கிரிக்கெட் தொலைக்காட்சி உரிமம் பெறக் கடும் போட்டி
பத்ரி சேஷாத்ரி, 18 ஆகஸ்டு 2004
சமாச்சார்.காம்




இந்தியத் தொலைக்காட்சிகள் அதிக வருவாய் பெற நம்பியிருப்பது கிரிக்கெட் நேர்முக ஒளிபரப்பு, மற்றும் பிரம்மாண்ட சினிமாப் படங்கள். சினிமாப் படங்களைப் பொருத்தவரை தொலைக்காட்சிகள் இரண்டாம் பட்சம்தான். திரையரங்கக் காட்சிதான் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிக வசூலைத் தருகிறது. ஆனால் கிரிக்கெட்டைப் பொருத்தவரை மிக அதிகமான பணம் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலமே கிடைக்கிறது.

கிரிக்கெட் ஒளிபரப்பில் மொழிப்பிரச்சினை ஏதுமில்லை. ஆங்கிலத்தில் வர்ணனைகள் இருந்தாலும் இந்தியா முழுவதுமாக மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். நாள் முழுதும் - எட்டு மணி நேரம் - பார்த்தாலும் மக்களுக்கு கிரிக்கெட் அலுப்பதேயில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 1999 முதல் செப்டம்பர் 2004 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான தொலைக்காட்சி, ரேடியோ, இணைய உரிமங்களை கிட்டத்தட்ட ரூ. 250 கோடிக்கு பிரசார் பாரதிக்கு விற்றிருந்தது. அதாவது வருடத்திற்கு ரூ. 50 கோடி. இந்தத் தொகை வரலாறு காணாத அளவு மிக அதிகமானது என்று 1999இல் பேசப்பட்டது. இப்பொழுது அடுத்த நான்காண்டுகளுக்கான தொலைக்காட்சி, ரேடியோ உரிமங்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா இந்த நான்கு வருடங்களுக்கான உரிமத்துக்கு கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடி பணத்தை எதிர்பார்க்கிறோம் என்று சொல்லியிருந்தார். அதாவது வருடத்திற்கு குறைந்தது ரூ. 250 கோடி. சென்ற ஐந்தாண்டுகளைக் கவனித்தால் ஐந்து மடங்கு அதிகம்!

இந்தச் செய்தி வெளியே கசிந்தபோது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகம் என்று தோன்றியது. ஆனால் சென்ற வாரம் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்படி உரிமத்தைப் பெற கடுமையான போட்டியொன்றை உருவாக்கியுள்ளன. ஜீ (Zee) டெலிவிஷன் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ. 1,200 கோடி பணத்தைத் தர முன்வந்துள்ளது. அதற்கடுத்ததாக இ.எஸ்.பி.என் (ESPN Star Sports) நிறுவனம் ரூ. 1,065 கோடி பணத்தைத் தருவதாகச் சொல்லியுள்ளது. மற்ற சில நிறுவனங்கள் (பிரசார் பாரதி, டென் ஸ்போர்ட்ஸ், சோனி ஆகியவை) கிட்டத்தட்ட ரூ. 700 கோடி வரை தருவதாகச் சொல்லியிருந்தன.

யாருடன் செல்வது என்பதை முடிவு செய்ய நேற்று கூடிய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறது.

ஜீ ரூ. 1,200 கோடிக்கு இந்திய கிரிக்கெட் உரிமத்தைப் பெற ஏன் இவ்வளவு வெறியுடன் செயல்பட்டது என்பதைப் பார்ப்போமா? ரூ. 1,200 கோடி செலவு செய்தால் அதனால் ஏதேனும் லாபம் கிடைக்குமா?

