான்.

ராஹுல் திராவிட்... இவரது ஆட்டத்தைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். இந்த டெஸ்டு போட்டியின் மூலம் இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரர்களில் இவரே முதன்மையானவர் என்பதை நிரூபித்துள்ளார். வெங்கட் லக்ஷ்மண் பெயரையும் மறக்காது குறிப்பிட வேண்டும். ஜாகீர் கான் அடுத்த போட்டியில் விளையாட வருவாரெனில் இந்திய அணிக்கு இந்தத் தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் இப்பொழுது தென்படுகின்றன.

இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

ராஹுல் திராவிட் பற்றிய முந்தைய வலைப்பதிவு

 

  துபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்

இன்று 'தி ஹிந்து' செய்தித்தாளில் மத்திய அரசின் தரைப் போக்குவரத்து அமைச்சரகமும், தேசிய நெடுஞ்சாலை வாரியமும் இணைந்து சத்யேந்திர துபே கொலை பற்றிய தன்னிலை விளக்கமாக ஒரு "விளம்பரச் செய்தியை" வெளியிட்டுள்ளன.

இதன் சாரம்:

* பிரதமர் அலுவலகத்துக்கு துபே எழுதிய கடிதம் வெளியானதன் மூலமாகத்தான் துபேயின் பெயர் வெளியே தெரிந்து அவர் கொல்லப்பட்டார் என்பது தவறான கருத்து. பிரதமர் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் நகல் நெடுஞ்சாலைத் துறையின் விஜிலன்ஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் அலுவலகம் துபேயின் கடிதத்தை வைத்துக் கொண்டு நேரிடையாக எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. அதனை சம்பந்தப்பட்ட அமைச்சரகத்துக்கு அனுப்புவதே பிரதமர் அலுவலகத்தின் கடமையாகும். அவ்வாறு முழுத்தகவலையும் (பெயரும் சேர்த்து) தரைப் போக்குவரத்து அமைச்சரகத்திடம் அனுப்பியது ரகசியத்தை வெளியே சொல்வதாக ஆகாது.

* துபேயின் கடிதத்தின் பலனாக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு சில ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சாலை ஓரிடத்தில் மீண்டும் பாவப்பட்டது. துபே பிரதமருக்கு நேரிடையாகக் கடிதம் அனுப்பியது தவறு (?) என்றாலும் அவரை தண்டிக்காது, அவரது நேர்மையைப் பாராட்டி அவருக்கு பணி உயர்வும் கொடுக்கப்பட்டது.

* பீஹாரின் சட்டம் ஒழுங்கின்மையே இந்தக் கொலைக்குக் காரணம். இதுபற்றிப் பலமுறை அமைச்சர் கந்தூரி பீஹாரின் முதல்வர் ராப்ரி தேவிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

* மற்ற எல்லாவிடங்களிலும் வேலை நன்கு நடந்து வருகிறது. ஆனால் பீஹாரில் மட்டும்தான் எல்லா வேலையிலும் நிறையத் தடங்கல் ஏற்பட்டுள்ளது (அட்டவணையைப் பார்க்க)

===

பீஹார் சட்டம் ஒழுங்கில்லாத மாநிலம் என்பது அனைவரும் ஓரளவுக்கு அறிந்ததே என்றாலும், இந்த அரசின் செய்தி விளம்பரம் மூலம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.

1. ஒரு கடிதத்தில் துபே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்கிறார். "என் பெயர் வெளியில் தெரிந்ததனால் நான் தேவையற்ற பிரச்சினைகளுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன்" என்கிறார். ஆனால் அவருக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

2. பீஹார் அரசுக்குப் பல கடிதங்கள் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார் தரைப் போக்குவரத்து அமைச்சர் கந்தூரி. ஆனால் நேற்று NDTV விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பீஹார் சட்ட அமைச்சர் அதுமாதிரி ஒன்றும் வரவில்லை என்பது போலப் பேசினார். உண்மை என்ன? மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது? மத்தியப் படைகளின் (CRPF) மூலம் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?

