Thursday, September 02, 2004

ராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்

Triumph of Truth, The Rajiv Gandhi Assassination, The Investigation, D.R.Kaarthikeyan and Radhavinod Raju, New Dawn Press Inc., April 2004, Pages 262, Price Rs. 500 in India, UKP 14.99 or USD 24.95 outside of India.

தமிழில் நல்ல துப்பறியும் கதைகள் குறைவு. வடுவூரார் எழுதிய ஆங்கிலத் தழுவல் கதைகளில் தொடங்கி, பின் சுஜாதாவால் ஹை-டெக் ஆக்கப்பட்டு வளர்ந்த துறை ராஜேஷ் குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர் காலத்திலிருந்து படுவீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இன்று உருப்படியாகச் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றுமே இல்லை எனலாம்.

இந்தியச் சூழலிலேயே - ஆங்கிலத்திலோ, அல்லது வேறு இந்திய மொழிகளிலோ - தொடர்ச்சியாக நல்ல துப்பறியும் கதைகள் இல்லை எனத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் கதைகளில் துளிக்கூட நம்பகத்தன்மை இல்லாமலிருப்பதுதான். இந்தியச் சூழலில் காவல்துறையால் என்ன செய்யமுடியும்? உள்ளூர்க் காவல்துறைக்கும், Central Intelligence Bureau (CBI) க்கும் என்ன வித்தியாசம்? உள்ளூர்க் காவல்துறையின் Q branch என்ன வேலை செய்யும்? மத்தியிலிருந்து இயங்கும் Intelligence Bureau (IB), Research and Ananlysis Wing (RAW) ஆகியவற்றுக்கு என்ன வேலை? இந்திய இராணுவம் தனக்கென ஏதேனும் நேரடியான உளவமைப்பை வைத்துள்ளதா? குற்றங்களைத் துப்பறியும் அமைப்புகளில் வேலைக்குச் சேர்பவர்களுக்கு எவ்வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது? மற்ற எந்தத் துறைகளிலிருந்து அதிகாரிகள் இந்தத் துறைக்கு வேலை செய்ய வருகிறார்கள்? தடயவியல், மற்ற அறிவியல் துறைகள் எந்த வகையில் பயன்படுத்தப் படுகின்றன? கணினி வழித் தகவல்கள், குற்றவாளிகள் பற்றிய தரவுத் தளம் எவ்வகையில் பயன்படுத்தப் படுகின்றன? இதுபோன்ற எந்தத் தகவலும் இல்லாமல் தமிழ்க் கதாசிரியர்கள் கதை எழுதுவதால் நமக்குப் படிக்கக் கிடைப்பது கீழ்த்தரமானவையாகவே உள்ளன.

ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை இந்தியாவை - குறிப்பாகத் தமிழகத்தை - உலுக்கிய ஒரு நிகழ்ச்சி. அந்தக் கொலைச் சதியின் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்க, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசேஷத் தனிப்படை (Special Investigation Team - SIT) இந்தியாவின் தலைசிறந்த காவல்துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்டது. SIT எவ்வாறு இந்தக் கொலையின் பின்னணியை குறுகிய காலத்தில் கண்டுபிடித்தது, அதன்பின் குற்றவாளிகள் மீதான குற்றத்தை நிரூபிக்கும் சாட்சியங்களை சேகரித்தது என்பதைப் பற்றிய விளக்கமான புத்தகத்தை கார்த்திகேயனே ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். உண்மை, புனைகதைகளை விட பயங்கரமானது, சுவாரசியமானது என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே தெரியும். இதைவிட வேகமாக நகரும் துப்பறியும் கதையை நான் படித்தது கிடையாது.

