EDGE என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னர் இந்தியாவில் உள்ள செல்பேசி நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் இப்பொழுது இரண்டு வகைத் தொழில்நுட்பங்கள் மூலம் செல்பேசி இணைப்புகள் இயங்குகின்றன. ஒன்று GSM (Global System for Mobile communication), மற்றொன்று CDMA (Code Division Multiple Access). GSM முறையில் இயங்கும் செல்பேசிகள் 900, 1800 MHz அலைவரிசைகளில் இயங்குகின்றன. இந்த செல்பேசி நிறுவனங்களில் முக்கியமானவை ஏர்டெல், ஹட்ச், ஐடியா செல்லுலார், அரசின் பி.எஸ்.என்.எல் ஆகியவை. CDMA முறையில் ரிலையன்ஸ், டாடா டெலிசர்வீசஸ் ஆகிய இரு நிறுவனங்களும் மொபைல் சேவையை அளித்து வருகின்றன. இது 800 MHz அலைவரிசையில் இயங்குகிறது. பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய இரு அரசு நிறுவனங்களும் சில இடங்களில் 800 MHz அலைவரிசையிலான CDMA சேவையையும் அளித்து வருகின்றன.
இந்தியாவில் செல்பேசி வைத்திருப்பவர்களில் 10க்கு 9 பேர் இந்த ஆறு செல்பேசி நிறுவனங்களில் ஏதோ ஒன்றின் மூலமாகத்தான் சேவையைப் பெறுகிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனம்தான் CDMA தொழில்நுட்பத்தை 2003இல் வர்த்தக ரீதியாகக் கொண்டுவந்தது. அதுவரை இந்தியாவில் GSM முறையில் மட்டும்தான் செல்பேசிச் சேவை வழங்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட GSM செல்பேசிகள், பின் SMS (Short Message Service) அதாவது குறுஞ்செய்தி பரிமாறிக்கொள்ளவும் பயன்பட ஆரம்பித்தன. உடனே செல்பேசி நிறுவனங்கள் குறுஞ்செய்தி மூலம் கிரிக்கெட் ஸ்கோரிலிருந்து, பங்குச்சந்தை நிலவரம், ஜாதகக் குறிப்புகள், ஆபாச ஜோக்குகள் என்று மக்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன. அதைத் தொடர்ந்து GSM தொலைபேசிகளில் WAP (Wireless Application Protocol) என்னும் தொழில்நுட்பம் மூலமாக 9.6 kbps வேகத்தில் சில இணையப் பக்கங்களைக் காண முடிந்தது. ஆனால் மிகவும் மெதுவாகச் செயல்பட்டதனால் இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் அதிசீக்கிரமாக செத்துப்போனது. பின்னாளில் GPRS வரும்வரை யாரும் WAP பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டனர்.
GPRS (General Packet Radio Service) என்னும் தொழில்நுட்பம் மூலம் செய்திகளின் வேகத்தை 115.6 kbps அளவிற்கு அதிகரிக்க முடிந்தது. இந்தியாவில் இந்த GPRS தொழில்நுட்பத்தை ஏர்டெல், ஹட்ச், ஐடியா மற்றும் பிபிஎல் ஆகியோர் கொண்டுவந்தனர். 115.6 kbps வேகம் என்று சொன்னாலும் சாதாரணமாக 28.8 kbps வேகத்தில்தான் செல்பேசிக் கைக்கருவிகள் இயங்குகின்றன. இப்பொழுது செல்பேசிகளால் பேசுவது, குறுஞ்செய்தி மூலம் எழுத்துகளைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றுடன், படங்களையும் பரிமாறிக்கொள்ள முடிந்தது. இந்தத் தொழில்நுட்பத்திற்கு MMS (Multimedia Messaging Service) என்று பெயர். அசையாப் படங்கள், அசையும் படங்கள் (animated gif), விடியோ, இசைத் துண்டுகள் என்று பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தது. அத்துடன் இணையத்தில் உலாவுவது (WAP over GPRS, HTML), ஜாவா எனும் மொழியில் எழுதப்பட்ட செயலிகளை கைக்கருவிகளில் இயக்குவது, ஒலி/ஒளியோடைகளைப் பெற்று அவற்றை தொடர்ச்சியாக கேட்க/பார்க்க முடிவது என பலவற்றைச் செய்ய முடிந்தது.
