குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
பத்ரி சேஷாத்ரி, 23 செப்டெம்பர் 2004
சமாச்சார்.காம்




இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கைவசம் இருக்கும் அன்னியச் செலாவணி இப்பொழுது சுமார் 118.255 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 10 செப்டம்பர் நிலை. மே 2004 முதற்கொண்டே அன்னியச் செலாவணி இந்த நிலையில்தான் உள்ளது. ஜனவரி 2000த்தில் கையிருப்பு 34.839 பில்லியன் டாலர்கள். ஜனவரி 2001இல் 40 பில்லியன் டாலர்கள், ஜனவரி 2002இல் 48 பில்லியன், ஜனவரி 2003இல் 70.3 பில்லியன், ஜனவரி 2004இல் 100.59 பில்லியன்.

ஆக, வருடம் தாண்டத் தாண்ட நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த அன்னியச் செலாவணி எல்லாமே அமெரிக்க டாலர்கள் கிடையாது. இதில் யூரோவும் உண்டு, ஜப்பானிய யென்னும் உண்டு, பிரிடிஷ் பவுண்டும் உண்டு, இன்னபிற கரன்சிகளும் உண்டு. ஆனால் அத்தனையையும் டாலர்களில் மாற்றிச் சொல்வார்கள்.

முதலில் இந்த அன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்கு வருகிறது என்று பார்ப்போம்.

  1. நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள் பொருட்களை, சேவைகளை வெளிநாடுகளுக்கு விற்கிறார்கள் - நெசவுப்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT Services), தொலை அழைப்பு மையம் போன்ற சேவைகள், இறால் ஏற்றுமதி, சீனாவுக்கு இரும்புத் தாது - இப்படிப் பலப்பல. இந்த இந்திய நிறுவனங்கள் பதிலுக்கு வெளிநாட்டு கரன்சிக்களை (அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, யென் ஆகியவை) பதிலாகப் பெறுகிறார்கள். அவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவந்து இந்திய வங்கிகளிடம் (இறுதியாக அந்த வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கியிடம்) கொடுத்து அதற்கு ஏற்ற இந்திய ரூபாய்களைப் பெறுகிறார்கள்.
  2. வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியர்கள் - அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இப்படிப் பலப்பல நாடுகள் - அங்கிருந்து தாங்கள் சேமித்த வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள், இந்தியாவில் வீடு, நிலம் வாங்குகிறார்கள். அவையும் இந்திய வங்கிகள் மூலம் (பின் ரிசர்வ் வங்கி) மாற்றப்பட்டு உள்நாட்டுப் பணமாகிறது.
  3. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (Foreign Institutional Investors, or FIIs) இந்தியப் பங்குச்சந்தையில் தங்கள் நாட்டுப் பணத்தைக் கொண்டு வந்து முதலீடு செய்கிறார்கள். இது கடந்த சில வருடங்களில் மிக அதிகமாயிருக்கிறது. இன்றைய தேதியில் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட பெரிய 500 நிறுவனங்களில் 25% மேலான பங்குகள் அன்னிய நாட்டவரிடம் இருக்கின்றன.
  4. பிற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் (எப்பொழுதுமே) கடனுக்கான வட்டி அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகமாக, அதிகமாக, இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங் - கடன் பெறக்கூடிய தன்மை - உயர்ந்துள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மிகக்குறைந்த வட்டிக்குக் கடன் பெற முடிகிறது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனம் 500 மில்லியன் டாலர்கள் கடன் வேண்டினால், இந்தியாவில் உள்ள வங்கிகள் இந்தக் கடனுக்கு 8% வட்டி கேட்கும். ஆனால் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் 5-6% வட்டியில் கடன் கொடுக்க இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறன. இதனால் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் பல இந்திய நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வெளிநாடுகளில் கடன் வாங்கிகிறார்கள். அந்தக் கடன் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து இந்திய ரூபாய்களாக மாற்றி, உள்ளூரில் செலவழிக்கிறார்கள்.
  5. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்து தங்கள் பணத்தைச் செலவு செய்து விட்டுப் போகிறார்கள். இதில் அமெரிக்காவிலிருந்தும், வளைகுடா நாடுகளிலிருந்தும் வரும் நம் என்.ஆர்.ஐ சகோதரர்களும் அடங்குவர்.
    1. இப்படியாக வெளிநாட்டுப் பணம் நம் நாட்டில் மிக அதிகமாக வரத்தொடங்கியுள்ளது. இத்தனை பணமும் வெளிச்சந்தையில் இருந்தால், இதனால் ரூபாயின் மதிப்பு அதிகமாகத் தொடங்கும். அதாவது எக்சேஞ் ரேட் என்று சொல்லப்படும் டாலர்-ரூபாய் பணமாற்று விகிதம் குறையும். முன்னர் 1 டாலருக்கு 46 ரூபாய்கள் என்பது, டாலர்கள் மலிவாகக் கொட்டிக்கிடக்கையில், 1 டாலருக்கு 40 ரூபாய் என்றாகி விடும். ஏனெனில் டாலர்கள் இஷ்டத்திற்குக் கிடைக்கின்றன, அதனால் டாலர்கள் வாங்க குறைந்த ரூபாய்கள் கொடுத்தாலே போதுமானது என்றாகி விடும். இப்படி டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகமாக ஆரம்பித்தால் அதனால் பலருக்குக் கஷ்டம்.