-*-

மஹாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோர் கொலைகளில் கொலையாளிகள் உடனடியாகப் பிடிபட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலையில் யார் எதைச் செய்தனர் என்பதைக் கண்டுபிடிப்பதோடு, உடனடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் தப்பித்துச் சென்றுவிடாமல் அவர்களைப் பிடிப்பதும் முக்கியமான காரியமாக இருந்தது. இந்நிலையில்தான் CRPF இன் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த கார்த்திகேயன் கொலையைத் துப்புத் துலக்கக் கொண்டுவரப்பட்டார்.

முதலில் கொலை எப்படி நடந்தது என்பதைக் கட்டமைக்க வேண்டியிருந்தது. ஒரு பெண்ணின் உடலைச் சுற்றி டெனிம் துணியாலான பையுடனான மேற்சட்டை. அதில் அரைக் கிலோ RDX வெடிமருந்து பரப்பப்பட்டிருந்தது. அதற்குள் 2 மில்லிமீட்டர் விட்டமுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இரும்புக் குண்டுகள் நிரப்பப் பட்டிருந்தன. 9 வோல்ட் பேட்டரியின் மூலம் வெடிக்கக்கூடிய டெடோனேட்டர் ஒன்று வெடிமருந்தினுள் பொதித்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு தனி விசைகள் இருந்தன. முதலாவதைத் தட்டி, தயாரானபின், இரண்டாவதைத் தட்டினால்தான் வெடி இயங்கும். இதனால் தன்னேர்ச்சியாக வெடிப்பதைத் தவிர்க்கலாம்.

இந்த மனித வெடிகுண்டுதான் ராஜீவைக் கொலை செய்தது.

ராஜீவின் இறந்த உடலைப் பரிசோதிக்கும்போது 22க்கும் மேற்பட்ட கடுமையான காயங்கள் கண்டறியப்பட்டன. தலையின் மேல்பாகம் முழுவதுமாகக் கிழிந்து, அங்குள்ள எலும்புகள் அத்தனையும் நொறுங்கி, மூளை முழுவதுமாக வெளியே சிதறிப் போயிருந்தது. முகத்தின் அத்தனை திசுக்களும் எரிந்து, உதடுகள், மூக்கு, இரண்டு கண்கள் முழுவதுமாகச் சிதைந்து போயிருந்தன. கீழ்த் தாடை, மேல் தாடை இரண்டும் நொறுங்கி, மூக்கெலும்பும் சிதைந்து போயிருந்தது. வெடியிலிருந்து சிதறிய இரும்புக் குண்டுகள் மார்பில் துளைத்திருந்தன. அடிவயிறு கிழிந்து குடல் வெளியே வந்திருந்தது. இடது நுரையீரல் காணவேயில்லை. வலது கையில் விரல்கள் முழுவதுமாகச் சிதைந்துபோயிருந்தன. உடல் முழுதும் இரும்புக் குண்டுகள் புதைந்து கிடந்தன.

-*-

கார்த்திகேயனின் புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.

1. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு கார்த்திகேயன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுவது, SIT கொலை எப்படி நடந்திருக்கும் என்று கண்டறிந்து, இந்தச் சதியில் முக்கியமாக ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது.

2. கொலையில் பங்குபெற்ற குற்றவாளிகள், அவர்களுக்கு நேரடியாக உதவியவர்கள், மறைமுகமாக உதவியவர்கள் ஆகியவர்களைப் பின்தொடர்ந்து பிடிப்பது

3. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்களை சேகரிப்பது, வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது அந்த வழக்குக்குத் துணையாக சாட்சியங்களை, மேலதிக விவரங்களை அளிப்பது

முதலிரண்டு பாகங்களும் வேகமாக, இதயத் துடிப்பை அதிகரிக்கும் வகையில் இந்தப் புத்தகத்தில் நகர்கிறது. மூன்றாவது பாகத்தில் கார்த்திகேயன் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தன் கோணத்தில் ஆழ்ந்து அலசி, விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் கொலையில் உள்ள தொடர்பை ஆதாரப் பூர்வமாக விளக்குகிறார்.