உடனே செல்பேசிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் செல்பேசிகளுடன் கேமரா ஒன்றையும் இணைத்து விற்க ஆரம்பித்தன. கேமரா மூலம் யாரையாவது படம் பிடித்து உடனே அதை மற்ற நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளலாம் எனத் தோன்றியவுடன் இளவட்டங்கள் பல சில்மிஷங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
விடியோக்களை செல்பேசிகளில் பார்க்க முடியும் என்றான போது, ஹட்ச் நிறுவனம் பல கிரிக்கெட் ஆட்டங்களின் விடியோத் துண்டுகளைக் காண்பிக்கும் உரிமையை விலைக்கு வாங்க ஆரம்பித்தது. ஹட்ச், ஏர்டெல் இருவருமே பல சினிமாக்களிலிலிருந்து விளம்பரம் போல சிறு துண்டுகள், பாட்டுக்கள் ஆகியவற்றை அளிக்க ஆரம்பித்தன. ஒரு சினிமாப் பாடல் விடாது அத்தனையும் ringtone ஆகக் கிடைக்க ஆரம்பித்தன. ஒவ்வொருவரது செல்பேசியும் பிடித்த சினிமாப் பாடல் வரிகளில் ("கன்னி மனசைக் கிள்ளாதே!") சத்தமிடத் தொடங்கின.
2003இல் CDMA (சரியாக சொல்லப்போனால் CDMA 2000 1x) தொடங்கப்பட்ட பின்னர், CDMA செல்பேசிகளால் பேச்சுடன், 115.6 kbps வேகத்தில் data வையும் பரிமாறிக்கொள்ள முடிந்தது. அத்துடன் இந்த செல்பேசிகளை மடிக்கணினியில் கோர்த்து கணினிக்கு இணைய இணைப்பும் வழங்க முடிந்தது. என்னைப் போன்ற ஊர்சுற்றும் பேர்வழிகளுக்கு மிகவும் வசதியான சேவையாக இருந்தது.
சற்றே பின்தங்கிய நிலையிலிருந்த GSM நிறுவனங்கள் உடனே இப்பொழுது EDGE (Enhanced Data rates for GSM Evolution) என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் data வேகம் 384 kbps ஐத் தொடும். அதனால் வெறும் விடியோத் துண்டுகளாக மட்டும் இல்லாமல், தொடர்ச்சியான அசையும் படங்களை வழங்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது செல்பேசிகள். ஏர்டெல், ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் சில தொலைக்காட்சி சானல்களை செல்பேசியிலே அடுத்த மாதத்திற்குள் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் தன் CDMA செல்பேசிகளில் துண்டு துண்டாக செய்திகளை விடியோவாகக் கொடுத்து வந்தது. இதில் செய்தி வாசிக்கும் ஒலி தொடர்ச்சியாக வந்தாலும், விடியோ வெட்டி வெட்டி, சில ஃபிரேம்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் EDGE செல்பேசிகளில் விடியோவைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும்.
EDGE வேண்டுமென்றால் விலை ரொம்ப அதிகமோ? அதுதான் இல்லை. EDGE சேவையைத் தரக்கூடிய செல்பேசிக் கைக்கருவிகள் வெறும் ரூ. 7,500இலிருந்து கிடைக்கின்றன. செல்பேசிச் சேவை நிறுவனங்கள் மாதக்கட்டணமாக ரூ. 500ஐ வசூலிக்கும் எனத் தெரிகிறது.
அடுத்த போட்டி 3G எனப்படும் மூன்றாம் தலைமுறை செல்பேசிச் சேவையை அளிப்பதில்தான். இதற்கு முக்கியமான தேவை சரியான அலைவரிசை. 3G சேவையில் bandwidth 384 kbpsக்கும் மேலாக இருக்கும். ஏற்கனவே இந்த 3G சேவையை 1920-1980 MHz மற்றும் 2110-2170 MHz ஆகியவற்றில் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் CDMA செல்பேசி நிறுவனங்கள் தங்கள் 800 MHz அலைவரிசையில் பற்றாக்குறை இருப்பதால் மேற்படி 3G அலைவரிசையிலிருந்து கொஞ்சத்தை தங்களுக்குத் தரவேண்டும் எனக் கேட்கின்றனர்.
ஆனால் GSM நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. 800 MHz தீர்ந்து விட்டால், வேண்டுமானால் இந்த CDMA நிறுவனங்கள் 1700-1800 MHz ஐப் பெற்றுக் கொள்ளட்டும். 3G சேவையைத் தரும் நிறுவனங்களுக்கு மட்டுமே 1920-1980 மற்றும் 2110-2170 MHz அலைவரிசையில் இடம் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.
GSM, CDMA இருவருமே 3G சேவையை அளிக்கலாம். யார் முதலில் செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆக செல்பேசித் தொழில்நுட்பம் கடந்த ஒரு வருடத்தில் அதி விரைவாக முன்னேறி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் எதுவுமே நேற்று உருவான புதிய தொழில்நுட்பம் இல்லை. சில வருடங்களுக்கு முன்னிருந்தே சோதனைக் கட்டத்தில் இருந்தவைதான். ஆனால் கடந்த ஒரு வருடமாகத்தான் இந்தியாவில் இவற்றை நடைமுறைப் படுத்தக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) புது செல்பேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இனி மேலும் மேலும் புது ஆட்களைப் பிடிக்க வேண்டுமென்றால் புதுமை அவசியம், அதே சமயம் பொதுமக்களுக்கு அதனால் நன்மையும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு செல்பேசி நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டதே காரணம்.