இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலைகள்
பத்ரி சேஷாத்ரி, 30 செப்டெம்பர் 2004
சமாச்சார்.காம்




இப்பொழுது அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நேரம். ஜார்ஜ் புஷ், ஜான் கெர்ரி இருவரும் போட்டியிடும் இந்தத் தேர்தலில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் வேலைகள் ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.

முதலில் இந்தியாவிற்கு வரும் வேலைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். பின்னர் கெர்ரி, புஷ் இருவரின் நிலைகள் என்ன என்று பார்க்கலாம்.

1970கள் வரை - மெயின்பிரேம் கணினிகள் காலம் வரை - அமெரிக்காவின் மாபெரும் நிறுவனங்கள் மட்டுமே கணினிகளை, [சில குறுகிய] பயன்பாட்டுக்கெனத் தம்மிடம் வைத்திருந்தன. ஆனால் 1980களில் டெஸ்க்டாப் கணினிகள் விலை கணிசமாகக் குறையத் தொடங்கவும், அமெரிக்காவின் அனைத்து தொழில் துறைகளிலும் உள்ள அனைத்து நிறுவனங்களுமே கணினிமயமாக மாறின. அலுவலக வேலைகள் - கடிதங்கள் எழுதுவது, விற்பனை தொடர்பான விவரங்களைப் பதிந்து வைப்பது, வாடிக்கையாளர்களின் புகார்களைப் பதிவது, மாத இறுதியில் சம்பளம் போடுவது என - அனைத்துமே கணினி வழியாகச் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு கணினியை இயக்கும், உருவாக்கும், மென்பொருள் எழுதும், மராமத்து வேலைகள் செய்யும் திறன்களுடன் பல தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

தகுதிவாய்ந்த கணினித்துறை தொழிலாளர் இல்லாததால் அமெரிக்கா, தகுதிபடைத்த வெளிநாட்டவரை இருகரங்களையும் நீட்டி வரவேற்றது.

80களில் கணினி மென்பொருள் எழுதியவர் அனைவரும் வருடங்களை கடைசி இரண்டு இலக்கங்களால் மட்டுமே குறித்து வந்தனர். இது 2000ஆம் ஆண்டு வரும்போது பிரச்னை கொடுக்கும் என்பதை அவர்கள் அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. [01 என்பது 1901ஐக் குறிக்குமா, இல்லை 2001ஐக் குறிக்குமா? பிரச்னைதானே?] இதன் விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்த நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் மிகவும் பயந்து போய்விட்டன. 2000ஆம் ஆண்டு வந்ததும் உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கின் மீதான வட்டி திடீரென மைனஸில் போய்விட்டால்?

இந்த பிரச்னைக்குத்தான் Y2K என்று பெயர்.

இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்று தெரிந்ததுமே, இந்தியாவின் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கும் அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் ஒவ்வொரு நிறுவனமும் அப்பொழுது கணினியில்லாமல் இயங்காது என்ற நிலைக்கு வந்திருந்தன. ஒவ்வொரு நிறுவனமும், தங்களிடம் உள்ள மென்பொருள்கள் அத்தனையும் 2000 வருடம் தொடங்கும்போது சரியாக வேலை செய்யுமா, அப்படி வேலை செய்யாவிட்டால் எப்படிச் சமாளிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளவும், அதற்கான மாற்று உபாயங்களை எழுதித்தரவும் இந்திய மென்பொருள் நிறுவனங்களை வேலைக்கு அமர்த்தியது.

இதுதான் முதல் கட்டம். அதாவது இந்திய நிறுவனங்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் இந்தியக் கணினி மென்பொருளாளர்களை தங்களது அலுவலகத்துக்கே நேரிடையாக வரவழைத்து வேலைகளைச் செய்துகொள்வது. இதற்குத்தான் Onsite என்று பெயர்.

இந்நேரத்தில்தான் இந்தியாவில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நடைபெற்றன. 1) தனியார்களால் கணினிசார் பயிற்சி நிலையங்கள் இந்தியா எங்கும் நிறுவப்படுதல். அதாவது முறையான பள்ளி, கல்லூரிகள் அல்லாது தனியார்கள் கொடுக்கும் வேலைக்கு உபயோகமான கல்வியைக் கற்பது. 2) டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, சத்யம் கம்பியூட்டர்ஸ், எச்.சி.எல் என்று தொடங்கி எண்ணற்ற கணினி மென்பொருள் நிறுவனங்கள் மிகப்பெரிதாக வளர்ந்தது. அதாவது தனியார் கணினிப் பயிற்சி மையங்களில் கல்வி பயின்ற அனைவருக்கும் உடனடியாக அதிக சம்பளத்தில் வேலைகள் கிடைப்பது.