புத்தகத்தின் வெகு சில இடங்களில் மட்டுமே கார்த்திகேயன் என்ற மனிதரைப் பற்றியும் காண முடிகிறது. மற்றபடி எடுத்துக்கொண்ட விஷயத்தை, தான் நேரடியாக ஈடுபட்டிருந்த போதிலும், சற்றே விலகி நின்றே மிக நேர்த்தியாக எழுதியுள்ளார்.

-*-

ஒன்றைத் துலக்கப் போய் இன்னொன்றை அறிந்து கொள்வது போல ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மற்றும் அவரது தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதையும் கார்த்திகேயன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. விடுதலைப்புலிகள் குழுவைச் சேர்ந்த டேவிட், சிவராசன் ஆகிய இருவரும்தான் அந்தக் கொலைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரத்தையும் கார்த்திகேயன் தன் புத்தகத்தில் காட்டுகிறார். சிவராசன் பின்னர் ராஜீவ் காந்தி கொலைக்குப்பின் தப்பித்துச் செல்ல முயலும்போது கடல்புலியான டேவிட் படகுகளுடன் வேதாரண்யம் பகுதிக்கு வரும் வேளையில் விபத்தில் கொல்லப்படுகின்றனர்.

-*-

கொலைச்சதியில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனிடம் தொடர்பு கொள்ள வயர்லெஸ் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. வேறு தொலைதொடர்பு சாதனங்கள் இல்லாத நிலையில் வயர்லெஸ் ஒன்றை மட்டுமே நம்பியிருந்ததால் அதனாலேயே குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்றைய நிலையில் தூக்கியெறியப்படும் சிம் கார்டுகளுடனான செல்பேசிகள், இணையம் ஆகியவை இருப்பது அந்நிய சக்திகள் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு மிகவும் வசதியானது. இந்நிலையில் இந்திய உளவுத்துறையினரும், காவல்துறையினரும் எந்த அளவுக்கு இணையத்தில் பயிற்சி பெற்றவர்களாய், இணையம் வழியாக நடக்கும் ரகசியச் செய்திப் பரிமாற்றங்களை உடைக்கத் தெரிந்தவர்களாய், செல்பேசிகளைப் பின்தொடரும் வழி அறிந்தவர்களாய் உள்ளனர் என்று தெரியவில்லை.

-*-

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது பிரடெரிக் ஃபோர்சைத்தின் 'The Day of the Jackal' படித்த/பார்த்த உணர்விருந்தது. இரண்டு வித்தியாசங்கள் - இங்கு கொலை நடந்தது, இது உண்மை.

இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் கூடிய விரைவில் இந்தப் புத்தகம் தமிழில் வரும் என எதிர்பார்க்கலாம்.

-*-

சுப்ரமணியம் சுவாமி எழுதிய "ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகம் பற்றிய என் பதிவுகள் ஒன்று | இரண்டு

8 comments:

  1. The following can not be a neural review, but worth for a reading
    http://www.sangam.org/articles/view2/?uid=480

    ReplyDelete
  2. Dear Badri,
    Very Good writeup. Iam also very eager to read this book. The explanation of Rajiv's body made me to feel for him. Good article.
    Love,Arun

    ReplyDelete
  3. ரமணி: சுட்டிக்கு நன்றி. படித்துவிட்டேன்.

    கார்த்திகேயனின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை விமரிசிக்காமல் கார்த்திகேயன் என்னும் மனிதரைத் தேவையின்றி தரக்குறைவாக விமரிசித்துள்ளார் சச்சி ஸ்ரீ கந்தா. அவரது கட்டுரையைப் பற்றி மேற்கொண்டு சொல்ல என்னிடம் விஷயமில்லை.

    ReplyDelete
  4. பத்ரி,
    சச்சி சிரீகாந்தாவின் 'மதிப்புரை' நீங்கள் சொல்வதுபோலவே ஆளைத் தாக்கும்தன்மை மிகக்கூடுதலாகவும் உள்ளதாகவே இருக்கின்றது.