3. துபே பெயர் குறிப்பிட்டு நான்கு ஒப்பந்தக்காரர்களை ஊழல் பேர்வழிகள் என்கிறார்: சென்டிரோடோர்ஸ்டோய் (ரஷ்யா), சைனா கோல் (சீனா), எல்ஜி (கொரியா) - இந்த மூன்று நிறுவனங்களும் அனுபவமும், திறமையும் இல்லாத உள்ளூர்க் காரர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் வேலைகளைச் செய்கின்றன, இந்த வேலைகள் தரமில்லாது இருக்கின்றன என்கிறார். பிராக்ரஸ்ஸிவ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்னும் நிறுவனம் சரியாகத் தொழிலை நிர்வகிக்கக் கூடியதில்லை என்று தான் கருதுவதாகச் சொல்கிறார். இந்த நான்கு நிறுவனங்களும் NH-2 (தில்லியையும், கொல்கத்தாவையும் இணைக்கும் பாதை) வில் வேலை செய்கின்றன. இந்த நான்கும் கூட்டாகவோ, தனியாகவோ துபே மீது கொலையாட்களை ஏவியிருக்கலாம். அதுபற்றி CBI விசாரணை செய்யும் என்றாலும், தேசிய நெடுஞ்சாலை வாரியம் அந்த ஒப்பந்தங்களை மீள்-ஆய்வு செய்யலாமே?

இன்னமும் கேள்விகள் நிறைய இருக்கின்றன.

சத்யேந்திர துபே பற்றிய என் பிற வலைப்பதிவுகள் ஒன்று | இரண்டு
 

  சதாம் ஹுசேன் பிடிபட்டார்

தொலைக்காட்சியில் சூடான செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவுகள் என்ன என்பது போகப்போகத்தாண் தெரியும்.
 

  சங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு

'தமிழ் உரைநடை எங்கே போகிறது?' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]

[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். "நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்" என்றால் "நீ எப்படிய்யா கெலிச்சே? தோத்துடுவேனில்ல நெனச்சேன்" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]

ஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் பற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)

மாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகியவை ஒன்றாவது. ஐந்து விரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.

தமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.

மாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு
 

  மிகை நாடும் கலை

காலச்சுவடு இதழ்கள் 1993-2000 களில் இதுவரை வந்துள்ள திரைப்படத் துறை தொடர்பான கட்டுரைகளை ஒன்றிணைத்து காலச்சுவடு பதிப்பகம் 'மிகை நாடும் கலை' என்றொரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. விலை ரூ. 115. இப்பொழுது உயிர்மை, தீம்தரிகிட ஆகிய இதழ்களிலும் தமிழ்த் திரைப்படங்கள் பற்றி சுவையான, சிந்தனையைத் தூண்டும் வகையிலான கட்டுரைகள் வருகின்றன. அ.ராமசாமி என்பவர் இந்த இரு இதழ்களிலும் எழுதியுள்ள கட்டுரைகள் படிக்க வேண்டியவை.
 

  சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4

துக்ளக் 10/12/2003 & 17/12/2003 இதழ்களிலிருந்து:

* சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு உரிமைகளே இல்லையா? இருக்கின்றன - அதாவது சட்டமன்றங்களின் கடமைகளை யாரும் தடுக்காவண்ணம் நடத்த சட்டமன்றத்தின் அவைத்தலைவருக்கு உரிமை உள்ளது. அப்படி கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருப்பது உரிமை மீறல்.

* சட்டமன்றங்களில் நடைபெறுவது அனைத்தும் சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகுமா? கிடையாது, உதாரணமாக ஒருவரை ஒருவர் திட்டி அடித்துக் கொள்வது, "வேட்டியை, புடைவையை அவிழ்ப்பது" போன்றவை நிச்சயமாக சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகாது.

