இணையம் பற்றிய அரசின் குறுகிய பார்வை
பத்ரி சேஷாத்ரி, 28 அக்டோபர் 2004
சமாச்சார்.காம்




சில வாரங்களுக்கு முன்னர் (11 ஆகஸ்ட் 2004) மத்திய அரசு இணைய அகலப்பாட்டை பற்றிய தன் கொள்கைகளை முடிவு செய்ய இருக்கிறது என்று எழுதியிருந்தேன். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மத்திய அரசின் கொள்கைகளை அக்டோபர் 14 அன்று வெளியிட்டார்.

உருப்படியாக சொல்லிக்கொள்ள இந்தக் கொள்கையில் ஒன்றுமே இல்லை. TRAI - தொலைதொடர்பு கட்டுப்பாடு வாரியம் இணையம், அகலப்பாட்டை வேகமாக மக்களுக்குப் போய்ச்சேரவேண்டுமானால் அரசு என்ன செய்ய வேண்டும் என பல சிபாரிசுகளை முன்வைத்திருந்தது. ஆனால் தொலைதொடர்புத்துறை (Department of Telecommunication) அதை சிறிதும் சட்டை செய்யவில்லை.

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் இரண்டுமே தொலைதொடர்புத்துறையின் பிள்ளைகள். இதனால் தொலைதொடர்புத்துறை பல சமயங்களில் பொதுமக்களுக்கு எது நல்லது என்பதை மனதில் வைக்காமல் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு எது நல்லது என்பதை மட்டுமே மனதில் வைத்து நடந்து கொள்கின்றனர். அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய அகலப்பாட்டை கொள்கை இதைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

கடைசி மைல் மீதான ஆதிக்கத்தை நீக்குதல் (Last mile unbundling): பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய அரசு நிறுவனங்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தியிருந்தே கொடுக்கப்பட்ட தொலை தொடர்புக் கம்பிகளின் சொந்தக்காரர்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வரும்வரை தான் பாட்டுக்கு தனக்குத் தோன்றியதை மட்டுமே செய்து வந்தார்கள். செயற்கையாக தொலை தொடர்புக்கான கட்டணத்தை அதிகமாக்கி வைத்திருந்தனர். புதுமை என்று எதுவும் கிடையாது. உலகமே ISDNஐ மறந்துபோனபோது தான் ISDNஐ இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். உள்ளூரிலேயே அஷோக் ஜுன்ஜுன்வாலா என்னும் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் உருவாக்கியிருந்த WiLL தொழில்நுட்பத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஒரு கம்பித்தொலைபேசி இணைப்பு வேண்டுமென்றால் ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் என்ற நிலை. இன்றும் கூட அஷோக் ஜுன்ஜுன்வாலா குழுவின் மற்றொரு கண்டுபிடிப்பான DIAS என்னும் மிதவேக இணையத்தை சொட்டு சொட்டாக இங்கும் அங்குமாகக் கொடுக்கின்றனரே ஒழிய, முனைந்து செயல்பட்டு கேட்போர் எல்லோருக்கும் கொடுப்பதில்லை.

ஆனால் தனியார் நிறுவனங்கள் செல்பேசி இணைப்பு கொடுக்கத் தொடங்கியதும் இன்று செல்பேசி இணைப்புகளும் 4 கோடியைத் தாண்டி விட்டது. இப்பொழுது இந்தியாவில் செல்பேசிகள் கம்பிவழி தொலைபேசி இணைப்புகளை விட அதிகம். ஆனாலும் இன்றைய தேதியில் இந்தியாவில் இருக்கும் செல்பேசிகள் வழியாக தரமான அகலப்பாட்டை இணையத்தைக் கொண்டுவர முடியாது. அதற்கு நாம் கம்பித்தொலைபேசி இணைப்புகளையே நாட வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய தேதியில் கம்பிகளைக் கட்டுப்படுத்துவது பி.எஸ்.என்.எல் அல்லது எம்.டி.என்.எல். அதனால்தான் TRAI கடைசி மைல் மீதான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் கட்டுப்பாட்டை உடைக்க வேண்டும் என்றும், எந்தத் தனியார் நிறுவனம் வேண்டுமானாலும் இந்தக் கம்பிகள் மீது அகலப்பாட்டை இணைப்பைக் கொடுக்கமுடியும் என்றும் அரசு உத்தரவிடவேண்டும் என்று எதிர்பார்த்தது. ஆனால் தொலைதொடர்புத்துறை அதிகாரிகளுக்கு அதில் இஷ்டமில்லை. பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் இருவருக்கும் இதில் இஷ்டமில்லை என்பது சொல்லமலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இவ்விரு நிறுவனங்களும் ஒரு வருடத்திற்குள் - 2005 கடைசிக்குள் - தாங்களாகவே 15 லட்சம் அகலப்பாட்டை DSL இணைப்புகளை வழங்குவதாக உறுதிமொழி கொடுத்துள்ளதாம். எனக்கு நம்பிக்கையில்லை. பார்தி (ஏர்டெல்) நிறுவனம் வழங்கும் புது கம்பி இணைப்புகள் அனைத்திலுமே இப்பொழுது DSL சேவையை வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் கையில் இருக்கும் கம்பி இணைப்புகள் மிகவும் குறைவே - மொத்தத்தில் 3 லட்சத்தைத் தாண்டாது. டாடா வி.எஸ்.என்.எல், தான் வாங்கிய டிஷ்நெட் டி.எஸ்.எல் மூலம் சில DSL இணைப்புகளைக் கொடுக்கிறது. ஆனால் இது சில மாநிலங்களில் மட்டுமே (இப்பொழுதைக்கு ஆந்திரா, மஹாராஷ்டிரா) தொலைபேசிக் கம்பிகள் வழியாகப் பிரயாணிக்கக்கூடியது. சென்னையில் எலெக்டிரிக் கம்பத்தின் மீது தாங்களாகவே கட்டி இழுத்த கம்பிகள் வழியாகத்தான் இந்த DSL சேவையை இவர்கள் அளிக்கிறார்கள்.