Y2K பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டபின்னும், இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு நிறைய வேலைகள் காத்திருந்தன. இணையம் சார்ந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்த காலத்தில் அது தொடர்பான வேலைகள், பின் செல்பேசிகளுக்கு நிரலிகள் எழுதுவது என்று நிரலி எழுதும், எழுதிய மென்பொருள்களைப் பராமரிக்கும் வேலைகள், ஏற்கனவே இருக்கும் மென்பொருள்களை முன்னேற்றுவது, மாற்றுவது, வேறு சிறப்பான, புதிய இயங்குதளங்களுக்கோ, தரவுத்தளங்களுக்கோ நகர்த்துவது என எண்ணற்ற வேலைகள்... அதனால் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் எக்கச்சக்கமாக சம்பாதித்தன. பெரும் நிறுவனங்கள் யாவும் வருடத்திற்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் புது வேலைகளை உருவாக்கின.

இத்துடன், இந்தியாவில் தொலைதொடர்புக் கட்டுமானம் வெகுவான வளர்ச்சியை அடைந்தது. அரசு நிறுவனங்கள் தனிக்காட்டு ராஜாக்களாக நடந்தது நின்றுபோய் தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழைந்தன. இதனால் தொலைபேசிக் கட்டணம், இணைய இணைப்புக் கட்டணம் ஆகியவை வெகுவாகக் குறைந்தன. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான இணைய பேண்ட்வித் அதிகரித்தது. விலையும் குறைந்தது.

இந்தியாவில் இருக்கும் கணினி மென்பொருள் நிறுவனங்கள் Offshore எனப்படும் வகையில், அக்கரையிலிருந்தபடியே (அதாவது இந்தியாவிலிருந்தபடியே) மென்பொருள் எழுதுதல், பராமரித்தல், மாற்றுதல் வேலைகளை செய்யத் தொடங்கினர். இந்தியாவிலிருந்து குறைவான கணினி மென்பொருளாளர்களைத்தான் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டியிருந்தது. இதுதான் இரண்டாவது கட்டம்.

Onsite இலிருந்து Offshore செல்லும்போது அமெரிக்க நிறுவனங்களுக்கு செலவு இன்னமும் குறைந்தது.

இப்படியான கணினி மென்பொருள்கள் எதற்குப் பயன்படுகின்றன? ஒரு நிறுவனத்தின் பல்வேறு தொழில்முறைச் செயல்பாடுகளை (Business Process) முழுமையாகவோ, பெரும்பான்மையாகவோ செயல்படுத்துவதற்குத்தானே? எடுத்துக்காட்டாக, ஒரு கிரெடிட் கார்டு வங்கியின் வாடிக்கையாளர் புகார்களை கவனிக்கும் துறையை எடுத்துக்கொள்வோம். புகார்கள் தொலைபேசி மூலமோ, கடிதங்கள் மூலமோ, அல்லது இணையம் மூலமோ வரலாம். தொலைபேசி வழியாக வந்தால் யாராவது ஒருவர் மறுமுனையில் வாடிக்கையாளரிடம் பேசி, புகார் என்ன என்பதைக் கேட்டறிந்து கணினி இடைமுகத்தில் அதனை உள்ளிட்டு, உடனடியாக பதில் கொடுக்கமுடியுமானால் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் புகாரை முழுமையாக ஆராய்ந்து அதற்கான பதிலைக் கண்டறிந்து பின்னர் வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இது அத்தனையையும் இந்தியாவிலிருந்து கொண்டே, இந்திய ஊழியர்களைக் கொண்டே செய்யமுடியும் என்று சில நிறுவனங்கள் செய்து காட்டின. இதற்குத்தான் Business Process Outsourcing - BPO என்று பெயர். இது மூன்றாவது கட்டம்.