      1. இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் திண்டாடுவார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டிருக்கும் $1,000 தான் இப்பொழுதும் வரும். ஆனால் அது இந்திய ரூபாயாகும்போது முன்னர் ரூ. 46,000 கிடைத்தது, இப்பொழுது ரூ. 40,000 மட்டும்தான். ஆனால் உள்ளூரில் ஆகும் செலவோ அதே பழைய செலவுதான். விலைவாசி ஏற்றத்தினால் செலவுகள் அதிகமாகக் கூட ஆகியிருக்கலாம்! இதனால் ஏற்றுமதித் தொழிலில் உள்ளவர்கள் 'துண்டக்காணோம், துணியக்காணோம்' என்று ஓடவேண்டியிருக்கும்! இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 'ராவோடு ராவாக' காணாமல் போகவேண்டி வரும். பங்குச்சந்தை சரியும்.... இப்படி நிறைய கெட்ட செய்திகள்!
      2. வெளிநாட்டில் உழைத்து இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் லட்சக்கணக்கானோர் வாழ்க்கை திண்டாடத் தொடங்கும். எவ்வளவுதான் உழைத்து அனுப்பினாலும், இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களோ, மனைவியோ, கணவனோ பணம் போதவில்லை என்று சொல்ல, எரிச்சல் மட்டும்தான் மிஞ்சும்.

      எனவே ரிசர்வ் வங்கி இப்படி உபரியாகக் கிடைக்கும் டாலர்களை (இதர கரன்சிக்களையும்) வாங்குகிறது. இப்படி வாங்குவதன் மூலம் பணமாற்று விகிதத்தை ஒரு கட்டுக்குள் வைக்கிறது. டாலர்-ரூபாய் பணமாற்று விகிதம் 2000-2004 காலகட்டத்தில் 43.4 - 49.0 என்ற கீழ்மட்ட-மேல்மட்ட வரம்புக்குள் இருந்துள்ளது. ஒருசில மோசமான நேரங்களைத் தவிர பெரும்பாலும் 45-47க்குள் தான் இருந்து வருகிறது. டாலர் மதிப்பு அதிகமாகும்போது ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் உள்ள டாலர்களை விற்று அதைக் குறைக்கும். [இல்லாவிட்டால் இறக்குமதிக்குக் கஷ்டம்.] டாலர் மதிப்பு குறையத் தொடங்கினால் ரிசர்வ் வங்கி மேலும் டாலர்களை அதிகமாக வாங்கும். [இல்லாவிட்டால் ஏற்றுமதிக்குக் கஷ்டம்.]

      ஆனால் பணமாற்று விகிதத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பதால், ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகமாகிக் போய் விட்டது.

      கடந்த இரண்டாண்டுகளில் ரிசர்வ் வங்கியும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சில வெளிநாட்டுக் கடன்களை முன்னதாகவே இந்திய அரசு அடைப்பதற்கு உதவியது. இந்தியர்கள் விரும்பினால் வேண்டிய அளவிற்கு அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொண்டு உலகம் சுற்றலாம் என்று அனுமதித்தது. தனியார்கள் $25,000 அளவிற்கு வெளிநாடுகளில் சொத்து வாங்க அனுமதித்தது. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பிற நிறுவனங்களை வாங்க இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. முன்னர் அணு ஆயுதச் சோதனை செய்தபோது அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா மீது தொழில்ரீதியாக முற்றுகையிட்டன. அப்பொழுது டாலர்கள் அதிகமாக வேண்டும் என்ற காரணங்களுக்காக இந்தியா ரிசர்ஜண்ட் இந்தியா பாண்டு என்று கடன்பத்திரங்கள் வெளியிட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் நிறைய டாலர்களைத் திரட்டியது. அந்த டாலர்களுக்கு அதிக வட்டி தருவேன் என்று ஆசை காட்டியது.