மற்றபடி அரசின் அகலப்பாட்டைக் கொள்கையில் குறிப்பிடும்படியாக ஒரேயொரு விஷயம் மட்டும்தான் உள்ளது.

(e) Terrestrial Wireless Recognising that terrestrial wireless is another upcoming technology platform for Broadband, it has been decided in principle to de-licence 2.40-2.48 GHz band for low-power outdoor use on non-protection, non-interference and non-exclusive basis. Necessary notification shall be issued. Further, notification regarding delicensing 2.40-2.4835 MHz band for low power indoor permitting use of all technologies, which inter-alia include those based on IEEE 802.11b and 802.11g standards, has been issued. To accelerate penetration of Broadband and Internet, the 5.15-5.35 GHz band shall be de-licensed for the indoor use of low power Wi-Fi systems. For outdoor use, the band 5.25-5.35 GHz shall be de-licensed in consultation with DoS and delicensing in the band 5.15-5.25 GHz would be considered after the process of vacation. Alternative spectrum bands which are not in high usage and could be deployed for Broadband services, shall also be explored and identified.
முதலில் உட்பிரதேசத்தில் (indoor) சில அலைவரிசைகளை உரிமத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் நம் வீட்டிற்குள்/அலுவலகத்தில் வயர்லெஸ் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த உரிம விடுவிப்பு நடப்பதற்கு முன்னமேயே பல அலுவலகங்களில், வீடுகளில் 802.11b, 802.11g தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைப் பயன்படுத்துபவர்கள் யாருமே எந்த உரிமையையும் அரசிடமிருந்து பெறவில்லை. ஆனால் வெளிப்பிரதேச (outdoor) உரிம விடுவிப்பினால் பல நன்மைகள் உண்டாகும். Wimax நுட்பத்தில் நல்ல பலன் வேண்டுமானால் குறைந்த அலைவரிசை - அதாவது 800 MHz க்கும் கீழே இருந்தால் - உதாரணத்துக்கு 700 MHz கிடைத்தால் மிக நல்ல பலன் இருக்கும். இப்பொழுது அரசு கொடுத்திருக்கும் 2.4 GHz, இனி கொடுக்க நினைக்கும் 5 GHz+ ஆகியன நகராத வயர்லெஸ் இணைப்புகளுக்கு வசதியானவை. ஆனால் 700 MHz போன்ர அலைவரிசையில் நகரும் கருவிகளை Wimax இணைப்பு பெற வைக்கலாம். அப்படிச் செய்தால் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டுவிடும்.

ஏன்?

இன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் தன் கட்டுமானங்களுக்கென எக்கச்சக்கமாக செலவு செய்துள்ளன. அப்படியும் நம் கையில் பிடித்திருக்கும் செல்பேசிகளால் பிரமாதமாக ஒன்றும் சாதித்துவிட முடிவதில்லை. நாளையே Wimax படி இயங்கும் கைக்கருவிகள் நம் கையில் கிடைத்தால் - அவையும் 700 MHz அலைவரிசையில் இயங்க அனுமதிக்கப்பட்டால், Voice over IP மூலம் பேசிக்கொள்ளலாம். அகலப்பாட்டை வேகம் நிச்சயமாக 1 Mbps க்கு மேல் இருக்கும். அந்த வேகத்தில் கைக்கருவியில் ஒலி, ஒளி பரப்பு (தொலைக்காட்சி சானல்கள், ரேடியோ ஸ்டேஷன்கள்) என பல காரியங்களைச் செய்யலாம். இப்பொழுது இருக்கும் செல்பேசிகள் அனைத்தையும் செயலற்றதாக ஆக்கக்கூடிய தொழில்நுட்பம் கைக்குக் கிடைக்கும். ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்திற்கு இத்தனை என்று மீட்டர் போடவேண்டியதில்லை. மொத்தமாக இத்தனை பிட் (bit) உபயோகித்தால் இத்தனை பணம் என்று வசூலித்தால் போதும். நம் தொலைபேசி நிறுவனங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய விஷயம் இது.

இப்பொழுதிருக்கு 2.4GHz அலைவரிசையிலே கூட பல காரியங்களைச் செய்யமுடியும். சில வீடுகளில் DSL இணப்புகள் இருந்தாலெ போதுமானது. அதை வைத்து பொதுமக்கள் பலர் ஒன்றுசேர்ந்து தெரு முழுதும் (சட்டத்துக்குப் புறம்பாக) இலவசமாக வயர்லெஸ் இணைய வசதி செய்து கொடுக்க முடியும். யாரால் இதைத் தடுக்க முடியும்? முழுக்க முழுக்க வயர்லெஸ் இணைப்பால் ஆன இணையம் வழங்கும் நிறுவனங்கள் உதிக்கும்.

ஆக, அரசின் இன்றைய குறுகிய பார்வையிலிருந்தும் சில தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும், ஊக்கமிக்க தொழில் முனைவோராலும் புதிய பாதையைக் காட்ட முடியும். அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் வயர்லெஸ் இணையம் வெகுவாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.


எண்ணங்கள் வலைப்பதிவு