ஜீ டெலிவிஷன் நிறுவனம் இந்தியாவில் பல மொழிகளில் தொலைக்காட்சிச் சேவையை நடத்தி வருகிறது. ஹிந்தி மொழி சானல்தான் அதன் முன்னணி சானல். இதே நிறுவனத்தின் 'சிடிகேபிள்' என்னும் கிளை நிறுவனம் பல முக்கிய நகரங்களில் கேபிள் மூலம் தொலைக்காட்சி சானல்களை வழங்குகிறது. கடந்த சில மாதங்களாக ஜீயின் மற்றுமொரு கிளை நிறுவனம் 'டிஷ் டிவி' DTH முறையில் - நேரடி செயற்கைக்கோள் சேவை மூலம் - வீடுகளுக்கு பல தொலைக்காட்சி சானல்களை வழங்கி வருகிறது. இது தவிர ஜீயின் தொலைக்காட்சிச் சேவை வட அமெரிக்கா, பிரிட்டன் சேர்த்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் இந்திய வம்சாவளியினரை மனதில் இருத்திச் செயல்பட்டு வருகிறது.

டிஷ் டிவி தொடங்கியதிலிருந்தே, முக்கிய கிரிக்கெட் உரிமங்கள் பெற்றுள்ள இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (ESPN Star Sports), சோனி (Sony) ஆகிய நிறுவனங்கள் டிஷ் டிவி நிறுவனத்திற்கு தங்கள் சிக்னல்களை வழங்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வருகின்றன. கிரிக்கெட் சானல்கள் இல்லையென்றால் எந்தவொரு கேபிள் வினியோகஸ்தரோ, டி.டி.எச் வினியோகஸ்தரோ தொழிலை நடத்தி விட முடியாது. ஸ்டார் நிறுவனம் டாடா நிறுவனத்துடன் இணைந்து ஒரு டி.டி.எச் சேவையை வழங்க உள்ளது. அவர்களது விண்ணப்பம் மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசு இன்னமும் இந்த சேவைக்கான அனுமதியைத் தரவில்லை. ஆனால் ஜீயின் டிஷ் டிவி, அனுமதி கிடைத்த காரணத்தால் தன் சேவையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. தான் தொடங்குவதற்குள் டிஷ் டிவி பலகோடிப் பேரை தன் நுகர்வோராக மாற்றிவிடக் கூடாதே என்ற பயம் ஸ்டாருக்கு. அதனால்தான் தன் நிறுவனமான இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளின் கிரிக்கெட், டிஷ் டிவியில் வராத வண்ணம் அழும்பு செய்து வருகிறது ஸ்டார்.

சோனி, ஸ்டார், ஜீ ஆகிய மூன்றுமே ஹிந்தி தொலைக்காட்சி சானலில் போட்டா போட்டி போடுகின்றன. ஜீ முதலில் முன்னணியில் இருந்தது. தன்னிடமிருந்த ஹிந்தி சினிமா கலெக்ஷன் மூலமாக சோனி ஜீயைக் கீழே தள்ளியது. 'கவுன் பனேகா கரோட்பதி' என்னும் அமிதாப் பச்சன் ஷோ மூலமாக ஸ்டார் பிளஸ் இவ்விரண்டு பேரையும் கீழே தள்ளியது. ஆக இந்த மூன்று பேருக்குமிடையே கடும் போட்டி. சோனியிடம் உலக்ககோப்பை கிரிக்கெட் போன்று சில கிரிக்கெட் ஆட்டங்களின் நேரடி ஒளிபரப்பு உரிமம் உள்ளது. அதனை ஜீயின் டிஷ் டிவி வழியாக பொதுமக்கள் காண அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது சோனி.