* சட்டமன்றங்களில் நடைபெறும் குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றங்கள் (அடிதடி ஆகியவை) சட்டமன்றங்களின் நடவடிக்கைகளின் கீழ் இருக்க முடியாது. அக்குற்றம் செய்தவரை நீதிமன்றங்களில்தான் தண்டிக்க முடியும். சட்டமன்றத்தில் கண்டிக்க மட்டும்தான் முடியும். (பரிதி இளம்வழுதி வழக்கும் இப்படிப்பட்டதே. இவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு வெளியில் நடந்து தண்டனையும் அளிக்கப்பட்டது, பின்னர் சட்டமன்றமும் இவருக்கு மேற்கொண்டு தண்டனை கொடுத்தது. அது தவறென்று மற்றொரு விவாதம்...)

* உரிமை மீறல் வேறு, அவமதிப்பு வேறு. சட்டமன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றத் தடையாயிருப்பது மட்டும்தான் உரிமை மீறல். அவ்வாறு இல்லாமல் நடவடிக்கைகளுக்கு எந்த பங்கமும் வராமலும் சட்டமன்றத்தின் அதிகாரம் மீறப்படலாம். அது வெறும் அவமதிப்பு மட்டுமே. அப்படி அவமதிப்பு நிரூபணமானாலும் அதற்கு சட்டமன்றங்களால் தண்டனை வழங்க முடியுமா என்பதும் எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

* அது உரிமை மீறல் என்பதற்கு சில உதாரணங்கள்: (அ) சட்டமன்ற உறுப்பினரை மிரட்டி அவர் இப்படித்தான் பேச வேண்டும் என்பது, (ஆ) சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைத்திருப்பது, அவர் சட்டமன்றத்தின் இயங்காமல் செய்வதற்கான நிலைமையைக் கொண்டுவருவது, (இ) சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்து அவரது நிலைப்பாட்டினை மாற்ற முயலுவது, (ஈ) சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது பேச்சைத் தடுக்க முயலுவது... இப்படியானவை.

* ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை சட்டமன்றத்தின் உரிமைகளுக்கு உட்பட்டது அல்ல. இரண்டுக்கும் பங்கம் வருமாறு நேரும்போது எதற்கு முன்னுரிமை என்று முடிவு செய்வது நீதிமன்றங்களே.

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2
சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1

[பி.கு: இந்த வாரம் சிதம்பரம் கட்டுரை பற்றியும், குருமூர்த்தி கட்டுரை பற்றியும் எதுவும் எழுதப்போவதில்லை. இந்த வாரக் கல்கி வீட்டுக்கு வரவேயில்லை! பத்திரிக்கை போடுபவர் மறந்து விட்டார். குருமூர்த்தி அமெரிக்காவில் குடும்பங்கள் பல 'அப்பா இல்லாத குடும்பங்களாக' இருக்கின்றன என்பது பற்றிக் கவலைப்படுகிறார். அதில் எனக்கு ஒன்றும் அதிகம் கருத்து இப்பொழுதைக்குக் கிடையாது.]
 

  தெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்தியப்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வாஜ்பாயி இரண்டு கருத்துகளை முன்வைத்தார்: (1) சார்க் எனப்படும் தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகள் திறந்த எல்லைகளை வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் (2) இந்த நாடுகள் புழங்குவதற்கெனப் பொதுவானதொரு நாணயம்/பணம் (currency) வேண்டும். இதுதான் சாக்கு என்று பாகிஸ்தானும் தாமும் இவை நடக்கக் கூடியவைகளே என்று நம்புவதாகச் சொன்னது.