முதலில் அழைப்பு மையங்கள் (Call Centers) பல தோன்ற ஆரம்பித்தன. இவை வாடிக்கையாளர்கள் புகார்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்வனவாகவே இருந்தன. இந்த வேலையை ஒழுங்காகச் செய்வதற்கு அமெரிக்கன் ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறன், இதமான பேசும் மொழி, அமெரிக்காவின் கலாச்சாரம் பற்றிய புரிதல் ஆகியவை தேவையாக இருந்தன. அழைப்பு மையங்களின் நிர்வாகிகள் தம் ஊழியர்களுக்கு இதுபற்றிய தீவிரப் பயிற்சிகளைக் கொடுத்தனர்.

அழைப்பு மையங்கள் செய்யும் வேலைகளை விடக் கடினமான வேலைகளும் சிறிது சிறிதாக இந்தியாவிற்கு வரத்தொடங்கின. கையெழுத்தில் இருக்கும் அல்லது ஒலிநாடாவில் பதிக்கப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கைகளை கணினியில் எழுத்தாக மாற்றுவது (Medical transcription), மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைப் புரிந்துகொண்டு அதன்மூலம் வியாதிகள் என்னவாக இருக்கும் என்று கண்டறிவது (Medical Diagnostic services), இயந்திரப் பொறி படம் வரைதல் (CAD), பொறியியல் டிசைன், சிமுலேஷன், ஆங்கில பத்திரிகைகளின் துணையாசிரியர் பணிகள் (sub-editorial work for magazines), தொலைபேசி வழியான விற்பனை (tele-sales), வரி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது என்று பல்வேறு வேலைகளும் இப்பொழுது இந்தியாவில் செய்யப்படுகின்றன.

இவை கணினி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உருவான சேவை வாய்ப்புகள். இதனை IT enabled services என்று கூறுவர்.

Offshoring/outsourcing, BPO வேலைகள் இந்தியாவிற்கு அனுப்பப்படுவதால் அமெரிக்க நிறுவனங்களின் செலவு குறைகிறது. ஆனால் அமெரிக்கர்கள் பலர் வேலை இழக்க நேரிடுகிறது. இதுதான் பிரச்னை. சமீப காலங்களில் வேலையிழந்த அமெரிக்கக் கணினி மென்பொருளாளர்கள் பழியை மொத்தமாக இந்தியாவின் மீது போடுகிறார்கள். "To be Bangalored", 'Bangalored" போன்ற சொல்லாக்கங்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் வந்துள்ளன. "My job got Bangalored" - என்றால் எனது வேலை பெங்களூருக்குப் (இந்தியாவிற்கு) போய்விட்டது, நான் வேலையை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன் என்று பொருள்.

தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னை பெரிதாவது எதிர்பார்த்ததுதான். ஜார்ஜ் புஷ் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவாகவே இந்தக் கட்சியின் கொள்கை, முடிந்தவரை அரசு, வர்த்தக நிறுவனங்கள் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கக்கூடாது என்பதும், கட்டுப்பாடுகளற்ற சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றுவது என்பதுமாகும். புஷ் அமைச்சரவை சகாக்கள் பலர் அவ்வப்போது outsourcing-ஐ வரவேற்று, இதனால் அமெரிக்காவிற்கு நல்லது என்பது போலவே பேசியுள்ளனர். ஆனால் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த ஜான் கெர்ரி இப்படி வேலைகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குப் போவதை எதிர்க்கிறார். அவ்வாறு வேலைகளை இந்தியாவிற்கு அனுப்பும் நிறுவனங்களின் வரிச்சலுகைகளைக் குறைக்க வேண்டும், அல்லது அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

புஷ், கெர்ரி என்று யார் ஜெயித்தாலும், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் வேலைகள் குறைந்து விடப் போவதில்லை. ஒவ்வொரு நிறுவனமும் இப்பொழுது India strategy என்று ஒன்றை உருவாக்க முனைந்துள்ளது - அதாவது இந்தியாவை எப்படி தன் தொழில் உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, அல்லது செலவுகளைக் குறைப்பதற்கோ ஒரு களமாக ஆக்கிக்கொள்ள முடியும் என்னும் திட்ட வரைவு.

இதனால் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகமாவது நிச்சயம் என்றுமட்டும் சொல்ல முடியும்.


எண்ணங்கள் வலைப்பதிவு