    ReplyDelete
  5. Badri

    Thanks for your review. Karthikeyan was here 2 months back. I'll post his interview he gave it to our tamil local radio too. In that interview he was very much irritated at the mention of the name 'Swamy' also he refused to comment on his findings.

    I am also interested in his book. But I am sure that he would not and could not reveal everything he knows. He would have written within his limits. There are many conveniently unanswered questions that no body want to touch at this junture including Karthikeyan.

    As far as detective novels in Tamil are concerned, you are right. Our versions are a lot exagerated. The plot for Rajiv killing would have clicked from Fredrick's 'The Negotiator', in that novel sone of the American president would be killed by a belt bomb. A very nail biting must read thriller. That book was found from the killer's den.

    Thanks
    S.Thirumalai

    ReplyDelete
  6. 1. பத்ரி : சச்சி ஸ்ரீகந்தா வின் நூல் விமர்சனத்தை முன்பே படித்த மாதிரி இருக்கிறது. பெயரிலி, தன் ப்ளாக்ட்ரைவ் வலைப்பதிவில் கொடுத்திருந்ததாக நினைவு. சச்சி, நூலை அக்குவேறு ஆணிவேறாக அலசி இருந்தார். கார்த்திகேயன் மீதான, தனிப்பட்ட முறையிலான விமரசனமும் அதிகமாக இருந்தமாதிரி தோன்றியது. அப்படி இருந்தாலும், சச்சி ஸ்ரீகந்தாவின் விமர்சனத்தில், உள்ள கேள்விகளில் சிலவற்றை நாம் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். அரசியல் கலப்பு காரணமாக, கார்த்திகேயன், தான் கண்டுபிடித்த பல விஷயங்களை வெளிப்படையாக சொல்லவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

    கார்த்திகேயனுக்கு, 1989 வரை, இலங்கை நிகழ்வுகள் குறித்து ஒரு விவரமும் தெரியாது சச்சி சொல்வது ஒரு விஷயமே அல்ல. ஏனெனில், டெபுடேஷனில் வருகின்ற ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு கொலை கேசை, துப்புத் துலக்குவதற்கு எத்தனை அறிவு வேண்டுமோ 'அத்தனை' அவருக்கு இருந்தது என்பதுதான் உண்மை. மேலும் , அவருக்கு இலங்கைப் பிரச்சனை பற்றிய முன்னறிவு இருந்திருந்தால், அது அவருடைய விசாரணைக்கு ஏதேனும் இடைஞ்சலாகவும் இருந்திருக்கலாம். ( இது என்ன என்று புரியாதவர்கள் எனக்கு தனி அஞ்சல் அனுப்பவும்) . தன் பதவிக்காலத்திலே, கார்த்திகேயன், தேயிலை வளர்ச்சித் துறை சார்பாக, ஆஸ்திரேலியாவிலே, டெபுடேஷனில் இருந்தார். ஐபிஎஸ்ஸ¤க்கும் தேயிலை வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு யாராவது கேட்க முடியுமோ?

    சச்சி அவர்களின் விமர்சனம், நூலை எழுதிய கார்த்திகேயன் மீதான தனிப்பட்ட விமர்சனமாக இருந்தாலும், அவர் கேட்கிற கேள்விகளை, இதை ஒரு காரணமாகக் காட்டி, ஒதுக்கி விட முடியாது. உதாரணமாக, லதா பிரியகுமார், மரகதம் சந்திரசேகர் விஷயம் பற்றி, கார்த்திகேயன் அந்த நூலில் ஏதும் தெரிவித்தாகத் தெரியவில்லை. [ குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் புகைப்படத்தை, மரகதம் சந்திரசேகர் வீட்டில் உள்ள குழந்தை அடையாளம் சொன்னதாக ஒரு ஹியர்சே உண்டு.] அந்த விவரங்கள் விசாரணைக்கு உள்ளாகி இருக்கும். அந்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சுப்பிரமணிய சுவாமி புத்தகத்தில் இது பற்றிய தகவல் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    2. இந்த மாதிரி புத்தகம் எல்லாம் பேப்பர் பேக் எடிஷன் வராதா?