ஐரோப்பாவில் பல வருடங்களாகவே தனித்தனி நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொதுச்சந்தையை உருவாக்கின. ஐக்கிய ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு (European Economic Union) 1973இல் 9 நாடுகள் இணைந்து ஆரம்பித்த இந்தச் சந்தை விரிவாகி 2003இல் 15 நாடுகளை உள்ளடக்கி, 2004இல் 25 நாடுகள் சேர்ந்த ஒரு குழுமமாக இருக்கப்போகிறது. ஒரு நாட்டில் விளைவித்த, உருவாக்கிய பொருட்களை பொதுச்சந்தையின் மற்ற நாடுகளில் விற்பதற்கு எந்தத் தடையும் கிடையாது, தனி வரிகள் எதுவும் கிடையாது. இந்த நாடுகளுக்கிடையில் பொதுமக்கள் கடவுச்சீட்டு இல்லாமல் சுலபமாகப் போய் வர முடியும். ஒரு நாட்டைச் சேர்ந்தவர் குழுமத்தின் மற்ற நாடுகளில் தடைகள் ஏதுமின்றி வேலைக்குப் போக முடியும். இந்த நாடுகளுக்கிடையே குத்து-வெட்டுக் கொலை-பழி கிடையாது. அடுத்த நாட்டை அடுத்துக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

முதலில் பொதுச்சந்தையாகத் தொடங்கிய இந்தக் கூட்டமைப்பு பல வருடங்களுக்குப் பிறகே பொது நாணயம் (யூரோ) ஒன்றை உருவாக்கின. எல்லையில்லாத சந்தை என்பது ஒன்று, பொது நாணயம் என்பதோ மிகவும் வேறுபட்டதொன்று. பிந்தையதைச் செயல்படுத்த அத்தனை நாடுகளுக்கும் இடையே ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை வேண்டும். வங்கியின் சேமிப்பு வட்டி விகிதம் எல்லா நாடுகளிலும் சமமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்த வட்டி உள்ள நாட்டில் கடன் வாங்கி, அதிக வட்டியுள்ள நாட்டில் அதை வங்கியில் சேமித்து வெறும் காற்றில் முழம் பூ அளக்கலாம். பண வீக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்க வேண்டும் எல்லா நாடுகளிலும். அத்தனை நாடுகளுக்கும் சேர்த்து பணம் அச்சடிக்க ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் மைய வங்கியும் (இந்தியாவில் ரிசர்வ் வங்கி போன்றது) தங்களது பணக்கொள்கையை தங்கள் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்ள முடியாது.

சார்க் நாடுகள் என்பன இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், பூடான் மற்றும் மாலத்தீவுகள் அடங்கியது. இதில் முதல் மூன்றுதான் அளவிலும், மக்கள் தொகையிலும் ஒப்பிடக் கூடியவை. இந்த மூன்று நாடுகளிடையே முதலில் மருந்துக்குக் கூட ஒற்றுமை கிடையாது. அதனினும் மேலாக ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருப்பது போலத் தெரிகிறது. பாகிஸ்தான் கள்ள நோட்டு அடித்து இந்தியாவில் புழங்க விடுகிறது என்று இந்தியா நேரம் கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டேயிருக்கிறது. பொது நாணயம் வந்துவிட்டால் அடுத்த நாட்டைக் கெடுக்க இப்படிக் கள்ள நோட்டு அடிப்பது சுலபமாகிப் போய்விடும்.