ஆக பல கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கிய டிஷ் டிவி, தன் தொழிலை ஒழுங்காகச் செய்யமுடியாது போய்விடுமோ என்ற பயம் ஜீயை வாட்டியது. அதன் விளைவுதான் ஜீ மிக ஆக்ரோஷமான முறையில் இந்திய கிரிக்கெட் உரிமத்தை அதிக விலைக்கு வாங்க முயல்வது. நேரடி விளம்பரம் (advertising), மாதக் கட்டணம் (subscription) ஆகியவற்றுடன் டி.டி.எச் தொழிலையும் மனதில் வைத்துத்தான் ஜீ இந்த அளவு அதிகப் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் கையில் இருந்தால் பொதுமக்கள் தைரியமாக ஜீயின் டிஷ் டிவியை வாங்குவார்கள். ஸ்டாரும் தன் டி.டி.எச் வினியோகத்திற்கு ஜீயின் கிரிக்கெட்டும் தேவைப்படும் என்பதனால் தன் கையில் இருக்கும் கிரிக்கெட்டை ஜீயின் டிஷ் டிவிக்கு வேறு வழியின்றித் தரவேண்டி வரும். அதன்பின் ஜீ, சோனியை மட்டும்தான் சமாளிக்க வேண்டி வரும்.

இதனையும் தவிர்த்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடமிருந்தும் ஜீயினால் நல்ல பணம் பார்க்க முடியும். இன்று அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எகோஸ்டார் (Echostar) எனப்படும் டி.டி.எச் தொலைக்காட்சி வழியாக இந்திய கிரிக்கெட் மேட்ச்களைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு போட்டித்தொடருக்கும் கிட்டத்தட்ட US$ 100, US$ 150 என்று கட்ட வேண்டியுள்ளது. இதே போல பிரிட்டனில் உள்ள இந்தியர்களும் கிரிக்கெட் பார்க்க எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஜீ இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து சர்வதேச உரிமத்தைப் பெற்றால் அதன்மூலம் ஆண்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற இடங்களிலிருந்து ஏகப்பட்ட பணத்தைக் கட்டணமாகப் பெற முடியும். இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸினால் இதைச் சுலபமாகச் செய்யமுடியாது. ரூபர்ட் மர்டாக்குக்குச் (ஸ்டாரின் அதிபர்) சொந்தமான சில நிறுவனங்கள் - அமெரிக்காவில் டிரெக்டிவி (DirecTV), பிரிட்டனில் ஸ்கை (Sky) - இருந்தாலும் ஜீ அளவிற்கு இவற்றால் இந்தியா தொடர்பான கிரிக்கெட் மூலம் அதிக வருவாயைப் பெற முடியாது. ஜீ இந்திய கிரிக்கெட்டுடன் சேர்த்து ஹிந்தி சினிமாக்களையும் தரும். அதனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற இடங்களில் உள்ள இந்தியர்கள் அதிக அளவில் ஜீயின் சேவையைப் பெற்று பணத்தைச் செலவு செய்ய முன்வருவார்கள்.

ஜீ இந்திய கிரிக்கெட்டின் தொலைக்காட்சி உரிமத்தைப் பெறுவதன் மூலம் பங்குச்சந்தையில் தன் விலையை அதிகப்படுத்தவும் முடியும். ஸ்டார், சோனி ஆகிய இரண்டும் இந்தியப் பங்குச் சந்தையில் இல்லை. ஜீ கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றால் அதனால் அவர்களுக்கு பெருத்த அளவில் நேரடி லாபம் கிடைப்பதோடு, மறைமுகமாகவும் லாபம் பெறுவார்கள் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ஒளிபரப்பின் போது ஜீயின் மற்ற நிகழ்ச்சிகளை - சினிமா, மெகாத் தொடர்கள் - விளம்பரம் செய்வதால் அந்நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் அதிகமாகப் பார்க்க நேரிடும். இதனால் அந்நிகழ்ச்சிகளுக்கான விளம்பரக் கட்டணம் அதிகமாகும். இதைப் பார்க்கும் பங்குச்சந்தை ஜீயின் பங்குகளை அதிகமாக மதிப்பிடும்.

ஆக இவையனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால் ஜீ கொடுக்கும் விலை - ரூ. 1,200 கோடி - அதிகமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடைசியில் என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


எண்ணங்கள் வலைப்பதிவு