    அன்புடன்
    பிரகாஷ்

    ReplyDelete
  7. பிரகாஷ்: ஸ்ரீ காந்தாவின் ஆய்வில் பல சரியான கேள்விகள் இருக்கலாம். ஆனால் அதை சரியாகக் படிக்க விடாமல் கார்த்திகேயனை நொடிக்கு நூறு தரம் திட்டுவதில் மட்டுமே அவர் செலவு செய்துள்ளார். இதனால் சரியான வாசகரை அவர் சென்றடைய முடியாது என்றே தோன்றுகிறது. அதிகபட்ச எரிச்சலை மட்டுமே ஏற்படுத்துகிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.

    >>லதா பிரியகுமார், மரகதம் சந்திரசேகர் விஷயம் பற்றி, கார்த்திகேயன் அந்த நூலில் ஏதும் தெரிவித்தாகத் தெரியவில்லை.

    ஒரு குற்றத்தைப் புலனாயும்போது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத செய்திகள் பல கையில் கிடைக்கும். திருப்பெரும்புதூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரை ஊடுருவி, அல்லது காசு கொடுத்தோ - அப்படியோதான் கொலைகாரர்கள் ராஜீவ் அருகில் சென்றுள்ளனர். இங்கு முக்கியமானது அதற்கு உதவி செய்தவர்கள் தெரிந்தே கொலையில் ஈடுபட்டனரா அல்லது தெரியாமல் பகடைகளாக ஈடுபடுத்தப்பட்டனரா என்பதே.

    ஸ்ரீ காந்தா எழுப்பியதை விடவும் அதிகமாக சுவாமியின் புத்தகத்தில் கேள்விகள் உள்ளன. ஆனால் பதில்கள் கிடையாது. மொஸாத் ஈடுபட்டுள்ளதா, அர்ஜுன் சிங் ஈடுபட்டுள்ளாரா என்றெல்லாம் பல கேள்விகள்...

    அந்தப் பதிவுகளுக்கான சுட்டியையும் கொடுத்துள்ளேன். ஒருமுறை படித்துப் பாருங்கள். வேண்டுமானால் புத்தகமும் கொடுக்கிறேன், நேரமிருந்தால் படித்துக் கொள்ளுங்கள்...

    கார்த்திகேயனின் புத்தகத்தை பொருத்தவரை காங்கிரஸ் உட்கட்சி அரசியல் பற்றி அதில் ஏதுமில்லை. ஆனால் பிற துப்புகளையும் பின்தொடர்ந்து அதில் ஏதும் உருப்படியான செய்தி கிடைக்கப்போவதில்லை என்று தோன்றியவுடன் தான் அந்தக் கிளையை மூடியதாகச் சொல்கிறார்.

    ===

    இந்த மாதிரி புத்தகங்கள் எல்லாம் அதிக விலைதான்... இதற்கென தனி பேப்பர்பேக் வரும் என்று தோன்றவில்லை. தமிழ்ப் பதிப்பு வேண்டுமானால் ரூ. 150க்குள் இருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  8. ராஜீவ் காந்தி கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் தி.சாந்தன் என்பவரை ஆசிரியராகவும் இன்னொருவரை துணை ஆசிரியராகவும் கொண்டு வேலூர் சிறையில் இருந்து சிறைப்பூக்கள் என்றொரு சஞ்சிகை வரவிருப்பதாக அறிந்தேன்.முற்றிலும் ஆயுள் மற்றும் மரணதண்டனைக் கைதிகளால் எழுதப்பட்ட ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது எனச் செய்தி படித்தேன்.அவை சில விளக்கங்களைத் தரலாம்.

    ReplyDelete