முதலில் தேவை அமைதியும், நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையும். எல்லையில்லா பொதுச்சந்தைப் உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை. தடாலடியாகப் பொது-நாணயம் என்று குதிக்க வேண்டிய அவசியமில்லை. சார்க் நாடுகள் முதிர்ச்சி அடையாத புது நாடுகள் (நமக்கு வயது வெறும் ஐம்பதுகளில்). பொது-நாணயத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய திறன் நம்மிடையே இல்லை. அது குறித்த ஆரோக்கியமான சிந்தனை கூட நம்மிடைய இல்லை. எனவே ஆகவேண்டிய காரியங்களை முதலில் பார்ப்பது நல்லது. அவையாவன:
  1. நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது
  2. பக்கத்து நாடுகளுக்குத் தேவையான பண உதவியை மான்யங்கள் மூலம் அளிப்பது
  3. உயர் கல்வி வளர்ச்சிக்காக நாடுகளுக்கிடையே மாணவர்கள் பரஸ்பர மாற்றம், ஒரு நாட்டின் மாணவர்கள் அடுத்த நாட்டில் படிக்க எந்தத் தடையும் இல்லாமை
  4. கடவுச்சீட்டு இல்லாப் பயண அனுமதி
  5. ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் வேலை பார்க்கத் தடையின்மை (ஆமாம், இங்கே பீஹாருக்கும், அஸ்ஸாமுக்கும் இடையேயே தகராறு... அந்த பிரச்சினையைத் தீருங்கள் பிரதமரே!)
  6. ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் தொழில் தொடங்கத் தடையின்மை
  7. எல்லையில்லா, தனி-வரிகளில்லா வர்த்தகம்

இவற்றை சரியாக நடைமுறைப்படுத்த நமக்கு இன்னமும் 30 வருடங்கள் ஆகலாம். அதன் பின்னர் பொது-நாணயத்தைப் பற்றிப் பேசுவோம்.
 

என் எண்ணங்களும், கருத்துகளும். என்னைத் தொடர்பு கொள்ள: மின்னஞ்சல் முகவரி



My English blog

விளம்பரம்
இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி

கில்லி - புதுசு தினுசு ரவுசு

இயற்பியல்::2005, இயற்பியல் ஆண்டுக்கான தமிழ் இணையத்தளம்

களம் சார்ந்த பதிவுகள்
அறுசுவைச் சமையல்
எளிய தமிழில் மார்கெடிங்
பங்குச்சந்தை
இயற்பியல்
குவாண்டம் இயற்பியல்
பிபிசி தமிழ்
விளையாட்டு பற்றிய பதிவுகள்
கிரிக்கெட்
சதுரங்கம்

முந்தைய பதிவுகள்

சில சுட்டிகள்
இந்த வலைப்பதிவின் RSS செய்தியோடை
முகப்பு
என்னைப் பற்றி
என் கட்டுரைகள்
தமிழ் இணையம் 2003
திசைகள் | திண்ணை | தமிழோவியம் | காலச்சுவடு | உயிர்மை | அமுதசுரபி | தமிழ் சமாச்சார் சுவடுகள் | மரத்தடி

நான் படிக்கும் தமிழ் வலைப்பதிவுகள்
இணைய குசும்பன்
முகமூடி
தமிழ் ராம்வாட்ச்
சன்னாசி
ரவி ஸ்ரீநிவாஸ்
நாராயணன்
இராம.கியின் வளவு
நாகூர் ரூமி
மாலன்
சுரேஷ் கண்ணன்
ரோஸாவசந்த்
பெட்டைக்குப் பட்டவை
வெங்கட்
இரா.முருகன்
சசி
தமிழ் நிதி
ரஷ்யா இராமநாதன்
பி.கே.சிவகுமார்
சந்தோஷ் குரு
சுந்தரமூர்த்தி
மனுஷ்ய புத்திரன்
மதி கந்தசாமி
துளசி கோபால்
செல்வராஜ்
காசி ஆறுமுகம்
ஹரிமொழி
டோண்டு ராகவன்
தங்கமணி
சுந்தரவடிவேல்
ராஜ்குமார்
பாலாஜி
யளனகபக கண்ணன்
தேசிகன்
அருள் செல்வன்
பவித்ரா
அருண் வைத்யநாதன்
M.K.குமார்
கிச்சு
பரிமேலழகர்
ரஜினி ராம்கி
சுவடு ஷங்கர்
மூக்கு சுந்தர்
ஐகாரஸ் பிரகாஷ்
ராதாகிருஷ்ணன்
வெங்கடேஷ்
ஹரன் பிரசன்னா

Powered by Blogger

Creative Commons License
This work is licensed under a Creative Commons License.