      ஆனால் இப்பொழுது 'இனியும் டாலர்கள் தேவையில்லை' என்ற நிலை வந்தவுடன் என்.ஆர்.ஐக்கள் வங்கிகளில் போட்டிருக்கும் டாலர்/பவுண்டு வைப்பு நிதிகளுக்குக் கொடுக்கும் வட்டியின் மீது வரி விதிப்பேன் என்கிறது. இதனால் கூட இந்தியாவுக்கு வரும் டாலர்கள்/அன்னியச் செலாவணி குறைகிறதில்லை.

      இந்த அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இப்படியொரு கேள்வி இரண்டாண்டுகளுக்கு முன்னேயே எழுந்தது! அப்பொழுது நம்மிடம் வெறும் 60 பில்லியன் டாலர்கள்தான் இருந்தன. இப்பொழுதோ, அது இரண்டு மடங்காகி, 120 பில்லியன் டாலர்கள் ஆகிவிட்டது.

      மேற்படி பணம், சும்மா இருந்தால் அதிகபட்சமாக 2-3% தான் சம்பாதிக்கிறது. அதில் ஒரு பகுதியை வைத்து உருப்படியாக வேறு ஏதாவது செய்யமுடியுமா?

      அன்னியச் செலாவணிக் கையிருப்பை நாட்டின் உள்கட்டுமானத்திற்குப் பயன்படுத்த உகந்தாற்போன்ற ஒரு திட்டத்தைப் பற்றி அரசு யோசிக்கத் தொடங்கியுள்ளது என்பதை சென்ற வாரம் வெளியான சில செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அஹுலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அதன்படி கிட்டத்தட்ட 20-30 பில்லியன் டாலர் அளவிற்கான பணத்தை நாட்டின் கட்டுமானத்தை விரிவுபடுத்த உபயோகப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

      அந்தத் திட்டத்தின் வரைவு இதோ:

      1. முதலில் அரசு இதற்கென சிறப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கும் (Special Purpose Vehicle - SPV).
      2. ரிசர்வ் வங்கி, புதிதாக இந்திய ரூபாய்களை அச்சடித்து அதனை இந்தச் சிறப்பு நிறுவனம் கையில் 'கடனாகக்' கொடுக்கும். சாதாரணமாக இப்படிச் செய்தால், அந்த புதிதாக அச்சடித்த பணமும் இந்தியாவிற்குள்ளேயே செலவு செய்யப்பட்டால் விளைவு படுமோசமாக இருக்கும். பணவீக்கம் அதிகமாகும்! ஆனால் இந்த சிறப்பு நிறுவனம் புதிதாக அச்சடித்து அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய ரூபாய்களை அப்படியே ரிசர்வ் வங்கியிடம் விற்று, அதற்குச் சமமான டாலர்களை வாங்கும்.
      3. இந்த டாலர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் கட்டுமானத்திற்குத் தேவையான இயந்திரங்கள், சேவைகள் ஆகியவற்றை இந்த SPV வெளிநாடுகளிலிருந்து வாங்கும். உதாரணமாக ஒரு துறைமுகம், ஒரு மின்சார உற்பத்தித் தொழிற்சாலை ஆகியவற்றைக் கட்டத் தீர்மானித்து அதற்குத் தேவையான இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும்.
      4. இப்படி வாங்கிய இயந்திரங்களை வைத்து, மேலும் சிறிது உள்நாட்டுப் பணத்தைச் செலவுசெய்து (வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரவேண்டியிருக்குமே! கச்சாப்பொருளை உள்நாட்டிலிருந்து வாங்க வேண்டியிருக்குமே? அதற்கு இந்திய ரூபாய்கள் வேண்டும்) அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இது ஓர் உதாரணமே! இதுபோல ரோடு போடத் தேவையான இயந்திரங்கள், துறைமுகம் விரிவாக்கச் செய்யும் இயந்திரங்கள், சேவைகள் ஆகியவற்றைப் பெறலாம். சேது சமுத்திரத் திட்டம் நடைபெறப் போகிறது என்றால் அதனை முழுக்க முழுக்க இந்த டாலர்களை வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் செய்து முடிக்கலாம். உலகத்தரத்தில் வெளிநாட்டி நிறுவனங்களை வேலைக்கு அமர்த்தி இரண்டு, மூன்று விமான நிலையங்களைக் கூட கட்டிக் கொள்ளலாம்!

      ஆனால் முக்கியமானது - இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது! செய்தால் பணவீக்கம் அதிகமாகி, விலைவாசி ஏறி, பொதுமக்கள் கஷ்டப்பட நேரிடும்!

      இப்படிச் செய்வதனால் இந்தியாவின் உள்கட்டுமானம் விரிவடைந்து, அதன் பலனாக இந்தியாவின் பொருளாதாரம் விரிவடையும். பொதுமக்களின் வசதிகளும் அதிகமாகும்.

      இது நடக்குமா என்று பார்ப்போம்.


      எண்ணங்கள் வலைப்பதிவு